Published:Updated:

அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!

அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!
பிரீமியம் ஸ்டோரி
அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!

குறுந்தொடர்பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!

குறுந்தொடர்பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

Published:Updated:
அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!
பிரீமியம் ஸ்டோரி
அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!

ந்தமான்... சுற்றுலா பயணிகளின் சொர்க்கம். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட குட்டிக் குட்டித் தீவுகள் விரவிக்கிடக்கின்றன. இவற்றைச் சுற்றி நீலமும் பசுமையுமாகக் கண்களைக் குளிர்ச்சியாக்கும் காட்சிகள் பரவசமூட்டுகின்றன. இவையனைத்தையும் தாண்டி, நாம் பார்க்க வேண்டிய மற்றொரு பக்கம் இருக்கிறது. அதுதான் அந்தமானில் கடைப்பிடிக்கப்படும் விவசாயத் தொழில்நுட்பங்கள். உவர் நீரிலும் சாகுபடி செய்யும் நுட்பங்கள், காடுகளைச் சேதப்படுத்தாமல் காய்கறி விளையவைக்கும் அறம்... எனக் கடலுக்கும் காடுகளுக்கும் இடையே வேளாண்மையை வென்றெடுக்கும் சூத்திரங்களை, நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.  

அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!

அந்தமான் தீவில் நடக்கும் விவசாயம் குறித்து விவசாயிகள், விஞ்ஞானிகள், விவசாயத்துறை அலுவலர்கள் எனப் பல தரப்பினரிடம் பேசியதன்மூலம் கிடைத்த தகவல்கள் தொகுப்பாக இங்கே...

இந்திய யூனியன் பிரதேசப் பகுதிகளான அந்தமான்-நிக்கோபார் தீவுகள், சென்னைக்குக் கிழக்கே சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் வடக்குத் தெற்காக அமைந்திருக்கிறது. இங்கே மங்கோலியர் மற்றும் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த ஆறு முக்கியப் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களும், இங்கு அதிகளவில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 8,249 சதுர கிலோமீட்டர். அதில் பெரும்பகுதி அடர்ந்த பசுமைமாறாக் காடுகளாக இருக்கின்றன. விவசாயமும், சுற்றுலா தொடர்பானவையும்தான் முக்கியத் தொழில்கள்.

இன்றைக்கு நாம் பின்பற்றும் நஞ்சில்லா விவசாயத்தைப் பன்னெடுங்காலத்துக்கு முன்பிருந்தே கடைப்பிடித்து வருகிறார்கள், இத்தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள். உண்மையில் இயற்கை விவசாயம் என்ற பெயரில், நாம் செய்வது நஞ்சில்லா விவசாயம் மட்டும்தான். அந்தமான் பழங்குடிகள் செய்வதுதான் உண்மையான இயற்கை வழி விவசாயம். குறிப்பாக, நிக்கோபார் தீவுகளில் வாழும் சோம்பென் மற்றும் நிக்கோபார் இனப்பழங்குடிகள் தென்னை, கிழங்கு வகைகள், பழங்கள் நிறைந்த வீட்டுத்தோட்டங்களை அமைத்துள்ளார்கள். ‘கட்சால்’ என்கிற நெட்டை ரகத் தென்னை, இம்மக்களின் பரம்பரைச் சொத்தாக இருக்கிறது. அந்தமான் விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பிறகு, தாள்களை வயலில் விட்டு உழவு செய்வதையும் பழ மரங்களுக்கு மூடாக்கு அமைப்பதையும் தொன்றுதொட்டுச் செய்து வருகிறார்கள். போர்ட் பிளேயர் உள்ளிட்ட சில இடங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் ரசாயன விவசாயத்தைச் செய்துவருகிறார்கள்.

அமைதியாக இருந்துவந்த அந்தமானை அடியோடு புரட்டிப்போட்டது 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி. பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் பாதிப்பு இன்று வரை நீங்கவில்லை. அந்தப் பேரிடரில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கின. நிலம் முழுவதும் உப்பும் நச்சுப்பொருள்களும் குவிந்துவிட்டன. மக்களின் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனது. உலக நாடுகள் மற்றும் இந்திய அரசின் பொருளுதவியுடன் மீட்புப்பணிகள் நடந்தன. ஆனால், விவசாய நிலங்களின் மீட்பு தொடர்பாக எந்த அமைப்பும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில் இந்தத் தீவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகமும் உலக வங்கியும், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!

அதன்மூலம் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர்ட் பிளேயரில் அமைந்துள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தினர், பருவநிலைக்கும் இயற்கைச் சூழ்நிலைக்கும் ஏற்பச் சில திட்டங்களை முன்வைத்தனர். இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப்பணிகளை முன்னின்று செயல்படுத்தியவர் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்கை வள மேலாண்மைத்துறையின் தலைவராக இருக்கும் முனைவர் வேல்முருகன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், இயற்கை வள ஆராய்ச்சியாளரும்கூட.

போர்ட் பிளேயரில் உள்ள அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். “நான் விகடனின் நீண்ட நாள் வாசகன். பசுமை விகடனையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சுனாமிக்குப் பிறகு அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் முகமே மாறிவிட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யும் பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தது. இயற்கையைக் காயப்படுத்தாத அளவுக்கு மீட்புப்பணிகளை வடிவமைத்துக் கொண்டோம். உப்பு மற்றும் ரசாயனக் கழிவுகள் தேங்கியிருந்த நிலங்களில் பாத்திகள் அமைத்து, மழைநீரைத் தேக்கிக் கழிவுகளை அகற்றினோம். தொடர்ச்சியாகத் தாழ் நிலங்களில் வடிகால் வசதியை மேம்படுத்துதல், கடல் நீர் புகாவண்ணம் ஒருவழித் தடுப்புகள் அமைத்தல், பல வகைகளில் நிலங்களை வடிவமைத்தல், உவர் நிலத்துக்கேற்ற நெல் ரகங்களைப் பயிரிடும் தொழில்நுட்பங்களைச் சொல்லித்தருதல் போன்ற பணிகளை மேற்கொண்டோம். 

தற்போது பீனிக்ஸ் பறவைபோல தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கிறது அந்தமான். தமிழ்நாட்டைப்போல இங்கு விவசாயிகளிடம் பெரியளவில் நிலங்கள் இல்லை. ஐந்து ஏக்கருக்குமேல் யாரிடமும் நிலம் இருக்காது. சுனாமியால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒன்பது லட்ச ரூபாயை நிவாரணமாக வழங்கியது அரசு. அரைகுறையாகப் பாதிக்கப்பட்ட பகுதியில், ஏக்கருக்கு நான்கு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. பலர் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு விவசாயத்தை விட்டே போய்விட்டனர். ஆர்வமுள்ள விவசாயிகள் அப்பணத்தைக் கொண்டு, தங்கள் நிலத்தை மேம்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். அத்தகையோருக்குத்தான், தொழில்நுட்ப உதவிகளைத் தொடர்ந்து வழங்கிவருகிறோம்.

சுனாமி பாதித்த நிலங்களில் மீட்புப்பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் ஐயா எங்களிடம் பேசினார். ‘நான் நேரில் வந்து சில ஆலோசனைகளைச் சொல்கிறேன்’ என்று பேசி ‘முசிறி’ யோகநாதன் குழுவினருடன் அந்தமான் வந்தார். இங்குள்ள விவசாயிகளுக்குப் பலவிதமான இயற்கை வேளாண்மை முறைகளைக் கற்றுக்கொடுத்தார். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் போன்ற இயற்கை இடுபொருள்களைத் தயாரிக்கும் முறைகள் பற்றி, அவர் கற்றுக்கொடுத்ததை அந்தமான் விவசாயிகள் அப்படியே பின்பற்றத் தொடங்கினார்கள்.

ஒரு வாரம் அந்தமானில் இருந்த நம்மாழ்வார் ஐயா, பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நிலங்களைப் பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளைத் சொன்னார். அதனடிப்படையில் இறுதித்திட்டம் தயார் செய்யப்பட்டது. அந்தமானிலிருந்து ஐயா விடைபெற்ற அன்று, விமான நிலையத்தில் ஏராளமானோர் கூடி அவரை வழியனுப்பினர். அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. சில முன்னோடி விவசாயிகள் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். காலிகட் கிராமத்தைச் சேர்ந்த பச்சைமுத்து, மேகநாதன் மற்றும் அவர் நண்பர்கள் குழு இஞ்சி, காய்கறிப் பயிர்களில் பஞ்சகவ்யா பயன்படுத்தி நல்ல மகசூலை எடுத்துவருகிறார்கள்.

கடல்நீர் சூழ்ந்த நிலங்களைப் பாத்தி பாத்தியாகப் பிரித்துப் பள்ளம் எடுத்தோம். ஒரு பாத்தியில் எடுக்கும் மண்ணை அருகில் கொட்டி மேடாக்கினோம். தற்போது ஒரு மேடு, ஒரு பள்ளம் என்ற ரீதியில் நிலம் முழுவதும் மாறியிருக்கிறது. இந்தப் பள்ளத்தில் நீர் தேங்கி நிற்கும். அதில் உவர் நிலத்தில் விளையும் நெல் ரகங்களை விதைக்கச் சொன்னோம். மேட்டுப்பகுதியில் காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்யக் கற்றுக்கொடுத்தோம். தற்போது, உவர் நீரிலும் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளோ திறந்தவெளிக் கிணறுகளோ இல்லை. மேட்டுநிலத்திலுள்ள காய்கறிப் பயிர்களுக்குப் பள்ளத்திலிருந்து நீரை ஊற்றிச் செடிகளை வளர்க்கிறார்கள். தற்போது அந்தமானில் காய்கறி உற்பத்தி அதிகரித்திருக்கிறது. 

முன்பு சென்னை, கொல்கத்தாவில் இருந்துவரும் காய்கறிகள்தான் இங்கு கிடைக்கும். தற்போது உள்ளூர்க் காய்கறிகளும் விற்பனைக்கு வருகின்றன. அந்தமான் விவசாயிகளின் விவசாய முறைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சில முன்னோடி விவசாயிகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர்களிடம் பேசினால் இன்னும் பல செய்திகள் உங்களுக்குத் தெரியவரும்” என்றவாறே, நம்மை அழைத்துக்கொண்டு  புறப்பட்டார் வேல்முருகன். 

அந்த விவசாயிகளின் அனுபவங்கள்  அடுத்த இதழில்...