பிரீமியம் ஸ்டோரி

னைவருக்கும் பசுமை வணக்கம்!

‘இயற்கை விவசாயம்’ செய்பவர்களையும், அதுகுறித்துப் பேசுபவர்களையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது ஒரு காலம். இப்போதோ... ‘இயற்கை விவசாயம்’ பற்றிய ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்களில் வேகமெடுத்துள்ளன. மத்திய-மாநில அரசுகளின் பட்ஜெட் அறிவிப்புகளில், ‘இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுப்போம்’ என்று முழங்குவதும் தொடர்கிறது.

இயற்கை விவசாயத்தை நோக்கி அரசு அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டுதான், தமிழக அரசின் ‘அங்ககச் சான்றளிப்புத் துறை’. தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்பவர்கள் இந்தத் துறையில் பதிவுசெய்துகொண்டால், முறையாக ஆய்வுசெய்து இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்குவார்கள். இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. இவை வரவேற்கக் கூடியவையே. அதேசமயம், பதிவுக்கட்டணம் மற்றும் ஆண்டுக்கு ஆண்டு புதுப்பித்தல் கட்டணம் என்ற பெயரில், இயற்கை விவசாயிகளை ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்துவதுதான் முரண்பாடாக உள்ளது.

சொட்டுநீர்க் குழாய் பொருத்த மானியம், பண்ணைக் கருவிகள் வாங்க மானியம்... என மானியங்களை அள்ளிக்கொடுக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இதன்மூலம் விவசாயிகள் பயன்பெறுவதைக் காட்டிலும், தயாரிப்பு நிறுவனங்கள்தான் கொழுத்த லாபம் பெறுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். இப்படித் தனியார் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக அள்ளிக்கொடுக்கும் அரசுகள், இயற்கையை நோக்கி ஓடிவரும் விவசாயிகளிடம் கட்டணம் என்கிற பெயரில் பணத்தை வசூலிப்பது முறைதானா? சொல்லப்போனால் நஞ்சில்லாமல் உணவு உற்பத்திச் செய்யும் இந்த விவசாயிகளுக்கு, வெளிநாடுகளில் வழங்குவதைப்போல மாதந்தோறும் மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பெருவாரியான விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு ஈர்ப்பதோடு... மண்ணையும் மக்களையும், வளமுடனும் நலமுடனும் வாழவைக்க முடியும்!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு