
களைகட்டிய உழவர் களஞ்சியம்! நாட்டு நடப்பு துரை.நாகராஜன்
கடந்த அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின், நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையத்தின் ஏற்பாட்டில் ‘உழவர் களஞ்சியம்’ என்ற வேளாண்மைக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. ‘பசுமை விகடன்’ ஊடக ஆதரவை வழங்கியிருந்த இந்நிகழ்ச்சியில், வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கலிலீ, சர்வதேச மேலாண்மை நிறுவன இயக்குநர் ஜோசப் ஷெவேல், இஸ்ரேல் விஞ்ஞானி பரூச் லெவி... போன்றவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். எழுபதுக்கும் மேற்பட்ட வேளாண் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், “நகரங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், கிராமங்களின் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படியில்லை. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
ஆனால், அரசாங்கம் இதைக் கண்டுகொள்வதேயில்லை. விவசாயிகளுக்குத் தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படவில்லை. நம் நாட்டைப் போலவே பாரம்பர்யமிக்க நாடு இஸ்ரேல். வேளாண் உற்பத்தியில், இஸ்ரேல் நாடு முன்னிலை வகிப்பதற்குக் காரணம் தொழில்நுட்பங்கள்தான். அந்நாட்டின் தொழில்நுட்பங்களை இந்தியாவிலுள்ள விவசாயிகளும் பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தத்தான், மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இங்குள்ள விவசாயிகளைப் பார்க்கும்போது, என் கிராமத்துக்கே சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. நானும் விவசாயி மகன்தான். என் தந்தையுடன் வயலுக்குச் சென்று விவசாய வேலைகளைப் பார்த்துள்ளேன்.

விவசாயிகள் முன்னேற வேண்டும் அதற்கு எங்கள் பல்கலைக்கழகம் உற்றதுணையாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கப் பட்டுள்ள உழவர் பயிற்சி மையம், ‘சோலை’ மாணவர் மன்றம்... ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உதவிகரமாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ராமசாமி, “இஸ்ரேல் நாடு, விவசாயத்தில் முன்னோடியாக உள்ளது. அங்கு 95 சதவிகிதம் தொழில்நுட்பமும் 5 சதவிகிதம் மனித உழைப்பும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் காலையிலிருந்து மாலை வரை கடுமையாக வேலை செய்கிறோம். தொழில்நுட்பமும் உழைப்பும் சேரும்போதுதான் விவசாயத்தில் லாபம் கிடைக்கும். தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிகமான வறட்சி இருந்தாலும், 282 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இங்கு விவசாயிகளை முன்னிறுத்தித் திட்டங்கள் தீட்டப்பட்டால் தான் விவசாயிகளால் முன்னேற முடியும்.

இப்போது விவசாயிகளுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நபார்டு வங்கிதான். சிறு குறு விவசாயிகள் அதிகளவில் முன்னேறுவதற்கு நபார்டு வங்கி உதவி வருகிறது” என்றார்.
இரண்டாம் நாள் கருத்தரங்கில் கொடுமுடியைச் சேர்ந்த ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜன் பேசும்போது, ‘இயற்கை விவசாயம்தான் விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுக்கும். ரசாயன விவசாயம்மூலம் நொடிந்து கிடக்கும் விவசாயிகளுக்கு, பஞ்சகவ்யா உற்றதுணையாக இருக்கிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை செலவைக் குறைத்தாலே, லாபம் எடுக்கத் தொடங்கிவிடலாம். பஞ்சகவ்யா வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சிவிரட்டியாகவும் செயல்பட்டு, நல்ல விளைச்சல் எடுக்க உதவி வருகிறது. தமிழ்நாட்டில் இயற்கை விவசாயப் புரட்சி நடந்துவருகிறது. இதற்கு விதைபோட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைத் தொடர்ந்து இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுத்துவரும் பசுமை விகடனும் முக்கியமான பணிகளை ஆற்றிவருகிறது. ஒரு காலத்தில் இயற்கை விவசாயம் பற்றிப் பேசியவர்களைக் கேவலமாகப் பார்த்தார்கள்.

ஆனால், இன்று வி.ஐ.டி போன்ற பல்கலைக்கழகத்தில் இயற்கை விவசாயத்தைப் பற்றி என்னைப் போன்றவர்கள் பேசுவதற்கு மேடை அமைத்துக்கொடுக்கும் அளவுக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
இரண்டு நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னோடி விவசாயி ‘மேட்டுப்பாளையம்’ நவநீதகிருஷ்ணன், பேராசிரியர் செந்தூர்குமரன்... போன்றவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.