Published:Updated:

மழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்!

மழைக்காலம்...  பூச்சிகள், நோய்கள்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
மழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்!

பயிர்ப் பாதுகாப்புஇ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

மழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்!

பயிர்ப் பாதுகாப்புஇ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
மழைக்காலம்...  பூச்சிகள், நோய்கள்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
மழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்!

டகிழக்குப் பருவமழை தீவிரம் காட்டத் துவங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். வருமுன் காப்பாற்றினால், பயிர்களில் மகசூல் இழப்பைத் தடுக்க முடியும்.

பயிர்களில் பூச்சித்தாக்குதல்களைத் தடுக்கும் முறைகள் குறித்துத் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் வேளாண் அலுவலர் ‘பூச்சி’ நீ.செல்வம் சொன்ன விஷயங்கள் இங்கே...

மழைக்காலம்...  பூச்சிகள், நோய்கள்... உஷார்!

“பருவமழை பெய்தாலும் பொய்த்தாலும் பூச்சிகள் அந்தந்தப் பருவத்தில் சரியாக வந்துவிடுகின்றன. பூச்சிகள், ‘குளிர்கால உறக்கம்’ மற்றும் ‘கோடைக்கால உறக்கம்’ என இரண்டு வகையான உறக்க நிலையைக் கடைப்பிடிக்கிறது. மழை பொய்த்துப் பயிர்களே இல்லாத சூழ்நிலையிலும்கூட உறக்க நிலையிலிருந்து அடுத்த பருவம் வரை வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றன. கூட்டுப்புழுப் பருவத்தில்தான் பூச்சிகள் உறக்க நிலையில் இருக்கின்றன. இந்தப் பருவத்தில் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் இறக்கைகள் வளர்கின்றன. பெரும்பாலான பூச்சிகள் களைச்செடிகளில்தான், தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. அதனால், வயலிலும் வரப்பிலும் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்கும்முன் வெட்டுக்கிளிகள் பயிர்களைத் தாக்கும்.

இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டிந்த நெல் பயிர்களில் வெட்டுக் கிளிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தது. இஞ்சி-பூண்டு கரைசல் தெளித்து, வெட்டுக்கிளிகள் உள்ளிட்ட பல பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்க முடியும். மாலை நேரத்தில் இக்கரைசலைத் தெளிக்கும்போது இலைகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும். இந்தக் கரைசல் எரிச்சலூட்டும் தன்மை கொண்டிருப்பதால், பூச்சிகளும் ஓடிவிடும். பயிர்களில் புழுக்கள் மற்றும் தாவித் திரியும் பூச்சிகள் தென்பட்டால்தான் இக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நுனியைக் கிள்ளி நடுதல் அவசியம்

மழைக்காலத்தில் நெல் நாற்றை நடும்போது (இயந்திரம்மூலம் நடவுசெய்தாலும் ஆள்களைக் கொண்டு நடவுசெய்தாலும்) நாற்றின் நுனியைக் கிள்ளிவிட்டுத்தான் நடவு செய்ய வேண்டும். நாற்றின் நுனியில்தான் குருத்துப்பூச்சிகள் முட்டையிடும். ஒரு முட்டைக்குவியலில் சுமார் 200 முட்டைகள் வரை இருக்கும். நுனியைக் கிள்ளி நடவு செய்யும்போது குருத்துப்பூச்சியின் முட்டைக்குவியலை அழிக்க முடியும். அதையும் மீறித் தாக்கும் பூச்சிகளை, விளக்குப் பொறியை (ஏக்கருக்கு ஒன்று) வைத்து அழிக்கலாம்.

இலைச்சுருட்டுப்புழு

நடவுசெய்த 15-ம் நாளுக்குமேல் நெல் பயிரில் இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் இருக்கும். இவை, நெல் பயிரின் நடுவிலுள்ள பச்சையத்தைச் சுரண்டுவதால், பயிரில் வெள்ளை நிறத்தில் கோடுகள் விழும். இந்த அறிகுறி தென்பட்டால், மாலை நேரத்தில் கைத்தெளிப்பான்மூலம் வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நிலக்கடலையில் இலை மடக்குப்புழு தாக்குதல் இருக்கும். இப்புழுக்கள் தாக்கினால், இலை முழுமையான அளவுக்கு விரிவடையாமல் சுருங்கிவிடும். நிலக்கடலை வயலில் ஊடுபயிராகவும், வரப்புப் பயிராகவும் கம்பை விதைத்துவிட்டால், கம்பு பயிர்களிலிருந்து வரும் மணம், இலை மடக்குப்புழுவை உண்டாக்கும் தாய்ப்பூச்சிகளை விரட்டிவிடும்.

மழை பெய்தவுடன் பயிர் வளர்ச்சிக்காக, அதிகமாக ரசாயன உரத்தை இடும் பழக்கத்தைப் பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடிக்கிறார்கள். இப்பருவத்தில் வழக்கமான அளவு ரசாயன உரம் இட்டாலே, இலையின் நிறம் கரும்பச்சையாக மாறும். அதிக உரமிட்டால் அடர் கரும்பச்சை நிறத்துக்கு மாறிவிடும். அடர் கரும்பச்சை நிறம், பூச்சிகளைக் கவர்வதால், நாமே அவற்றுக்கு அழைப்புவிடுத்தது போலாகிவிடும். பூச்சிகளுக்கு நிறத்தைப் பகுத்தறிய முடியாது என்றாலும், கரும்பச்சை நிறத்தை உணர்வலைகள்மூலம் உணர்கின்றன. ரசாயன உரம் போட்டவுடன் பயிர்களில் ஒருவித மணம் உருவாகும். இந்த மணமும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கிறது. அதனால், ரசாயன உரத்தைத் தவிர்த்து ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா போன்ற இயற்கை இடுபொருள்களைப் பயன் படுத்தினால், பூச்சிகளின் தாக்குதல் இருக்காது” என்று ஆலோசனை வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்திலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் நோயியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ராமமூர்த்தி, மழைக்கால நோய்கள் குறித்து இங்கு விளக்குகிறார்.

மழைக்காலம்...  பூச்சிகள், நோய்கள்... உஷார்!

“மழையோடு, பனிக்காலமும் வர இருப்பதால் அதிகமான நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பருவத்தில் நெல் பயிரில் குலைநோய், செம்புள்ளிநோய், இலை உறை அழுகல்நோய் ஆகியவை தாக்கக்கூடும். இவற்றில் அதிக சேதம் ஏற்படுத்துவது குலைநோய். செம்புள்ளி நோய் தாக்கினால் நெல் பயிர் மற்றும் நாற்றுகளில் எள் வடிவத்தில் கறும்புள்ளிகள் தென்படும். இலைகள் மற்றும் தண்டுக்கணுவில் பறவைக்கண் வடிவில் கறுப்பு நிறப்புள்ளிகள் காணப்பட்டால் அது குலைநோய். இந்நோய் முற்றினால், கதிர் ஒடிந்து விழுந்துவிடும். நெல் மணிகள் முழுவதும் சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும்.

இலைகளின் உறைப்பகுதி மட்டும் பழுப்பு நிறத்துக்கு மாறி, நோய் முற்றும்போது கறும்பழுப்பு நிறத்துக்கு மாறி கருகிவிடும். இது இலைஉறை அழுகல் நோய் ஆகும். மழை ஆரம்பிக்கும் சமயத்திலேயே இந்நோய்கள் தாக்கிவிடும். மழை ஆரம்பித்த உடனேயே 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் ஒட்டும் திரவம் ஆகியவற்றைக் கலந்து, கைத்தெளிப்பானால் மாலை நேரத்தில் தெளித்து,நோய்களைத் தடுக்கலாம். இக்கரைசல், மேற்கண்ட மூன்று நோய்களையும் தடுக்கும். நோய் தாக்கிய பிறகும் இக்கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

பயறு வகைகளில் மழைக்காலத்தில் இலைப்புள்ளி நோயின் தாக்குதல் இருக்கும். 5 கிலோ வேப்பங்கொட்டையைப் பொடித்து 100 லிட்டர் தண்ணீரில் 8 மணிநேரம் வரை ஊறவைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் ஒட்டும் திரவம் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து, இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம். 100 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்பம்பிண்ணாக்கைப் போட்டு 8 மணி நேரம் ஊற வைத்து, அக்கரைசலைத் தெளித்தாலும் இந்நோய் கட்டுப்படும். இலைகளில் மஞ்சள் நிறத்தில் கொப்புளம் போலக் காணப்பட்டால், அது ‘துருநோய்’ என்று அழைக்கப்படும். இந்நோய்க்கும் இந்தக் கரைசலைப் பயன்படுத்தலாம்” என்றார். 

தொடர்புக்கு, செல்போன்:

நீ.செல்வம் - 94435 38356
ராமமூர்த்தி - 99945 11343

இஞ்சி - பூண்டுக் கரைசல்

மூன்று கிலோ பச்சை மிளகாய், கால் கிலோ பூண்டு, 100 கிராம் இஞ்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டை மட்டும் உரலில் இடித்து 100 மில்லி மண்ணெண்ணெயில் ஓர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றைத் தனித்தனியாக மை பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாயில் காம்புகளைக் கிள்ளி விட்டுத்தான் அரைக்க வேண்டும்.

அடுத்தநாள் 10 லிட்டர் தண்ணீரில்  இவற்றைக் கலந்து வடிகட்டி, ஒட்டும் திரவத்துக்காக 100 கிராம் காதிசோப்பைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இக்கரைசலிலிருந்து அரை லிட்டரை எடுத்து 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து, மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.