Published:Updated:

‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’

‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’

மோடிக்கு ஜூ.கோ சுளீர் கடிதம்!ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’

மோடிக்கு ஜூ.கோ சுளீர் கடிதம்!ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

Published:Updated:
‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’

‘இந்திரா காந்திக்குப் பிறகு, அசுரபலம் வாய்ந்த இந்தியப் பிரதமர் நான்தான்’னு தினம் தினம் நிரூபிச்சுக்கிட்டே இருக்கிற நரேந்திர மோடி அய்யாவுக்கு, இந்த ஜூனியர் கோவணாண்டியோட கோடானுகோடி நமஸ்காரமுங்க.

உங்ககிட்ட நிறைய வம்புவழக்கு இருந்தாலும், அதையெல்லாம் பந்தி வெக்கிறதுக்கு நேரம் கிடைக்கறதில்லீங்க. ஆனா, நீங்க எங்க அடிமடியிலேயே கைவெக்கிற அளவுக்குத் துணிஞ்சுட்ட பிறகு, பார்த்துக்கிட்டு இருக்க முடியாமத்தான், இந்தத்தடவை உங்ககிட்ட பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கேணுங்கோ!

இந்திரா காந்தி அம்மையாரோட ஆட்சிக்காலம்கிறது... நேர்ல பாத்துப் புரிஞ்சுக்க முடியாத வயசுல கடந்து போயிடுச்சுங்க. ஆனா, நிறையபேர் சொல்லக்கேட்டும், புத்தகங்கள்ல படிச்சும், கொஞ்சம் நல்லாவே தெரிஞ்சு வெச்சுருக்கேனுங்க. குறிப்பா, இப்பக்கூட அடிக்கடி நீங்க சொல்லிக்கிட்டிருக்கீங்களே... ‘எமர்ஜென்ஸி’, அந்த வார்த்தையைக் கேட்டாலே நடுங்குமுங்க. ஆனா, உங்க ஆட்சியை நேர்ல பார்த்து நல்லா அனுபவிச்சுக்கிட்டிருக்கேனுங்க. ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’னு இந்திராம்மா கணக்காவே ஆட்சியை நகர்த்திக்கிட்டிருக்கிறது மாதிரிதான் எனக்குத் தெரியுது. இந்த விவசாய விஷயங்கள்ல நீங்க தடாலடியா முடிவுகளை எடுக்கிறதப் பார்த்தாத்தான் பயமாவே இருக்கு.

‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’

அந்தம்மா காலத்துல விவசாயக் கொள்கைகள்ல, அநியாயத்துக்கு ‘தாறுமாறு தக்காளிச்சோறு’ வேலையைப் பார்த்தாங்க. வெளிநாட்டுக்காரங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு, ‘பசுமைப் புரட்சி’னு ஒண்ண மட்டுமே உசத்திப்பிடிச்சி, எங்க விவசாயிகளோட சுயசார்பு வாழ்க்கைக்கு வேட்டுவெச்சதே அந்தம்மாதான். கண்டகண்ட உரத்தைக் கொட்டி, கண்மூடித்தனமா பூச்சிக்கொல்லி விஷத்தைத் தெளிக்க வெச்சி, நிரந்தரக் கடன்காரங்களா மாத்தி அதகளம் பண்ணிட்டாங்க. அன்னிக்கு அந்தம்மா போட்ட விஷவிதைதான், இன்னிக்கு விவசாயிகளைப் பிடிச்ச ஏழரையா தொடர்ந்துகிட்டிருக்கு. நீங்க ஆட்சியைப் பிடிச்சதும் காங்கிரஸ் காலத்துல விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பண்ணின அநியாயத்துக்கெல்லாம் நீதி சமைப்பீங்கனு பார்த்தா... ‘அவங்களே தேவலாம் போலிருக்கே’னு சொல்ற அளவுக்கு ஒரேயடியா வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவா பொங்கறீங்களே! மரபணுமாற்றப்பட்ட விதைகள், நீர்நிலைகள் தனியார்மயம் பற்றிய விவாதம், விவசாய மானியங்களுக்கு வெட்டு, கார்ப்பரேட் விவசாயத்துக்குச் சலுகைனு அடுத்தடுத்து அஸ்திரங்களை அள்ளிவிட்டுக்கிட்டே இருக்கீங்க.

‘ஊரான் ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்’


சுதந்திரப் போராட்டக் காலங்கள்ல எங்க விவசாயிங்க பாட ஆரம்பிச்ச பாட்டு இது. சுதந்திரம் வாங்கி 70 வருஷத்துக்கு மேலாகியும்கூட, அந்தப் பாட்டு ஒலிச்சுக்கிட்டேதான் இருக்கு. நாங்க என்ன விளைவிக்கணும்... அதுக்கு என்ன உரம் போடணும்... எப்படி அதைச் சந்தைப்படுத்தணும்... என்ன விலைக்கு விக்கணும்னு எல்லாத்தையும் ஏதோ ஒரு நாட்டுல உக்கார்ந்துகிட்டு, யாரோ தீர்மானிக்கறாங்க. அதை நீங்களும் வேடிக்கை பார்க்கறதோட... அவங்களுக்குச் சாதகமாவே திட்டங்களையும் தீட்டறீங்களே... நல்லாவா இருக்கு?

எதிர்ப்பே இல்லாம கண்ட திட்டங்களையும் நிறைவேத்தறதுக்காக, மாநிலப் பட்டியல்ல இருக்கிற விவசாயத்தை, மத்தியப் பட்டியலுக்கு மாத்துறவேலையில இப்பத் தீவிரமா இறங்கியிருக்கீங்க. ஏற்கெனவே மாநிலப்பட்டியல்ல விவசாயம் இருக்கறப்பவே, போதுமான வளர்ச்சி இல்லை. எதைக் கேட்டாலும், சென்னையில இருக்கிற அமைச்சர் முடிவெடுக்கணும், அதிகாரிங்க முடிவெடுக்கணும்னே உள்ளூர் அதிகாரிங்க எங்க வாயை அடைச்சுடறாங்க. இந்த லட்சணத்துல இதையும் மத்தியப் பட்டியல்ல சேர்த்துட்டீங்கனா... ‘டெல்லியிலதான் முடிவெடுக்கணும்’னு ஒட்டுமொத்தமா சமாதியே கட்டிடுவாங்க.

ஒரு விஷயத்தைச் சொன்னா ரொம்ப நல்லாவே புரிஞ்சுக்க முடியும்னும் நினைக்கிறேன். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்ப ஆரம்பிச்சதுமே, ‘அதைத் திறந்துவிடறதா... வேணாமா?’னு பொதுப்பணித்துறை அதிகாரிங்க தவிச்ச தவிப்பு, சொல்லுல அடங்காது. உண்மையில அந்த அதிகாரிகளே அதைத் திறந்துவிட முடியும். அதுக்கான அதிகாரங்கள் அவங்ககிட்டதான் இருக்கு. ஆனாலும், முதலமைச்சர்கிட்ட கேக்காம தொறக்கக் கூடாதுனு, அப்போ முதலமைச்சரா இருந்த ஜெயலலிதாவோட உத்தரவுக்காகக் காத்துக்கிட்டே இருந்தாங்க. கடைசியில அது பெருவெள்ளமா மாறிச் சென்னையில பெரும்பகுதியை மூழ்கடிச்சுது. இது, 2015-ம் வருஷத்துச் சோகம். இதுவே, அந்த ஏரிக்கரையில ஆபீஸ் போட்டு உக்கார்ந்திருக்கிற அதிகாரியே முடிவெடுத்திருந்தா, இந்தக் கொடுமை சென்னையைத் தாக்கியிருக்குமா?

இப்பவே பாருங்களேன். தஞ்சாவூர் பக்கம் பாபநாசத்துல உக்கார்ந்திருக்கிற எங்க மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு, கண்ணு தெரியாம போயிடுச்சுபோல. இந்த ஐப்பசியில கொட்டித்தீர்க்கிற மழையில திருவாரூர், நாகப்பட்டினத்துல நெல் வயல்கள் நிறைய மூழ்கிக்கிடக்கறது அவருக்குத் தெரியல. ‘டெல்டா பகுதியில் மழை பாதிப்பில்லை. பயிர்கள் மூழ்கவில்லை’னு பேப்பர்லயும் டிவியிலயும் பேட்டி கொடுக்கிறாரு. இதுதான் நிர்வாகத்தோட நிஜ நிலைமை. விவசாயம் மாநிலப் பட்டியல்ல இருக்கறப்பவே... இப்படினா? எங்கயோ டெல்லியில உக்கார்ந்துக்கிட்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான நிலபுலன்களை ஆட்சி பண்ண ஆரம்பிச்சா என்ன நடக்கும்? ‘காவிரி டெல்டாவுல வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கே?’னு கேட்டா... காவிரி டெல்டாவா... அது ஆப்பிரிக்காவுலல்ல இருக்குனு’ மத்திய வேளாண்துறை அமைச்சர் சொன்னாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்ல.

ஆக, அதிகாரங்களை ஒரே இடத்துல குவிக்கறத விட்டுட்டு, பரவலாக்குங்க. எல்லாரும் இந்நாட்டு மன்னர்னு வாய் வார்த்தையில சொன்னா பத்தாது. நிஜத்துல அதைச் சாத்தியமாக்குங்க. அந்தந்த ஊர், அந்தந்த மண், அந்தந்தப் பருவம், அந்தந்த மண்ணுக்கான விதைகள்னு மாவட்ட அளவுல, மண்டல அளவுலயே விவசாயிகளும், அதிகாரிகளும் கூடிப்பேசி முடிவுகளை எடுக்கற அளவுக்கு அதிகாரங்களைப் பிரிச்சிக் கொடுங்க. அப்பத்தான் முடிவுகளும் சரியா இருக்கும்... அதோட பலன்களும் நிறைய கிடைக்கும். அதை விட்டுட்டு, திரும்பத் திரும்ப டெல்லியிலயே எல்லாத்தையும் குவிக்க ஆரம்பிச்சா... ஒரு மண்ணும் வௌங்காமத்தான் போகும். அங்க இருக்கிற அதிகாரிங்களும் அமைச்சர்களும் வெச்சதுதான் சட்டம்னு ஆகிப்போயிடும். அரேபியாவுல விளையற பேரீச்சையை, அம்பாசமுத்துரத்துல போடுங்கறான். காஷ்மீர்ல விளையுற ஆப்பிளை, காரைக்குடியில போடுங்கறான். இதை நம்பிப் போட்டவங்கள்ல பலபேரு தலையில துண்டைப் போட்டுக்கிட்டு அலையறாங்க.

நம்ம நாட்டு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பலரும் வெளிநாட்டு டூர் போறாங்க கம்பெனிக்காரன் காசுல. இந்தியாவுக்குத் திரும்பி வந்ததுமே... ‘நாம் அமெரிக்காவின் மான்சான்டோ விதைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த நிறுவனத்தின் அதிஅற்புதமான அறிவியல் ஆராய்ச்சியில் நான் குளிர்ந்து போனேன்’னு பேட்டி கொடுத்துட்டு, நம்ம ஊர் அமைச்சர்கள் வரைக்கும் போய்ச் சாம்பிராணியைப் போடுவாங்க. உடனே, மரபணு மாற்றப்பட்ட பருத்தி தொடங்கிப் பன்றிகள் வரைக்கும் இங்க விற்பனையாக ஆரம்பிச்சுடும். அதைத்தான் வாங்கித் தொலைக்கணுங்கிற கட்டாயமும் நம்ம விவசாயிங்களுக்கு வந்து சேரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு!’’

இதுல ஓர் ஆராய்ச்சியாளராவது... ‘இந்தியாங்கிறது மிகப்பெரிய விவசாய நாடு. பல்லாயிரக்கணக்கான வருஷமா இந்த நாட்டு விவசாயிகளே ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்துப் பரிசோதிச்சிருக்காங்க. பல ஆயிரம் விதைகளையும் விவசாயத் தொழில்நுட்பங்கள், நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள், இயற்கை இடுபொருள் நுட்பங்கள், சுற்றுச்சூழல் பாடங்கள்னு நிறைய உருவாக்கி வெச்சிருக்காங்க. இது எல்லாம்தான் இந்திய நாட்டு விவசாயிகளோட வெற்றிக்குக் காரணம். இந்த இயற்கை நுட்பங்களைக் கையில எடுத்தாலேபோதும்... வேற எந்த வெண்டைக்காயும் தேவையில்லை’னு சொல்லியிருக்காங்களா... இல்லையே. ஆனா, நம்மை ஆட்சி செஞ்ச வெள்ளைக்காரங்க, அப்பவே சொல்லியிருக்காங்க.

ஆர்தர் கார்ட்டன், பென்னி குக் உள்ளிட்ட வெள்ளைக்கார அதிகாரிங்க, இன்னிக்கும் இந்திய விவசாயிகளால தெய்வமா வணங்கப்படறாங்க. அதுக்குக் காரணம்... அவங்கள்லாம், இந்திய விவசாயிகளோட தேவையைப் புரிஞ்சுகிட்டு, அவங்களோட விவசாய முறைகளைக் கண்டு வியந்துபோய் மனப்பூர்வமா செய்த உதவிகள்தான். நம்ம விவசாயிங்களுக்காகவே நீர்ப்பாசனத் திட்டங்களை வடிவமைச்சாங்க. முல்லை-பெரியாறு உள்ளிட்ட அணைகளைக் கட்டிக்கொடுத்தாங்க. இன்னிக்குப் பீகார் மாநிலத்துல இருக்கிற பூசா வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அச்சாரமே... அந்தப் பகுதியில நடக்கிற விவசாயத்தைப் பார்த்து வெள்ளைக்காரங்க வியந்துபோனதுதான். அந்தப் பகுதியை மேம்படுத்துற விதத்துலதான் விவசாய ஆராய்ச்சி நிலையத்தையே பூசாவுல அமைச்சாங்க.

‘உள்ளூர் மாடு விலை போகாது’னு சொல்லுவாங்க. இது யாருக்குப் பொருந்துதோ... இல்லையோ... எங்க இயற்கை விவசாயத்துக்கு நல்லாவே பொருந்தும். இதுக்கு முன்ன இருந்த கதர் கட்சிக்காரங்கதான் இதைக் கண்டுக்கல. எப்பவுமே சுதேசியம் பேசுற, நீங்களுமே கண்டுக்கலைனா எப்படி? நல்லா யோசிச்சி ஒரு முடிவெடுங்க. ‘ம்க்கும்... நான் இந்திரா காந்தி மாதிரி பலம் பொருந்திய பிரதமராக்கும்’னு மறுபடி முஷ்டியை முறுக்கிக்கிட்டே இருந்தீங்கனா... நாளைக்கு விவசாயிங்க மட்டுமில்ல, இந்திய விவசாயமும் முறுக்கிக்கிட்டு வேற பாதையில போக ஆரம்பிச்சுடும் ஜாக்கிரதை!
 
இப்படிக்கு,

ஜூனியர் கோவணாண்டி