Published:Updated:

``மேற்குத் தொடர்ச்சி மலையில மட்டுமில்ல, எங்க கனவும் காணி நிலம் வாங்குறதுதான்!’’ - விவசாயி மீனாட்சி

``மேற்குத் தொடர்ச்சி மலையில மட்டுமில்ல, எங்க கனவும் காணி நிலம் வாங்குறதுதான்!’’ - விவசாயி மீனாட்சி
``மேற்குத் தொடர்ச்சி மலையில மட்டுமில்ல, எங்க கனவும் காணி நிலம் வாங்குறதுதான்!’’ - விவசாயி மீனாட்சி

மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளில் வாழும் எளிய மனிதர்களின் காணி நிலம் வாங்கும் கனவு, கடைசி வரை கனவாகவே கலைந்துபோகும் அவலம், ரங்கசாமி கதாபாத்திரம் மூலம் `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம், உழைக்கும் மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி எல்லா தரப்பு மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

``மேற்குத் தொடர்ச்சி மலையில மட்டுமில்ல தம்பி, தந்தரையில் வாழும் எங்க கனவும் காணி நிலம் வாங்குறதுதான். ஆனா, குடிசை போட்டு தங்குறதுக்குக் கோவணத்துணி அளவுக்குக்கூட நிலம் இல்லாம, பல தலைமுறையா ஏக்கத்தோடு வாழ்றோம். ஊர் ஊரா போய் அடுத்தவங்க நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து வெள்ளாமை பண்றதுதான் எங்க பொழப்பு. வயித்துப்பாட்டுக்கே வழியில்லாதபோது, காணி நிலம் வாங்க காசுக்கு எங்கே போறது" என்று வெயில் காலத்து எள்ளுச் செடியாக விசும்பி வெடிக்கிறார் மீனாட்சி.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது சௌந்தராபுரம். இந்தக் கிராமத்தில் உள்ள காடு கரையில் ஆறு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெள்ளாமை செய்கிறார் மீனாட்சி. இவரது கணவர் வேலுச்சாமியின் சொந்த ஊர், அருகில் உள்ள வரப்பட்டி. பத்து வருடத்துக்கு முன்பு சௌந்தராபுரத்தில் உள்ள இந்த 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெள்ளாமை செய்யத் தொடங்கியிருக்கிறது வேலுச்சாமி குடும்பம். ஆனால், இரண்டு வருடத்துக்கு முன்பு வேலுச்சாமி திடீரென இறந்துவிட, தொடர்ந்து நிலத்தில் வெள்ளாமை செய்துகொண்டிருக்கிறார் மீனாட்சி. காணி நிலம் வாங்கும் கனவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

``இந்த உலகத்துல விவசாயியா பிறக்கக் கூடாது. அதுவும் ஏழை பாழை விவசாயியா பிறக்கவே கூடாது தம்பி. எனக்கு வயசு 60 ஆவுது. 35 வருஷத்துக்கு முன்னாடி எனக்குத் திருமணம் ஆச்சு. என் கணவரோட ஊர் வரப்பட்டி. சொந்தமா குடியிருக்கக்கூட நிலம் இல்லாத நிலைமை. ஊர் ஊரா போய் அடுத்தவங்க நிலங்களைக் குத்தகை எடுத்து வெள்ளாமை பண்றதுதான் அவரது தொழில். இந்த 35 வருஷத்துல எங்களையும் அஞ்சு அல்லது 10 வருஷத்துக்கு ஓர் இடம்னு ஏழெட்டு ஊர்களுக்கு நாடோடியா அழைச்சுட்டுப் போயிருப்பார். அப்படித்தான் 10 வருஷத்துக்கு முன்னாடி இங்க சௌந்தராபுரம் அழைச்சுட்டு வந்தார்.

நல்லசாமி என்பவரோட இந்த 6 ஏக்கர் நிலத்தை 30,000 ரூபாய்க்கு குத்தகைக்குப் பிடிச்சார். இந்த வயக்காட்டுலேயே ஒரு ஓரமா குடிசையைப் போட்டுத் தங்கிக்கிட்டோம். எங்களுக்கு மூணு பிள்ளைங்க. ஒரு பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆகியிருக்கு. இந்த நிலம் மானாவாரி நிலம். மழை பேஞ்சாதான் வெள்ளாமை. பொதுவா நல்ல மழை பேஞ்சு வருஷத்துக்கு ரெண்டு போகம் வெள்ளாமை பண்ணினா, கொஞ்சம் வருமானம் கிடைக்கும். ஆனா, நாலு வருஷமா சொல்லிக்கிற மாதிரி மழை இல்லை. அதனால, ஒரு போகத்துக்கே வெள்ளாமை எடுக்க முடியலை.

`நம்ம பொழப்பு நம்மோட போகட்டும். மகனாச்சும் பெரிய படிப்புப் படிச்சு நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டாரட்டும்'னு கஷ்டத்தோட கஷ்டமா மகனை எம்.பி.ஏ வரைக்கும் படிக்கவெச்சார். படிச்சு முடிச்சும் அவனுக்கு சரியா வேலை அமையலை. விவசாயம் பொய்ச்சதால, குத்தகை கொடுக்கவும், வீட்டுப் பிரச்னைகளைச் சமாளிக்கவும் கடன்மேல கடன் வாங்கினார். வீட்டுல இருந்த ஆறு பவுன் நகையை அடகுவெச்சார். அதை மீட்க முடியலை. இந்த மனப்பாரத்துலயே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நெஞ்சு வெடிச்சு செத்துப்போயிட்டார்.

ஒரு பொண்ணு, ஒரு பையன், கழுத்தை நெரிக்கும் கடன், இருட்டா கிடந்த எதிர்காலம்னு எல்லாம் சேர்ந்து என்னை பயமுறுத்த ஆரம்பிச்சுச்சு. மழை வேற இல்லை. வயல்லயும் அப்போ வெள்ளாமை போடலை. அடுத்த வேளை சோத்துக்கே வக்கத்து நின்னப்ப, வீட்டுல நின்ன நாலு ஆட்டுக்குட்டிகளும் என் மருமகன் முருகேசனும்தான் எங்களுக்கு உதவினாங்க. அந்த ஆட்டுக்குட்டிகளை வித்து வயித்துப்பாட்டைப் பார்த்துக்கிட்டோம். மருமகன் எங்களுக்கு ஒத்தாசையா இருந்தாரு. ஆனா கடன்காரங்க, `கடனை அடைக்கிறியா... இல்லை முச்சந்தியில பஞ்சாயத்தைக் கூட்டி, குடும்ப மானத்தை நாறடிக்கவா'ன்னு மிரட்டுறாங்க. தினமும் ஏன்டா விடியுதுன்னு இருக்கு தம்பி.

இப்போ வயலை உழுது போட்டிருக்கோம். லேசா மழை பேஞ்சாலே கடலையோ, சோளமோ போடலாம்னு வானத்தைப் பார்த்துக்கிட்டிருக்கோம். எங்கெங்கோ தேவையில்லாத இடத்துலெல்லாம் பெய்யுற மழை, எங்களை காயவெச்சு வதைக்குது. பொண்ணு, கல்யாண வயசை தாண்டிட்டா. பொட்டுத்தங்கம் கையில் இல்லை. பையனும் வேலை இல்லாம திண்ணையில உக்காந்து மோட்டுவலையை வெறிக்கப் பார்த்துக்கிட்டிருக்கான். மருமகன் மட்டும் உதவலன்னா, எங்க மூணு பேரு பொழப்பும் சிரிப்பா சிரிச்சுப்போயிருக்கும்.

என் புருஷன் உசிரோட இருந்தப்ப, `எங்க வம்சமே கோவணத்துணி மாதிரி சொந்தமா காணி நிலம் வாங்கிப்புடணும்னு தலையால தண்ணிக் குடிச்சுப்பார்த்துச்சு. முடியலை. நாமளாச்சும் ரெண்டு சென்ட் நிலத்தை சொந்தமா வாங்கி, அதுல சுதந்திரமா, மனம் நிறைஞ்சு விவசாயம் பண்ணி, பெரிய குடி ஆகிடணும். நாலு காசு சேர்த்து நாமளும் பகட்டா வாழணும் மீனாச்சி. இப்போ எகத்தாளமா பேசுற கடன்காரங்க எல்லாம் அப்போ நம்மள பார்த்து மரியாதையா பேசுவாங்களல்ல'ன்னு சொல்வார். கடைசி வரைக்கும் நிலம் வாங்குற அவரோட ஆசை வெறும் கனவாவே போயிட்டு.

பேய் உழைப்பு உழைச்ச அந்த மனுஷனாலேயே வாங்க முடியாத நிலத்தை, எங்களால் மட்டும் வாங்கிடவா முடியும்? வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா சாவுன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ரேஷன்ல கிடைக்கிற புழுத்த ரேஷன் அரிசியும், வயல்ல போட்டிருக்கிற முருங்கைப் பயிரும் இல்லைன்னா, சோத்துக்கு வழியில்லாம எங்க பொழப்பும் அவர் போனப்பவே உளுத்துப்போயிருக்கும்" என்று முடித்தபோது, அவர் கண்களில் இரண்டொரு சொட்டு நீர்!