Published:Updated:

மாற்றுச் சந்தைக்கு மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18

மாற்றுச் சந்தைக்கு  மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றுச் சந்தைக்கு மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18

சந்தைக்கு வழிகாட்டும் தொடர்அனந்து, தொகுப்பு: க.சரவணன்

வெகுஜனச் சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

கடந்த சில வாரங்களாக எனக்குச் செல்போனில்வரும் அழைப்புகளில் பெரும்பான்மையானவை ‘பசுமை விகடன்’ வாசகர்களின் அழைப்புகள்தான். அவர்களின் முக்கியமான கேள்வி, ‘நாங்கள் விளைவிக்கும் இயற்கை விளைபொருள்களை ரீஸ்டோர் அல்லது ஓ.எஃப்.எம் அங்காடிகள்மூலம் கொள்முதல் செய்துகொள்ள முடியுமா?’ என்பதுதான்.

இந்தச் சில அங்காடிகள் எப்படி அனைத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இதுகுறித்து, இங்கு எழுதுவதற்கு முக்கியக் காரணம், இதுபோன்ற இயற்கை விளைபொருள்களுக்கான அண்மைச் சந்தைகளை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். கொஞ்சம் மெனக்கெட்டால் கட்டாயம் உருவாக்கிவிட முடியும். இதுபோன்ற முயற்சிகள்மூலம் சந்தையை நம் வசப்படுத்தி, ஜனநாயகப்படுத்த வேண்டியது அவசியம். ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களுக்கு வழிகாட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மாற்றுச் சந்தைக்கு  மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18

இயற்கை விவசாயிகள் ஆரம்பத்தில் தன் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் போன்றோருக்கு விளைபொருள்களை விற்பனைசெய்ய வேண்டும். அடுத்ததாக உள்ளூர் கடைகள், அருகிலுள்ள நகரங்களில் உள்ள கடைகள்... எனப் படிப்படியாகத் தான் விற்பனையை விரிவுபடுத்த வேண்டும். கடைசியாகத்தான் சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி வர வேண்டும். நடைமுறையில் இதைச் சாத்தியப்படுத்துவது எளிதானது இல்லைதான். ஆனால், இயற்கை விளைபொருள் விற்பனையில் ‘ஃபுட் மைலேஜை’ குறைப்பது முக்கியமான விஷயம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விளையும் இடத்துக்கு அருகிலேயே சந்தை அமைய வேண்டியது அவசியம்.

விளைவிப்பதோடு நிறுத்திவிடாமல் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டல்... எனப் பல நுட்பங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சந்தை நம் வசப்படும். ஒத்த கருத்துள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அதற்குச் சிறந்த உதாரணம், ஏற்கெனவே நாம் பார்த்த ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’தான். சிட்லிங்கி விவசாயிகளின் வெற்றியைப் பார்த்து, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பாமரர் ஆட்சியியல் கூடம் (Barefoot Academy of Governance) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு குறித்தும் பசுமை விகடனில் எழுதப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாற்றுச் சந்தைக்கு  மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18

இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்துச் சிறுதானிய உற்பத்தியை அதிகப்படுத்தியிருக்கும் இந்த அமைப்பால், ஆரம்பத்தில் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால், தானியங்களாகவே விற்பனை செய்துவந்தனர். பெரும் முயற்சிக்குப் பிறகுதான் அவர்கள் உற்பத்திசெய்த சிறுதானியங் களுக்குச் சந்தை விலையைவிடப் பத்து ரூபாய் கூடுதல் விலையைப் பெற முடிந்திருக்கிறது. ஆனால், மதிப்புக்கூட்டியிருந்தால் எளிதாகக் கூடுதல் விலையைப் பெற முடிந்திருக்கும். தற்போது, இந்த அமைப்பினர் மதிப்புக் கூட்டலுக்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

விவசாயிகள் மட்டும்தான் கூட்டாகச் செயல்பட்டு இயற்கை வேளாண் சந்தைகளை உருவாக்க வேண்டும் என்பதில்லை. மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இளைஞர் குழுக்கள் எனப் பலரும் மதிப்புக்கூட்டல், விற்பனை  எனப் பணிகளைச் செய்ய முடியும். இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இம்முயற்சியில் இறங்கும் குழுக்களே, பஞ்சகவ்யா, மண்புழு உரம்... போன்ற இயற்கை இடுபொருள்கள் விற்பனையிலும் ஈடுபடலாம். தனிநபரின் முயற்சியாக இல்லாமல் கூட்டு முயற்சியாக இருந்தால், பொருளாதாரம், பணிப்பகிர்வு, மாற்று யோசனைகள் எனப் பல பயன்கள் கிடைக்கும்.

மாற்றுச் சந்தைக்கு  மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18

இதில் முக்கியமான விஷயம், அமைப்பை உருவாக்கிவிட்டு உறுப்பினர்களைத் தேடக் கூடாது. ஒத்த கருத்துடைய விவசாயிகள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து, அவர்களுக்குள் புரிதல் ஏற்பட்ட பிறகு, அமைப்பை உருவாக்கிப் பதிவு செய்தால் பிரச்னைகள் இருக்காது. இதுபோன்ற அமைப்புகளில் ஜனநாயகத் தன்மையுடன் முடிவுகள் எடுக்க வேண்டும். ஒரு சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதால் அழிந்துபோன பல மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஜனநாயகத் தன்மை இல்லையென்றால் கூட்டு முயற்சிகள் பலன் தராது.

தற்போதுள்ள வெகுஜனச்சந்தை, மதிப்புகூட்டல் மற்றும் பதப்படுத்துதல் போன்றவற்றுக்குப் பெரிய பெரிய இயந்திரங்களை நம்பித்தான் இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட இயந்திரங்கள் ‘இயற்கை பசுமைச்சந்தை’க்கு (விவசாயிகள் மூலம் உருவாக்கப்படும் அண்மைச் சந்தைகள்) அவசியமற்றவை. பரவலாக்கப்பட்ட, சிறிய அளவில் அனைவரும் கையாளக்கூடிய தொழில் நுட்பங்கள்தான் இயற்கை பசுமைச்சந்தைக்கு அவசியம். முன்பு உரல், திருகை ஆகிய எளிய கருவிகளைத்தானே பயன்படுத்தினோம். அதுபோன்ற முறைகளைத் தற்போது மீட்டெடுக்க வேண்டியது அவசியம். இதன்மூலம், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய முடியும். அதேநேரத்தில் இயந்திரங்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. தேவையைப்  பொறுத்து, நம் கொள்கைகளுக்குகந்த இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான கொள்கைகள் மூலமாக மாற்றுச் சந்தைகளை அமைக்க முடியாது. பகுதி, சூழல் போன்றவற்றுக்குத் தக்கவாறு சில கொள்கைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். தெளிவான கொள்கைகளுடன் தேவைக்கேற்றவாறு செயல்முறைகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நிறுவனங்கள் மட்டும் லாபம் சம்பாதிக்காமல், சிறு குறு விவசாயிகள் லாபம் அடையும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மாற்று இயற்கைச் சந்தைகள்மூலம் விவசாயிகள், அங்காடி நடத்துவோர், நுகர்வோர் என அனைவரும் பயன்பெறும்படி இருக்க வேண்டும்.

 - விரிவடையும்

இயற்கைச் சந்தையை ஒடுக்கும் உணவுப் பாதுகாப்பு ஆணையம்

கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில், டில்லியில் உலக இயற்கை விவசாய மாநாடு நடைபெற்றது. அதில், இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (FSSAI), இயற்கை உணவுப் பொருள்களுக்கென ஒருங்கிணைந்த விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இயற்கை உணவுப்பொருள்களை உறுதி செய்ய, பொதுவான ‘லோகோ’வும் வெளியிடப்பட்டுள்ளது.

 நிறுவனங்கள்மூலம் விற்பனைக்குவரும் அனைத்து இயற்கை விளைபொருள்களும் இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அங்ககச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிறு குறு விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனங்கள் நேரடி விற்பனையில் ஈடுபடும்போது, இந்த விதிமுறைகளில் விலக்கு உண்டு.

மாற்றுச் சந்தைக்கு  மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18

இயற்கை விளைபொருள்களுக்கு நெறிமுறைகள் அவசியம்தான் என்றாலும், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது உணவுப் பாதுகாப்பு ஆணையம்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பொருள்களையும், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களையும் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆணையம், இயற்கை உணவுப்பொருள்கள் விற்பனைக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது, இயற்கை விளைபொருள் விற்பனையில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களுக்குத் துணைபோகத்தான் செய்யும். இதன்மூலம் முறைசாரா சிறிய அண்மைச் சந்தைகள் ஒடுக்கப்படும்.

இந்திய அளவில், இயற்கை விவசாயம் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. அதனால், இயற்கை விவசாயப் பரப்பை அதிகரிக்க வேண்டியதுதான் அரசின் கடமை. எங்கு எந்தபொருள் உற்பத்தியாகிறது என்பதை அடையாளம் காட்டும் வகையில் சில விதிமுறைகளை வகுத்து, அதன்மூலமாக எளிதாக இயற்கைப் பொருள்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்துவிட முடியும்.

அங்ககச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அதனால், சான்றிதழ் அவசியம் என்பதைத் தவிர்த்து, இயற்கை பொருள்தானா என்று பரிசோதனை செய்வதை நடைமுறைப்படுத்தலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான ஆய்வகங்களை நிறுவினால்... யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்துகொள்ள முடியும். இதன் மூலமாகப் பசுமைச் சந்தைகளை ஒழுங்குபடுத்திவிடலாம்.

உணவுப் பாதுகாப்பு ஆணையம், அடுத்த ஆண்டு (2018) ஜூலை மாதம் இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளது. அதற்கு முன்பாகவே அண்மைச் சந்தைகளை ஒடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக நம்முடைய பலமான எதிர்ப்பு குரலை எழுப்ப வேண்டியது அவசியம்.