Published:Updated:

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

சுற்றுச்சூழல் பசுமைக் குழு படங்கள்: தே.அசோக்குமார்

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

சுற்றுச்சூழல் பசுமைக் குழு படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

“போன 2015-ம் வருஷம், ஊரைச் சுத்தி இருக்கிற மூணு ஏரிகளும் உடைச்சுக்கிட்டு ஊருக்குள்ள தண்ணி புகுந்தப்ப, நாங்க பட்டபாடு இருக்கே, அப்பப்பா... சொல்லி மாளாது. வீடுகளுக்குள்ள எல்லாம் தண்ணி...

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

அதோடு பாம்பு, தேள், பூரான்னு பிராணிகளும் வீடுகளுக்குள்ள புகுந்துடுச்சு. சின்னப்பிள்ளைகளையெல்லாம் காப்பாத்த ஒரு வாரம் நாங்க பட்டபாடு இருக்கே. இப்போ சொன்னாலும் குலை நடுங்குது. இந்த வருஷமும் அதே அளவு மழைதான். ஆனா, எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. சரியான பருவத்துல விவசாயத்தை ஆரம்பிச்சுட்டோம். அதுக்குக் காரணம் ஆனந்த விகடனடோ நிலம் நீர் நீதி திட்டம்தான்” என்று சிலாகிக்கிறார்கள் காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாண்டுகளுக்குமுன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்குப் பிறகு, வாசகர்களின் பங்களிப்போடு விகடன் முன்னெடுத்த திட்டம்தான் நிலம் நீர் நீதி. இத்திட்டத்தின்படி நீரியல் மற்றும் சூழலியல் நிபுணர்கள் சாலமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுமுடிவின்படி, இயற்கை கொடுக்கும் தானமான மழைநீர், வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஊரைச் சிதைக்காமல், பக்குவமாகச் சேமித்து, விவசாயம் மற்றும் குடிநீருக்குப் பயன்படும் வகையில் ஏரிகளைச் சீரமைப்பது என்று முடிவானது.

சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி, சாலமங்கலம் ஏரி ஆகியவற்றை அரசுத் துறைகளின் அனுமதியோடு சீரமைக்கும்பணி ஆரம்பமானது. 2016-ம் ஆண்டு, ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பணிகள் குறித்து, விகடன் குழும இதழ்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அடுத்தகட்டப் பணிகள் குறித்த விவரங்கள் இங்கே...

சாலமங்கலம் ஏரி

பொதுப்பணித்துறையின்கீழ் வரும் இந்த ஏரி, வண்டலூர்-ஒரகடம் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ளது. 103 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம், 150 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!
நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

கரைகளைப் பலப்படுத்துதல், ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்க்கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இயற்கையின் அரவணைப்பில் இருந்தால்தான் ஏரிகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக, தற்போது மரக்கன்றுகள் நடும் பணிகளும் முடிந்துள்ளன. இலுப்பை, பூவரசு, புங்கன், வேம்பு, நீர்மருது ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதோடு, ஏரிகளுக்கு அருகே பனை விதைகளும் விதைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழை மூலமாக இந்த ஏரியில் 28 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தண்ணீர் தேங்கும் பள்ளங்களின் மூலம் சேர்ந்திருக்கும் 30 லட்சம் லிட்டர் தண்ணீரும் இதில் அடக்கம்.

சிறுமாத்தூர் ஏரி

சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியின்மூலம் 70 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளும் ஏரிமூலம் பலனடைகின்றன. ஏரிக்குள் உருவாக்கப்பட்டுள்ள தண்ணீர் தேங்கும் பள்ளங்களின் மூலம் 32 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீரைக் கூடுதலாகத் தேக்கி வைக்க முடியும். ஏரியின் ஒரு பகுதியில் 2 ஆயிரம் சதுரடி அளவு பரப்பைச் சுற்றிச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அரசுத்துறையினருடன் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட  நிலையில், சம்பந்தபட்டவர்கள் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட்டனர்.
ஏரியைச் சுற்றி 1,013 மீட்டர் நீளத்துக்குக் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. இலுப்பை, பூவரசு, புங்கன், வேம்பு, புளி ஆகிய மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளதோடு பனை விதைகளும் விதைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் மழையால், கன்றுகள் வேர்பிடித்து நன்றாக வளர்ந்து வருகின்றன.

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

நரியம்பாக்கம் ஏரி

71 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை நம்பி, 60 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. கூடுதலாகத் தண்ணீர் தேங்கும் வகையில் பள்ளங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டன. சில மாதங்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாகச் சில இடங்களில் கரைகள் சரிந்துள்ளன. மண்ணின் தன்மை காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்தச் சரிவுகளைச் சீர்படுத்தி, மேற்கொண்டு சரிவுகள் ஏற்படாமல் உறுதியான அமைப்பு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கோடைக்காலத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கரைகளைப் பலப்படுத்தியபிறகு, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கும்.

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

வாசகர்களுடன் இணைந்து ‘நிலம் நீர் நீதி’ திட்டத்தை விகடன் நிறுவனம் முன்னெடுக்க உதவிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்நேரத்தில் நினைவு கூர்வதோடு... பொதுப்பணித்துறை செயலாளர், தமிழகப் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் பொறியாளர்கள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம்  உள்ளிட்ட அரசுத்துறையினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- பணிகள் தொடரும் 

“விவசாய வேலைகள் ஜரூரா நடக்குது”

சிறுமாத்தூரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் பேசும்போது, “கார்த்திகை தீபத் திருநாள்ல ஏரியில் தீபம் விடுவது வழக்கம். ஏரியில கடந்த பல வருடங்களாகப் புதர் மண்டி கிடந்ததால, குளத்துல விட்டுட்டு இருந்தோம். ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு, இந்தமுறைதான் சிறுமாத்தூர் ஏரியில தீபம் விட்டிருக்கோம். பனை விதைகள், இலுப்பை, புங்கன் மரக்கன்றுகளையும் நட்டிருக்காங்க. இதனால, மக்களும் ரொம்பச் சந்தோஷத்துல இருக்காங்க.

ஏரியில தண்ணி நிரம்பி இருக்கிறதால, விவசாய வேலைகளும் ஜரூரா நடந்துட்டு இருக்கு. குடியிருப்பு வீடுகள் பெருகிட்டு வந்தாலும், இன்னும் சிலர் விவசாயம் செஞ்சிட்டுத்தான் இருக்கோம். நெல்தான் முக்கியமான பயிர். சில விவசாயிங்க மல்லி, தென்னைனு பலவிதமான விவசாயமும் செஞ்சிட்டு இருக்காங்க. இந்தமுறை பெஞ்சிருக்கிற மழையால, பூமி மட்டும் குளிரல. ஏரியில தண்ணி தேக்கி வெச்சிருக்கிறதால, எங்க மனசும் குளிர்ந்திருக்கு” என்றார் மகிழ்ச்சியாக.

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

“2012-ம் வருஷம் பொதுப்பணித்துறைமூலம் கரையைப் பலப்படுத்தினாங்க. ஆனா, 2015 வெள்ளத்துல சேதமாயிடுச்சு. இப்ப `நிலம் நீர் நீதி’ திட்டம்மூலமா கரையைப் பலப்படுத்தி, உயரத்தை அதிகரிச்சிருக்காங்க. கரை மேலயே வண்டிகள் போயிட்டு வர்ற அளவுக்கு இருக்கு. முன்பைவிட அதிகளவுல தண்ணியும் தேங்கி நிக்கறத நாங்களே எதிர்பார்க்கல.

ஏரியோட நீர்மட்டம் அதிகரிச்சிருக்கு. இங்க நெல்லுதான் முக்கியமான பயிர். இப்போ, 80 ஏக்கர் நிலத்துல விவசாயம் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். ஏரியோட எதிர்காலப் பாதுகாப்புக்காக மரக்கன்றுகளையும் நட்டு, விகடன் மூலமாவே பராமரிக்கிறது எங்களை நெகிழ வைக்குது” என்று மகிழ்ச்சி பொங்கச்சொல்கிறார் சாலமங்கலத்தைச் சேர்ந்த கணேசன்.

சிறுமாத்தூர்-மணிமங்கலம் ஏரி இணைப்புக் கால்வாய்

சிறுமாத்தூர் ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர், மணிமங்கலம் ஏரியில் சென்று கலக்கிறது. சிறுமாத்துரைவிட மணிமங்கலம் ஏரி மிகப்பெரியது. இந்த இரண்டு ஏரிகளையும் இணைக்கும் கால்வாய், பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் புதர் மண்டிக்கிடந்தது. ஊராட்சித்துறையிடம் அனுமதிபெற்று, 425 மீட்டர் நீளமுள்ள இந்தக் கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் சில பகுதிகள், காப்புக்காடுகளின் வழியாகச் செல்வதால், வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. 

நன்கொடையாகக் கிடைத்த மரக்கன்றுகள்

ஏரியின் கரைகளில் நடுவதற்காகப் பனைவிதைகள், மரக்கன்றுகள், வெட்டிவேர் ஆகியவற்றை வாங்குவதற்காக, நட்பிலிருந்த சில விவசாயிகளிடம் விலை விசாரித்தோம். அப்போது நம்முடைய பணிகளை அறிந்த உத்திரமேரூரைச் சேர்ந்த இளம் விவசாயி பரத், தான் சேகரித்து வைத்திருந்த இரண்டாயிரம் பனை விதைகளை நன்கொடையாக அளித்தார். அதேபோல, செங்கல்பட்டு அருகேயுள்ள கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ‘எழில்சோலை’ மாசிலாமணி, பல்வேறு வகையான 250 மரக்கன்றுகளை நன்கொடையாக அளித்தார். வெட்டிவேர் அமைப்பைச் சேர்ந்த அசோக்குமார், பிரசன்னா ஆகியோர் 3 ஆயிரம் வெட்டிவேர் நாற்றுகளை நன்கொடையாக அளித்துள்ளனர். அனைவருக்கும் விகடன் வாசகர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism