Published:Updated:

இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

மாநாடு த.ஜெயகுமார்

இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

மாநாடு த.ஜெயகுமார்

Published:Updated:
இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

புதுடெல்லி அடுத்துள்ள கிரேட்டர் நொய்டாவில் ‘இந்தியா எக்ஸ்போ மார்ட்’ என்னுமிடத்தில்... கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்ற ‘ஆர்கானிக் வேர்ல்டு காங்கிரஸ்-2017’ எனும் ‘19-வது இயற்கை விவசாய மாநாடு’ குறித்த செய்தியைக் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே இடம்பெறுகிறது.

கண்காட்சியில், ‘நிறுவன அரங்கு’களின் பிரிவில் அரங்கு அமைத்திருந்தது, ‘கீ ஸ்டோன் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனம். இதன் துணை இயக்குநரான ராபர்ட் லியோ, இயற்கை விவசாய  விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவது குறித்துச் சில விஷயங்களை நம்மிடம் சொன்னார். “நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் இயற்கை விவசாயத்தைப் பரப்புவதற்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். பழங்குடி மக்கள் சேகரிக்கும் தேன் உள்ளிட்ட பொருள்களை விற்பனைசெய்யும் பணிகளை ஆரம்பத்தில் செய்து வந்தோம். அப்போது இயற்கை அங்காடிகள் மட்டுமே முக்கியச் சந்தையாக இருந்தன. அதன்பிறகு இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற்று வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் எனச் சந்தையை விரிவுபடுத்தினோம்.

இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

கடந்த 2008-ம் ஆண்டில், ‘ஃபேர் டிரேடு’ (Fair Trade) என்னும் நியாய வர்த்தக அமைப்பில் அங்கத்தினரானோம். இந்த அமைப்பு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள்களை விற்க வழிகாட்டுகிறது. இதிலுள்ள அங்கத்தினர்கள் ஒன்றுகூடி கண்காட்சிகள் நடத்துவது, ஏற்றுமதிசெய்வது போன்ற பணிகளைச் செய்துவருகிறோம். இந்தக் கண்காட்சிகள் மூலமாகத்தான் உயர்தர வகுப்பினர் பார்வைக்கு எங்களுடைய பொருள்கள் போய்ச்சேர்ந்தன. அதன் பிறகு எங்களின் ‘பேக்கிங்’ முறைகளை மாற்றி ‘கார்ப்பரேட் கம்பெனி’களுக்கு இணையாகப் பேக் செய்ய ஆரம்பித்தோம். பொருள்களைப் பேக் செய்வதுகூடப் பழங்குடி மக்கள்தான்.

இந்தியச் சந்தையில் தேனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இயற்கை விவசாய விளைபொருள்களின் சந்தையைப் பொறுத்தவரை... நம்பகத்தன்மை, தரம், சுவை ஆகியவை சரியாக இருக்க வேண்டும். ஒரு சந்தையைப் பிடிக்கும்வரை நாம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பற்றி, அனைவரிடமும் பரப்புரை செய்துகொண்டே இருக்க வேண்டும். இயற்கை விவசாயம், தொழில்நுட்பம் சார்ந்த நல்ல அமைப்புகளில் உறுப்பினராக இருத்தலும் அவசியம்.  அதன்மூலமாகவும் விளைபொருள்கள் விளையும் இடம், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் பொருள்களுக்கான தேவை, போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவிலிருக்கும் தேனீ வாரியத்தோடு எங்களுக்குத் தொடர்பு உள்ளது. இந்தத் தொடர்புகளின் மூலமாக  அதைச் சார்ந்த பொருள்களை விற்க முடிகிறது. இப்படித் தொடர்புகளைப் பெருக்கிக் கொண்டு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

 விதவிதமான அரங்குகளில் அணிவகுக்கும் இயற்கைப் பொருள்கள்...

எங்கள் அமைப்பின் சார்பாக  காபி, ஆரஞ்சு, எலுமிச்சை, சிறுதானியங்கள், பயறு வகைகள், தேன், மிளகு, கடுக்காய் ஆகியவற்றைத் தனியாகவும் மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறோம். நியாயமான விலை வைத்து விற்பனை செய்யும்போது, நம் பொருள்களின் மதிப்பு அதிகரிக்கும். தற்போது கார்ப்பரேட் கம்பெனிகளும் இயற்கைச் சந்தையில் புகுந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவை நிலைக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஏனெனில், இயற்கை  விளைபொருள்களை விற்பனை செய்ய எங்களைப்போன்ற பல அமைப்புகள் இயற்கைச் சந்தையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.   நுகர்வோரிடையே எங்களின் அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் நம்பகத்தன்மை மிகப் பெரியது” என்றார்.

இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பெண் விவசாயி அரிஃபா ரஃபி. ‘மார்க்கெட் டிராக்’ பிரிவில் தன்னுடைய விளை பொருள்களைச் சந்தைப் படுத்துவது குறித்துப் பேசிய அரிஃபா ரஃபி, “நானும் என் கணவரும் 40 ஏக்கர் பரப்பில் 18 வகையான மாம்பழ ரங்களைச் சாகுபடி செய்கிறோம். அவற்றில் பங்கனப்பள்ளி, இமாம் பசந்த், அல்போன்சா ஆகிய ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயிகள் விளைபொருள்களை அறுவடை செய்துவிட்டுத்தான் தரம் பிரிப்பார்கள். ஆனால், நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, பழங்கள் அனைத்தையுமே ஏற்றுமதித் தரத்தில் விளைவிக்கிறோம்.

மாம்பழத்தைப் பொறுத்தவரை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள்தான் விளையும் பருவம். இந்த மூன்று மாதங்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கிறோம். அறுவடை செய்யும்போது பால் வடிவதால் ஏற்படும் வடுக்கள், பழ ஈக்களால் ஏற்படும் கறுப்புப் புள்ளிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும்  காய்களை வெந்நீரில் கழுவி, துடைத்துப் பெட்டியில் அடுக்குவோம். நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக ‘ஆன்லைன் ஸ்டோர்’ மூலமாகத்தான் விற்பனை செய்கிறோம். ‘ஏஆர் 4 மேங்கோஸ்’ என்ற பெயரில் ஆர்கானிக் மாம்பழ ஸ்டோர் நடத்துகிறோம். இந்த ஸ்டோர் மூலமாக வெளிநாடு, இந்தியா என்று வாடிக்கையாளர்களைப் பிடித்து வைத்திருக்கிறோம்.

ஆன்லைனில் முன்பதிவு அடிப்படையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் பழங்களை அனுப்பி வருகிறோம். ‘முதலில் எங்கள் தோட்டத்துக்கு வந்து, பழங்களைச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டுப் பிறகு வாங்குங்கள்’ என்று நாங்கள் சொல்வதால், எங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாம்பழங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்தச் சந்தையைப் பிடித்துவிட்டால், விற்பனைக்குப் பிரச்னை இருக்காது” என்றார்.

கேரளா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் அடுத்தகட்ட இயற்கை விவசாய முயற்சி, மரபணு மாற்றுப் பயிர் குறித்தான மாயைகள் ஆகியவை அடுத்த இதழில்...

இயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்!

ஒரே குடையின் கீழ் இயற்கைப் பொருள்கள்!

இந்தியா முழுவதும் இயற்கையில் விளைவிக்கப்படும் பொருள்களுக்குப் பொதுவான ‘லோகோ’வை வெளியிட்டுள்ளது, ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம்’ (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-FSSAI). இந்த லோகோவின் பெயர் ‘ஜெய்விக் பாரத்’ (Jaivik Bharat). இனி, இயற்கை விவசாய விளைபொருள்களைப் பேக்கிங் செய்யும்போது, அந்த பேக்கிங்கின் வெளிப்புறத்தில் இந்த லோகோவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வேளாண் மற்றும் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபீடா), பிஜிஎஸ் இந்தியா, பிஜிஎஸ் ஆர்கானிக் கவுன்சில், தேசிய இயற்கை விளைபொருள் உற்பத்தித்திட்டம் (என்.பி.ஓ.பி) ஆகிய அமைப்பின்மூலம் இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், இந்த லோகோவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் அனைத்துச் சான்றிதழ் அமைப்புகளும் இதன்கீழ் வந்துவிடும் என்று எஃப்.எஸ்.எஸ்.ஐ தெரிவித்துள்ளது.

இயற்கை உணவுப்பொருள்களைப் பற்றி நுகர்வோர் தெரிந்துகொள்ள இந்திய ‘இயற்கை உணவுப்பொருள் தரவுப்பக்கம்’ (Indian Organic Integrity Database Portal) உருவாக்கப்பட்டுள்ளது.
jaivikbharat.fssai.gov.in என்கிற இணையதள முகவரியில் மாநில வாரியாக இயற்கைச் சான்றிதழ் பெற்றவர்களின் பட்டியலைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்பவர்கள், அதற்கான உரிமம் (லைசென்ஸ்) பெற்றிருக்க வேண்டியது அவசியம். இது பொருள்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். பெரிய நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவை இந்த உரிமம் உள்ள பொருள்களையே பெரும்பாலும் கொள்முதல் செய்கின்றன. அதனால், விவசாய விளைபொருள்கள், பால் பொருள்கள், இறைச்சி பொருள்கள் என்று அனைத்துக்கும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது இதற்கான உரிமம் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவே உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஓர் ஆண்டு, ஐந்து ஆண்டுகள் எனத் தேவைக்கு ஏற்றவாறு உரிமத்துக்கான காலத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். இந்த உரிமம் பெற, ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டுவரும் எஃப்.எஸ்.எஸ்.ஐ அமைப்பில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்தமுறையில் சான்றிதழ் வழங்குவதற்கு எதிர்ப்பும் கிளம்பிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.