Published:Updated:

“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்

“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்
பிரீமியம் ஸ்டோரி
“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்

கடிதம்ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்

கடிதம்ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

Published:Updated:
“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்
பிரீமியம் ஸ்டோரி
“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்

செம்மொழியான தமிழ்மொழியைத் தாங்கிப் பிடிச்சிக்கிட்டிருக்கிற தமிழ்கூறும் நல்லுலக மக்கள் அத்தனை பேருக்கும் (என்னையும் சேர்த்துதான்) வணக்கமுங்க. இந்தத் தடவை நம்ம பஞ்சாயத்து, நமக்குள்ளதான்!

நாட்டைக் காப்பாத்தணும், மொழியைக் காப்பாத்தணும், மதத்தைக் காப்பாத்தணும், சாதியைக் காப்பாத்தணும், மக்களைக் காப்பாத்தணும், நாயைக் காப்பாத்தணும், பேயைக் காப்பாத்தணும், அதைக் காப்பாத்தணும், இதைக் காப்பாத்தணும்... இப்படி ஏகப்பட்டதைக் காப்பாத்தணும்னு ஆளாளுக்கு, ஒவ்வொரு கோணத்துல துடியா துடிச்சிக்கிட்டே இருக்கோம். ஆனா, இத அத்தனையையும் காப்பாத்தி வைக்கறதுக்கு ஆதாரமான இந்தப் பூமியை, தாய் மண்ணைக் காப்பாத்தணும்னு ஒரு நாளும் யோசிக்கலையே!

சினிமாவுல கதாநாயகன் அதிரடியா களத்துல இறங்கி, மக்களைக் காப்பாத்துற மாதிரி சில காட்சிகள் வரும். இதைப் பார்த்துட்டு ஆகா, ஓகோனு மெர்சலாகி, ‘அவர்தான் அடுத்த முதலமைச்சர்’னு கொண்டாட ஆரம்பிச்சிடறோம். வசனகர்த்தா எழுதிக்கொடுத்ததை ஒப்பிக்கிற ஒரு ஆளையே... ‘நம்மைக் காப்பாத்த வந்த ரட்சகன்’னு கொண்டாடுற இந்த ஊருல, நிஜத்துல நம்ம பூமியையும் மண்ணையும் காப்பாத்துறதுக்காகத் தோன்றியிருக்கிற ஒரு ரட்சகனைப் பத்திப் பேச அவ்வளவா ஆள்கள் இல்லைங்கிறதுதான் கொடுமையிலயும் கொடுமை. அந்த ரட்சகன் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன்.

“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா என்டர்பிரைசஸ் லிமிடெட்ங்கிற கம்பெனியோட நிர்வாக இயக்குநர் ராமையா, மலேசியாவுல இருந்து குறைஞ்ச விலைக்கு மணலை இறக்குமதிசெய்து, கேரளாவுல விற்பனை செய்யத் திட்டம்போட்டாரு. அதன்படியே இறக்குமதியும் செஞ்சாரு. ஆனா, தமிழ்நாட்டுல இருந்து மணலைக் கடத்திக்கிட்டுப்போய் கேரளாவுல கொள்ளை விலைக்கு விற்பனை செய்திட்டிருந்தவங்களுக்கும், இதை வெச்சி பணம் பண்ணிக்கிட்டிருந்த தமிழ்நாட்டு அரசியல்வியாதிங்களுக்கும், அவங்களுக்கெல்லாம் ஆலோசனை சொல்ற அதிகாரனுங்களுக்கும்... ‘நம்ம பொழப்புல மண்ணு விழுந்துடுமோ’னு பயமாயிடுச்சி. உடனே, ‘மலேசியா மணலை இறக்குமதி பண்ணி விற்பனைசெய்ய அனுமதிக்கக் கூடாது’னு கூப்பாடு போட ஆரம்பிச்சாங்க. என்ன ஆச்சர்யம்... ‘தூத்துக்குடி துறைமுகத்துல இருந்து மணலை வெளியில கொண்டுபோகக் கூடாது’னு தமிழக அரசு தரப்புல இருந்து அதிரடியா தடையைப் போட்டுட்டாங்க.

இந்த விஷயம், மதுரையில இருக்கிற உயர் நீதிமன்றக் கிளைக்குப் போனப்பதான், ‘ஆணியே புடுங்க வேணாம்’கிற ரேஞ்சுக்கு, தடாலடியா உத்தரவிட்டிருக்காரு நீதிபதி மகாதேவன். இதனால, ‘தலைவலி போய், திருகுவலி வந்த கதையா’ திருதிருனு முழிச்சிக்கிட்டிருக்காங்க தமிழக மணல் கொள்ளையில மஞ்சள் குளிக்கிற அரசியல்வியாதிங்க, அதிகாரனுங்க, மணல் கொள்ளையனுங்கனு அத்தனை பேரும்.
நீதிபதி மகாதேவனோட உத்தரவுகளைக் கேட்டு நிஜமாவே புல்லரிக்குதுங்க. அட, ஆமாங்க அவரோட உத்தரவுகளைப் படிச்சுப் பாருங்க... உங்களுக்கும் புல்லரிக்கும். இன்னும் சொல்லணும்னா... கட்டாந்தரையிலகூடப் புல் முளைக்க ஆரம்பிச்சுடுங்க, அப்படியொரு அபூர்வமான, ஆக்கப்பூர்வமான, ஆச்சர்யமான... இன்னும் இப்படிச் சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லாத அளவுக்கு ஒசத்தியான உத்தரவுங்க. படிச்சு முடிச்சதும், ‘நீதிதேவன் ஆலயம்’னு அவருக்குக் கோயில்கட்டிக் கும்பிடக்கூட ஆரம்பிச்சுடுவீங்க.

‘மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டும்’னு நெத்தியடி உத்தரவு போட்டிருக்காரு.

‘ஆறு மணமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’ங்கிற மாதிரி, ஆறுகளை மனசுல வெச்சே... இந்த உத்தரவுகளை, ஆறு கட்டளைகள் மாதிரியே போட்டிருக்காரு நீதிபதி.

1. தமிழகத்தில் உள்ள அனைத்து மணல்குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும்.

2. புதிய மணல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.

3. மணல்கடத்தலைத் தடுக்க, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

4. மணல் தேவையைப் பூர்த்திசெய்ய, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம்.

5. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்குத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்

6. சுற்றுச்சூழல் சமநிலையைக் கருத்தில்கொண்டு, ஜல்லி குவாரி தவிர்த்து, அனைத்து கிரானைட் மற்றும் கனிமவள குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதையெல்லாம் சொன்ன நீதிபதி, ‘பொதுமக்கள் நலனைக்கருதி தமிழக அரசு விரைவில் இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது’ அப்படினும் சொல்லியிருக்காரு.
‘நம்மளக் காப்பாத்துவாங்க’னு நம்பி, காலகாலமா ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த எந்த அரசியல்வியாதியும் நமக்காகச் சிந்திக்கல; நம்ம தலைமுறைகளுக்காகவும் சிந்திக்கல; ஏன், அவங்களோட தலைமுறைகளுக்காகக்கூடச் சிந்திக்கல; இந்தப் பூமி நாளைக்கும் பசுமையா இருக்கணும்னு நினைச்சுக்கூடப் பார்க்கல; விடிஞ்சா, பொழுதுபோன எந்த ஆத்துல எவ்வளவு மணலை அள்ளலாம், எந்தக் குளத்துல எத்தனை லோடு மண்ணைச் சுரண்டலாம்னுதான் யோசிச்சிட்டே இருக்காங்க.

அ.தி.மு.க, தி.மு.க, பி.ஜே.பி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிறுத்தை, பாட்டாளி, மறுமலர்ச்சி, கறுப்பு எம்ஜியாரு இன்னும் உள்ள இத்யாதி... இத்யாதி கட்சிகள் எல்லாத்துக்கும் ஒரே கொள்கைதான்.. அது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைதான். மாறிமாறி ஆட்சிக்கு வந்தாலும், இந்தக் கட்சிகள் எதுவுமே மணல் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தல. மாறி மாறி இந்த ஆட்சிகளுக்கு முட்டுக்கொடுத்த உதிரிக்கட்சிகளும், இதுக்கு எதிரா உறுதியா போராடல. சொல்லப்போனா... கொள்ளையில பங்கு வாங்காத கட்சிகளே இல்லைங்கிறதுதான் உண்மை.

உதாரணத்துக்கு, ‘குடிமராமத்து’ங்கிற பேர்ல சமீபத்துல தமிழ்நாடு பூரா இருக்கிற நீர்நிலைகளைச் சீரமைக்கணும்னு ஒரு உத்தரவைப்போட்டுப் புளகாங்கிதப் பட்டுக்கிட்டாரு... நம்ம முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆங்காங்கே இருக்கிற விவசாயிகளும் நீர்நிலைகள்ல இருக்கிற வண்டல் மண்ணை அள்ளி, தங்களோட விவசாய நிலத்துல போட்டுக்கலாம். இதன் மூலமா நிலம் வளமாகும்... நீர்நிலைகளும் ஆழமாகும்னு சொன்னாரு. இதோட நோக்கம்... நீர்நிலைகள் எல்லாத்தையும் தூர்வாரி, தண்ணீரைச் சேமிச்சி, நிலத்தடி நீரை உயர்த்தறது... விவசாயத்துக்கான தண்ணீரைத் தாராளமா கொடுக்கிறதுதான். ஆனா, நிஜத்துல என்ன நடந்துக்கிட்டிருக்கு தெரியுமா?

“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்

ஒரு ஊர்ல பத்துக் குளம் இருக்குன்னா... அந்த ஊர்ல இருக்கிற அத்தனை அரசியல்வியாதிங்களும் ஒண்ணு சேர்ந்து, உனக்கு ரெண்டு, எனக்கு ஒண்ணுனு கூட்டுப்போட்டுப் பங்கு பிரிச்சிக்கிட்டாங்க. அதாவது, ஆளுங்கட்சிக்கு மூணு குளம், எதிர்க்கட்சிக்கு ரெண்டு குளம், மற்ற உதிரிக்கட்சிகள் எல்லாத்துக்கும் சேர்த்து ஏழு குளம்னு பிரிச்சிக்கிட்டாங்க. குளத்துல இருக்கிற வண்டல் மண்ணை மேலாக்காதான் அள்ளணும். ஆனா, இந்த அரசியல்வியாதிங்க என்ன பண்ணானுங்க தெரியுமா? பொக்லைனை வெச்சு பத்தடி, பதினைஞ்சடி ஆழத்துக்குச் சுரண்டி எடுத்துட்டாங்க. மொத்த மணலையும் லாரி லாரியா கொண்டுபோய் கோயம்புத்தூர், திருப்பூர், கேரளானு வித்துத்தீர்த்துட்டாங்க. ஆறுகளை நம்பி மட்டுமே இருக்கிற டெல்டா (நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்) மாவட்டங்கள்லயே இந்த அநியாயம் நடந்திருக்குனா... மத்த மாவட்டங்களப் பத்திக் கேக்கத் தேவையில்ல. மண்ணைத் திருடி வித்து, இந்த அரசியல்வியாதிங்க மாடி மேல மாடி கட்டிக்கிட்டிருக்காங்க. ஆனா, அந்தக் குளமெல்லாம் அளவுக்கு அதிகமா ஆழப்படுப்படுத்தப்பட்டதால, நாளைக்கு அக்கம் பக்கத்து நிலத்தடி நீர் பாதாளத்துக்குப் போகப்போகுது. சுத்துப்பட்டுல இருக்கிற விவசாய நிலங்களும் தோட்டங்களும் வறண்டுபோய், பயிர்பச்சையெல்லாம் கருகப்போகுது.

இதையெல்லாம் எந்த ஒரு கட்சிக்காரரும் யோசிக்கல. ஒவ்வொருத்தணும் பால்கொடுக்கிற தன்னோட அம்மா மடியையே அறுத்துப் போட்டிருக்காங்கனுதான் சொல்லத்தோணுது. பின்னே... பிறந்து, வளர்ந்து, உருண்டுகிட்டிருக்கிற ஊருல இப்படியொரு அநியாயத்தைச் செய்றோமேனு ஒருத்தருக்கும் கொஞ்சம்கூட வருத்தமில்ல; சின்ன வயசுல இருந்து குதிச்சி விளையாடி, மீன் பிடிச்ச குளத்தை இப்படி நாசம் பண்றோமேனு நினைச்சுக்கூடப் பார்க்கல; ஓடி விளையாடின காட்டுலயும் தோட்டத்துலயும் இருந்த மரங்களெல்லாம் கருகப்போகுதேனு சின்னதா கண்ணீர்கூடச் சிந்தல. பணம், பதவி, பவிசு இதை மட்டுமே நினைச்சு நினைச்சு வாழற இந்த அரசியல்வியாதிங்களுக்கு ஆறும் ஒண்ணுதான்... அம்மாவோட மடியும் ஒண்ணுதான்.

பால்குடிச்ச மாரைக்கூட அறுக்கத்தயங்காத இவங்களையெல்லாம்தான் நாம தலைவர்களாகவும், நமக்கான வழிகாட்டிகளாகவும், நாளைய தமிழகத்தோட நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் வீதிக்கு வீதி போஸ்டர் அடிச்சுக் கொண்டாடுறோம்.

சினிமாவுல முழம் நீளத்துக்கு வசனம் பேசுற யாராச்சும், ஏதாவது ஒரு ஆத்துல, ஏரியில போய் நின்னு மணல் கொள்ளைக்கு எதிரா குரல் கொடுத்திருக்காங்களா? ஆனா, சினிமாவுல நூறு மணல் லாரியை நொடியில அடிச்சு நொறுக்குவாங்க... நிஜத்துல, வீட்டு வாசப்படியைத் தாண்ட மாட்டாங்க.

ஆனா, இந்த அரசியல்வியாதிங்க, சினிமாக்காரங்க யாருமே துளிகூடச் சிந்திச்சிப் பார்க்காத ஒரு விஷயத்தை, தனி ஒரு ஆளா... சிந்திச்சிருக்கிற நீதிபதி மகாதேவன்தான்... நிஜமான ‘தனிஒருவன்!’

அட, ஈன மானத்தையெல்லாம் உதிர்த்துட்டுப் பணத்தை நோக்கியே ஓடிட்டிருக்கிற அரசியல்வியாதிகளே, இனியாச்சும் கொஞ்சம் உங்க கல் மனசைக் கரைக்கப்பாருங்க. இதுநாள் வரைக்கும் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடற வகையில, இந்த நீதிபதியோட உத்தரவை நிலைநிறுத்தப் பாருங்க.

உடனே, பத்துலட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பாங்க... தமிழ்நாடே பூமியில புதைஞ்சிடும்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க சிலர். நியாயம்தான், வேலைக்குப் பாதிப்பு வரலாம்... அதுக்காகப் பூமியைக் கூறுபோட்டுக்கிட்டே இருக்கிறது சரியானு யோசிங்க. லாட்டரி சீட்டைத் தடைபண்ணினப்பவும் இப்படித்தான் கூப்பாடு கேட்டுச்சு.

அதுக்காகப் பொதுமக்களை வதைக்கிற லாட்டரியைத் தடை பண்ணாம இருக்க முடியுமா? மணல் அள்ளுற ஊழியர்களுக்கு வேற வேலைகளை அரசாங்கம் தரட்டும். அதை விட்டுட்டு, இந்த உத்தரவுகளுக்கு எதிரா மேல்முறையீடு பண்ணி, மூக்குடை பட்டுக்கிட்டிருக்குது அரசு. அடுத்தாப்ல உச்ச நீதிமன்றத்துக்குப் போறதுக்கும் ஏற்பாடு நடக்குது.

வீடுகட்டுறதுக்கு மணல் வேணும்னா, இறக்குமதி பண்ணிக்கலாம். ஏன், புதுசா வந்திருக்கிற எம்சேண்டுகிற மணலைக்கூடப் பயன்படுத்திக்கலாம். ஆனா, அம்மாவோட மடியை அறுக்கிற மாதிரி ஆறு, ஏரி, குளமெல்லாத்தையும் கூறுபோட்டீங்கனா... நாளைக்கு உங்களைப் புதைக்கக்கூட ஆத்தங்கரை சுடுகாடு இல்லாமப் போயிடும்... ஜாக்கிரதை!

இப்படிக்கு

ஜூனியர் கோவணாண்டி