Published:Updated:

100 நாள்களில் 1,000 கிலோ... வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

100 நாள்களில் 1,000 கிலோ...   வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!
பிரீமியம் ஸ்டோரி
100 நாள்களில் 1,000 கிலோ... வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

மகசூல்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

100 நாள்களில் 1,000 கிலோ... வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

மகசூல்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
100 நாள்களில் 1,000 கிலோ...   வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!
பிரீமியம் ஸ்டோரி
100 நாள்களில் 1,000 கிலோ... வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

றவை மாடுகள் வைத்திருக்கும் மானாவாரி விவசாயிகளின் முதல் தேர்வாக இருப்பது சோளப் பயிர்தான். மழையில்லாமல் விளைச்சல் பொய்த்தாலும், தீவனத்துக்கான தட்டை கிடைத்துவிடும் என்பதால் சோளம் அதிக அளவில் விரும்பிப் பயிர் செய்யப்படுகிறது. கால்நடைகளை வளர்க்கும் இறவைப்பாசன விவசாயிகளும் தீவனத்துக்காகச் சோளம் பயிரிடுவதை வழக்கமாகச் செய்து வருகிறார்கள். அப்படிச் சோளத்தை விரும்பும் விவசாயிகளுக்காகவே நல்ல மகசூல் கொடுக்கும் ஒரு வெள்ளைச்சோள ரகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்.

‘கே-12’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வெள்ளைச்சோளம், வறட்சியைத் தாங்கி வளர்வதோடு, சன்னமான தட்டை, கனமான கதிர் எனப் பல சிறப்பம்சங்களோடு திகழ்கிறது. இந்த ரகம் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றிருந்தாலும் மத்திய அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால், இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன.

100 நாள்களில் 1,000 கிலோ...   வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள ஸ்ரீராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்ற விவசாயி, இந்த கே-12 ரக வெள்ளைச்சோளத்தைச் சோதனை அடிப்படையில் சாகுபடிசெய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார். அறுவடைக்குத் தயாராக இருந்த, அவரின் தோட்டத்துக்குச் சென்று பயிரைப் பார்வையிட்டோம். அது, அக்டோபர் மாதம். சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் நிலங்கள் காய்ந்து கிடந்த நிலையில், சாமிநாதனின் வயலில் வளர்ந்து நின்று வரவேற்றன சோளப்பயிர்கள். வயல் முழுக்க சீரான உயரத்தில் வளர்ந்திருந்த தட்டைகள், கதிரின் பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக லேசாகச் சாய்ந்து இருந்ததைப் பார்க்கும்போது, அப்பயிர் வெட்கப்படுவதுபோலவே தெரிந்தது. கதிர்களின்மீது அமர்ந்து கொத்தித் தின்று கொண்டிருந்தன பறவைகள். அந்தக் காலை வேளையில் அக்காட்சிகள் மிகவும் ரம்மியமாக இருந்தன.

வரப்பில் நடந்தவாறு கதிர்களைக் காட்டிக்கொண்டே நம்மிடம் பேசினார் சாமிநாதன். “நான் ஒரு பள்ளியின் தாளாளராக இருக்கேன். எனக்கு முப்பது ஏக்கர் நிலம் இருக்கு. தென்னைதான் பிரதான விவசாயம்.  மூணு வருஷமா மழையே இல்லாததால, பெரும்பாலானவங்க வெள்ளாமையை விட்டுட்டு, வேற பொழப்புக்குப் போயிட்டாங்க. என்னை மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் மட்டும்தான் கிணத்துல இருக்கிற கொஞ்ச நஞ்ச தண்ணியை வெச்சு விவசாயம் செய்துகிட்டு இருக்கோம். தண்ணி குறைச்சலா இருந்ததால, இந்த வருஷம் மாடுகளோட தீவனத்துக்குக்கூட வழியில்லாமப் போயிடுச்சு. மாட்டுக்கு மட்டுமாவது ஏதாவது பயிர் செய்யலாம்னு இருந்தேன்.

100 நாள்களில் 1,000 கிலோ...   வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

அந்தச் சமயத்துலதான் வேளாண் அலுவலர் மணிகண்டன்,  வெள்ளைச்சோள விதைகளைக் கொடுத்து, ‘இது புது ரகம். விதை உற்பத்திக்காகப் போடுங்க. மாட்டுக்குத் தேவையான தட்டையும் கிடைச்சிடும்’னு சொன்னார். நான் நம்பிக்கையில்லாமத்தான் விதைச்சேன். சோளம் விளையாட்டியும் மாட்டுக்குத் தட்டை கிடைச்சா போதும்னு இருந்தேன். ஜூன் மாசக்கடைசியில ஒன்றரை ஏக்கர் நிலத்துல விதைச்சேன். ‘வல்லுநர் விதை’ங்கிறதால 99 சதவிகித விதைகள் முளைச்சுடுச்சு. பயிர் முளைச்சு பதினைஞ்சு நாள்ல கடுமையான வெயில் அடிக்க ஆரம்பிச்சது. ‘பயிரெல்லாம் அவ்வளவுதான்’னு நினைச்சேன். ஆனாலும் பயிர் தப்பிச்சு  வளர்ந்தது.அதுக்குப்பிறகு ரெண்டு மழை கிடைச்சது. கிணத்துல இருந்த தண்ணியையும் அப்பப்பக் கொடுத்தோம். அதுலயே பயிர் நல்லா செழிப்பா வளர்ந்து வந்துடுச்சு. தூர் நல்லா பெருசா இருக்கு பாருங்க” என்றபடி தட்டையின் தூர்களைக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய சாமிநாதன், “எவ்வளவு காத்தடிச்சாலும் தட்டை சாயாம இருக்கு. கதிர் நல்லா கனமா இருக்கு. பாதி இயற்கை, பாதிச் செயற்கைனுதான் விவசாயம் செய்றேன்.

சுத்துப்பட்டுல எங்கேயும் பயிர் இல்லாததால, பறவைகள் மொத்தமா வந்துடுது. மயில்களும் அதிகமா வருது. ஆள் இருக்கிற நேரத்துல சத்தம் போட்டுப் பறவைகளை விரட்டுவாங்க. எல்லா நேரமும் விரட்ட முடியுறதில்லை.

100 நாள்களில் 1,000 கிலோ...   வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

பறவைகளும் பாவம் எங்கே போகும். அதனால, பறவைகளுக்குப் பாதி, நமக்கு மீதினு முடிவு பண்ணிட்டேன். அறுவடை முடிஞ்சதும் உங்களுக்குத் தகவல் கொடுக்கிறேன்” என்று சொன்னார். சில வாரங்கள் கழித்து நம்மைத் தொடர்பு கொண்ட சாமிநாதன், “ஒன்றரை ஏக்கர்ல சோளம் போட்டதுல பறவைகள் சாப்பிட்டது, சிந்தினது சிதறினது போக, பத்து குவிண்டால் சோளம் கிடைச்சிருக்கு.

இன்னும் அதிகமான மகசூல் கிடைக்கும்னுதான் வேளாண்துறையில சொன்னாங்க. ஆனா, அறுவடைச் சமயத்துல மூணு மழை தொடர்ச்சியாகப் பெஞ்சது. அதனால, கொஞ்சம் மகசூல் குறைஞ்சிருக்கலாம்னு நினைக்கிறேன். மத்த ரகங்கள் 4-லிருந்து 6 குவிண்டால்தான் கிடைக்கும். இதுல அதைவிட அதகமாகவே கிடைச்சிருக்கு. இதை விதைக்காகவே பயன் படுத்தலாம்னு வேளாண்மைத்துறையில் சொல்லியிருக்காங்க. இதுபோக, மொத்தமா நாலு டன் அளவுக்குத் தட்டை கிடைச்சிருக்கு.

100 நாள்களில் 1,000 கிலோ...   வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்!

ஒரு கிலோ விதை 100 ரூபாய்னு, பத்து கிலோ வாங்கி விதைச்சேன். உழவு, உரம், கூலினு எல்லாம் சேர்த்து மொத்தமா பத்தாயிரம் ரூபாய் அளவுக்குச் செலவாகியிருக்கு. இப்போதைக்கு வெளி மார்க்கெட்ல ஒரு கிலோ சோளம் 30 ரூபாய்க்கு விற்பனையாகுது, அந்த விலையை வெச்சுக் கணக்குப் போட்டாலே, 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சிடும்.

 தட்டை 10 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டா மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவு செஞ்ச 10 ஆயிரம் ரூபாயைக் கழிச்சா 30 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒன்றைரை ஏக்கர் நிலத்துல இதுவே நல்ல லாபம்தான். வேளாண்மைத்துறை விதைக்காக எடுத்துக்கிட்டா இன்னும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கு” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
சாமிநாதன்,
செல்போன்: 94434 66936  

தானியம், தட்டைக்கு ஏற்ற ரகம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் முருகனிடம் பேசினோம். “மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற ரகங்களைக் கண்டறிந்து, அவற்றை உருவாக்கும் ஆராய்ச்சியில் எங்கள் நிலையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு கே-12 என்ற இந்த வெள்ளைச் சோள ரகத்தை உருவாக்கினோம்.

எஸ்.பி.வி-772 மற்றும் எஸ்-35, 29 ஆகிய ரகங்களில் இருந்து இதை உருவாக்கியிருக்கிறோம். இறவையில் ஆண்டு முழுவதும் இதைப் பயிரிடலாம். மானாவாரியில் புரட்டாசி பட்டத்தில் பயிரிடலாம். இதன் வயது 95 நாள்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. கோடையிலும் நல்ல மகசூல் தரக்கூடியது. வெள்ளை நிறத் தானியமும் நீண்ட மிதமான அடர்த்தியான கதிரும் கொண்டது. இதன் தட்டை சன்னமாக இருப்பதால், கால்நடைகள் வீணாக்காமல் உண்கின்றன.

இந்த ரகம் குருத்து ஈ மற்றும் தண்டுத் துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புதிறன் கொண்டது. பல திடல் பரிசோதனைகள் செய்ததில்... மானாவாரியில் சராசரியாக ஒரு ஹெக்டேர் நிலத்தில் 32 குவிண்டால் அளவு மகசூல் கிடைத்துள்ளது. இந்த மகசூல் அளவு கே-8 ரகத்தைவிட 22 சதவிகிதம் அதிகம். சி.எஸ்.வி-17 ரகத்தைவிட 24 சதவிகிதம் அதிகம்.

ஒரு ஹெக்டேர் நிலத்தில் 12 டன் அளவு தட்டை சராசரி மகசூலாகக் கிடைத்துள்ளது. இது, கே-8 ரகத்தைவிட 32 சதவிகிதமும், சி.எஸ்.வி-17 ரகத்தைவிட 41 சதவிகிதமும் அதிகம். கே-12 ரகம், தென்காசி பகுதியில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் அதிகபட்சமாக 58 குவிண்டால் மகசூல் கொடுத்துள்ளது. தானியம் மற்றும் தட்டை இரண்டுக்காகவும் சோளம் விதைப்பவர்களுக்கு இந்த ரகம் ஏற்றதாக இருக்கும்” என்றார்.

தொடர்புக்கு: வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி : 04632 220533

இப்படித்தான் சாகுபடி

புதிய ரக வெள்ளைச்சோளமான கே-12 ரகத்தைச் சாகுபடிசெய்யும் முறை குறித்துச் சாமிநாதன் சொன்ன விஷயங்கள் இங்கே...

தேர்வு செய்த நிலத்தில் ஆட்டுக்கிடை அடைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். ஆட்டுக்கிடை அடைக்க முடியாவிடில் தொழுவுரத்தை இறைத்து உழவு செய்துகொள்ளலாம். பிறகு, பார் பிடித்து நிலத்தை ஈரமாக்கி ஓர் அடி இடைவெளியில் சோளத்தை விதைக்க வேண்டும். தொடர்ந்து பயிர் காயாத அளவுக்குத் தண்ணீர் பாய்த்து வர வேண்டும்.

விதைத்த 20-ம் நாள், களை எடுத்துப் பரிந்துரைக்கப்படும் மேலுரத்தை இட வேண்டும். அதோடு, ஒவ்வொரு செடியின் தூரிலும் 50 கிராம் வேப்பம்பிண்ணாக்கை இட வேண்டும். 30-ம் நாள், பரிந்துரைக்கப்படும் வளர்ச்சியூக்கியைப் பயிருக்குக் கொடுக்க வேண்டும்.

45-ம் நாள் பரிந்துரைக்கப்படும் உரத்தை மேலுரமாக இட வேண்டும். இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், ஜிங்க் சத்துப் பற்றாக்குறையாக இருக்கலாம். அதை நிவர்த்தி்செய்யத் தேவையான இடுபொருளை இட வேண்டும். அதற்குப் பிறகு, கதிர் பிடித்து, மணிகள் திரளும்.

விதைத்த 95 முதல் 100 நாள்களில் அறுவடை செய்துவிடலாம். கதிரை மட்டும் தனியாக அறுவடை செய்துவிட்டு, தட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து மாடுகளுக்குக் கொடுக்கலாம் அல்லது மொத்தமாக அறுவடை செய்து உலர வைத்துக் கொடுக்கலாம்.

சிறுதானிய விதை உற்பத்தி!

கே-12 சோள ரகத்தைப் பற்றி நம்மிடம் பேசிய ஒட்டன்சத்திரம் வட்டார வேளாண்மைத்துறை உதவி விதை அலுவலர் மணிகண்டன், “நீடித்த, நிலையான மானாவாரி இயக்கம் சார்பாகச் சிறுதானிய விதை உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கையில் வேளாண்மைத் துறை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ஆகியோரின் ஆலோசனையின்படி சிறுதானிய உற்பத்தியைப் பெருக்கும் முயற்சிகளை எடுத்துவருகிறோம்.

அந்த வகையில், இந்த ஆண்டு விதை உற்பத்திக்காகக் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய அறிமுகமான கே-12 ரக வெள்ளைச்சோளத்தைச் சாமிநாதன் சாருக்குக் கொடுத்துப் பயிரிடச் சொன்னோம். தொடர்ந்து ஆலோசனைகளும் கொடுத்து வந்தோம். அவர் நல்ல முறையில் பராமரித்ததால் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. பொதுவாக மழைக்காற்று வீசும்போது சோளப் பயிர்கள் சாய்ந்துவிடும். ஆனால், இந்த ரகச் சோளம் காற்றில் சாயாமல் இருப்பது இதன் சிறப்பம்சம். இந்தப் புதிய ரகச் சோளம் வெளியிடும்பட்சத்தில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்குச் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.