Published:Updated:

போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!
பிரீமியம் ஸ்டோரி
போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

கதறும் கன்னியாகுமரி விவசாயிகள்!பிரச்னைஇ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

கதறும் கன்னியாகுமரி விவசாயிகள்!பிரச்னைஇ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

Published:Updated:
போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!
பிரீமியம் ஸ்டோரி
போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

மிழகத்தில் கடந்த நவம்பர் மாத இறுதியில் தாக்கிய ‘ஓகி’ புயலால் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் கடற்கரையோர மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இதில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை மீட்கும் வேலை ஒரு பக்கம் நடந்துவருகிறது. இதோடு விவசாயமும் இந்தப் புயலுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காற்றோடு பெய்த மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம்.

அரசு அறிக்கையின்படி... ‘ஓகி’ புயலால், 4,241.5 ஹெக்டேர் பரப்பளவில் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 11,883 நெல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மொத்தம் 4.85 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தென்னந்தோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், 280 விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். மேலும் 1,273 ஹெக்டேர் பரப்பில் வாழை, 353 ஹெக்டேரில் மரவள்ளி, 1,326 ஹெக்டேரில் ரப்பர், 30 ஹெக்டேரில் கிராம்பு, 10 ஹெக்டேரில் மிளகு, 10 ஹெக்டேரில் பாக்கு எனப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மாவட்டத்தில் 21,523 விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் பயிர்களில் சேதம் ஏற்பட்டதால், கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘அனந்தனார் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க’த்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் செண்பகசேகரன் பிள்ளை, “எனக்கு 65 வயசாகுது. குமரி மாவட்டத்தில் எனக்குத் தெரிந்து புயலால் இந்தளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை. இப்படிப்பட்ட புயலையும் நான் பார்த்ததில்லை. நவம்பர் 29-ம் தேதி ராத்திரி லேசாதான் மழை பெஞ்சது. அடுத்த நாள் காலையில் 7 மணிக்குச் சூறைக்காத்து வீச ஆரம்பிச்சது. ரெண்டு மணி நேரம் தொடர்ச்சியா காத்து வீசினது. அடுத்து பெய்த கனமழையால வெள்ளம் பெருக்கெடுத்துடுச்சு. அன்னிக்கு ஒரே நாள் பெய்த மழையால, பெருஞ்சாணிஅணையில 72 அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரம்பிடுச்சு. அணையோட நீர்ப்பிடிப்புப் பகுதியோட உயரம் 77 அடிதாங்கிறதால, உடனடியா அணையில இருந்து தண்ணியை வெளியேத்தினாங்க. அதனால், வெள்ளம் இன்னும் அதிகரிச்சுடுச்சு. மாவட்டத்தில் சாகுபடி செஞ்சுருந்த மொத்த வாழையும் காலி. பூ பருவம், குலைப்பருவம், காய்பருவம்னு அத்தனையும் ஒரு மணி நேரத்துல காலியாகிடுச்சு. சூறைக்காத்துல சில இடங்கள்ல தென்னை மரங்களே சாஞ்சுடுச்சு. அப்புறம் ரப்பர் மரங்கள பத்திச் சொல்லணுமா” என்ற செண்பகசேகரன் பிள்ளை தொடர்ந்தார்...

போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

“சுசீந்திரம் பக்கத்துல இருக்கிற உதிரப்பட்டியில், கோசாலைக்குள்ள வெள்ளம் புகுந்ததால, 25 பசு மாடுகள் பரிதாபமா இறந்துபோயிடுச்சு. போன வருஷம் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைவிட (1.446 மில்லி மீட்டர்) 16 சதவிகித அளவுக்குக் குறைவாகத்தான் பெய்தது. அதனால், ஜூன்1-ம் தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள்ல இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கலை. ஜூலை மாசம் திறந்து விட்டப்பவும் கடைமடை வரை தண்ணி போகலை. அதனால, நெல் சாகுபடி ரொம்பக் குறைஞ்சு போச்சு. இப்பப் பெய்த மழையால மொத்தமும் போச்சு. பார்க்கவே வேதனையா இருக்கு” என்றார் கவலையுடன்.

“தமிழக அரசின் பயிர்ச் சேதப் பட்டியலில் தேக்கு மரங்கள் விடுபட்டுள்ளன. கிட்டத்தட்ட பத்தாயிரம் தேக்குமரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. நான்குவழிச் சாலைத் திட்டப்பணிகளுக்காகச் சாலை ஓரங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது... ஒரு ரப்பர் மரத்துக்கு 15,000 ரூபாயை இழப்பீடாக அறிவித்து வழங்கி வருகிறது மத்திய அரசு. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மரங்களுக்கும், விவசாயிகளுக்கும் அதே அளவில், தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல எங்கள் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனையாகக்கூடிய செவ்வாழை, மட்டி, ஏத்தன் (நேந்திரன்) போன்ற வாழை ரகங்கள்தான் அதிகப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்தன.

போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

மொத்த வாழையும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால்... தமிழக அரசு, ஒரு ஏக்கர் வாழைக்கு ஒரு லட்ச ரூபாய் எனக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஆவணங்கள் எதுவும் எழுதிக்கொள்ளாமல் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட நிலங்களில், நிலத்தின் உரிமையாளரிடம் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்காமல், குத்தகைதாரரிடம் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கிறார் குமரி மாவட்ட நீர்ப் பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ.

போன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்!

விவசாயம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்ய வந்திருந்தார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன். அவரிடம் பேசியபோது, “மிகப்பெரும் பாதிப்பைக் குமரி மாவட்டம் சந்தித்துள்ளது. அதனால், குமரியைப் பேரிடர் மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். விவசாய மறு உற்பத்திக்காகத் தென்னை, ரப்பர், வாழை, தேக்கு போன்ற மரக்கன்றுகளை முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். பாசனக் குளங்களின் மதகுகளைச் சீரமைக்க வேண்டும். பாசன வடிகால்கள் ஆக்கிரமிக்கப் பட்டதால்தான், வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். இழப்பீட்டைத் தாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்” என்றார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானிடம் புயல் பாதிப்பு குறித்துப் பேசினோம். “முதலமைச்சரின் உத்தரவுபடி, புயல்பாதிப்பைச் சீரமைக்கவும் நிவாரணம் வழங்கவும் 7 ஐ.ஏ.எஸ், 2 ஐ.பி.எஸ் உள்ளிட்ட 12 அதிகாரிகள்கொண்ட குழு, குமரி மாவட்டத்தில் ஆய்வுசெய்து வருகிறது. ஆய்வுப்பணிகள் முடிந்ததும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் பயிர்களைப் போல வாடி நிற்கும் விவசாயிகளின் துயர் போக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை.

மழையால் நிரம்பிய அணைகள்!

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்கள் கனமழை பெய்தது. அதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா அணை, கருப்பா அணை, கொடுமுடியாறு அணை, குண்டாறு அணை, நம்பியாறு அணை, ராமாநதி அணை ஆகியவை நிரம்பியிருக்கின்றன. பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை, சேர்வலாறு அணை ஆகியவற்றில் கணிசமான அளவு நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அனைத்துத் தடுப்பணைகளும் நிரம்பியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் 7-வது அணையான மருதூர் அணை கடந்த 10 ஆண்டுகளில் இப்போதுதான் நிரம்பியுள்ளது. அதேபோல ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் வாழைமரங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டரை லட்சம் வாழை மரங்களும் 500 ஏக்கர் பரப்பில் வெற்றிலைக் கொடிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஊருணிகள், கண்மாய்களில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் அடுத்த போகத்துக்குத் தண்ணீர் இருக்கும். அதில் நல்ல மகசூல் எடுக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.