Published:Updated:

நாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்!

நாட்டு  மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார்  சொல்லிய சூத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
நாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்!

கால்நடைஇ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

நாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்!

கால்நடைஇ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Published:Updated:
நாட்டு  மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார்  சொல்லிய சூத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
நாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்!

‘இயற்கை விவசாயம் செய்ய கால்நடைகள் அவசியம்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். “டிராக்டர் இருந்தா வேகமா உழவு செய்யலாம்னு நினைக்கிறோம்யா... ஆனா, டிராக்டர் சாணி போடாதேய்யா. மாடுதானய்யா சாணி போடும். அந்தச் சாணி மண்ணுல உரமாயிடும்லய்யா” என்று கால்நடை வளர்ப்பின் அவசியத்தை மிக எளிமையான சொல்லாடல்மூலம் விவசாயிகளின் மனத்தில் பதிய வைத்து வந்தார் நம்மாழ்வார். அவரின் ஆலோசனைகளை ஏற்றுக் கால்நடைகளை வளர்த்து வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்துவருகிறார்கள் ஏராளமானோர். இவர்களில் ஒருத்தர்தான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கருணாகரன்.

கடந்த 25.08.16-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘வெகுமதி கொடுக்கும் வெள்ளைப்பொன்னி’ என்ற மகசூல் கட்டுரையின்மூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் கருணாகரன். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா கூமாபட்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ச.கொடிகுளம் எனும் கிராமத்தில் கருணாகரன் வசித்துவருகிறார்.

மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய மாடுகளைக் கொட்டகைக்குள் அடைத்துக் கொண்டிருந்த கருணாகரனைச் சந்தித்தோம். “பரம்பரையா விவசாயம் செஞ்சிட்டு வர்ற குடும்பங்கறதால, நானும் கல்லூரிப் படிப்பு முடிச்சவுடனே விவசாயம் பார்க்க வந்துட்டேன். 2009-ம் வருஷம்தான் ‘பசுமை விகடன்’ பத்தி எனக்குத் தெரிஞ்சது. அதுக்கப்புறம் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். பக்கத்து ஊரான ‘வத்திராயிருப்பு’ல 2010-ம் வருஷம் நம்மாழ்வார் ஐயா கொடுத்த பயிற்சியில கலந்துகிட்டேன். அதுலதான், இயற்கை விவசாயம், கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் பத்தியெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். நான் இயற்கை விவசாயத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே எங்ககிட்ட நிறைய நாட்டு மாடு இருந்துச்சு. ஆனா, நாட்டு மாடுகளோட மகத்துவத்தைத் தெரிஞ்சுகிட்டது அந்தப் பயிற்சியிலதான். எங்க அம்மாவுக்குச் சீதனமாக 40 புலிக்குளம் மாடுகளை என் தாத்தா கொடுத்தார். அந்தக் காலத்துல நாட்டு மாடுகளை இப்படித்தான் பெருக்கிப் பாதுகாத்திருக்காங்க. ஆனா, காலப்போக்குல அந்தப் பழக்கமெல்லாம் குறைஞ்சு போச்சு.

நாட்டு  மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார்  சொல்லிய சூத்திரம்!

இப்போ என்கிட்ட 10 கன்றுக்குட்டிகள், 6 கிடேரிகள், 2 காளைகள், 18 பசுக்கள்னு மொத்தம் 36 உருப்படிகள் இருக்கு. இதுல 4 பசுக்கள் மட்டும்தான் பால் கொடுக்குது. பாலை வீட்டுத்தேவைக்காக மட்டும்தான் பயன்படுத்துறோம். நம்மாழ்வார் பயிற்சியில தெரிஞ்சுகிட்ட விஷயங்களை வெச்சுதான் மாடுகளைப் பராமரிச்சிட்டிருக்கேன்” என்ற கருணாகரன், மாடுகளுக்கு வைக்கோலை எடுத்துப் போட்டபடியே பேசினார்...

“ ‘ஈனாத மாட்டை எருவுக்குப் பேணு’னு பெரியவங்க சொல்வாங்க. நம்ம முன்னோர் மாடுகள்ல கறவை வத்தினாலும், அதை எருவுக்காக வளர்த்துட்டு இருந்திருக்காங்க. ஆனா, இப்போ கறவை வத்தின மாடுகளை அடிமாடா வித்திடுறாங்க. மாடுகளை இன்னொரு விவசாயிக்கு விற்பனை செய்யலாமே தவிர, என்னைக்கும் அடிமாடா மட்டும் விற்பனை செய்யக் கூடாதுங்கிற கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன். கலப்பின மாடுகளைவிட நம்ம நாட்டுமாடுகள்தான் விவசாயத்துக்கு ஏற்றது. நாட்டு மாடுகளுக்குப் பெரிய அளவுல பராமரிப்புத் தேவையில்லை. எஜமான் விசுவாசமும் நாட்டுமாடுகளுக்குத்தான் அதிகம்.

‘மாடு வைக்கோலைத் தின்னுட்டு எருவைக் கொடுக்கும். மாடு இல்லைங்கிறதால எரு கிடைக்கலை. அதனால, ரசாயன உரத்தை வாங்கிக் கொட்டினோம். உப்புத் தின்னனவன் தண்ணி குடிக்கணும்ங்கற மாதிரி, ரசாயன உப்பை நிலத்துல போட்டதால தண்ணீர் தேவை அதிகமாச்சு. அதனால, பூமியில துளைபோட்டு நிலத்தடி நீரை அதிகளவுல உறிஞ்ச ஆரம்பிச்சோம்.

மாடுகள் இல்லாததால உழறதுக்கு டிராக்டர் வந்துச்சு. டிராக்டரை நிலத்துல இறக்கினதால மண் இறுகிப்போச்சு. டிராக்டர் டீசலைக் குடிச்சுட்டுப் புகையை விட்டுச் சூழலை மாசுபடுத்துது. ஆக, மாடுகள் இல்லாததால, இந்தப் பூமிக்கு எவ்வளவு பாதிப்புகள் வருதுனு பாருங்க. நாட்டு மாடுகள்தான் நடமாடும் உரத்தொழிற் சாலைகள்’னு நம்மாழ்வார் ஐயா சொன்னதை அப்படியே உள்வாங்கிக்கிட்டேன். அதைத்தான் இப்போதுவரை கடைப்பிடிச்சுட்டிருக்கேன். மாடுகளுக்கும் பாரம்பர்ய வைத்திய முறைகளைத்தான் செய்றேன்” என்ற கருணாகரன் மாடுகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்துச் சொன்னார்.

“அந்தந்தப் பகுதிகளோட மண், சூழலுக்கேத்த ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கணும்னு ஐயா வலியுறுத்துவார். நாட்டு மாடுகளை வாங்குறது பால் தேவைக்கா, இடுபொருள் தயாரிப்புக்காங்கிறதை முடிவு செஞ்சுட்டு, அதுக்கேத்த மாதிரி மாடுகளை வாங்கணும். இடுபொருள் தேவைக்கு மட்டும்தான் என்றால், குறைஞ்ச விலையிலேயே மாடுகள் வாங்கலாம். மாடுகளை எப்பவும் கொட்டகைக்குள்ளேயே அடைச்சு வெச்சுத் தீவனம் போடக் கூடாது. அதற்கு மேய்ச்சல் அவசியம். மேய்ச்சல் நிலத்துல இயற்கையா வளர்ற பலவிதமான செடி கொடிகளை மேயும்போது மாடுகள் ஆரோக்கியமா இருக்கும். எப்பவுமே கம்பெனி தீவனங்களை மாடுகளுக்குக் கொடுக்கவே கூடாது. இந்த விஷயத்தை ரொம்ப உறுதியா ஐயா சொல்வார். பருத்திக்கொட்டை, தவிடு, பிண்ணாக்கு, சோளத்தட்டை, வைக்கோல்னு கொடுத்தாலே மாடுகள் ஆரோக்கியமா வளரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொட்டகையோட தரைப்பகுதியில கூர்மையான சின்னக் கற்கள் இருந்தா, மாட்டோட மடிப்பகுதியில குத்திக் காயம் ஏற்படும். அதனால, தரைப்பகுதி சமமா இருக்கணும். வாரம் ஒருமுறை மாடுகளைக் குளிப்பாட்டிச் சுத்தம் பண்ணனும். தினமும் சாயங்காலம், நொச்சி, வேப்பிலை இலைகளைக் கொண்டு கொட்டகை முழுக்கப் புகைமூட்டம் போடணும். பால் கறக்கிறதுக்கு முன்னாடி நல்லா கைகளைக் கழுவணும். மடியையும் சுத்தப்படுத்திட்டுத்தான் பால் கறக்கணும். மடியில் கன்றுக்குட்டி முட்டி முட்டிப் பால் குடிக்கிறப்பதான், பால் சுரப்பு நல்லா இருக்கும்.

நாட்டு  மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார்  சொல்லிய சூத்திரம்!

நாட்டு மாடுகளோட கொம்புகள் சூரியக்கதிர்களைக் கிரகிக்கும். அதனால, மாடுகளோட கொம்புல எப்பவும் பெயின்ட் அடிக்கக் கூடாது.தேவைப்பட்டா, காவிப்பொடியை வேணா பூசிவிடலாம். அதேமாதிரி வாலில் உள்ள ரோமங்களை வெட்டக் கூடாது. உடம்புல உட்காருற பூச்சிகளை வாலை ஆட்டித்தான் மாடுகள் விரட்டும். அதேமாதிரி, எப்பவும் மாடுகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் செய்யக் கூடாது. இயற்கை முறையில காளைகளோட சேர்க்கிறதுதான் நல்லது” என்ற கருணாகரன், நம்மாழ்வாரின் பயிற்சியில் தெரிந்துகொண்டு, தான் கடைப்பிடிக்கும் சில பாரம்பர்ய மருத்துவ முறைகளைச் சொன்னார்.

“கிட்டத்தட்ட எல்லா வியாதிகளையுமே மூலிகைகளை வெச்சுக் குணப்படுத்திடலாம். பனிக்காலத்துல மடிக்காம்புகள் வெடிப்பு ஏற்பட்டா நெய்யையும் விளக்கெண்ணெயையும் கலந்து தடவினால் குணமாகிடும். மடிவீக்கம் ஏற்பட்டா, வேப்பிலையையும் மஞ்சளையும் அரைச்சுப் பூசினாலே போதுமானது. நாட்டு வாழைப்பழத்துல அஞ்சு மிளகை வெச்சு சேர்த்துக் கொடுத்தா செரிமானக்கோளாறு நீங்கிடும்.  கால் குழம்புகளுக்கு இடையில புண் வந்தால், சம அளவு வேப்பிலையையும் மஞ்சள்பொடியையும் எடுத்து அரைச்சு பூசுனாலே போதும். புண் எல்லாம் ஆறிடும். மருந்து பூசுறதுக்கு முன்னாடி இளம்சூடான வெந்நீர்ல காலைக் கழுவிடணும். வெயில் காலத்துல கால்களுக்கு இடையில் புண் வந்து சந்துப்பகுதி வீங்கிடும். அதற்கு, கள்ளிப்பாலையும் வேப்ப எண்ணெயையும் சம அளவு கலந்து, அந்தக் கலவையைத்தொட்டு வீக்கம் இருக்கிற இடத்துல ஒத்தடம் கொடுத்தா வீக்கம் குறையும்” என்ற கருணாகரன் நிறைவாக,

“இப்போ இயற்கை விளைபொருள்கள் பத்தின விழிப்பு உணர்வு அதிகம் இருக்கிறதால மக்கள் நாட்டு மாட்டுப்பாலைத் தேடி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, தேவைக்கேத்த பால் கிடைக்கிறதில்லை. அதனால, விலையும் அதிகமா இருக்கு. இந்தத் தேவையைப் பயன்படுத்திக்கிட்டு நிறைய பேர் நாட்டு மாடுகளை வளர்த்துப் பால் உற்பத்தி செஞ்சா நல்ல வருமானம் பார்க்க முடியும்கிறதோடு, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடியும்” என்றார்.

தொடர்புக்கு,
கருணாகரன்,
செல்போன்: 90472 73009

நாட்டு  மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார்  சொல்லிய சூத்திரம்!

அடி காட்டுக்கு... நடு மாட்டுக்கு... நுனி வீட்டுக்கு!

“நம்மாழ்வார் தான் கலந்துகொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் சொல்லும் பழமொழி ‘அடி காட்டுக்கு... நடு மாட்டுக்கு... நுனி வீட்டுக்கு!’. இதை அப்படியே நான் கடைப்பிடிச்சிட்டிருக்கேன். ஐயாகிட்ட பயிற்சி எடுத்ததுல இருந்து பாரம்பர்ய நெல் ரகங்களை மட்டும்தான் சாகுபடி செய்றேன். நடவு முதல் அறுவடை வரை ஆள்களை வெச்சுதான் சாகுபடி செய்றேன். அறுவடை முடிஞ்சதும் அடிக்கட்டையை அப்படியே நிலத்துல போட்டு உழுதிடுவேன். நடுப்பகுதியான வைக்கோலை மாடுகளுக்குக் கொடுக்கிறேன். நெல்லை அரிசியா அரைச்சு விற்பனை செய்றேன்” என்கிறார் கருணாகரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism