Published:Updated:

கருப்பையில் நீர்... கவனம்!

கருப்பையில் நீர்... கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
கருப்பையில் நீர்... கவனம்!

சினை மேலாண்மை பற்றிப் பேசும் குறுந்தொடர் - 5கால்நடைமுனைவர் க.கிருஷ்ணகுமார், தொகுப்பு: த.ஜெயகுமார்

கருப்பையில் நீர்... கவனம்!

சினை மேலாண்மை பற்றிப் பேசும் குறுந்தொடர் - 5கால்நடைமுனைவர் க.கிருஷ்ணகுமார், தொகுப்பு: த.ஜெயகுமார்

Published:Updated:
கருப்பையில் நீர்... கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
கருப்பையில் நீர்... கவனம்!

மாடு சினையாக இருக்கும்போது வருகிற பிரச்னைகளில் ஒன்று கருப்பையில் நீர் கோத்தல். இது தாய்-சேய் இணைப்புத்திசுவில் ஏற்படும் குறைபாடுகளால் வருகிறது. கர்ப்ப நிலையில் ஆறு அல்லது ஏழாவது மாதத்துக்குப் பிறகு இந்தப் பாதிப்பு வருகிறது. இந்நோய் இரண்டு வகைப்படும். படிப்படியாகப் பனிக்குடத்தில் நீர் அதிகரிப்பது ஒரு வகை. இந்தப் பாதிப்பை ஆங்கிலத்தில் ‘ஹைட்ராம்னியாஸ்’
(Hydramnios) என்று சொல்வார்கள். திடீரென்று பனிக்குடத்தில் நீர் அதிகரிப்பது இரண்டாம் வகை. இதை ‘ஹைட்ரால்லன்டாய்ஸ்’(Hydrallantois) என்கிறார்கள். மரபு வழியாகவும் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாகவும் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வழக்கமாகப் பனிக்குடத்தில் 4 லிட்டர் முதல் 8 லிட்டர் வரை நீர் இருக்கும். நீர் கோத்தல் பாதிப்புக்குள்ளாகும் மாட்டின் கருப்பையில், 20 லிட்டர் முதல் 120 லிட்டர் வரை கூடப் பனிக்குட நீர் இருக்கும். பாதிப்பைப் பொறுத்து நீரின் அளவு மாறுபடும். பனிக்குட நீர் அதிகரித்து வயிறு பெரிதாகத் தோன்றும்போது, சிலர் ‘இரட்டைக் கன்றுகள் பிறக்கும்’ என நினைப்பார்கள். ஆனால், அப்படி நினைத்துக் கவனமின்றி இருந்தால், வில்லங்கத்தில் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால், வயிறு அதிகளவில் பெருத்துக் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டியது அவசியம். கருப்பையில் நீர் கோத்துப் பாதிப்பு அதிகமாகும்போது, சினை மாடு தவளைபோலத் தரையில் படுத்துக்கொள்ளும்.

கருப்பையில் நீர்... கவனம்!

கன்று ஈனும் பருவத்தில் உள்ள சினை மாடுகளில், வாலின் பக்கவாட்டில் மேலே உள்ள தசைநார்கள் நெகிழ்ந்து தளர்ந்து காணப்படும். இதை ‘தட்டு உட்ருச்சு’, ‘தட்டு உடைஞ்சுடுச்சு’, ‘தண்டு விட்ருச்சு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். இந்த அறிகுறி தென்பட்டால் 15 நாள்களில் கன்று பிறந்துவிடும் என்பதை அறியலாம். இந்தச் சமயத்தில், இனப்பெருக்க உறுப்பின் வெளிப்புறம் விரிந்து, வீங்கிய நிலையில் இருக்கும். இனப்பெருக்க உறுப்பின் வெளி உதடுகள், சாதாரண நிலையைவிட இரண்டு முதல் ஆறு மடங்குகள் வரை பெரிதாகக் காணப்படும். மடி பெருத்து, வீங்கிய நிலையில் இருக்கும். காம்புகளில் சீம்பால் நிறைந்து, விறைத்துக் காணப்படும். கர்ப்ப காலக் கடைசி இரண்டு மாதங்களில், காம்புகளைப் பீய்ச்சினால், பொன் நிறத்தில், தேன் போன்ற திரவ ஒழுக்கு இருக்கும். இந்தத் திரவ ஒழுக்குதான் சீம்பாலாக மாறும். இது சீம்பாலாக மாறிய 24 மணி நேரத்திலிருந்து 48 மணிநேரத்துக்குள் கன்று பிறந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருப்பையில் நீர்... கவனம்!

கன்று ஈனுவதற்கு முன்பு மாடுகள் அமைதியற்றுக் காணப்படும். தீவனம் எடுத்துக்கொள்ளாது. முதல்முறை கன்று ஈனும் மாடுகளாக  இருந்தால், தன் கால்களால் வயிற்றில் உராய்வதும், படுத்துப் படுத்து எழுவதும், கால் குழம்புகளால் தரையைக் கீறுவதுமாக இருக்கும். மாடுகள் இதுபோன்று நடந்துகொண்டால், அடுத்த சில மணி நேரங்களில் கன்று ஈனப்போகிறதென்று தெரிந்துகொள்ளலாம்.

கன்று ஈனப்போவதை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை, 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை நீடிக்கும். இந்நிலையில் கருப்பையின் வாய்ப்பகுதி திறந்து, பனிக்குடம் வெளியே தெரியத் தொடங்கும். இரண்டாம் நிலையில் பனிக்குடம் உடைந்து கன்று வெளியே தள்ளப்படும். ஏற்கெனவே கன்று போட்ட மாடுகள் அரை மணிநேரத்திலிருந்து 1 மணி நேரத்தில் கன்றுகளை வெளியே தள்ளிவிடும். முதல்முறை கன்று போடும் மாடுகள் என்றால் அதிகபட்சமாக 4 மணி நேரமாகும். மூன்றாம் நிலை, அரை மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். இந்த நிலையில் நஞ்சுக்கொடி வெளியே தள்ளப்படும். இப்படி மூன்று நிலைகளாகப் பிரிப்பதற்கும் காரணம் உண்டு. கருப்பை முறுக்கிக் கொள்ளும் மாடுகள், முதல் நிலையைக் கடந்து இரண்டாம் நிலைக்குச் செல்லாது. முதல் நிலை 6 மணி நேரத்துக்குமேல் நீடித்தாலோ, இரண்டாம் நிலை 2 மணி நேரத்துக்குமேல் நீடித்தாலோ, உடனடியாகக் கால்நடை மருத்துவரை அழைக்க வேண்டியது அவசியம்.

பெரும்பாலான மாடுகள் படுத்துக்கொண்டு தான் கன்று போடும். ஏனென்றால் படுத்திருக்கும்போது மாடுகள் முக்கி, கன்றை வெளியேற்ற எளிதாக இருக்கும். சில மாடுகள் நின்றுகொண்டேயும் கன்று போடும். நின்றுகொண்டு கன்றை வெளித்தள்ளும்போது, கன்றுகளுக்கு அடிபட வாய்ப்பிருக்கிறது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் கன்றுக்குட்டியின் கால், கழுத்து திரும்பியிருந்தால் வெளியே வராது. கன்றுக்குட்டி பிறக்கும்போது, முன்கால்கள் இரண்டும் வெளியே நீட்டிய நிலையில், தலை முன்கால்களின் மேலே இருக்குமாறு வெளி வர வேண்டும். இதில் தலை வராமல் கால் மட்டும் வந்தால், தலை மடங்கியிருக்கிறது என்று அர்த்தம். தலை வெளியே வந்து கால்கள் வரவில்லையென்றால், கால் மடங்கியிருக்கிறது என்று அர்த்தம். இதுபோன்ற சமயங்களில் மருத்துவர்தான் சிகிச்சை அளிக்க முடியும்.

கருப்பையில் நீர்... கவனம்!

கன்று வெளிவந்த 8 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளி வந்துவிட வேண்டும். 8 மணி நேரமாகியும் வெளித்தள்ள வில்லையென்றால், அதற்கான வைத்தியத்தை மேற்கொள்வது நல்லது. நஞ்சுக்கொடி வெளித்தள்ளாத மாடுகளில் வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் நஞ்சுக்கொடியை இனப்பெருக்க உறுப்புவரை நீக்கிவிட வேண்டும். இதன்மூலம் வெளிப்புற நோய்க்கிருமிகள் இனப்பெருக்க உறுப்பைத் தாக்குவதைத் தடுக்கலாம். மஞ்சள், வசம்பைச் சேர்த்து அரைத்து, அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து இனப்பெருக்க உறுப்பைச் சுற்றிப் பூசி வர வேண்டும். வெளிப்புற நஞ்சுக்கொடியை நீக்கிய ஒரு வாரத்துக்குள் உள்ளே இருக்கும் நஞ்சுக்கொடி தானாகவே வெளியே வந்துவிடும்.

சிலர், நஞ்சுக்கொடியின் முனையில் கல்லைக் கட்டிவிடுவார்கள். அப்படிச் செய்யக் கூடாது. இதனால், கருப்பையில் வலி ஏற்பட்டு, கருப்பையே வெளி வந்துவிட வாய்ப்புண்டு. கிராமங்களில் நஞ்சுக்கொடி விழுந்ததும் அதை வெப்பாலை, ஆல மரம் போன்ற பால் உள்ள மரங்களில் கட்டி விடுவார்கள். இதனால், பால் அதிகமாகக் கறக்கும் என்று நம்பிக்கையுண்டு. நஞ்சுக்கொடியை நாய்கள் தின்று, அதனால் நோய்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் மரங்களில் கட்டி வைக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளனர்.

கருப்பையில் நீர்... கவனம்!

தற்போது, இன்னொரு முறையிலும் நஞ்சுகொடியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தலாம். அதாவது, மூன்று அடி ஆழக் குழியெடுத்து, அதில் நஞ்சுக்கொடியைப் போட்டு அதன்மீது சுண்ணாம்புத்தூளைப் தூவி மூடிவிட்டால், நோய் பரவுவதையும், துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கலாம்.

கன்றுபோட்ட உடனே மாட்டின் மடியிலிருந்து பால் கறந்து பார்க்க வேண்டும். பால் நல்ல நிறத்தில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மாட்டின் மடிப்பகுதியை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, சுத்தமான துணியால் துடைத்துவிட வேண்டும். கன்றுபோட்ட அரை மணிநேரத்துக்குள், கன்றுக்குட்டியைப் பால் குடிக்கவிட வேண்டும்.

- அடுத்த இதழில் நிறைவுபெறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism