Published:Updated:

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

மகசூல்த.ஜெயகுமார், படங்கள்: இ.பாலவெங்கடேஷ்

"நுகர்வோரின் தேவை, ரசாயனக் கலப்படமற்ற உணவுப்பொருள்கள்தான்.  ஆனால், ஒரு விவசாயியின் தேவை சுற்றுச்சூழல், மண், பயிர்கள் என அனைத்தும் ரசாயனமில்லாமல் நஞ்சற்றதாக இருப்பது. அதற்கு இயற்கை விவசாயம்தான் சரியான பாதை” என்று அழுத்தமாகச் சொல்கிறார்  ‘இயற்கை விவசாயி’ ‘அல்லாடி’ மகாதேவன். இந்திய அரசியலைப்புச் சட்டத்தை எழுதிய குழுவில் இடம்பெற்ற ‘அல்லாடி’ கிருஷ்ணசுவாமி, இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சென்னையில் வசித்து வரும் மகாதேவனின் பண்ணை, காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூவத்தூர் அடுத்த மலைராஜாகுப்பம் என்ற கிராமத்தில் இருக்கிறது. பொங்கல் சிறப்பிதழுக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம். “எங்களுக்குப் பூர்வீகம் ஆந்திர மாநிலம் நெல்லூர். எங்கப்பா ‘அல்லாடி’ கிருஷ்ணமூர்த்தி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான்.

இந்த 36 ஏக்கர் நிலத்தை 1988-ம் வருஷம் அப்பாதான் வாங்கினார். 1995-ம் வருஷம் சிறுசேரியில் இருக்கிற ‘மகளிர் உயிர்த் தொழில்நுட்பப் பூங்கா’வின் முதன்மை நிர்வாக அலுவலர் சுஜிதாங்கிறவங்கதான், இயற்கை விவசாயம் பத்தி எங்ககிட்டச் சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நாங்க இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம். அதன்பிறகு மற்ற மாநிலங்கள்ல இருக்கிற இயற்கை விவசாயப் பண்ணைகள், வெளிநாடுகள்ல இருக்கிற இயற்கைப் பண்ணைகளையும் பார்த்துட்டு வந்தேன். எல்லா இயற்கை விவசாயப் பண்ணைகளையும் பார்த்த பிறகு, ஒரு விஷயம் தெளிவாகப் புரிஞ்சது.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

வெற்றிகரமான பண்ணை நடத்துறவங்க எல்லாருமே, இயற்கையோடு இணைஞ்சு பயணம் செய்ற வழியாகத்தான் இயற்கை விவசாயத்தைப் பார்க்கிறாங்க. அதனால, நானும் இயற்கையோடு இணைஞ்சு பயணிக்கலாம்னு முடிவெடுத்தேன்” என்று சொன்ன மகாதேவன், பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார். “இந்த நிலத்த வாங்கும்போது சீமைக்கருவேல மரங்கள், புல் பூண்டுகள்னு அடர்ந்த காடா இருந்தது. அதையெல்லாம் திருத்தி, விவசாய நிலமா மாத்தினோம். ஆனா, இப்போ கிடைச்சிருக்கிற இயற்கை விவசாய அனுபவத்துல, ‘அந்தமாதிரி செஞ்சது தப்பு’னு தோணுது.

இப்போ நிலத்துல இருக்கிற களைகளை அப்புறப்படுத்துறதேயில்லை. களைகளால தான், பூச்சிகள் கட்டுப்படுது, பசுந்தாள் உரம் கிடைக்குது, மாடுகளுக்குத் தீவனம் கிடைக்குது. இங்க, அதிகமா டிராக்டரைப் பயன்படுதிறதில்ல. ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில் சொல்லித்தந்த ஆலோசனைகளைச் செயல்படுத்தி எங்க மண்ணுல மண்புழுக்களை நிறைய பெருக்கியிருக்கோம். அவர்தான், ‘நிலத்த அடிக்கடி உழக் கூடாது. அடிக்கடி உழவு செய்தால், மண்புழுக்கள் பூமிக்குள்ள போயிடும். டிராக்டரால் உழவு செய்றப்போ மண் இறுகிடும். காற்றோட்டம் இருந்தாத்தான் மண் வளமா இருக்கும்’னு சொன்னார். அதனால, உழவு செய்றதைக் குறைச்சுக்கிட்டோம். தேவைப்படுற இடத்துல மட்டும் பவர் டில்லர் மூலமா நிலத்தைக் கீறிக்குவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

பண்ணையில் 7 மாடுகளை வளர்க்கிறோம். அதுல 2 உம்பளச்சேரி நாட்டு மாடுகள் இருக்கு. மாடுகள் மூலமா கிடைக்கிற பாலை வீட்டுத்தேவைக்கு வெச்சுக்குறோம். எங்க ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த மாடுகள் மூலமா கிடைக்கிற சத்தான பால்தான். சாண, மூத்திரக் கழிவுகளை இலைதழைகளோடு கலந்து மக்க வெச்சிடுறோம். இந்த மட்கிய இலைதழை உரம் மாதிரி, இந்த மண்ணுக்குச் சிறந்த உரம் கிடையாது. அதனாலதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த மண்ணில் இலைதழை உரம் நிலைச்சு நிக்குது. இந்த உரத்தைத்தான் நிலத்துக்கு அடியுரமாகப் பயன்படுத்துறோம். 

இதோடு மாடுகளத் தோட்டம் முழுவதும் மேய்க்கவிடுறோம். அதோட கழிவுகள் இயற்கையாகவே மண்ணுக்குக் கிடைச்சிட்டு இருக்கு. இந்த மாடுகள்தான், எங்க பண்ணையோட உரத்தொழிற்சாலை. இந்த மாடுகளோட சாணம், மண்ணுல விழுந்து, நம்ம மண்புழுக்களுக்கு உணவாக மாறுது. இதனால, நிலத்துல எங்க தோண்டினாலும், மண்புழுக்கள் கிடைக்குது. இதுவே, இந்த நிலம் இயற்கையோட இருக்குங்கிறதுக்கான ஆதாரம், அத்தாட்சி.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்
ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

“என்னைச் சந்திக்கிற விவசாயிகள்கிட்ட எப்போதும் பலபயிர்ச் சாகுபடி முறையைத்தான் வலியுறுத்திட்டு வர்றேன். எதிர்காலத்துல இந்தச் சாகுபடிமுறைதான் விவசாயத்துல வருமானம் பெருக்கும் முறையாக இருக்கும். இப்போ என்னுடைய பண்ணையில 4:3:2:1 என்ற விகிதத்தல 30 ஏக்கர்ல பலபயிர்ச் சாகுபடிசெய்றேன். இதுல குறுகிய காலப் பயிர்களை 40 சதவிகிதமாகவும், ஒரு வருஷத்துல அறுவடை செய்ற பயிர்களை 30 சதவிகிதமாகவும், இரண்டிலிருந்து நான்கு வருஷங்கள்ல வளர்ந்து பிறகு ஆண்டுக்கொருமுறை அறுவடை செய்ற பயிர்களை 20 சதவிகிதமாகவும், ஏழிலிருந்து 10 வருஷத்துல வளர்ந்து அறுவடை செய்வதை 10 சதவிகிதமாகவும் சாகுபடிசெய்து வருகிறேன். குறுகிய காலப் பயிர்ல நெல், காய்கறிகள், நிலக்கடலை, கீரையும், ஒரு வருட பயிர்ல வாழை, சாத்துக்குடி, மா அறுவடை எடுத்துட்டு வர்றேன். தென்னை, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சையெல்லாம் வளர்ந்துட்டு வருது” என்றவர் தொடர்ந்தார்...

“இங்கே முழுக்கக் கிணற்றுப் பாசனம்தான். மூணு கிணறுகள் இருக்கு. போர்வெல்லே இங்க கிடையாது. போன வருஷம் ரொம்பத் தண்ணீர் தட்டுப்பாடு வந்துடுச்சு. அதனால, இப்போ 60 அடிக்கு 40 அடியில் 5 அடி ஆழத்துல ஒரு நீர்ச் சேகரிப்புக் குட்டை அமைச்சிருக்கேன். குட்டையிலிருந்து நேரடியா மூணு கிணறுகளுக்கும் தண்ணீர் வர்ற மாதிரி குழாய்களை அமைச்சிருக்கேன். இந்த வருஷம் கிடைச்ச மழையில குட்டை நிறைஞ்சு, மூணு கிணறுகளும் நிறைஞ்சிருக்கு” என்ற மகாதேவன் நிறைவாக,

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

“மொத்தம் இருக்கிற 36 ஏக்கர் நிலத்துல மேய்ச்சல் நிலங்கள், பண்ணை வீடு, கொட்டகைனு போக மீதி 30 ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்றேன். நேரடி விற்பனை, மதிப்புக்கூட்டல்னு பல முறையில விளைபொருள்கள விற்பனை செய்றேன். ஏக்கருக்கு 1 லட்சம் என்ற கணக்குல, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் வருது. இதுல பண்ணைப் பராமரிப்பு, ஆள்கள் கூலி, போக்குவரத்து, அறுவடைனு மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய் செலவாகும். வருஷத்துக்கு 12 லட்சம் ரூபாய் செலவு போக 18 லட்சம் ரூபாய் இப்போதைக்கு லாபம் கிடைச்சிட்டிருக்கு.  இன்னும் மூணு, நாலு வருஷம் கழிச்சு வருஷத்துக்கு அறுபது லட்ச ரூபாய்க்குமேல வருமானம் எடுக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
‘அல்லாடி’ மகாதேவன், செல்போன்: 98402 77566
  

சேற்றுழவுக்கு ஏற்ற உம்பளச்சேரி

பண்ணையில் இரண்டு உம்பளச்சேரி மாடுகளை வளர்த்து வருகிறார் மகாதேவன். இந்த மாடுகளின் சிறப்புகள் குறித்துப் பாரம்பர்ய கால்நடை வளர்ப்போர் சங்கத் தலைவர் க.பா.ஜானகிராமன் சில விஷயங்களைச் சொன்னார்.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

“நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலூகாவில் இருக்கும் உம்பளச்சேரி என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை இந்த மாடுகள். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் முன்பு உழவுக்கு அதிகமாக இந்த இன மாடுகளைத்தான் பயன்படுத்தினர். நெல் விவசாயத்தில் சேற்றுழவு செய்யும்போது நீண்ட நேரம் வேலைசெய்யக்கூடிய திறன்கொண்டவை உம்பளச்சேரி மாடுகள். இவற்றின் கால் குழம்புகள் குதிரைகளின் கால் குழம்புகளை ஒத்திருக்கும். இவை, நடுத்தர உயரம் கொண்டவை. உம்பளச்சேரி மாடுகளில் 4 உட்பிரிவுகள் உள்ளன.

குறைவான தீவனம், நோய் எதிர்ப்புத் திறன் என நாட்டுமாடுகளுக்கே உரிய சிறப்புகளைக் கொண்டவை இவை. இவற்றின் நெற்றியில் ஆலமர இலை, அரசமர இலை போன்ற வடிவில் வெள்ளை நிறத்திட்டுகள் இருக்கும். இதேபோன்று முதுகுப்புறமும் வாலிலும் வெள்ளைநிறக் கோடுகள் இருக்கும். இவற்றை வண்டியிழுக்கவும் பயன்படுத்தலாம். தமிழக அரசு வகைப்படுத்தியுள்ள 6 வகையான நாட்டு மாட்டினங்களில் உம்பளச்சேரி இனமும் ஒன்று. இந்த மாடுகள், திருவாரூர் மாவட்டம், கொருக்கை கிராமத்தில் உள்ள அரசு கால்நடைப் பண்ணையில் கிடைக்கின்றன” என்றார்.

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம்!

“நம்முடைய விவசாய முறையைக் கொஞ்சமாவது மாற்றிக்கொள்வது அவசியம். நாம் அதிகமாக நெல்லைத்தான் சாகுபடி செய்றோம். ஒரு ஏக்கர் நெல் போட்டால், தோராயமா 30 மூட்டை கிடைக்கும்னு வெச்சுக்குவோம். இதுமூலமா ஒரு மூட்டை சராசரியா 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்தால், 45 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல நடவு, உழவு, அறுவடைச் செலவுன்னு குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் செலவானால்கூட ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு வருஷத்துல ரெண்டு போகம் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 60 ஆயிரம் லாபம்தான் கிடைக்கும். இந்த ஒரு ஏக்கரையே பிரிச்சு 40 சதவிகிதம் நெல், காய்கறிகள், கீரையும் மீதி நிலத்துல மா, கொய்யா, சப்போட்டோ என்று பழமரங்களும், நீண்டகால அடிப்படையில் மரங்களும் வளர்த்தால் தொடர் வருமானம் கிடைக்கும். தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும்.

 இப்படிச் செய்தால் முதல் வருடத்தில் 60 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது வருடத்தில் ஒன்னேகால் லட்சம் ரூபாயும், ஐந்தாவது வருடத்தில் 3 லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும். என்னுடைய பண்ணையில் இந்த முறையில்தான் சாகுபடிசெய்து வருகிறேன்.

3-லிருந்து 6 மாதங்கள்

நெல், காய்கறிகள், பயறு வகைகள், தானியங்கள், எண்ணெய் வித்துப்பயிர்கள்...

12-லிருந்து 18 மாதங்கள்

வாழை, பப்பாளி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு,

2-லிருந்து 4 வருடங்கள்

சாத்துக்குடி, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, சீத்தாப்பழம்,

6-லிருந்து 10 வருடங்கள்

தென்னை, பலா, மா, புளி, தேக்கு, மகோகனி, இந்தமுறையில் ஏக்கருக்கு 40 சதவிகித அளவு நிலத்துக்குத்தான் மூன்று நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்கும். வருடப் பயிர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை தண்ணீர் கொடுத்து வந்தால் போதுமானது” என்கிறார் மகாதேவன்.

பூச்சிகளுக்குப் பயப்படத் தேவையில்லை!

மகாதேவனின் பண்ணையில் பூச்சி மேலாண்மை போன்ற பயிர்ப் பாதுகாப்பு முறைகளுக்கு ஆலோசனை கொடுத்துவருகிறார் தோட்டக்கலை வல்லுநர் சி.பி. அனூப் குமார்.

“பொதுவாக விவசாயிகள் தோட்டத்துல பூச்சிகளைப் பார்த்ததுமே பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க ஆரம்பிச்சிடுறாங்க. அது ரொம்பத் தவறான விஷயம். ‘பயிருக்குத் தீங்கு விளைவிக்கிற பூச்சிகள்’னு நாம சொல்ற பூச்சிகளைச் சாப்பிட மற்ற சில பூச்சிகளையும் இயற்கை படைச்சிருக்கு. எந்தப் பூச்சிக்கொலியைப் பயன்படுத்தினாலும் பூச்சிகளை ஒழிக்கிறதுங்கிறது சாத்தியமே இல்லாத விஷயம். பூச்சிகளைக் கட்டுப்படுத்தத்தான் முடியும். பயிர்ல எந்தப் பூச்சிகள் தாக்கினாலும் ரெண்டு வாரங்கள்ல தானாகவே சரியாகிடும்.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்

உதாரணமாகக் கத்திரியை எடுத்துக்குவோம். கத்திரிச் செடியை 8 வகையான பூச்சிகள் தாக்கும். அதுல முதன்மையான பூச்சிகள், மாவுப்பூச்சியும் (Meal Bug), தண்டுத் துளைப்பானும்தான். மாவுப்பூச்சியைச் சாப்பிட மாவுப்பூச்சி அழிப்பான் (Meal Bug Destroyer)ங்கிற பூச்சி இருக்கு. துண்டுத் துளைப்பான் பூச்சியை அழிக்கக் குளவிகள், எறும்புகள் இருக்கு. அதனால, பூச்சிகளைப் பார்த்துப் பயப்பட வேண்டியதேயில்லை.

மா மரங்கள்ல துளிர் இலைகளைச் சாப்பிடும் பூச்சிகள் (Leaf Cutter) வரும். இந்தப் பூச்சிகளை எட்டுக்கால் பூச்சிகள், இடையன் பூச்சி ஆகியவை கட்டுப்படுத்திடும். இதேபோல, இலைச்சுருட்டுப் பூச்சிகளால் (Leaf Roll) மா மரங்கள்ல பாதிப்பு வந்தா தோற்றம்தான் பாதிக்கப்படுமே ஒழிய, இழப்பு பெரியளவுல இருக்காது. அதேபோல, இலைப்பேன் தொல்லையைக் கட்டுப்படுத்த ‘லேடி பேர்டு’ (Lady Bird)ங்கிற பூச்சி வருது. இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம். பண்ணையில் களைச்செடிகள் இருந்தாலே பிரதானப்பயிர்களுக்குப் பூச்சிகள் வராது. என்னுடைய அனுபவத்தில் பூச்சிவிரட்டியே தேவையில்லைனுதான் சொல்வேன்” என்கிறார் அனூப்குமார்.

தொடர்புக்கு, அனூப் குமார்,
செல்போன்: 98843 30004.