Published:Updated:

‘‘எனக்கு அண்ணன்... பிள்ளைகளுக்குப் பெரியப்பா!’’ - காளையைக் கொண்டாடும் விவசாயி!

‘‘எனக்கு அண்ணன்...  பிள்ளைகளுக்குப் பெரியப்பா!’’  - காளையைக் கொண்டாடும் விவசாயி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘எனக்கு அண்ணன்... பிள்ளைகளுக்குப் பெரியப்பா!’’ - காளையைக் கொண்டாடும் விவசாயி!

கால்நடைஇ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பொங்கல் விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். பொங்கல் திருநாளும் ஜல்லிக்கட்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. இந்த நவீன காலத்திலும் தமிழர்களிடம் மிஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. நம் பண்பாட்டில் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய பாசப்பிணைப்பு இருந்துவருகிறது. பலரும் குடும்ப உறுப்பினராகவே மாடுகளை நினைத்து வருகிறார்கள். பல விவசாயிகள் காளைகளைச் சிலை வைத்து வணங்கி வருகிறார்கள். அந்த வகையில், தான் வளர்த்து வந்த காளைக்குச் சிலை எழுப்பி வழிபட்டு வருகிறார் மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர்.

‘பொங்கல் சிறப்பிதழு’க்காகச் சந்திரசேகரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினார். “இந்தச் சிலையில் இருக்கிற காளை எனக்கு அண்ணன் மாதிரி. என் பிள்ளைகளுக்குப் பெரியப்பா மாதிரி. அதை யாரையும் ‘மாடு’னு சொல்ல விடமாட்டேன். என்கூடப் பிறந்த அண்ணன் செந்தில்வேல், மாடு பிடி வீரர். ஜல்லிக்கட்டுக்காக எங்க வீட்டுல ஏழு காளைகளை வளர்த்தோம். காளைகளைக் குளிப்பாட்டுறது, தீவனம் வைக்கிறது, வைத்தியம் பாக்கிறதுனு எல்லா வேலைகளையும் அண்ணன் தான் செய்வார். காளைத் தொழுவத்துக்குள்ளயே நாங்க யாருமே போக மாட்டோம்.

அண்ணனுக்கு இருபது வயசு இருக்கிறப்போ உடம்பு சரியில்லாம இறந்து போயிட்டார். அண்ணன் இறந்த சமயத்துல ஒரு கிடேரிப்பசு சினைப் பிடிச்சது. அப்போ ‘இந்தப் பசு காளைக்கன்னு போட்டா, என் மகன் செந்தில்வேல்தான் அந்தக் காளையாகப் பிறப்பான்’னு சொல்லி அந்தப் பசுவுக்கு எங்கப்பா விபூதி போட்டுவிட்டார். சொன்ன மாதிரியே அந்தப்பசு காளைக்கன்றைத்தான் ஈனுச்சு. அதுவும் எங்க அண்ணனுக்கு ரொம்பப் பிடிச்ச கறுப்பு நிறத்துல அந்தக் காளைக்கன்று பிறக்கவும், அப்பாவுக்கும் எனக்கும் சந்தோசம் தாளலை. அதுக்கு, செந்தில்வேல்னு பேரு வெச்சு வளர்த்தோம்” என்ற சந்திரசேகர் தொடர்ந்தார்...

‘‘எனக்கு அண்ணன்...  பிள்ளைகளுக்குப் பெரியப்பா!’’  - காளையைக் கொண்டாடும் விவசாயி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காளையின் சிலை

“அந்தக் காளையையும் ஜல்லிக்கட்டுக்குப் பழக்கினோம். பேரிச்சம்பழம், கானப்பயிர்னு கொடுத்து நல்லா பராமரிச்சு வீரமா வளர்த்தோம். அது, மைதானத்துல மட்டும்தான் ஆக்ரோஷமா இருக்கும். தொழுவத்துல நிக்கும்போது பரம சாதுவா இருக்கும். நான் அதை ‘அண்ணே’னுதான் கூப்பிடுவேன். எனக்குக் கல்யாணம் ஆகிப் பிள்ளைகள் பிறந்ததும் அவங்க பெரியப்பானுதான் கூப்பிட்டாங்க. அப்படி வீட்டுல ஒருத்தரா நினைச்சு வளர்த்திட்டிருந்தோம்.

அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைனு கிட்டத்தட்ட 500 ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் கூட்டிட்டுப் போயிருக்கேன். சின்னப் பரிசாவது வாங்காம நாங்க திரும்பி வந்ததில்லை. 50 தங்கக் காசுகள், 20 மிக்சி, 20 கிரைண்டர், 25 சைக்கிள், 6 கட்டில்கள், 30 கோப்பைகள், சில்வர், பித்தளைப் பாத்திரங்கள்னு ஏகப்பட்ட பரிசுகளை வாங்கி கொடுத்திருக்கு. அதேபோல என்னோட காளையண்ணன் முட்டி இதுவரை ஒரு மாடுபிடி வீரர்கூட இறந்ததில்லை.

‘‘எனக்கு அண்ணன்...  பிள்ளைகளுக்குப் பெரியப்பா!’’  - காளையைக் கொண்டாடும் விவசாயி!

இருபத்திரண்டு வருஷம் எங்க வீட்டுல பாசமா வளர்ந்த காளை செந்தில்வேல், போன 2015-ம் வருஷம் மாசி மாசம் சிவராத்திரி அன்னிக்கு எங்கள விட்டு நிரந்தரமா பிரிஞ்சுட்டார். ‘காளை, சிவனோட வாகனமான நந்திதான். சிவராத்திரி அன்னிக்கு இறந்ததால அந்தக்காளைக்கு ஏதோ தெய்வாம்சம் இருந்திருக்கு’னு ஊர்க்காரங்கள்லாம் சொன்னாங்க. பச்சைத் தென்னை ஓலைகட்டி, கொட்டுமேளம் அடிச்சு, குளிப்பாட்டி, புதுத்துணி உடுத்தி, காளை அண்ணனைக் கட்டிருந்த தொழுவத்திலேயே குழிதோண்டிப் புதைச்சோம். காரியம் செய்றதுக்காக என் மகன்கள் மொட்டை போட்டுக்கிட்டாங்க.

அதுக்கப்புறம் புதைச்ச இடத்திலேயே சிமென்ட் பீடம் அமைச்சு, இந்தக் காளைச் சிலையை அமைச்சோம். வாராவாரம் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்ல பூஜை பண்றோம்” என்ற சந்திரசேகர் நிறைவாக,
“மேலூருக்குக் கட்டுப்பட்ட 18 கிராமங்கள்ல மஞ்சுவிரட்டு நடக்கும்போது, ஊருக்குள்ள இருக்கிற ‘காஞ்சி வனம்’ கோயில்ல பொங்கல் வெச்சுத்தான் காளைகளை அனுப்புவோம். போன வருஷம் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு எங்க ஊருல இருந்து போன காளைகள் எல்லாத்தையும் இந்தச் சிலை முன்னாடி நிற்க வெச்சு, பூஜை பண்ணித் திலகம் வெச்சுத்தான் அனுப்பினோம்” என்று சொல்லியபடி சிலையை வணங்கி விடைகொடுத்தார்.