Published:Updated:

வரிசையாக வட்டப்பாத்திகள்... குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி!

வரிசையாக வட்டப்பாத்திகள்...  குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
News
வரிசையாக வட்டப்பாத்திகள்... குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி!

முயற்சிஆர்.குமரேசன்

“விவசாயம் என்பது ஆத்மார்த்தமானது. விளைச்சல், வருமானம் போன்றவற்றைத் தாண்டி ஆன்மாவை மலரவைக்கும் அற்புத அனுபவம். நம் கையால் நடப்படும் ஒரு விதை, செடியாகி, பூவாகி, காயாகி, கனிந்து நிற்கும் நொடியில், மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது.

எனக்குத் தொழில் பாரம்பர்ய மருத்துவம் என்றாலும் நானும் விவசாயி மகன்தான். எந்தத்தொழிலிலும் கிடைக்காத மனநிம்மதி விவசாயத்தில் கிடைக்கிறது. இதை அனுபவத்தில் உணர்ந்ததினால்தான், நான் இன்றைக்கு  இயற்கை விவசாயியாக இருக்கிறேன். அதற்குக் காரணம், என்னுடைய குரு நம்மாழ்வார் ஐயாதான்” என்று மலர்ந்த முகத்துடன் பேசுகிறார் சித்த மருத்துவர் காளிமுத்து.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறம் இருக்கிறது காளிமுத்துவின் தோட்டம். மணப்பாறை முறுக்குபோல வட்ட வட்டமாக எடுக்கப்பட்டிருந்த பாத்திகளுக்கு நடுவில் நின்றுகொண்டு நம்மிடம் பேசிய காளிமுத்து, “எனக்குப் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு பக்கத்துல இருக்கிற முதல்நாடு கிராமம். சின்ன வயசுல இருந்தே மூலிகைகள், பாரம்பர்ய வைத்தியம்மேல ஈடுபாடு அதிகம். அதனால, அந்தத் துறையிலயே இறங்கிட்டேன். ராமநாதபுரம்-மண்டபம் சாலையில என்னோட வைத்தியசாலை இருக்குது.

வரிசையாக வட்டப்பாத்திகள்...  குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி!

நாம இயற்கையை விட்டு ரொம்ப விலகிட்டோம். தவறான உணவுப்பழக்கத்தால விதவிதமான நோய்கள் வருது. ஆங்கில மருத்துவத்துல இருந்தும், இப்போ கடைப்பிடிச்சிட்டிருக்கிற உணவுப்பழக்கத்துல இருந்தும் வெளிவர முடியாம நிறையபேர் தவிக்கிறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு, முறையான ஆலோசனை சொல்ல ஆளே இல்லையானு ஏங்கிட்டு இருந்தப்பதான், நம்மாழ்வார் ஐயாவைப் பத்தித் தெரிய வந்துச்சு. ‘பசுமை விகடன்’ புத்தகத்துலதான் ஐயாவோட கட்டுரைகளைப் படிச்சேன். அதையெல்லாம் படிக்கிறப்போ, ‘இயற்கையில இவ்வளவு நன்மைகள் இருக்கே... ஏன் எல்லோரும் ரசாயன விவசாயத்தையே செஞ்சிட்டு இருக்காங்க’னு ஆதங்கமா இருக்கும்.

அவர், இயற்கை விவசாயத்தை மட்டும் சொல்லித் தரல. அனைவருக்குமான இயற்கை வாழ்வியலையும் சொல்லிக் கொடுத்தார். அதனாலதான் அவரை என்னோட மானசீகக் குருவா ஏத்துக்கிட்டேன்” என்ற காளிமுத்து தொடர்ந்தார்... “ராமநாதபுரம் மாவட்டத்துல ‘எட்டிவயல்’ முருகேசன் தோட்டத்துல நம்மாழ்வார் ஐயாவோட பயிற்சி வகுப்பு நடந்தது.

பசுமை விகடனும் மாவட்ட நிர்வாகமும் இணைஞ்சு ஏற்பாடு செஞ்ச அந்தப் பயிற்சி வகுப்புல, நானும் கலந்துகிட்டேன். பயிற்சி நடந்த ரெண்டு நாளும் ஐயாகிட்ட இருந்து பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அதுல, என்னை ஈர்த்த அம்சம் வட்டப்பாத்தி. ‘குறைஞ்ச இடம் வெச்சிருக்கவங்களுக்கு ஏற்ற விவசாயமுறை வட்டப்பாத்தி’னு ஐயா சொன்னது, இப்பவும் என் காதுல ஒலிச்சுட்டே இருக்குது. பயிற்சியில, வேளாண் ஆலோசகர் ஏகாம்பரம், வட்டப்பாத்தி அமைக்கும் முறையைச் சொல்லிக்கொடுத்தார்.

பயிற்சி கொடுத்த உந்துதல்ல, அந்த வருஷமே ராமநாதபுரத்துல ஒரு மூலிகை கண்காட்சிக்கு ஏற்பாடு செஞ்சோம். தொடர்ந்து இயற்கை விவசாயம், மூலிகைகள் பத்தின விழிப்பு உணர்வை ஏற்படுத்திட்டிருக்கோம். அந்தச் சமயத்துல ராமநாதபுரம் கலெக்டரா இருந்த நந்தகுமார், எங்களுக்கு நல்ல ஆலோசனைகளும் ஊக்கமும் கொடுத்திட்டிருந்தாரு. அடுத்ததா, வட்டப்பாத்திமுறையில கொஞ்சம் மூலிகைகளைச் சாகுபடிசெய்யலாம்னு நினைச்சேன். அதுக்காக என்னோட மருத்துவமனைக்குப் பக்கத்திலேயே ரெண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பேசினேன். அதுல ஒவ்வொரு முயற்சியா செஞ்சு பார்த்தேன். அதுமூலமா ஒரு தெளிவு கிடைச்சிருக்கு. இப்போ நெல், நிலக்கடலை, மக்காச்சோளம், வெண்டை, கொத்தவரை, தட்டைப்பயறு, வெள்ளைப்பூசணி, துவரை, தென்னைனு சாகுபடிசெய்றேன்” என்ற காளிமுத்து ஒவ்வொரு பயிராகச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

“நிலத்தோட வேலியில இருந்து ரெண்டடி தள்ளி, நாலு பக்கமும் பத்தடி இடைவெளியில் மரக்கன்றுகளை நடவுசெஞ்சிருக்கேன். மொத்தம் 80 செம்மரக்கன்றுகள், 40 குமிழ்க் கன்றுகள், 5 தென்னங்கன்றுகள், 40 வாகைக்கன்றுகள்னு நடவு செஞ்சிருக்கேன். அதுக்குப் பக்கத்துல ரெண்டு வரிசையில் 1 அடி இடைவெளியில துவரை நடவு செஞ்சிருக்கேன். துவரையை ஒட்டுன மாதிரி 2 அடி அகலம், 1 அடி ஆழத்துல தண்ணி பாய்ச்சுறதுக்கான வாய்க்கால் எடுத்திருக்கேன்.

வாய்க்காலோட மறு கரையில, 1 அடி இடைவெளியில மக்காச்சோளத்தையும் ஆமணக்கையும் விதைச்சிருக்கேன். ரெண்டு மக்காச்சோளச் செடிகளுக்கு இடையில, ஒரு ஆமணக்குச்செடி இருக்கிறமாதிரி விதைச்சிருக்கேன். ஆமணக்குச் செடிகள் மூலமா பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வரிசையாக வட்டப்பாத்திகள்...  குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி!

ஆமணக்குச் செடிகளுக்கு அடுத்து நடைபாதை விட்டுட்டு, அடுத்ததா அஞ்சு சென்ட் இடத்துல வட்டப்பாத்தியும், அஞ்சு சென்ட் இடத்துல சதுரப்பாத்தியும் அமைச்சிருக்கேன். நம்மாழ்வார் பயிற்சியில கத்துக்கொடுத்த விஷயத்தை மனசுல வெச்சுக்கிட்டுச் சக்திவேல்ங்கிற இயற்கை ஆர்வலரின் உதவியோடு இந்தப் பாத்திகளை அமைச்சேன். நிலத்தை நல்லா கொத்திவிட்டு, மண்ணுல தொழுவுரத்தைப் போட்டுப் பாத்தி அமைச்சிருக்கேன். 40 அடி விட்டத்துல வட்டப்பாத்தி இருக்கு. பாத்தியோட அகலம் 2 அடி, உயரம் 1 அடி. மொத்தம் 5 வட்டங்கள் இருக்குது. நாற்பதுக்கு நாற்பது அளவுலதான் சதுரப்பாத்தியும் அமைச்சிருக்கேன். ரெண்டுலயும் ஒரே மாதிரியான பயிர்களைத்தான் சாகுபடி செஞ்சிருக்கேன்.

வட்டப்பாத்தியோட வெளிப்பக்கத்துல (முதல் வட்டத்துல) மக்காச்சோளம் நடவு செஞ்சேன். உள்வரிசைகளோட நடுவுல வெண்டியையும்(வெண்டைக்காய்), ரெண்டு ஓரங்கள்ல தட்டைப்பயறையும் நடவு செஞ்சுருக்கேன். நடவுசெஞ்சு மூணு மாசம் ஆச்சு. ஆரம்பத்துல அதிகமா களைகள் வளர்ந்துச்சு. அதையெல்லாம் பறிச்சு, அப்படியே மூடாக்குப் போட்டுட்டேன். கொத்தவரை நல்லா காய்ச்சது. ரெண்டு பாத்தியிலயும் இதுவரைக்கும் நூறு கிலோவுக்குமேல மகசூல் எடுத்தாச்சு. அதையெல்லாம் என்னோட நண்பர்களுக்குக் கொடுத்துட்டேன். வெண்டிக்காய்ல இதுவரைக்கும் நாற்பது கிலோ மகசூல் கிடைச்சிருக்கு” என்ற காளிமுத்து நிறைவாக,

“முதல்முறை கிடைச்ச மகசூல்ங்கிறதால, வியாபார ரீதியா யோசிக்கலை. ஆனா, இதுல கிடைச்ச அனுபவம் மூலமா, அடுத்து வியாபார ரீதியா பயிர் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன். இதுல கேரட், முள்ளங்கி, பீட்ரூட், கத்திரி, தக்காளினு காய்கறிகளையும் போடலாம்னு இருக்கேன். குறைஞ்ச அளவு நிலம் வெச்சிருக்கிற விவசாயிங்களுக்கு வட்டப்பாத்தி ஒரு வரப்பிரசாதம்தான்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
காளிமுத்து,
செல்போன்: 94420 45435. 

“மூலிகைப் பூச்சிவிரட்டிகூடத் தெளிக்கல!”

தன்னுடைய நெல் சாகுபடி குறித்துப் பேசிய காளிமுத்து, “ஒரு ஏக்கர் நிலத்துல டி.கே-9 ரக நெல்லை விதைச்சிருக்கேன். மாப்பிள்ளைச்சம்பா நெல்தான் விதைக்கணும்னு நினைச்சேன். சரியான பட்டத்துல விதைநெல் கிடைக்காததால, இந்த ரகத்தை விதைச்சிட்டேன். புழுதி விதைப்பா விதைச்சு, போர்வெல் மூலமாத்தான் பாசனம் செய்றேன். இதோட வயசு நூறுநாள்கள்.  அடுத்த போகத்துல மாப்பிள்ளைச்சம்பாதான் விதைக்கப்போறேன். நெல் வயலோட வரப்புல மக்காச்சோளம் நடவு செஞ்சிருக்கேன். ஒரு பக்க வரப்புல வெள்ளைப்பூசணி நடவு செஞ்சேன்.

அது கொடியோடி நல்லா காய்ச்சுத் தள்ளுது. நெல்லுக்கு நான் மூலிகைப் பூச்சிவிரட்டிகூடத் தெளிக்கலை. பயிர் நல்லாயிருக்கு. கால் ஏக்கர்ல நிலக்கடலை விதைச்சிருக்கேன். அது இப்பத்தான் பூவெடுத்திருக்கு. தினமும் காலையில ரெண்டு மணி நேரம், சாயங்காலம் ரெண்டு மணி நேரம்தான் தோட்டத்துல இருப்பேன். வேலைக்கு வெளியிலிருந்து ஆளுங்களை அழைச்சுக்குவேன். மத்தபடி நண்பர் சக்திவேல் உதவியோடுதான் என்னோட விவசாயம் நடந்துட்டு இருக்குது” என்றார்.

வட்டப்பாத்தி வடிவமைப்பு!

வட்டப்பாத்தி அமைக்கும்முறை குறித்துக் காளிமுத்து சொல்லிய தகவல்கள் பாடமாக இடம் பெறுகின்றன...

வரிசையாக வட்டப்பாத்திகள்...  குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி!

நிலத்தை நன்றாக உழுதோ, கொத்தியோ புழுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு நிலத்தைச் சமன்செய்து, உள்பகுதியில் இருந்து வட்டம் அமைக்கத் தொடங்க வேண்டும். நம் நிலத்தின் நீள, அகலத்துக்கு ஏற்ப விட்டத்தை முடிவுசெய்துகொள்ளலாம். பாத்தியின் கரை 1 அடி உயரம், 2 அடி அகலம் இருக்க வேண்டும். ஒரு வட்டத்துக்கும் அடுத்த வட்டத்துக்கும் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பாத்தியில் தொழுவுரம், இலைதழைக் கழிவுகள் போன்றவற்றைக் கொட்டி, அதன்மீது மண்ணைப் போட்டு மூடி, விதைகளை விதைக்க வேண்டும். பாத்தியின் மத்தியில் காய்கறிச் செடிகளையும் ஓரங்களில் வெங்காயம், கீரைகள், தட்டைப்பயறு, உளுந்து போன்றவற்றையும் நடவுசெய்யலாம்.

வரிசையாக வட்டப்பாத்திகள்...  குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி!

ஐந்து வட்டங்கள் போதுமானவை. ஒவ்வொரு வட்டத்திலும் உள்ளே நுழைவதற்காகச் சிறிய வழியைவிட்டு, வட்டம் அமைக்க வேண்டும். வட்டப்பாத்திக்குத் தெளிப்புநீர்ப் பாசனமே சிறந்தது. வாய்க்கால் மூலமாகப் பாசனம் செய்பவர்கள், தண்ணீர் எல்லா பகுதிக்கும் செல்லுமாறு வாட்டம் பார்த்து அமைக்க வேண்டும். அறுவடை முடிந்த செடிகளைப் பிடுங்கி மூடாக்காகப்போடலாம்.