Published:Updated:

மொச்சை, வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!

மொச்சை,  வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!
பிரீமியம் ஸ்டோரி
News
மொச்சை, வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!

பாரம்பர்யம்எம்.வடிவேல், படங்கள்: க.மணிவண்ணன்

திக விளைச்சல் என்ற காரணத்தைக் காட்டி, வீரிய ஒட்டு ரக விதைகளை விவசாயிகளிடம் புகுத்தியது பசுமைப்புரட்சி. அதனால், நாட்டு ரக விதைகள் அருகத் தொடங்கியதால், விவசாயத்தில் தற்சார்பும் குறையத் தொடங்கியது. ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடிசெய்தாலும்... ஒவ்வொரு முறை விதைக்கும்போதும், கடைகளில் விற்கப்படும் விதைகளைத்தான் விவசாயிகள் வாங்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலும் பல இயற்கை விவசாயிகள் நாட்டு ரக விதைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவருகிறார்கள். அந்த வகையில், நாட்டுரக விதைகளை மட்டுமே விதைப்பதோடு பலவிதப் பயிர்களுக்கான நாட்டுரக விதைகளைச் சேமித்து வைத்து, தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்தும் வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒம்பாலம்மா.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் கர்நாடக மாநிலத்துக்கும் தமிழகத்துக்குமான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஆலப்பன்தொட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒம்பாலம்மா. இக்கிராமத்துக்குச் செல்லும் வழி முழுவதும் மேடும் பள்ளமுமான நிலப்பகுதிகளில் ‘பச்சைப்பசேல்’ என வளர்ந்து நிற்கின்றன சோளம், கேழ்வரகு, மொச்சை, சாமை எனப் பலவிதமான பயிர்கள். ஆங்காங்கு இருந்த ஏரிகளில் தண்ணீர் நிரம்பியிருந்தது. அந்தக் கிராமங்களில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கிறார் ஒம்பாலம்மா. ‘நாட்டு விதைகள்’ என்று பேச ஆரம்பித்தாலே, ஒம்பாலம்மாவின் வீட்டுக்கு வழிசொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

மொச்சை,  வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!

 பல வகையான நாட்டு விதைகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இயற்கை சூழ்ந்த நிலத்தில் தனியாக இருக்கும் வீட்டில் வசித்துவருகிறார் ஒம்பாலம்மா. வீட்டைச் சுற்றிக் காய்கறிச் செடிகளும் கொடிகளும் அடர்ந்து காணப்பட்டன. செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ஒம்பாலம்மாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். மெல்லிய குரலில் கன்னட மொழியில் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் ஒம்பாலம்மா. அவர் பேசியதன் தமிழாக்கம் இங்கே...

“இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, ‘தளி’ என்ற ஊரில், இயற்கை விவசாயம் குறித்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அங்கே, இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு ரக விதைகள் குறித்து விளக்கமாகச் சொன்னார்கள். அதன் பிறகுதான் எனக்கு நாட்டு விதைகள் மீது பாசம் வந்தது. தொடர்ந்து நாட்டு விதைளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அவற்றைப் பத்திரப்படுத்தியதோடு, பயிர் செய்யவும் ஆரம்பித்தேன். நாட்டு விதைகளைப் பயிர் செய்யும்போது அவற்றில் இருந்தே விதைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி, நான் விளைவித்த பயிர்களில் இருந்தே எனக்கு விதைகள் கிடைக்கத் தொடங்கியதால், ஒவ்வொரு போகத்துக்கும் விதைக்காக அடுத்தவரிடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

மொச்சை,  வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!

எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் அளவு நிலம் உள்ளது. இது ‘மேட்டு நிலம்’ என்பதால், மழை கிடைத்தால்தான் விதைப்போம். மலையை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலத்திலும் மானாவாரி விவசாயம் செய்கிறோம். பெரும்பாலும் கேழ்வரகைத்தான் மானாவாரியாகச் சாகுபடி செய்வோம். நாங்கள் இயற்கை முறையில்தான் விவசாயம் செய்கிறோம். வீட்டுக்கு அருகில் சிறிய காய்கறித் தோட்டத்தை அமைத்திருக்கிறேன். அதன்மூலமாவும் விதைகளைப் பெருக்குகிறேன்” என்ற ஒம்பாலம்மா, தான் சேகரித்து வைத்திருக்கும் விதைகளை எடுத்து, நம்மிடம் காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார். “இவை பூசணி விதைகள். பூசணி விதைகள் வட்ட வடிவம், லிங்க வடிவம், பந்து வடிவம் என மூன்று வடிவங்களில் இருக்கும். நாட்டுப்பூசணி விதைகளில் காய்க்கும் காய்கள், நல்ல சுவையாக இருப்பதோடு, வாட்டமாகவும் கடினத்தன்மை உடையதாகவும் இருக்கும்.

மொச்சை,  வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!

கோலி வடிவத்தில் இருக்கும் இவை, மலைப்பகுதியில் மட்டுமே விளையக்கூடிய பாகல் விதை. ரொம்ப அரிதான ரகம். பாகற்காய்க்கு உரிய தன்மை மாறாமல் இருக்கும். இவைபோல, கத்திரிக்காய், தக்காளி, அவரை, மிளகாய், கடலை, மொச்சை, சுரைக்காய், கடுகு, சூரியகாந்தி, வெள்ளரி, வரகு, சாமை, கீரை வகைகள்... எனப் பல வகை நாட்டு விதைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன்.

நாட்டு விதைகளை இயற்கை முறையில் பயிர் செய்துதான் பெருக்குகிறேன். சணப்புச் செடிகளை எருமைச்சாணியுடன் கலந்து மட்க வைத்து, அதைத்தான் நிலத்துக்கு அடியுரமாகப் பயன்படுத்துகிறேன். நாட்டு ரகப்பயிர்களைச் சாகுபடிசெய்யும்போது பெரும்பாலும் பூச்சிகளே வருவதில்லை. அதேபோல, ஆமணக்கு போன்ற பயிர்களை ஊடுபயிர்களாகச் சாகுபடிசெய்தால், பூச்சித்தாக்குதல் இருக்காது. நான் ஆமணக்கு எண்ணெயைத்தான் தலைக்குத் தேய்த்து வருகிறேன். அதனால்தான் 67 வயதிலும் என்னுடைய தலைமுடி நரைக்கவில்லை. இதுதான் இயற்கையின் மகிமை” என்ற ஒம்பாலம்மா நிறைவாக,
“காய்கறி மற்றும் சிறுதானியங்கள் என்று மொத்தம் 51 வகையான நாட்டு ரக விதைகளைப் பத்திரப்படுத்தி வைத்து விற்பனை செய்து வருகிறேன். தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல விவசாயிகள் என்னிடம் உள்ள விதைகளை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். பலர் நான் சொல்லும் விலையைவிட அதிகத்தொகை கொடுத்து வாங்குகிறார்கள். இதன்மூலமாக வரும் வருமானத்தை நான் பெரிதாக எண்ணுவதில்லை. நாட்டு ரகங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

மொச்சை,  வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!

விருது வாங்கிக்கொடுத்த விதைச் சேகரிப்பு

ஆரம்பகாலங்களில் பசுந்தாள் உரம் குறித்து ஒம்பாலம்மாவுக்குப் பயிற்சியளித்த தளி பகுதியைச் சேர்ந்த நாகராஜன், சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மொச்சை,  வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா!

“விதைப்பெருக்கத்தைத் தனியொரு மனுஷியாக, அதுவும் ஒரு பெண்ணாக இருந்து செய்திட்டிருக்காங்க. நாம பயோடைவர்சிட்டி (பல்லுயிர்ப்பெருக்கம்) பத்திப் பேசிட்டிருக்கோம். அந்த பயோ டைவர்சிட்டி சாதாரணமா உருவாகிடாது. இதுபோன்ற பணிகளால்தான் அது சாத்தியப்படும். பசுந்தாள் உரமா அவங்க விதைக்கிற சணப்புகூட நாட்டு ரகம்தான். அதுக்காகப் பசுந்தாள் உரத்துக்கான விருது அவங்களுக்குக் கிடைச்சுருக்கு. அதோட, ஒம்பாலம்மாவின் விதைப்பரவலாக்கும் பணியைப் பாராட்டி... ‘மைராடா’ தொண்டு நிறுவனமும் கர்நாடகத் தணிய சங்கமும் சேர்ந்து ‘விதைகளின் தாய்’ங்கிற விருதைக் கொடுத்திருக்காங்க” என்றார்.