நாட்டு நடப்பு
Published:Updated:

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!
பிரீமியம் ஸ்டோரி
News
பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

மையம்இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மற்றும் விவசாயத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது போன்ற விஷயங்களில் ‘கே.வி.கே’ (KVK-Krishi Vikas Kendra) என அழைக்கப்படும் வேளாண் அறிவியல் மையங்களின் பங்கு முக்கியமானது. மாவட்டந்தோறும் அமைந்துள்ள இந்த மையங்கள் மூலமாக, விவசாயிகள், இளைஞர்கள் எனப் பல தரப்பினரும் பயிற்சிகள் பெற்றுப் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் சுற்றுவட்டார விவசாயிகளுக்குப் பல வகைகளில் பயிற்சி அளித்து வருகிறது தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளத்தில் உள்ள ‘ஸ்காட்’ வேளாண் அறிவியல் மையம்.

ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசன். அவரிடம் மையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினோம். “இந்த மையம், 1996-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது, அவர்களிடம் தொழில்நுட்பங்களைக் கொண்டுசேர்ப்பது, தேவைப்படும் பயிற்சிகளை அளிப்பது, களப்பரிசோதனை மற்றும் விரிவாக்கப் பணிகள் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வது என்று எங்கள் மையம் செயல்பட்டு வருகிறது.

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

ஆராய்ச்சி செய்வது முக்கியமான பணி இல்லை. அதே நேரத்தில், ஆராய்ச்சி நிலையங்கள் வெளியிட்டுள்ள ரகங்கள், தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்ப்பதுதான் எங்களின் முக்கியப்பணி. ஆராய்ச்சி நிலையங்களுக்கும் விவசாயிகளுக்குமான இணைப்புப் பாலம்தான் கே.வி.கே” என்ற சீனிவாசன் தொடர்ந்தார்...

“ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்தில் 5 கிராமங்களைத் தேர்வுசெய்து அக்கிராமங்களிலுள்ள விவசாயிகளை ஒருங்கிணைக்கிறோம். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவற்றுக்கேற்ப தேவையான செயல்விளக்கப் பயிற்சிகளை அளித்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய தாலூகாக்களில் மானாவாரிச் சாகுபடி நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தாலூகாக்களில் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தின்மூலம் நெல், வாழை, வெற்றிலைச் சாகுபடி நடைபெறுகிறது. சாத்தான்குளம் தாலூகாவில் வாழை, முருங்கைச் சாகுபடி நடைபெற்றுவருகிறது. இம்மாவட்டத்தில் போதுமான மழை இல்லாததால், வறட்சிதான் முக்கியப்பிரச்னையாக இருக்கிறது. மேலும், கடல்நீர் ஊடுருவுவதால், குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உள்ள நிலத்தடி நீரும் உப்பாக மாறிவிடுகிறது.

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!
பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

மானாவாரி விவசாயிகளை வறட்சியிலிருந்து காப்பாற்றும் விதமாக, குறுகிய கால ரகங்களை அறிமுகம் செய்வதோடு, விதைப்பு முதல் அறுவடை வரை விவசாயிகளுக்கு வழிகாட்டி வருகிறோம். வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் வெளியிடும் புதிய ரக விதைகளை, ஒரே கிராமத்தில் உள்ள 10 விவசாயிகளுக்குக் கொடுத்து, தொழில்நுட்பங்களையும் சொல்லிச் சோதனை அடிப்படையில் விதைக்கச் சொல்வோம். ஒவ்வொரு படிநிலையிலும் எங்கள் விஞ்ஞானிகள் வழிகாட்டுவார்கள். இறுதியில் அறுவடையின்போது கிடைத்த மகசூலை முந்தைய ரகங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

மேலும், வறட்சியைத் தாங்கும் திறன், பூச்சி மற்றும் நோய்களுக்கான எதிர்ப்புத்திறன் ஆகியவற்றையும் பரிசோதிப்போம். பிறகு, அதே ரகத்தை அடுத்த 10 விவசாயிகளிடம் கொடுத்து மீண்டும் சோதனை செய்வோம். அந்தச் சோதனையிலும் நல்ல முடிவு கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வோம்” என்ற சீனிவாசன் இப்படிச் சோதனை செய்து விவசாயிகளிடம் பரவலாக்கிய சில பயிர் ரகங்கள் குறித்துச் சொன்னார்.

“மானாவாரி விவசாயம் என்பதால் 60 நாள்கள் முதல் 70 நாள்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய குறுகிய காலப் பயிர்களைத்தான் விவசாயிகள் விரும்புகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் மண்ணுக்கேற்ற வகையில் உள்ள உளுந்து ரகம் வம்பன்-4. இந்த ரகம் இரண்டுமுறை பூக்கும் தன்மைகொண்டது. மழை குறைவாக இருந்தால் முதல்முறை பூ பூப்பதிலேயே அறுவடைக்கு வந்துவிடும். மழை அதிகமாகப் பெய்தால் இரண்டாம்முறை பூக்கும்போது மகசூல் எடுக்கலாம். விவசாயிகள் மத்தியில் இந்த ரகம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

அதேபோல நாங்கள் பரவலாக்கியுள்ள கோ-6 பாசிப்பயறு ரகம், அதிக மகசூல் கொடுப்பதோடு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களுக்கான எதிர்ப்புத்திறனையும் கொண்டுள்ளது. நெல்லில் அம்பை-16,
திருச்சி-2, திருச்சி-3, திருப்பதிசாரம்-5 ஆகிய ரகங்களை அறிமுகம் செய்துள்ளோம்.

இவற்றில், திருப்பதிசாரம்-5 ரகம், தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப்புழு ஆகியவற்றின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத்திறன்கொண்டுள்ளது. மேலும் கோ-30 என்ற வெள்ளைச்சோள ரகம்;

கோ-6 என்ற மக்காச்சோள ரகம்; கோ-9, கோ-10 ஆகிய கம்பு ரகங்களையும் சோதனை செய்து விவசாயிகள் மத்தியில் பரவலாக்கியுள்ளோம். இவற்றோடு, கே.டி.எம் ரக முருங்கையையும், லக்னோ-49  ரகக் கொய்யாவையும் விவசாயிகளிடம் சேர்த்திருக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் ரசாயன உரங்களைப் பரிந்துரைப்பதில்லை. எங்கள் மையத்தின் பயிற்சிகளும் இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்டுதான் இருக்கும். ரசாயன விவசாயத்தால் நேரும் தீங்குகளையும் விவசாயிகளிடத்தில் சொல்லி வருகிறோம். வளர்ச்சியூக்கியாகப் பஞ்சகவ்யாவையும் பூச்சிகளை விரட்ட மூலிகைப் பூச்சிவிரட்டியையும் பரிந்துரைக்கிறோம்.

மேலும், ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல், காளான் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, வீட்டுத்தோட்டம் அமைத்தல், சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல், அசோலா வளர்ப்பு போன்றவை குறித்த பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதோடு, வங்கியில் கடன் வாங்குவதற்கான வழிமுறைகளையும் சொல்லிக்கொடுக்கிறோம்” என்ற சீனிவாசன் நிறைவாக,

“ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள மத்திய வறண்ட நிலப் பகுதிகளுக்கான ஆராய்ச்சி மையம் (Central Arid Zone Research Institute), சீமைக்கருவேல் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டு... சீமைக்கருவேல் நெற்றுக்களை மாட்டுத்தீவனமாகப் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறது. அந்த மையம், வறண்ட பகுதிகளில் வெகு வேகமாக வளரக்கூடிய மரம் என இம்மரத்தைச் சொல்லியிருக்கிறது. மற்ற மரங்கள் வளர முடியாத இடங்களில்கூட இம்மரம் எளிதில் வளரும். விதைப்பரவல் மூலமாக மரங்கள் பெருகுகின்றன. ஒரு ஏக்கர் பரப்பில் 20 அடி இடைவெளியில் கிட்டத்தட்ட 100 சீமைக்கருவேல் மரங்களை வளர்க்க முடியும். அவற்றின் மூலம் ஆண்டுக்கு 2 டன் அளவு நெற்றுகள் கிடைக்கும். இந்த நெற்றுகளைப் பொடியாக்கிக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தினால், தீவனத்துக்கான செலவை வெகுவாகக் குறைக்க முடியும். கோதுமைத்தவிடு, கம்பு ஆகியவற்றுக்கு இணையான எரிசக்தியும்  புரதமும்  சீமைக்கருவேல நெற்றில் இருக்கின்றன” என்றார்.

தொடர்புக்கு: ஒருங்கிணைப்பாளர்,
ஸ்காட் வேளாண் அறிவியல் மையம்,
முடிவைத்தானேந்தல் (அஞ்சல்), வாகைக்குளம்,
தூத்துக்குடி மாவட்டம் - 628 102
தொலைபேசி: 0461 2269306

மண்ணுக்கேற்ற பயிர்களைப் பரிந்துரைக்கிறோம்!

கே.வி.கே.யின் செயல்பாடுகள் பற்றி மனையியல் விரிவாக்கத் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி, “இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு, வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டுதல், காளானை மதிப்புக் கூட்டுதல், சிறுதானியங்களில் சத்துமாவு தயார் செய்தல், பலகாரங்கள் தயாரித்தல், பனங்கிழங்கு பொடி தயாரித்தல், அப்பொடியில் பலகாரங்கள் தயாரித்தல், முருங்கை இலைப் பொடி தயாரித்தல், முருங்கைக்காய் ஊறுகாய் தயாரித்தல், பன்னீர் தயாரித்தல்... எனப் பல செயல்விளக்கப் பயிற்சிகளை அளித்து வருகிறோம். மேலும், தென்னை மரமேறும் பயிற்சி, விவசாயத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். இதுவரை நான்கு உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுத் துவங்கப்பட்டுள்ளன” என்றார்.

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

இந்த ஆராய்ச்சி மைய வளாகத்தில் மாடித்தோட்டம், அசோலா வளர்ப்பு, கோழிப்பண்ணை, மரக்கன்றுகள் உற்பத்தி போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசிய உழவியல் துறைத் தொழில்நுட்ப வல்லுநர் முருகன், “விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது என்பதற்காக, இந்த மாதிரிப்பண்ணைகளை அமைத்துள்ளோம். இவற்றின்மூலம் நேரடியாகச் செயல் விளக்கங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு மானாவாரி விவசாயிகள் இருப்பதால், அவர்களுக்கு மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லிக்கொடுக்கிறோம். எங்கள் மையத்தில் உள்ள ஆய்வகத்தில் மண், தண்ணீர் போன்றவற்றைச் சோதனை செய்துகொள்ளலாம். சோதனை முடிவின்படி அந்த மண்ணுக்கேற்ற பயிர்களையும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

கோ.எஃப்.எஸ்-29, சூபாபுல், கிளரிசீடியா, கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், வேலிமசால், அகத்தி, முருங்கைப் போன்ற கால்நடைத்தீவன விதைகள் மற்றும் விதைக்கரணைகள், காய்கறி விதைகள், பழமரக்கன்றுகள் ஆகியவற்றையும் எங்கள் நர்சரி மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம்.

பூஞ்சணக்கொல்லிகள், உயிர் உரங்கள் ஆகியவற்றையும் எங்கள் மையத்தில் தயாரித்து விற்பனை செய்கிறோம்” என்றார்.

கால்நடைத் தீவனமாகச் சீமைக்கருவேல்!

சீமைக்கருவேல் மர நெற்றுகளைப் பொடியாக்கி விற்பனை செய்து வருகிறார், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ். அவரிடம் பேசியபோது, “நாலு வருஷத்துக்கு முன்னாடி ஸ்காட் கே.வி.கே.வில் நடந்த, ‘கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை’ங்கிற பயிற்சிக்குப் போயிருந்தேன். அதுலதான், சீமைக்கருவேல நெத்து பத்தித் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கடுத்து, 2014-ம் வருஷம் சின்ன அரவை மிஷினை வாங்கிச் சீமைக்கருவேல நெத்தை அரைச்சு பவுடராக்க ஆரம்பிச்சேன். இதுக்கு நல்ல விற்பனை வாய்ப்பும் இருக்கு.

பலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே!

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாசங்கள்ல சீமைக்கருவேல மரத்துல காய்கள் அதிகமாகக் கிடைக்கும். காய்ச்சு முத்தின பிறகு தானா கீழ விழுகிற நெத்துகளைத்தான் பவுடருக்குப் பயன்படுத்தணும். கிராமங்கள்ல இருக்கிற சிறுவர்கள், பெண்கள், வயசானவர்கள்னு நிறைய பேர் எனக்கு நெத்தைச் சேகரிச்சுக் கொடுக்கிறாங்க. அவங்ககிட்ட ஒரு கிலோ நெத்து ஆறு ரூபாய்னு வாங்கிச் சேமிச்சு வெச்சுக்குவேன்.

நெத்துகளைப் பன்னிரண்டு மணியில் இருந்து ரெண்டு மணி வரை உச்சி வெயில்ல காய வெச்சு, சூடா இருக்கும்போதே அரைக்கணும். அரைச்ச பவுடரை 6 மணி நேரம் நிழல்ல காயவெச்சுப் பாக்கெட் போட்டுடுவோம். ஒரு கிலோ நெத்தைக் காய வெச்சு அரைக்கிறப்போ 750 கிராம் பவுடர் கிடைக்கும். இதை அடர்த்தீவனத்தோட கலந்து கொடுக்கலாம். நான், ஒரு கிலோ சீமைக்கருவேல பவுடரை 16 ரூபாய்னு விற்பனை செய்றேன். நிறைய பேர் வாங்கிப் பயன்படுத்துறாங்க. சீமைக்கருவேல நெத்தை அப்படியே ஆடு மாடுகளுக்குக் கொடுக்காம, அரைச்சுக் கொடுக்கும்போது இந்த மரங்கள் அதிகமாகப் பரவுறதும் தடுக்கப்படுது” என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: 94423 06346.