Published:Updated:

மருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்!

மருத்துவ  குணம்கொண்ட மணிப்பூர்  நெல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்!

ஆராய்ச்சிஆர்.குமரேசன், துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

'ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலங்களையே ஆராய்ச்சி மேடையாக்கி, பல்வேறு உத்திகளைக் கையாண்டு பார்க்க வேண்டும்’ என்று சொல்லி வந்தார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். இதை வலியுறுத்தி ‘ஆராய்ச்சி மேடை’ என்ற பெயரில் ‘பசுமை விகடன்’ இதழில் தொடர் கட்டுரைகளையும் எழுதினார். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் பலர்  தங்களுடைய நிலங்களில் பயிர் சோதனைகளைச் செய்து பார்த்து வருகிறார்கள். அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான் ‘முன்னோடி இயற்கை விவசாயி’ ஏகாம்பரம்.

மருத்துவ  குணம்கொண்ட மணிப்பூர்  நெல்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். நம்மாழ்வாரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்களில் இவரும் ஒருவர். தற்போது இயற்கை விவசாயப் பயிற்சிகளை வழங்கிவருகிறார். தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பல

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மருத்துவ  குணம்கொண்ட மணிப்பூர்  நெல்!

இயற்கை விவசாயப் பண்ணைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இவ்வளவு பணிகளுக்கிடையிலும் தன் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்துவரும் ஏகாம்பரம், அருகிவரும் பாரம்பர்ய நெல் ரகங்கள் மற்றும் பிற மாநிலப் பாரம்பர்ய ரகங்கள் ஆகியவற்றைப் பரவலாக்கும் பணிகளையும் செய்துவருகிறார். அந்த வகையில், மணிப்பூர் மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் சக் ஹவோ அமுபி (chak-hao amubi) என்ற நெல் ரகத்தைத் தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்.

ஒரு பிற்பகல் வேளையில் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருந்த ஏகாம்பரத்தைச் சந்தித்தோம். “அப்பா, தாத்தானு பரம்பரையா விவசாயம் செய்துக்கிட்டு வர்றோம். போர்வெல் பாசனம்தான். பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்ச உடனே, ‘உயிர்ச்சூழல் சான்றிதழ் கல்வி’ முடிச்சு, ‘லீசா விவசாயக் கூட்டமைப்பு’ல சேர்ந்தேன். அங்க ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். முழுக்க இயற்கை விவசாயம் சார்ந்த வேலைதான். அப்புறம் நம்மாழ்வார் ஐயாவோடு பயணம் செஞ்சேன். அவரோட ‘தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்க’த்துல பயிற்சியாளரா இருந்தேன். சுனாமி வந்தபோது பாதிக்கப்பட்ட பகுதிகள்ல ஐயாவோடு இணஞ்சு மீட்புப் பணிகள்ல ஈடுபட்டேன். அங்கேயே நாலரை வருஷம் ஓடிடுச்சு.

சென்னை லயோலா கல்லூரி சார்பா இயற்கை வேளாண் பயிற்சி கொடுத்துட்டு இருந்த சமயத்துலதான், நந்தகுமார் ஐ.ஏ.எஸ் அவர்கள சந்திச்சேன். அப்போ திருப்பூர் முகாம் அலுவலகத்துல மாணவர்களுக்கு விவசாயப் பயிற்சி கொடுத்திட்டு இருந்தோம். அப்புறம் கலெக்டரோட நிலத்துல இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தோம். அவர், ராமநாதபுரத்துக்கு மாற்றலாகிட்டார். அந்த மாவட்டத்துலயும், விவசாயிகளுக்கு உபயோகப்படுற பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தாரு. அதுல ஒரு பகுதியா, அந்த மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்திட்டிருந்தேன். இப்போதான் முழுநேரமா என் நிலத்துல விவசாயம் செஞ்சுட்டிருக்கேன்” என்று சொன்ன ஏகாம்பரம் தொடர்ந்தார்... “கடந்த ரெண்டு வருஷமா கடுமையான வறட்சி. அதனால, நல்ல விளைச்சல் இல்ல. இந்த வருஷம் எங்க பகுதியில ஓரளவு மழை பெஞ்சதால பயிர்கள் எல்லாம் நல்லாவே வளர்ந்து நிக்குது.

மருத்துவ  குணம்கொண்ட மணிப்பூர்  நெல்!

நம்மாழ்வார் ஐயா, ‘பாரம்பர்ய நெல் ரகங்கள்தான் நமக்கு முக்கியம்’னு அடிக்கடி சொல்வார். அதனாலதான் என் நிலத்துல அதிகமா பாரம்பர்ய நெல் ரகங்களை விதைச்சிருக்கேன்.

இயற்கை விவசாயப் பயிற்சி கொடுக்கிறதுக்காக மணிப்பூர் போயிருந்தப்போ, நம்ம பாரம்பர்ய ரகங்களைப் பத்திச் சொல்லிட்டு இருந்தேன். அப்போ, அந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருத்தர், ‘எங்க ஊர்லயும் பாரம்பர்ய நெல் ரகங்கள் நிறைய இருக்கு. அதுல ஒரு ரகம், புற்றுநோய்க்கு நல்ல மருந்து’னு சொன்னார். உடனே அந்த நெல்லைப் பயிர் பண்ணிப் பார்ப்போம்னு தோணுச்சு.

அதோட விதை தேடி அலைஞ்சப்போ, 200 கிராம் விதை நெல் மட்டும்தான் கிடைச்சது. அதை வாங்கிட்டு வந்து பத்து சென்ட் நிலத்துல விதைச்சேன். அதுல 150 கிலோ நெல் கிடைச்சது. அதை, முப்பது சென்ட் நிலத்துல விதைச்சேன். அதுதான் இப்போ அறுவடைக்குத் தயாரா இருக்கு. நம்ம சீதோஷ்ண நிலையில இந்த ரகம் நல்லா விளையுது” என்ற ஏகாம்பரம் நிறைவாக,

“இது புற்றுநோய்க்கு நிவாரணம் கொடுக்கும்னும், நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கும்னும் சொல்றாங்க. அதுபத்தி மணிப்பூர் மாநிலத்துல தகவல்களைத் திரட்டிட்டு இருக்கேன். எப்படியிருந்தாலும் நம்ம பாரம்பர்ய நெல் ரகங்கள் மாதிரி, இதுலயும் மருத்துவ குணங்கள் கட்டாயம் இருக்கும்.  அதனால, இதை அதிகமா சாகுபடி செஞ்சு விதைநெல்லைப் பரப்பலாம்னு இருக்கேன்” என்று சொல்லிய ஏகாம்பரம், “நம்முடைய சீதோஷ்ண நிலையில் மணிப்பூர் ரக நெல்லைச் சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கர் நிலத்தில் 1,500 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும். முப்பது சென்ட் நிலத்தில் அறுவடை செய்யும்போது 500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். முழுவதையும் விதைநெல்லா மட்டுமே விற்பனை செய்யலாம்னு இருக்கேன். மணிப்பூரில் இந்த ரக அரிசி கிலோ 90 ரூபாய்னு விற்பனையாகுது” என்று சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு,
ஏகாம்பரம்,
செல்போன்: 72007 73224

கலவைக் கரைசல்!

3 கிலோ சாம்பல், 2 கிலோ வேப்பங்கொட்டை, 2 கிலோ ஆட்டுச்சாணம், 50 கிராம் வசம்பு, 50 கிராம் பெருங்காயம், 1 கிலோ மிளகாய்த்தூள், 200 கிராம் பூண்டு, 200 கிராம் இஞ்சி, 500 கிராம் வெங்காயம் 5 மடல் சோற்றுக்கற்றாழை ஆகியவற்றைக் கலந்து இடித்து 15 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் போட்டு 2 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி, பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

ஊட்டம் ஏற்றப்பட்ட தொழுவுரம்

275 கிலோ மட்கிய சாணம், 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ தேங்காய்ப் பிண்ணாக்கு, 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 250 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையின்மீது பத்து லிட்டர் அமுதக்கரைசலைத் தெளித்துப் பத்து நாள்கள் வைத்திருந்தால் ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம் தயாராகிவிடும். இது சிறந்த அடியுரமாகவும் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும்!

மணிப்பூர் கறுப்பு ரக நெல் சாகுபடி செய்யும் விதம் குறித்து ஏகாம்பரம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

மணிப்பூர் கறுப்பு நெல் ரகத்தின் வயது 110 நாள்கள். இது உவர் நிலங்கள் தவிர, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும். தேர்வுசெய்த ஒரு ஏக்கர் நிலத்தில் தண்ணீர் கட்டிச் சேற்றுழவு செய்ய வேண்டும். பிறகு, 650 கிலோ அளவு ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தைப் பரப்பி ஓர் உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து, வயல் முழுவதும் இலைதழைகளைக் கொட்டி மிதித்து விட வேண்டும். பிறகு, வயலைச் சமப்படுத்தி, விதைநேர்த்தி செய்த மணிப்பூர் கறுப்பு ரக விதைநெல்லை நேரடியாக விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு முப்பது கிலோ விதைநெல் தேவை. விதைத்த 7-ம் நாள் முளைப்பு எடுக்கும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்து வர வேண்டும். விதைத்த 20-ம் நாள் கைகளால் களைகளை அகற்றி 200 கிலோ ஊட்டம் ஏற்றப்பட்ட தொழுவுரத்தைப் பரவலாகத் தூவ வேண்டும். தொடர்ந்து 40-ம் நாள் இரண்டாவது முறை களை எடுத்து, 150 கிலோ ஊட்டம் ஏற்றப்பட்ட தொழுவுரத்தைப் பரவலாகத் தூவ வேண்டும்.

மருத்துவ  குணம்கொண்ட மணிப்பூர்  நெல்!

50-ம் நாள் 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 

60-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் கலவைக் கரைசலைக் (தயாரிப்பு முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது) கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால், பூச்சி மற்றும் நோய்தாக்குதல் இருக்காது. விதைத்த 80-ம் நாளுக்குமேல், பால் பிடித்து 100-ம் நாளுக்குமேல் கதிர் முற்றத் தொடங்கும். 110-ம் நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.