Published:Updated:

உயிரைப் பறிக்கும் பூச்சிக்கொல்லி! கொந்தளிப்பில் விவசாயிகள்!

உயிரைப் பறிக்கும் பூச்சிக்கொல்லி!  கொந்தளிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உயிரைப் பறிக்கும் பூச்சிக்கொல்லி! கொந்தளிப்பில் விவசாயிகள்!

பிரச்னைஎம்.திலீபன், படம்: தி.ஹரிஹரசுதன்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலில் ரசாயனப் பூச்சிக்கொல்லியைத் தெளித்தபோது... ராஜா, செல்வம், ராமலிங்கம், அர்ஜூனன் ஆகிய நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துக் கடந்த 10.12.17-ம் தேயிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் எழுதியிருந்தோம்.

இந்நிலையில், ‘பூச்சிக்கொல்லிகளால் பாதிப்படைந்து இறந்துபோன விவசாயிகளைப் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தா கொச்சைப்படுத்துகிறார்’ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரைக் கண்டித்துக் கடந்த டிசம்பர் 20-ம் தேதி பெரம்பலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் (பி.யு.சி.எல்) மாநில இணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உயிரைப் பறிக்கும் பூச்சிக்கொல்லி!  கொந்தளிப்பில் விவசாயிகள்!

கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ‘‘அரசு சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுப் பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில்
பி.டி பருத்தி மற்றும் பூச்சிக்கொல்லிகளை நிரந்தரமாகத் தடை செய்யவேண்டும்.’’ என்றார்.

‘தமிழ்காடு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்கருப்பையா பேசும்போது, “விவசாயிகள் இறப்பு விஷயத்தில் ஆட்சியரின் அலட்சியமான செயல்பாடு வேதனையளிக்கிறது. இப்படி, விவசாயிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில், ஓவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இறக்கின்றனர். ஆனால், அரசு சார்பில் இந்த இறப்பு விவரங்கள் மறைக்கப்படுகின்றன. பூச்சிக்கொல்லியால், தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் இறந்து இவ்வளவு நாள்கள் ஆகியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆள்பவர்களுக்கு விவசாயிகள் குறித்து அக்கறையே இல்லை” என்று வருத்தப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் பேசினோம். “பூச்சிக்கொல்லி தெளிப்பது குறித்து விவசாயிகளுக்குப் போதிய விழிப்பு உணர்வு இல்லை. இதுகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி நிறுவனம் நடத்திய கூட்டத்தில்தான் நான் கலந்துகொண்டேன். அக்கூட்டத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் என்ன தவறு இருக்கிறது? யாருக்கும் ஆதரவாகச் செயல்படவேண்டிய அவசியம் எனக்கில்லை. விவசாயிகள் இறப்பு விஷயத்தை அதிகாரிகளைக்கொண்டு ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் எனக்குத் தகவல் சொல்லுங்கள்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz