Published:Updated:

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

“வேலையில இருந்து ‘ரிட்டையர்டு’ ஆனதுக்கப்புறம் எங்க மனசுல இருந்த வெறுமையைப் போக்கி

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

இன்னமும் எங்களை ‘ஆக்டிவா’ இருக்க வெச்சிருக்குறது இயற்கை விவசாயம்தான். அதுக்கு வழி காட்டிட்டினது ‘பசுமை விகடன்’ புத்தகம்தான்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள் மதுரை மாநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவருடைய மனைவி பொன்னுத்தாய் ஆகியோர்.

மதுரை மாவட்டம், திருவாளை விலக்கிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடந்தைகுளம் எனும் கிராமத்தில், இவர்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களின் பண்ணை பெயர் ‘பாபுஜி இயற்கைப் பண்ணை’. நாங்கள் சந்திக்க வருகிறோம் என்று முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்ததால், கணவன், மனைவி இருவரும் நம்மை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அவர்களுடைய பண்ணையை அடைந்தவுடன் இளநீர் கொடுத்து உபசரித்துப் பேச ஆரம்பித்தார் பாலசுப்பிரமணியன். “எனக்குச் சொந்த ஊர் சிவகாசி. அப்பா லேத் ஒர்க்‌ஷாப் வெச்சிருந்தாங்க. நான் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் படிச்சு, அங்கேயே பேராசிரியர் வேலையில் சேர்ந்து 34 வருஷம் பணி செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டேன். என் மனைவி, அரசு மேல்நிலைப்பள்ளியில தலைமையாசிரியையா இருந்தாங்க. அவங்களும் இப்போ ஓய்வு பெற்றுட்டாங்க. மனைவியோட சொந்த ஊர் மதுரை. அதனால, ரெண்டு பேரும் இங்க செட்டிலாகிட்டோம். என்னோட நண்பர் ஆறுமுகம்ங்கிறவர், விருதுநகர்ல இயற்கை விவசாயம் செஞ்சுட்டிருக்கார். அதைப் பார்த்துதான் எனக்கும் விவசாய ஆசை வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

2015-ம் வருஷம் முதன்முதலா விவசாயத்தை ஆரம்பிச்சோம். வெறும் குப்பையை மட்டும் போட்டு ஒரு ஏக்கர் நிலத்துல ‘கோ-45’ ரக நெல் போட்டோம். எந்தப் பராமரிப்பும் இடுபொருளும் கொடுக்காம மொத்தம் 36 மூட்டை நெல் கிடைச்சுது. உடனே எங்களுக்கு ஒரு நப்பாசை. ‘உரம் போடாமலே 36 மூட்டைன்னா, உரம் போட்டா அதிக மகசூல் கிடைக்கும்’னு ஆசைப்பட்டு, அடுத்த போகம் அதே நெல்லை விதைச்சு உரக்கடைக்காரர் சொன்ன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துனோம். ஆனா, அந்த முறை 19 மூட்டை நெல்தான் கிடைச்சுது.

உடனே நாங்க பயன்படுத்தின உரம், பூச்சிக்கொல்லி மேல சந்தேகப்பட்டு... திருத்தங்கல் என்கிற ஊர்ல இருக்குற ஒரு உரக்கடைக்காரர்கிட்ட போய், ‘நல்ல உரம், பூச்சிக்கொல்லியைப் பரிந்துரை பண்ணுங்க’னு கேட்டோம். அவர், ‘நான் உரம், பூச்சிக்கொல்லி விற்பனையை விட்டு மூணு வருஷமாகுது. ரசாயன உரத்தைப் போட்டா மண் மலடாகிப்போயிடும். பூச்சிக்கொல்லியெல்லாம் தெளிச்சு பூச்சிகளை ஒழிக்கவே முடியாது. அதனால, இயற்கை விவசாயத்துக்கு மாறிடுங்க. இயற்கை விவசாயத்துக்கான வழிகாட்டி, பசுமைவிகடன் புத்தகம்தான்’னு சொல்லி அவர் வெச்சிருந்த புத்தகத்தைக் காட்டினார். அவர்கிட்ட இருந்து கிளம்புனதும் முதல் வேலையா ஒரு கடையில பசுமை விகடன் புத்தகத்தை வாங்கினோம். அதுல நிறைய விஷயம் எங்களுக்குப் பிடிச்சிருக்கவும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சோம். அடுத்து ‘பசுமை ஒலி’ மூலமா இடுபொருள்கள், பூச்சிவிரட்டிகள் தயாரிக்கக் கத்துக்கிட்டோம். பசுமை விகடன்ல வெளி வர்ற மகசூல் கட்டுரைகளைப் படிச்சபிறகு, எங்களுக்கும் இயற்கை விவசாயத்துல ஜெயிக்க முடியும்னு நம்பிக்கை பிறந்தது” என்ற பாலசுப்பிரமணியன், தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

“மொத்தம் மூணு ஏக்கர் இருக்கு. இது வண்டல் கலந்த களிமண் பூமி. கரும்புல வேலையாள்கள் அதிகம் தேவைப்படாதுனு முடிவு பண்ணி, ஒரு ஏக்கர் நிலத்துல கரும்பு போட்டோம். முதல் அறுவடை முடிஞ்சு மறுதாம்பு வளர்ந்துட்டுருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல வாழை போட்டு அறுவடை முடிஞ்சது. அதுல வந்த மறுதாம்பு வாழையில் இப்போ குலை போட ஆரம்பிச்சுருக்கு. போனவருஷம் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்யலாம்னு விதை தேடி அலைஞ்சோம், கிடைக்கலை. அதனால,

‘எல்.எல்.ஆர்’ ஒட்டு ரக நெல்லை ஒரு ஏக்கர் நிலத்துல போட்டிருக்கோம். அது இப்போதான் கதிர் பிடிச்சுட்டுருக்கு. அங்கங்க தென்னை மரங்களையும் வெச்சிருக்கோம். மொத்தம் 10 தென்னை மரங்கள் இருக்கு” என்றார்.

அவரைத் தொடர்ந்து மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார் பொன்னுத்தாய். “இயற்கையில விளைஞ்ச கரும்பு நல்ல தடிமனா இருந்துச்சு. பக்கத்து நில விவசாயிகள்கூடப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. கரும்பு நல்லா இருந்ததால, போன முறை வெல்லம் காய்ச்சுறவங்க நேரடியா வந்து விலைபேசி எடுத்துக்கிட்டாங்க. மொத்தம் 38.5 டன் (38,500 கிலோ) கரும்பு கிடைச்சது. ஒரு டன் கரும்புக்கு 3,250 ரூபாய்னு விலைபேசி எடுத்துக்கிட்டாங்க. அரவைத்திறன் அதிகமா இருந்ததால இந்தக் கூடுதல் விலை கிடைச்சது. மொத்தம் 38.5 டன் கரும்பு விற்பனை மூலமா 1,25,125 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல எல்லாச் செலவுகளும் சேர்த்து 27,000 ரூபாய் போக 98,125 ரூபாய் லாபமா நின்னது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!
ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

ரஸ்தாளி, சக்கை, நாடன்னு கலந்து மொத்தம் 600 வாழைக்கன்னுகளை நட்டோம். அதுல 325 ரஸ்தாளி, 150 சக்கை, 25 நாடன்னு 500 மரங்கள்தான் தேறி வந்துச்சு. அதெல்லாத்தையும் விற்பனை செஞ்சது மூலமா 1,23,000 ரூபாய் கிடைச்சது. வாழைப்பூ விற்பனை மூலமா 2,500 ரூபாய் கிடைச்சது. மொத்தமா வாழையில கிடைச்ச வருமானம் 1,25,500 ரூபாய். இதுல 40,000 ரூபாய் செலவு போக 85,500 ரூபாய் லாபமா கிடைச்சது” என்றார்.

நிறைவாகப் பேசிய பாலசுப்பிரமணியன்-பொன்னுத்தாய் தம்பதி, “இப்போ மறுதாம்பு கரும்பும் வாழையும் நல்லா செழிப்பா வளர்ந்துட்டிருக்கு. வாழைத்தோப்புல 100 செவ்வாழைக் கன்னுகளை நடலாம்னு இருக்கோம். நெல்லையும் இயற்கை முறையில நல்லா பராமரிக்கிறதால, அதிக மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறோம். இந்தப் போகம் கரும்பு அறுவடை செஞ்சப்புறம் நாங்களே வெல்லம் காய்ச்சலாம்னு இருக்கோம். நாங்க ரெண்டு பேருமே ஆசிரியர்கள். ஆனா, எங்களுக்கு ஆசிரியர் பசுமை விகடன்தான்” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு, செல்போன்:
பொன்னுத்தாய்: 94431 10508
பாலசுப்பிரமணியன்: 94862 33727

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

கரும்பு மற்றும் வாழைச் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாலசுப்பிரமணியன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், ஒரு வார இடைவெளியில் 2 சால் உழவு செய்து... தலா 2 கிலோ அளவு தக்கைப்பூண்டு, சணப்பு விதைகளை விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அவற்றைப் பூ பூக்கும் சமயத்தில் அப்படியே மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு ஓர் உழவு செய்து 6 டன் அளவு மட்கிய குப்பையைச் சிதறவிட்டு, ஓர் உழவு செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து, நீளவாக்கில் பார் பிடிக்க வேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் சூடோமோனஸ், 500 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து, அக்கரைசலில் விதைக்கரணைகளை மூழ்க வைத்து எடுத்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

இரண்டு பார்களின் நடுவில், தொடர்ச்சியாக விதைக்கரணைகளை ஊன்ற வேண்டும் (இவர் கோ-32 ரகத்தைச் சாகுபடி செய்திருக்கிறார்). ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 2 டன் விதைக்கரணைகள் தேவை. தொடர்ந்து மண் காயாத அளவுக்குப் பாசனம் செய்து வர வேண்டும்.

விதைக்கரணைகளை ஊன்றிய 20-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை பாசன நீரில் 400 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்துவிட வேண்டும். அதேபோன்று 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 30-ம் நாளிலிருந்து 30 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும்.

50-ம் நாளுக்கு மேல் களை எடுக்க வேண்டும். 75-ம் நாளுக்கு மேல் மண் அணைத்து விட வேண்டும். விதைக்கரணைகளை ஊன்றிய 5, 7 மற்றும் 8-ம் மாதங்களில் தோகைகளை உரித்து மூடாக்காக இட வேண்டும்.

11-ம் மாதத்துக்கு மேல் கரும்பு அறுவடைக்கு வந்துவிடும். அறுவடை முடிந்த பிறகு மட்கிய குப்பை உரத்தைப் பரவலாக இட வேண்டும். பத்து லிட்டர் தண்ணீரில் 150 கிராம் சூடோமோனஸ், 150 கிராமம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து, கரும்பு வெட்டப்பட்ட தூர்ப்பகுதியில் தெளிக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி, மேலே சொன்னதுபோல இடுபொருள்களைக் கொடுத்துப் பராமரிக்க வேண்டும். மறுதாம்பு கரும்பு பத்து மாதங்களிலேயே அறுவடைக்கு வந்துவிடும்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

வாழை

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், ஒரு சால் உழவு செய்து 10 டன் மட்கிய குப்பையைக் கொட்டிப் பரப்பி, ஓர் உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு 8 அடி இடைவெளியில் சிறிய பள்ளம் பறித்து, விதைநேர்த்தி செய்த விதைக்கிழங்கை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் 600 முதல் 680 விதைக்கிழங்குகள் வரை விதைக்க முடியும். ஒவ்வொரு விதைக்கிழங்கும் ஒன்றரை கிலோ முதல் இரண்டு கிலோ வரை எடை இருக்க வேண்டும். விதைத்த 10-ம் நாள் கிழங்கைச்சுற்றி காற்றுப்புகாத அளவுக்கு இறுக்கமாக மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடவேண்டும். 25-வது நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி) மற்றும் மீன் அமினோ அமிலம் (10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி) ஆகியவற்றைச் சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும்.

100-ம் நாள் 150 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 50 கிலோ கடலைப்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு வாழையின் தூரிலும் 2 கைப்பிடி அளவு வைத்து மண் அணைக்க வேண்டும். அவ்வப்போது பக்கக்கன்றுகளைக் கழித்து மூடாக்காக இட்டு வர வேண்டும்.

மரங்களில் குலை தள்ள ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு குலைக்கும் நேர் எதிர் திசையில் திரட்சியாக உள்ள பக்கக்கன்றுகளை மட்டும் வளரவிட்டு மற்றவற்றைக் கழித்து விட வேண்டும். வாழை 10 மாதப்பயிராக இருக்கும்போது ஒவ்வொரு குலையின் நுனியில் இருந்தும் பூவை ஒடித்துவிட்டு, அந்த நுனித்தண்டில்... தண்டு மூழ்கும்படி, தலா 200 மில்லி பஞ்சகவ்யா நிரப்பிய பாலித்தீன் பையைக் கட்டிவிட வேண்டும். இதன் மூலம் திரட்சியான, சுவையான பழங்கள் உருவாகும். 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா பையை மாற்றி விட வேண்டும். காய்கள் பெரிதான பிறகு அறுவடை செய்யத் துவங்கலாம்.

வருமுன் காப்பதுபோல விதைத்த 2-ம் மாதத்திலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி எனக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வருவது நல்லது.

மீன் அமினோ அமிலம்

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன்கழிவு, 5 கிலோ நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை ஒவ்வோர் அடுக்காகப் போட்டுக் காற்றுப்புகாமல் 40 நாள்கள் மூடிவைக்க வேண்டும். பிறகு, பாத்திரத்தைத் திறந்து பார்த்தால், மீன் கழிவும், நாட்டுச்சர்க்கரையும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும். பழ வாசனை வரும். இதுதான் மீன் அமினோ அமிலம்.

அமுதக்கரைசல்

 பசுஞ்சாணம் - 10 கிலோ, நாட்டு மாட்டுச் சிறுநீர் - 10 லிட்டர், நாட்டுச்சர்க்கரை - 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்மில் போட்டுத் தண்ணீர் நிரப்பி, நிழலில் வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் கடிகாரச் சுற்றுபடி கலக்கி வந்தால், 2 நாள்களில் அமுதக்கரைசல் தயாராகி விடும்.

 மூலிகைப் பூச்சிவிரட்டி

வேப்பிலை, நொச்சி, ஆமணக்கு, எருக்கன், பப்பாளி, ஆவாரை, சோற்றுக்கற்றாழை ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்து, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். பாத்திரத்தில் 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் சேர்த்து, அனைத்து இலைகளும் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் நிரப்ப வேண்டும். பின் பாத்திரத்தை மூடி, அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைக்கவேண்டும். நன்கு கொதித்த பிறகு தீயை அணைத்துவிட்டு 30 நிமிடங்கள் ஆறவிட்டு, மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு 4 முறை ஆற வைத்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி, நிழலில் வைக்க வேண்டும். பாத்திரத்துக்குள் காற்றுப்புகாதவாறு மூடி, துணியால் இறுகக் கட்டி இரண்டு நாள்கள் வரை வைத்திருந்தால் பூச்சிவிரட்டித் தயார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism