Published:Updated:

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

மகசூல்த.ஜெயகுமார், படங்கள்: சி.ரவிக்குமார்

“என்கிட்ட அறுவடை செஞ்ச அறுபதாம் குறுவை நெல் கொஞ்சம் இருந்தது. எப்படி விற்பனை

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ, ‘பசுமை விகடன்’ புத்தகத்துல வர்ற பசுமைச் சந்தை ஞாபகத்துக்கு வந்துச்சு. உடனே எழுதி அனுப்பினேன். அது புத்தகத்துல பிரசுரமான அன்னிக்கே என்கிட்ட இருந்த மொத்த நெல்லையும் சிலபேர் வாங்கிக்கிட்டாங்க. அப்போதான் எனக்குப் பசுமை விகடனோட அருமையும் பாரம்பர்ய நெல்லுக்கான தேவையும் புரிஞ்சது. நான் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்றதுக்கே பசுமை விகடன்தான் காரணம்” என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வசித்து வரும் ராஜா, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கிலிமேடு எனும் கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார். பசுமை விகடன் பன்னிரெண்டாம் ஆண்டுச் சிறப்பிதழுக்காக ராஜாவைச் சந்தித்தோம்.

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

“நாங்க பரம்பரை விவசாயக்குடும்பம். அப்பாவுக்கு 40 ஏக்கர் நிலமும் ரைஸ்மில்லும் இருந்தது. நான் காலேஜ் முடிச்சுட்டு வேற பிசினஸ்கள்ல இறங்கிட்டேன். ஆனாலும், விவசாயத்தையும் விடாமப் பார்த்துட்டுருந்தேன். எங்கபகுதி நெல்லுக்குப் பெயர் பெற்றது. முப்போகமும் நெல் விளையுற பகுதி.

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

பொன்னேர் கட்டி உழுத பகுதிங்கிறதாலதான் பொன்னேரிங்கிற பேர் வந்ததுனு பெரியவங்க சொல்வாங்க. தமிழ்நாட்டுல முக்கியமான நெல்சந்தை இருக்குற செங்குன்றமும் பக்கத்துலதான் இருக்குது. இங்க விளையுற நெல்லில் இருந்து தயாரிக்கிற அரிசி முழுக்கச் சென்னைக்கும், ஆந்திராவுக்கும்தான் போகுது. பொதுவா எங்க பகுதியில ‘பாபட்லா’ங்கிற ‘பி.பி.டி’ ரக நெல்லைத்தான் அதிகம் சாகுபடி செய்றாங்க.

இப்போ எனக்கு மொத்தம் 13 ஏக்கர் நிலம் இருக்கு. ஓர் இடத்துல 5 ஏக்கர் நிலமும் இன்னோர் இடத்துல 8 ஏக்கர் நிலமும் இருக்கு. மொத்த நிலத்துலயும் நெல்லைத்தான் சாகுபடி செய்றேன். என்னோட நிலம், மணல் கலந்த களிமண் கொண்ட வளமான நிலம். ‘போர்வெல்’ பாசனம்தான் செய்றேன். பக்கத்துல சிங்கிலிமேடு ஏரி இருக்கிறதால போர்வெல்ல எப்பவும் தண்ணி கிடைக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் பசுமை விகடன் புத்தகத்தைக் கேள்விப்பட்டுப் படிக்க ஆரம்பிச்சேன். அதுலதான் இயற்கை விவசாய முறைகள் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். நிறைய தகவல்களைப் படிக்கவும், எனக்கு இயற்கை விவசாயம்மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. மொத்த நிலத்தையும் ஒரேயடியா மாத்த முடியலைங்கிறதால, படிப்படியா ரசாயன உரங்களைக் குறைச்சுக்கிட்டே வர்றேன். போன வருஷம், ஒரு ஏக்கர் நிலத்துல இயற்கை முறையில, அறுபதாம் குறுவை நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சேன். அதுல நல்ல விளைச்சல் கிடைச்சது. பசுமை விகடன் மூலமா விற்பனையும் சுலபமா இருந்துச்சு. அந்தத் தைரியத்துல, இந்த முறை 3 ஏக்கர் நிலத்துல ஆத்தூர் கிச்சலிச் சம்பா ரக நெல்லைச் சாகுபடி செஞ்சுருக்கேன். விதைநெல்லுக்கு ‘நெல்’ ஜெயராமன்தான் ஏற்பாடு செஞ்சு கொடுத்தார்” என்ற ராஜா, வயலில் வளர்ந்திருந்த பயிர்களைக் காட்டிக்கொண்டே பேசினார். 

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

“போன ஆகஸ்ட் 16-ம் தேதி நடவு செஞ்சேன். மண்புழு உரம், எருனுதான் பயன்படுத்தியிருக்கேன். என்கிட்ட மூணு மாடுகள் இருக்குறதால தொழுவுரத்துக்குப் பஞ்சமில்லை. மாடுகளோட சாணம், மூத்திரத்தை எடுத்து வெச்சு... ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சி விரட்டினு தயார் பண்ணிக்கிறேன். அதோட மீன் அமினோ அமிலத்தையும் தயாரிச்சு, பயிருக்குக் கொடுக்கிறேன். எல்லாத்தையும் பசுமை விகடன் மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சில இயற்கை விவசாயம் சம்பந்தமான வாட்ஸ் அப் குரூப்லயும் சந்தேகங்களை நிவர்த்தி செஞ்சுக்குவேன். கிச்சலிச்சம்பா ரக நாற்றுகளை நடவு செஞ்சு இப்போ 146 நாள்கள் ஆகுது. இன்னும் சில நாள்ல அறுவடை செஞ்சுடுவேன்” என்ற ராஜா அறுவடை செய்தபிறகு தொடர்பு கொள்வதாகச் சொல்லி விடைகொடுத்தார்.

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

சில நாள்கள் கழித்து நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய ராஜா, “கிச்சிலிச் சம்பாவுல ஒரு ஏக்கர் நிலத்துக்கு 25 மூட்டை அளவு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, 22 மூட்டை அளவுலதான் கிடைச்சுருக்கு. மொத்தம் 3 ஏக்கர் நிலத்துல 66 மூட்டை (5,082 கிலோ) நெல் கிடைச்சிருக்கு. இதை அரைச்சா 3 ஆயிரம் கிலோ அளவுக்கு அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 68 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன்.
சில நண்பர்கள் விதைநெல்லாவும் கேட்டுருக்காங்க. எப்படி விற்பனை செஞ்சாலும் 2,00,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அதுல நாற்றுல இருந்து அரிசியா அரைக்கிற வரை 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு போக, மூணு ஏக்கர் நிலத்துல எப்படியும் 1,50,000 ரூபாய்க்குமேல லாபமாகக் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். ஒரு ஏக்கருக்குனு பார்த்தா 50,000 ரூபாய் லாபமா நிக்கும். இயற்கை முறையில பாரம்பர்ய ரகங்களை விளைவிச்சு, அதை அரிசியா மாத்தி நேரடியா விற்பனை செய்றப்போதான் இந்த லாபம் சாத்தியம்” என்ற ராஜா நிறைவாக,

“இந்தப் பகுதியில முப்போகமும் நெல் போடுவாங்க. நானும் அப்படித்தான் சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். ஆனா, நிலத்துக்கு ஓய்வு தேவைனு பசுமை விகடன்ல படிச்சதுல இருந்து ரெண்டு போகம்தான் சாகுபடி செய்றேன். அதனால, நல்ல விளைச்சல் கிடைக்குது. இயற்கையைச் சிதைக்காம இயற்கை விவசாயம் செஞ்சா கண்டிப்பா விவசாயத்துல லாபம் எடுக்க முடியும்” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, ராஜா, செல்போன்: 96000 00376.

ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

‘பனை’ விதைத்த ‘பசுமை’

சிங்கிலிமேடு ஏரியில் பனைவிதைகளைப் பதித்து வளர்த்து வருகிறார் பொன்னேரியைச் சேர்ந்த தரணி. “அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். பசுமை விகடனை இரவல் வாங்கிட்டுப் போய்தான் படிப்பேன். அந்த ஆர்வத்துல நிறைய விவசாயச் செய்திகள தெரிஞ்சு வெச்சிருக்கேன்.

அதனால, இந்தப் பூமிக்கு ஏதாவது செய்யணும் உந்துதல் இருந்துச்சு. சிங்கிலிமேடு ஏரியைச் சுத்தி நிறைய பனைமரம் இருந்துச்சு. செங்கல் சூளைக்காரங்க அத வெட்டி, களவாடிட்டாங்க.

திரும்பவும் ஏரியைச் சுத்தி பனைமரங்கள பெருக்கணும்னு நினைச்சு போன வருஷம் ஆயிரம் பனை விதைகள விதைச்சேன். அதுல, இருநூறுதான் முளைச்சு வந்திருக்கு. ஆனா, இந்த எண்ணிக்கையே எனக்கு நம்பிக்கை கொடுக்குது. பசுமை விகடன்ல வர்ற ஒவ்வொரு கட்டுரையும், ஏதாவது ஒரு வகையில பயனுள்ளதா இருக்கு” என்றார் நெகிழ்ச்சியுடன்.

சுவை தரும் இலவம்பேடு..!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கும் மீஞ்சூருக்கும் இடையில் இருக்கிறது இலவம்பேடு. இந்த ஊரின் சுற்றுவட்டாரப் பகுதியில் அரைக்கும் அரிசிக்குத் தனிச்சுவை இருப்பதாக இந்தப் பகுதியினர் சிலாக்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய ராஜா, “அந்தக் காலத்துல இந்தப் பகுதியில் விளையும் அரிசியை இலவம்பேடு கொண்டுபோய்தான் அரைப்பாங்க. இங்கே அரைக்கும் புழுங்கல் அரிசிக்குத் தனிச்சுவையும் மணமும் இருக்கும்.

அரிசி ஆலைகள்ல இருக்கிற தொட்டியில் தண்ணி ஊத்தி, அதுல நெல்லைப் போட்டு ஊற வெச்சு, பிறகு காயவெச்சு அரைப்பாங்க. இந்தப் பகுதில கிடைக்கிற தண்ணி, லேசான உப்புத் தன்மையோடு இருக்கும். அதனால, இங்கே அரைக்கிற அரிசியில இயற்கையாகவே சுவை கலந்து வருது. இப்போகூட விஷயம் தெரிஞ்சவங்க அங்கே போய் அரைச்சிட்டு வர்றாங்க. மத்தபடி வர்த்தக ரீதியாகச் செங்குன்றத்துல இருக்கிற அரிசி ஆலைகள்லதான் அரைக்கிறாங்க” என்றார்.

நான் கற்ற பாடம்!

“முதல்முறையா மீன் அமினோ அமிலம் தயாரிக்கும்போது, கடையில வெள்ளையா கிடைக்கிற வெல்லத்தை வாங்கிட்டு வந்து மீன் கழிவுகளோடு கலந்துவெச்சேன். 21 நாள்கள் கழிச்சு பாத்தா, மீன் அமினோ அமிலத்துல பூஞ்சணம் பூத்து இருந்துச்சு.

விசாரிச்சப்போ, இப்போ வெல்லம் தயாரிக்கிறதுக்குச் சில இடங்கள்ல கெமிக்கல் கலக்கிறாங்க. அந்த மாதிரி வெல்லம் போட்டதுனால இந்த மாதிரி ஆயிருக்கும் என்றனர். அடுத்த முறை நாட்டுச் சர்க்கரையை வாங்கிட்டு வந்து, மீன் அமினோ அமிலம் தயாரிச்சேன். நல்லபடியா தயாராகி, நல்ல பலன் கொடுத்துச்சு” என்கிறார் ராஜா.