Published:Updated:

பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!

பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!

எச்சரிக்கைடவே புல், படம்: சி.சுரேஷ் பாபு

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குமேலாக, விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டும் இன்று வரை பூச்சிகளை ஒழிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். தொடு நஞ்சு, புகை நஞ்சு, ஊடுருவிப் பாயும் நஞ்சு, குடல் நஞ்சு, நரம்பு நஞ்சு என ஐந்து வகையான நஞ்சுகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியும் பூச்சிகளை ஒழிக்க முடியவில்லை. ஒவ்வொரு விதமான நஞ்சையும் எதிர்க்கும் திறன் பூச்சிகளுக்கு அதிகரித்துக்கொண்டே போவதுதான் இதற்குக் காரணம்.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சிகளின் எதிர்ப்புத்திறன் ஆகியவை குறித்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் பொதுத் தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டவே புல் என்பவர், ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட்டு... தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிடும் ‘வளரும் வேளாண்மை’ இதழில் (1982-ம் ஆண்டு நவம்பர் மாத இதழ்) வெளியிடப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக மணி அடித்தும் இன்னும் கேட்பவர்களின் காதுகளில் விழவில்லை என்பதுதான் கொடுமை. அந்தக் கட்டுரையின் சாராம்சம் இங்கே...

பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!

“பூச்சிக்கொல்லிகளை எதிர்த்து வாழக்கூடிய சக்தி படைத்த பூச்சி, சிலந்தி மற்றும் உண்ணிகள் பெருகியிருக்கின்றன. கடந்த 1978-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டுக்குள் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட 40 வகையான பூச்சிகள் அதிகரித்து உள்ளன’ என்று உணவு மற்றும் வேளாண்மைக்கழகம் தனது 1981-ம் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய பூச்சிக்கொல்லிக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூச்சி இனங்கள் 1954-ம் ஆண்டில் 25 வகைகள்தான் இருந்ததாகவும், 1980-ம் ஆண்டில் 432 வகைகளாக அதிகரித்து விட்டதாகவும் ஜப்பான் நாட்டின் கியோட்டோ மாகாணத்தில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!

பூச்சிக்கே வெற்றி

இந்தக் கருத்துகளைப் பார்க்கும்போது, மனிதனுக்கும் பூச்சிக்கும் நடக்கும் போராட்டத்தில் பூச்சியினம்தான் வெற்றி பெறுவதாகத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளிவந்த பைரித்திராய்டு பூச்சிக் கொல்லிகளைக்கூட எதிர்த்து வாழும் பூச்சிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் 166 சதவிகிதம் அதிகரித்துவிட்டன.

பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட பூச்சிகளில் சில உதாரணங்கள் சொல்லலாம். மலேசியாவில் காமரான் மேட்டுப் பிரதேசங்களில் பயிராகும் முட்டைக்கோஸைப் பச்சைப் புழுக்கள்
(Diamondback Moth Larvae) அதிகமாகத் தாக்குகின்றன. இச்சிறு புழுக்கள், எதிர்ப்புத்திறனை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த இரண்டு மூன்று பூச்சிக்கொல்லிகளைக் கலந்து வாரத்துக்கு மூன்று முறை தெளிக்க வேண்டியுள்ளது.

இதனால், சாகுபடிச் செலவில் மூன்றில் ஒரு பங்கு, பூச்சிக்கொல்லிகளுக்கே செலவாகிறது. இப்போது முட்டைக்கோஸ் சாகுபடி நஷ்டமடையக்கூடிய நிலையில் உள்ளது. இந்தப் புழுக்கள் சுமார் 12 வகையான பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளன. அண்மையில் வந்துள்ள ‘டெக்காமெத்திரின்’ என்ற செயற்கை பைரித்திராய்டு பூச்சிக்கொல்லியைக்கூட இப்புழுக்கள் எதிர்த்து வாழ்கின்றன.

பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!

பூச்சிகளின் விரோதிகள் அழிகின்றன

பூச்சிகளின் எதிர்ப்புத்திறனால் பயிர் ப்பாதுகாப்புச் செலவு கூடுவது மட்டுமல்ல... அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால், பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளின் இயற்கை எதிரிகளும் (பூச்சிகளை உண்டு வாழும் விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகள்) அழிக்கப்படுகின்றன.

இதனால், விவசாயத்துக்குத் தீமை செய்யும் பூச்சிகள் மேலும் அதிகரிக்கின்றன. இவ்விதம் அதிகரித்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மீண்டும் மீண்டும் அதிகப் பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இயற்கை எதிரிகள் அழிவதால், சில முக்கியமில்லாத பூச்சிகள்கூட, பெருமளவில் உற்பத்தியாகி, அதிகச் சேதத்தை உண்டாக்குகின்றன.

காலப்போக்கில் இந்தப் பூச்சிகளும் எதிர்ப்புத்திறன் பெற்றுவிடுகின்றன.  உலகத்தில் உற்பத்திசெய்யப்படும் பூச்சிக்கொல்லிகளில் சுமார் கால்பங்கு பருத்தியில்தான் பயன்படுத்தப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் 1950-ம் ஆண்டு பருத்தியில் பூச்சிக்கொல்லிகளைத் தீவிரமாக உபயோகிக்கத் தொடங்கினர். இதனால், 1960-ம் ஆண்டுக்குள் புதிய பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்க ஆரம்பித்தன. அதன் விளைவாகப் பெருமளவில் புதிய பூச்சிக்கொல்லிகள் விற்பனையாக ஆரம்பித்தன.

பொருளாதாரமே சீர்குலைந்தது

பூச்சிக்கொல்லிகளைக்கொண்டு ஒரு சில பூச்சியினங்களைக் கட்டுப்படுத்தினாலும், விரைவில் புதிய பூச்சிகள் அதிகமான சேதத்தை உண்டாக்க ஆரம்பித்தன. 1970-ம் ஆண்டின் முற்பகுதியில், விவசாயிகள் பருத்தியின் ஒரு பருவத்தில் மட்டும் 40 முறை பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சாகுபடிச் செலவில் பாதி அளவு பயிர்ப் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டது. இப்படிப் பருத்திச் சாகுபடி லாபகரமாக இல்லாததால், மெக்ஸிகோ நாட்டில் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பில் பருத்திச் சாகுபடி நிறுத்தப்பட்டுச் சமூகப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது.

பூச்சிக்கொல்லிகளை அதிகமாக உபயோகிப்பதால் தென் கிழக்கு ஆசியாவில், லட்சக்கணக்கான மக்களின் முக்கிய உணவான நெல்லின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையிலுள்ளது. பூச்சிக்கொல்லிகளை அதிகமாக உபயோகித்ததாலும், பசுமைப் புரட்சிச் சாகுபடி முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தாலும், முன்பு சாதாரணமாய் இருந்த புகையான் பூச்சி, இன்று முக்கியப் பூச்சியாகிவிட்டது.

வளரும் நாடுகளில் பூச்சிக்கொல்லிகளை அதிகமாக உபயோகிப்பதால் ஏராளமான பண்ணைத் தொழிலாளர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) 1972-ம் ஆண்டுக் கணிப்பின்படி... ஆண்டுக்கு 5 லட்சம் மனிதர்கள் பூச்சிக்கொல்லி விஷத்தால் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர்களில் 9,000 பேர் இறப்பதாகவும் தெரிய வருகிறது.  நம்மைப் போன்ற வளரும் நாடுகள் 15 சதவிகிதப் பூச்சிக்கொல்லிகளையே உபயோகிக்கின்றன. ஆனால், பூச்சிக்கொல்லிகளினால் பாதிக்கப் படுபவர்களில் 50% நபர்களும் இறப்பவர்களில் 75% நபர்களும் இந்நாடுகளில்தான் இருக்கின்றனர். 1972-ம் ஆண்டுக்குப் பிறகு பூச்சிக்கொல்லிகளின் உபயோகமும் 50% அளவு இந்நாடுகளில் அதிகரித்துள்ளது.

பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!

அறியாமையே காரணம்

வளரும் நாடுகளிலுள்ள மக்களுக்குப் படிப்பறிவில்லாமை, பூச்சிக்கொல்லிகளைப் பற்றிய சரியான விவரங்கள் இல்லாமை, சரியான பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமை ஆகிய காரணங்களால், ஆபத்துகள் அதிகரிக்கின்றன. இங்கு நிலவும் அதிக வெப்பம், ஊட்டச்சத்துக் குறைவு, நோய்கள் ஆகியவைதான் பூச்சிக்கொல்லிகளால் மனிதர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாவதற்கான காரணங்கள்.

அதிக நச்சுத்தன்மை உள்ள பெரும்பான்மையான பூச்சிக்கொல்லிகள், செல்வம் நிறைந்த பிற நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அந்நாடுகளில் உள்ளவர்கள் அவற்றைக் கவனமாகப் பாதுகாப்போடு உபயோகிக்கச் சட்டங்கள் வகுத்திருக்கிறார்கள்.

பூச்சிக்கொல்லிகளால், சுற்றுப்புறம் பாதிக்கப்படுதல், மீன் போன்ற உயிரினங்கள் சேதமடைதல், உணவுப்பொருள்களில் பூச்சிக்கொல்லியின் எஞ்சிய நச்சு தங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற உணவுப்பொருள்களை மேலை நாடுகள் இறக்குமதி செய்ய மறுப்பதால், வளரும் நாடுகளின் ஏற்றுமதியும் பொருளாதாரமும் நஷ்டமடைகின்றன.

கொசுக்கள் வளர்கின்றன

விவசாயத்தில் அதிகளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதால், மலேரியாவைப் பரப்பும் கொசுக்களும், பூச்சிக்கொல்லிகளுக்கான எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்கின்றன. மத்திய அமெரிக்காவில் பருத்தியில் பூச்சிக்கொல்லிகளைப் பெருமளவில் உபயோகித்ததால், கொசுக்களுக்கு எதிர்ப்புத்திறன் ஏற்பட்டது. மலேரியாவைப் பரப்பும் ‘அனோஃபீலஸ்’ (Anopheles) என்ற கொசுக்களில் 51 இனங்கள் உள்ளன. 1978-ம் ஆண்டுக் கணிப்பின்படி, இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லிக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவையாகக் காணப் பட்டன. உலகச் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் பால் என்பவர், 1976-ம் ஆண்டில், ‘நோய் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் பூச்சிக்கொல்லிகள் பெரிய தடையாக உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பூச்சிக்கொல்லிகளை நிறுத்திவிடலாமா?

இத்தனை இடர்பாடுகள் பூச்சிக் கொல்லிகளால் ஏற்பட்டாலும், அவைதான் பயிரையும் அதன் மூலம் கணக்கற்ற உயிர்களையும் காப்பதற்கு உதவுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. எனவே பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதை அறவே நிறுத்திவிடலாம் என்பது நடை முறைக்கு ஒவ்வாது. ஆகவே கெடுதி விளைவிக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்துவிட்டு, பாதுகாப்போடு அவற்றைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

பூச்சிக் கொல்லிகளின் செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க வேண்டும். ஏழை மக்களுக்குச் சிறந்த முறையில் பயனளித்து, பூச்சிக்கொல்லிகளினால் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் தீமைகளைக் குறைக்கும் வகையில் அவற்றைக் கையாள வேண்டும்.

பூச்சிக்கொல்லிகளால் விவசாயிகளுக்கு முழுப்பயன் கிடைக்க வேண்டும் என்றால், இரண்டு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவது, அவர்களுடைய பழைய அறிவுக்கும், அனுபவத்துக்கும், ஆற்றலுக்கும் பொருந்தும் வகையிலான பூச்சிக்கொல்லிகளை, ‘ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறை’களில் ஒன்றாக அமைக்க வேண்டும்.

இரண்டாவது, பூச்சிக்கொல்லிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்தல், பங்கிடுதல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் போன்றவற்றில் சரியான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் வளரும் நாடுகளின் சமூக பொருளாதார நிலைமைகளை அனுசரித்து வகுக்கப்பட வேண்டும்.

பூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்!

செல்வ நாடுகளுக்கும் பொறுப்புண்டு

ஏழை நாடுகளில் இத்தகைய சட்டதிட்டங்கள் கிடையாது. அப்படிப்பட்ட சட்டங்களை இயற்றத் தேவையான நிதி வசதியும் தொழில்நுட்பமும் அவர்களுக்குத் தெரியாது. மேலும், அவர்களுக்கு இதைவிட அதிமுக்கியமான பிரச்னைகள் பல உள்ளன. ஆகவே பணம் நிறைந்த நாடுகளும் பூச்சிக்கொல்லி நிறுவனங்களும் இந்த விஷயத்தில் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டுமே தற்போது, ஏற்றுமதி செய்யும் மருந்துகளுக்குச் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் உள்ளன. உலக வியாபாரத்தில் 60 சதவிகித அளவு பூச்சிக்கொல்லிகளை ஏற்றுமதி செய்கிற ஐரோப்பியப் பொருளாதாரச் சமூக நாடுகளில் (European Economic Countries) இத்தகைய கட்டுப்பாடுகளில்லை. ‘கையாள்பவர்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனும் காரணத்தால் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் எல்லாம் தாராளமாக வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதிச் சட்டங்கள் தேவை

தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது... சரியான முறையில் பெட்டியில் அடைத்து, தகுந்த அடையாளச் சீட்டுடன் பூச்சிக்கொல்லிகள் பற்றிய முழுவிவரங்களையும் இறக்குமதி செய்யும் நாடுகளுக்குத் தெரிவித்து, அந்நாடுகளின் அனுமதி பெற்ற பிறகே ஏற்றுமதி செய்யும் விதத்தில் சட்டங்கள் உருவாக வேண்டும். பூச்சிக்கொல்லி வகைகளைக் கையாள்வதில் சட்டத் திட்டங்களில்லாத நாடுகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். மேலும் பூச்சிக்கொல்லிகளை அடையாளச் சீட்டுடன் சரியான முறையில் வழங்கவும், விற்பனை செய்யவும், சர்வதேச ரீதியில் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இவை தெரிந்தும்கூட, இன்னும் பொறுப்பில்லாத முறையில் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி, பின்தங்கிய நாடுகளில், தவறான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. பெரும்பாலான அடையாளச் சீட்டுகளில் உபயோகிக்கும் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள், உபயோகப்படுத்தும் மக்களின் தாய் மொழியில் தரப்படுவதில்லை. பல பூச்சிக்கொல்லிகளைப் ‘பாதுகாப்பானவை’ எனத் தவறாக விளம்பரம் செய்வதும், சில பூச்சிக்கொல்லிகளின் தீமை பயக்கும் விளைவுகளைப் பற்றித் தெரிவிக்காமல், ‘அதிக லாபத்தைக் கொடுக்கும்’ என்றும் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதும் நடைமுறையில் உள்ளன.

இப்படிப்பட்ட தவறான வழி முறைகளைச் சரி செய்ய, ஐக்கிய நாடுகள் சபை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், விவரமான செயல்முறைத் திட்டங்களைத் தயாரித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.