Published:Updated:

ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின் ஒருங்கிணைந்த பண்ணை!

ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின்  ஒருங்கிணைந்த பண்ணை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின் ஒருங்கிணைந்த பண்ணை!

பண்ணையம்துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

‘பசுமை விகடன்’ 2007-ம் ஆண்டு வெளியான முதல் இதழில், ‘ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்! பாசியில்

ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின்  ஒருங்கிணைந்த பண்ணை!

கொழிக்குது பலன்’ என்ற தலைப்பில்... அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை மக்கள், ‘ஸ்பைருலினா’ எனும் சுருள்பாசி வளர்ப்பது பற்றி எழுதியிருந்தோம். அப்போது ஒரே ஒரு தொட்டியில் மட்டும் வளர்த்து வந்த அவர்கள், தற்போது அதிக எண்ணிக்கையிலான தொட்டிகளில் ஸ்பைருலினா வளர்த்து வருகிறார்கள். அதோடு, ஒருங்கிணைந்த பண்ணை அமைத்துக் காய்கறிச் சாகுபடி, கால்நடை வளர்ப்பு என்றும் கலக்கி வருகிறார்கள்.

சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் செல்லும் சாலையில் சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் நத்தம் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ‘ஈழ ஏதிலிய மறுவாழ்வுக் கழக வாழ்வாதாரப் பகுதித் திட்டம்’ மூலம் ஸ்பைருலினா வளர்த்து வருகிறார்கள். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்தின ராஜ சிங்கத்திடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின்  ஒருங்கிணைந்த பண்ணை!

“பதினஞ்சு ஆண்டுகளுக்கு முன்னாடி, எங்கள் முகாமில் இருந்த குழந்தைகள், பெண்கள் எல்லாரும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பரிசோதித்த டாக்டர் ஒருவர்தான், தினமும் ஸ்பைருலினா சாப்பிடச் சொன்னார். இதில் அதிகச் சத்துகள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில், 2 கிராம் ஸ்பைருலினா பொடியை எலுமிச்சைச் சாறு, தண்ணீர் கலந்து குடித்தால், உடல் பலம் பெறும். ஆனால், அந்தச் சமயத்தில் அதை அவ்வளவு விலை கொடுத்து வாங்க எங்களால் முடியவில்லை.

அந்த நேரத்துலதான் மதுரையைச் சேர்ந்த ‘ஆன்டனா டிரஸ்ட்’ எங்கள் முகாமில் இருந்த இளைஞர்களுக்கு ஸ்பைருலினா வளர்ப்பைக் கற்றுக் கொடுக்க முன்வந்தது. 8 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்தார்கள். 15 நாள்கள் பயிற்சி முடித்த பிறகு, அந்த மையத்தில் இருந்தே தாய்ப்பாசி வாங்கிவந்து வளர்க்க ஆரம்பித்தோம். ஆனால், முதல் முயற்சியில் சரியாக வரவில்லை. மீண்டும் தவறுகளைச் சரி செய்துவிட்டு வளர்க்க ஆரம்பித்தோம். நல்ல பலன் கிடைத்தது. அதிலிருந்து 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்த்து வருகிறோம்” என்ற ரத்தின ராஜ சிங்கம் நமக்குக் கொஞ்சம் ஸ்பைருலினா ஜூஸ் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

தொடர்ந்து பேசிய ரத்தின ராஜ சிங்கம், “எங்களுக்கு மொத்தம் 12 ஏக்கர் நிலமுண்டு. அதில் ஸ்பைருலினா கொடுத்த உற்சாகத்தை அடுத்து நாட்டுக்கோழி, ஆடு, மாடு, வாத்து, புறா போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறோம். கால்நடைகளுக்காக அசோலா, தீவனப்புல் ஆகியவற்றையும் சாகுபடி செய்கிறோம். இது மட்டுமில்லாமல், அரை ஏக்கர் நிலத்தில் காய்கறிகள், அரை ஏக்கர் நிலத்தில் தர்பூசணியையும் சாகுபடி செய்கிறோம். அடுத்து மீன் வளர்ப்பையும் ஆரம்பிக்க இருக்கிறோம். பண்ணையில் 20 பேர் வேலை செய்கிறார்கள். எங்கள் மக்களின் வாழ்வாதாரத்துக்காகத்தான் ஒருங்கிணைந்த பண்ணையை ஆரம்பித்துள்ளோம்.

ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின்  ஒருங்கிணைந்த பண்ணை!

250 நாட்டுக்கோழிகள் வளர்க்கிறோம். அவற்றுக்குக் காலையிலும் மாலையிலும் மக்காச்சோளம், அசோலா ஆகியவற்றை உணவாகக் கொடுக்கிறோம். அதிக நேரம் மேய்ச்சலுக்கு விடுவதால் தீவனச்செலவு குறைகிறது. வளர்ந்த நாட்டுக் கோழிகளையும் முட்டைகளையும் விற்பனை செய்வதன்மூலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

9 மாடுகள், 6 கன்றுகள் இருக்கின்றன. அவற்றில் நான்கு பசுக்கள் கறவையில் உள்ளன. மூன்று பசுக்கள் கறவை முடிந்த நிலையில் உள்ளன. மீதி இரண்டும் காளைகள். மாடுகள் மூலம் தினமும் சராசரியாக 30 லிட்டர் பால் கிடைக்கிறது. ஒரு லிட்டர் 50 ரூபாய் என விற்பனை செய்வதன் மூலமாக மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அசோலாவும் பசுந்தீவனமும் இங்கேயே உற்பத்தியாவதால், பெருமளவு தீவனச்செலவு குறைகிறது.

பரண் அமைத்து அதில் நாட்டு ஆடுகள் மற்றும் தலைச்சேரி ரக ஆடுகளை வளர்த்து வருகிறோம். மொத்தம் 40 ஆடுகள் உள்ளன. மாதம் 4 ஆடுகளை விற்பனை செய்து வருகிறோம். அதன்மூலம் மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைத்துவிடும்.

13 அடிக்கு 3 அடி அகலமுள்ள 13 தொட்டிகளில் அசோலா வளர்க்கிறோம். சுழற்சி முறையில் அசோலாவை அறுவடை செய்து, அனைத்து கால்நடைகளுக்கும் உணவாகக் கொடுக்கிறோம். புறாக்கள், வாத்துகளை அழகுக்காகத்தான் வளர்க்கிறோம். அவையும் அதிக எண்ணிக்கையில் பெருகும்போது ஒரு பகுதியை விற்பனை செய்துவிடுவோம். வாழை, காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை இயற்கை முறையில் விளைவித்து இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். இதன்மூலம் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது” என்ற ரத்தின ராஜ சிங்கம் அனைத்தையும் நமக்குச் சுற்றிக்காட்டினார்.

ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின்  ஒருங்கிணைந்த பண்ணை!

அடுத்து, ஸ்பைருலினா குறித்துப் பேசிய ரத்தின ராஜ சிங்கம், “மொத்தம் 18 தொட்டிகளில் ஸ்பைருலினா வளர்க்கிறோம். ஒரு தொட்டியில் ஒரு நாளைக்கு 15 கிலோ ஈரப்பாசி கிடைக்கும். அதைக் காய வைத்தால், ஒன்றரை கிலோ ஸ்பைருலினா கிடைக்கும். ஒரு தொட்டியில் ஒரு மாதத்துக்கு 45 கிலோ ஸ்பைருலினா கிடைக்கும். அதைப் பொடியாக்கி விற்பனை செய்தால் ஒரு கிலோவுக்கு 1,500 ரூபாய் விலை கிடைக்கும். அதையே மதிப்புக் கூட்டினால் கிலோ 3 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.

நாங்கள், ஸ்பைருலினாவை மாத்திரைகள், மிட்டாய்கள், குளியல் சோப், ஷாம்பூ, எண்ணெய், ஸ்னாக்ஸ்... எனப் பல வகைகளில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறோம். மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, ஒரு தொட்டியில் கிடைக்கும் ஸ்பைருலினா மூலமாகவே மாதம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின்  ஒருங்கிணைந்த பண்ணை!

தொட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வருமானம் கூடும். தற்போது, மிகக் குறைந்த அளவுக்கு யூரியா உள்ளிட்ட ரசாயனங்களை, பாசி வளர்ப்புக்குப் பயன்படுத்தி வருகிறோம். முற்றிலும், இயற்கை முறையில் பாசி வளர்ப்புக்கான ஆராய்ச்சிகளைப் பல அமைப்புகள் செய்துவருகின்றன. விரைவிலேயே, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி, பாசி வளர்க்கும் சூழ்நிலை உருவாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பசுமை விகடனில் எங்களைப் பற்றி வந்த செய்திமூலம், ஏராளமான மக்களின் தொடர்புகள் கிடைத்தன. அதன்மூலம் பலரும், நாங்கள் வளர்ச்சி அடைய இன்றளவும் ஆதரவு கொடுத்து உதவி வருகிறார்கள்” என்று நெகிழ்ந்த  ரத்தின ராஜ சிங்கம், நிறைவாக,

“இங்க வேலை பார்க்கிற 20 பேருக்குச் சம்பளம், பண்ணைப் பராமரிப்புச் செலவு ஆகியவை போக மீதம் கிடைக்கும் லாபத்தில் நாற்பது சதவிகிதத் தொகையை எங்கள் ஈழ ஏதிலிய(அகதிகள்) மக்களுக்குக் கொடுத்துவிடுவோம். ஸ்பைருலினா நல்ல லாபம் கொடுக்கக்கூடிய தொழிலாக இருக்கிறது. முறையாகக் கற்றுக் கொண்டு செய்தால் குறைவான பரப்பிலேயே அதிக லாபம் ஈட்ட முடியும்” என்றார்.

தொடர்புக்கு,


ரத்தின ராஜ சிங்கம்,
செல்போன்: 98840 00413.   

நல்ல தேவை உண்டு

ஸ்பைருலினாவுக்கான சந்தை வாய்ப்பு குறித்துப் பேசிய ரத்தின ராஜ சிங்கம், “ஸ்பைருலினாவுக்கு நல்ல தேவை உள்ளது. பொடி, ஜூஸ், அப்பளம், மாத்திரை, சோப், மிட்டாய், ஷாம்பூ, எண்ணெய் எனப் பல வழிகளிலும் இதை விற்பனை செய்யலாம். தவிர, தாய்ப்பாசியாகவும் விற்பனை செய்யலாம். சந்தையில் ஸ்பைருலினாவுக்கு மோகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாம் பண்ணை ஆரம்பிக்கும் இடத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சந்தை வாய்ப்புகளைத் தெரிந்துகொண்டு தொழிலில் இறங்குவது நல்லது” என்றார்.

தமிழகத்துக்கு ஏற்றது

ரத்தின ராஜ சிங்கம் ஸ்பைருலினா வளர்ப்பு குறித்துச் சொன்ன விஷயங்கள் இங்கே...

ஸ்பைருலினா வளர்க்க, 28 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை உள்ள பகுதிகள் ஏற்றவை. பொதுவாகத் தமிழ்நாட்டில் நிலவும் வெப்பநிலை இதற்கு ஏற்றது. வளர்க்கும் இடத்தின் சுற்றுப்புறச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும். காற்று மாசுபாடு, பூச்சிகள் அதிகம் வரும் இடமாக இருந்தால் பசுமைக்குடில் அமைக்க வேண்டியது அவசியம். அதேபோலத் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும். 10 அடி நீளம், 5 அடி அகலம், 1 அடி உயரத்தில் தொட்டி அமைக்க வேண்டும். இந்த அளவில் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பலாம். தற்போது நீள் வட்ட அளவிலும் தொட்டிகளை அமைத்து வருகிறார்கள். பிறகு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் தாய்ப்பாசி, 8 கிராம் சோடியம் பை கார்பனேட், 5 கிராம் சோடியம் குளோரைடு, 0.2 கிராம் யூரியா, 0.5 கிராம் பொட்டாசியம் சல்பேட், 0.16 கிராம் மெக்னீசியம் சல்பேட், 0.052 மில்லி பாஸ்பாரிக் அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தொட்டியில் இடவேண்டும்.

(தற்போது ரசாயன முறையில் சுருள்பாசியை உற்பத்தி செய்கிறோம். இயற்கை முறையில் பாசி வளர்ப்புக்கான ஆராய்ச்சிகளைப் பல அமைப்புகள் செய்துவருகின்றன. விரைவிலேயே, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி, பாசி வளர்க்கும் சூழ்நிலை உருவாகும்.)

தினமும் பகல் வேளையில் 15 நிமிடங்கள் தொட்டித் தண்ணீரைக் கலக்கிவிட வேண்டும். தாய்ப்பாசி விட்ட ஏழாம் நாளில் இருந்து பத்தாம் நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாய்ப்பாசி மாற்ற வேண்டும்.

காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் பாசியை அறுவடை செய்துவிட வேண்டும். தொட்டியில் உள்ள நீரை எடுத்துச் சல்லடையில் ஊற்றினால், பாசி தனியாகப் பிரிந்து தேங்கும். இந்த ஈரப்பாசியை மெல்லிய வலையில் வைத்து 50 கிலோ அளவு கொண்ட கல் மூலம் அழுத்தி நீரை வடித்து... இடியாப்பக் குழலில் இட்டுப் பிழிந்து பசுமைக்குடிலுக்குள் 5 மணி நேரம் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு, தூளாக்கி பாக்கெட்டில் அடைக்க வேண்டும்.”

சத்துகள் நிறைந்த சுருள்பாசி!

சயனோ பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த சுருள்பாசியான ஸ்பைருலினா, நன்னீரில் மிதந்து வாழும் தன்மைகொண்ட நீலப்பச்சைப் பாசி. இது மனிதர்கள் தோன்றுவதற்கு 350 கோடி ஆண்டுகளுக்கே முன்பே தோன்றிய நுண்ணுயிரி. 1965-ம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் கடுமையான பஞ்சம் நிலவியது. பெல்ஜியத்திலிருந்து வந்த ஒரு குழு ஆப்பிரிக்காவில் ஆய்வில் ஈடுபட்டபோது, சார்டு என்ற பகுதியில் வசித்த மக்கள் மட்டும், பஞ்சத்தால் உடல் நலிவடையாமல் ஆரோக்கியமாக இருந்துள்ளனர்.

அதுகுறித்த ஆய்வு செய்தபோது, அவர்கள் அருகில் இருந்த ஏரியில் படர்ந்து கிடந்த ஸ்பைருலினாவை உண்டு வந்தது தெரியவந்தது. அதன் பிறகுதான் அது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், இதைத்தான் உணவாக உட்கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபை, ஸ்பைருலினாவால் மட்டுமே சத்துக்குறைபாட்டை முழுமையாக ஒழிக்க முடியும் எனக் கருத்து தெரிவித்துள்ளது. அதனால், எதிர்காலத்தில் ஸ்பைருலினாவுக்கு அமோக வரவேற்பு கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு கிலோ ஸ்பைருலினாவில் உள்ள சத்துகள் 1,000 கிலோ காய்கறிகளில் உள்ள சத்துகளுக்கு இணையானவை.