Published:Updated:

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

மகசூல்சுபீஷ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

“விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டுக் கையைச் சுட்டுக்கிட்ட நிலைமையில, எனக்கு நம்பிக்கையை

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

ஏற்படுத்தி விவசாயத்துல ஜெயிக்க வெச்சது ‘பசுமை விகடன்’தான்” என்று சிலாகித்துச் சொல்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி-டோனாவூர் செல்லும் சாலையில் ஏர்வாடியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளியக்குறிச்சி கிராமத்தில், கணபதியின் நெல்வயல் இருக்கிறது. வயலில் வேலை செய்துகொண்டிருந்த கணபதியைச் சந்தித்தோம். “அப்பா ஏர்வாடியில் வாடகைப் பாத்திரக்கடை வெச்சுருந்தாங்க. நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சுட்டு அப்பாகூடச் சேர்ந்து பாத்திரக்கடையைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். வியாபாரம்மூலமா பல விவசாயிகளோட பழக்கம் ஏற்பட்டு, எனக்கும் விவசாயம் செய்யணும்னு ஆசை வந்துடுச்சு. அதனால, 2002-ம் வருஷம் இந்த 10 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அதுல 2 ஏக்கர் நிலத்துல வாழையையும் 3 ஏக்கர் நிலத்துல அம்பை 16-ங்கற நெல்லையும் சாகுபடி செஞ்சேன். அக்கம் பக்கத்து விவசாயிகள்கிட்ட ஆலோசனை கேட்டு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி கொடுத்துத்தான் விவசாயம் செஞ்சேன். மகசூலை அதிகரிக்கிறதுக்காக ஒவ்வொரு வருஷமும் பூச்சிக்கொல்லியையும் ரசாயன உரத்தையும் அதிகரிச்சுட்டே போக வேண்டியிருந்துச்சு. ஆனாலும், விடாம 2011-ம் வருஷம் வரைக்கும் விவசாயம் செஞ்சுட்டுத்தான் இருந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

நான் வாக்கிங் போறப்போ பழக்கமான டாக்டர் ஒருத்தர், ‘சிவப்பு நிறச் சம்பா அரிசித் தவிட்டைத் தண்ணீர்ல கலந்து குடிச்சா, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். பாரம்பர்ய ரக அரிசி ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் இருக்கு. ஆனா, இப்போ யார், பாரம்பர்ய அரிசியை விளைவிக்கிறார்’னு சொல்லி வருத்தப்பட்டார். என் மனசுல அந்த விஷயம் ஆழமாகப் பதிஞ்சது.

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்னோட நண்பர் அந்தோணிங்கிறவர்தான் பசுமை விகடன் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அவர் விவசாயி கிடையாது. என்னோட விவசாய ஆர்வத்தைப் பார்த்துட்டுப் புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு, தொழுவுரம், இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திச் செய்ற ‘இயற்கை விவசாயம்’னு ஒண்ணு இருக்கிறதே தெரிய வந்துச்சு. தொடர்ந்து பசுமை விகடன் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சேன். முக்கியமான விஷயங்களைக் கோடுபோட்டு வெச்சுக்குவேன்.

ஒருமுறை நம்மாழ்வார் ஐயா எழுதியிருந்த கட்டுரையிலயும் சிவப்பு அரிசித் தவிட்டுக்குச் சர்க்கரை நோயைக் குணமாக்கும் சக்தி இருப்பதாகத் தகவல் வந்துருந்துச்சு. அதனால, எனக்குப் பாரம்பர்ய ரக நெல் சாகுபடியில் ஆசை வந்துடுச்சு. பக்கத்து ஊர்ல ஒரு விவசாயிகிட்ட இருந்து ‘கொட்டாரச் சம்பா’ விதை நெல்லை வாங்கி, 50 சென்ட் நிலத்துல விதைச்சு இயற்கை முறையில சாகுபடி செஞ்சேன். பயிர் நல்லா விளைஞ்சு வந்து கணிசமான மகசூல் கிடைச்சது. அதுக்கப்புறம் தொடர்ந்து பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்” என்று முன்னுரை கொடுத்த கணபதி தொடர்ந்தார்.

“அதுக்கப்புறம் 2014-ம் வருஷம் வள்ளியூர்ல நடந்த ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். அங்கதான், பணகுடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேஷ்வரன் அறிமுகமானார். அவரோட நெல் வயலைப் போய் பார்த்துட்டு அவர்கிட்டேயிருந்து கருத்தக்கார் விதை நெல்லை வாங்கிட்டு வந்தேன். அதைத்தான் தொடர்ந்து சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். என்னோட வயல் முழுக்க வண்டல் கலந்த களிமண். இப்போ, சம்பா பட்டத்தில் (கடந்த கார்த்திகை மாதம்) 3 ஏக்கர் நிலத்துல கருத்தக்கார் போட்டிருக்கேன். 50 சென்ட் நிலத்துல ‘அம்பை-16’ ஒட்டுரக நெல்லைப் போட்டிருக்கேன். மீதமுள்ள ஆறரை ஏக்கர் நிலத்தை வாழைச் சாகுபடிக்காகத் தயார்படுத்திட்டுருக்கேன். எந்த ரக நெல்லா இருந்தாலும் அதை அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்வேன். அரிசியை 10 கிலோ, 25 கிலோ பைகளாகப் போட்டுப் பாத்திரக்கடையில் வெச்சே விற்பனை செஞ்சுடுவேன். அதேபோல, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், அக்னி அஸ்திரம், மீன் அமினோ அமிலம்னு எல்லாத்தையும் சின்னப் பாட்டில்கள்ல கொஞ்சம் கொஞ்சம் ஊத்தி கடையில வெச்சுருப்பேன். கடைக்கு வர்ற விவசாயிகள்கிட்ட அதையெல்லாம் காட்டி, இயற்கை விவசாயத்தைப் பத்தி எடுத்துச் சொல்வேன்.

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

பலர் இதையெல்லாம் கண்டுக்கறதில்லை. ஆனாலும் நான் சொல்றதை நிறுத்த மாட்டேன்.  ஆர்வம் இருக்கிறவங்களை உடனே என்னோட வயலுக்குக் கூட்டிட்டுப்போய்க் காட்டுவேன். இப்படிக் காட்டி இதுவரை நாலு விவசாயிகளை இயற்கைக்கு மாத்திருக்கேன். எங்க பகுதியில அம்பை 16 ரக நெல்லுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அது பலகாரத்துக்கு நல்லா இருக்கும். நிறைய பேர் கேட்டதால அந்த ரகத்தையும் இயற்கை முறையில சாகுபடி செஞ்சு அரிசியா விற்பனை செஞ்சுட்டுருக்கேன்” என்ற கணபதி மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

“போன வருஷம் சம்பா பட்டத்துல 3 ஏக்கர் நிலத்துல கருத்தக்கார் போட்டிருந்தேன். அதுல 5,760 கிலோ நெல் கிடைச்சுது. இதை அரைச்சதுல 3,991 கிலோ அரிசி கிடைச்சது. ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்னு 3,991 கிலோ அரிசியை விற்பனை செஞ்சதுல 3,19,280 ரூபாய் வருமானமாகக் கிடைச்சது. மூணு ஏக்கர் வைக்கோல் மூலமா 12,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. மொத்தம் சேர்த்து 3,31,280 ரூபாய் கிடைச்சது. அதுல எல்லா செலவும் சேர்த்து 98,200 ரூபாய் போக, 2,33,080 ரூபாய் லாபமா நின்னது” என்ற கணபதி நிறைவாக,

“இப்போ கருத்தக்கார் விதைச்சு 55 நாள் ஆகுது. இந்தத் தடவையும் அதே அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இயற்கை விவசாயம் செய்யணும்னு நினைக்கிறவங்க, பசுமை விகடனைத் தொடர்ந்து படிச்சாலே போதும். விதை வாங்குறதுல இருந்து விற்பனை வரைக்கும் தேவையான எல்லா விஷயங்களுமே அதுல இருக்கு. என்னைப் பொறுத்தவரை, இயற்கை விவசாயத் தகவல்களை அள்ளித் தர்ற ‘அட்சயப்பாத்திரம்’தான் பசுமைவிகடன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

கணபதி,
செல்போன்: 94432 84992

சம்பா, கார் பட்டங்களுக்கு ஏற்ற கருத்தக்கார்!

ஒரு ஏக்கர் நிலத்தில் கருத்தக்கார் ரக நெல் சாகுபடி செய்யும் முறைகள் குறித்துக் கணபதி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

கருத்தக்கார், தென்மாவட்டங்களில் சம்பா (கார்த்திகை) மற்றும் கார் (வைகாசி) பட்டத்தில் விதைக்க ஏற்ற ரகம். இதன் வயது 135 முதல் 140 நாள்கள். தேர்வு செய்த நிலத்தில் 2 டிராக்டர் தொழு உரத்தைக் கொட்டிப்பரப்பி, உழவு செய்து 2 நாள்கள் காய விட வேண்டும். பிறகு சணப்பு, நரிப்பயறு, தக்கைப்பூண்டு, மல்லி, சீரகம், பாசி, உளுந்து... என்று கிடைக்கக்கூடிய பலதானிய விதைகளை மொத்தமாக மூன்று கிலோ அளவுக்குத் தூவி விதைக்க வேண்டும். அவற்றை வளர்த்து 40-ம் நாளுக்கு மேல் பூவெடுக்கும் சமயத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கர் பரப்பில் நெல் நடவு செய்ய 4 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஒரு ‘பிளாஸ்டிக் டிரம்’மில் 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து கொள்ள வேண்டும். ஒரு சாக்கு மூட்டையில் 15 கிலோ விதைநெல்லைப் போட்டுக் கட்டி, இக்கலவையில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெளியே எடுத்துச் சாக்கு மூட்டையில் உள்ள தண்ணீரை வடித்து, அதன்மேல் வைக்கோலைப் போட்டு மூடி 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதற்குள் விதைநெல் அனைத்தும் முளைவிட்டிருக்கும்.

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

முளைவிட்ட விதைநெல்லை நாற்றங்காலில் விதைத்து 5 நாள்கள் வரை இரவில் தண்ணீர் கட்டிக் காலையில் வடித்துவிட வேண்டும். விதைகள் 5-ம் நாளுக்குமேல் முளைத்துவரும். விதைத்த 10 மற்றும் 18-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். விதைத்த 20 முதல் 25 நாள்களில் நாற்றுகளைப் பறித்து... 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து அக்கலவையில் நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்க வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். சேறாக்கப்பட்ட வயலில் வரிசைக்கு வரிசை ஒன்றரை அடி, நாற்றுக்கு நாற்று ஓர் அடி என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

நடவு செய்ததிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா, அக்னி அஸ்திரம், மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். பஞ்சகவ்யா, அக்னி அஸ்திரம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மீன் அமினோ அமிலத்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்ததி்லிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கை
50 கிலோ மணலுடன் கலந்து தூவி விட வேண்டும். இதனால் வேரைத் தாக்கும் பூச்சிகள் வராது.

70-ம் நாளுக்கு மேல் கதிர் பிடித்து, 100-ம் நாளுக்கு மேல் முற்ற ஆரம்பிக்கும். 135-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.