Published:Updated:

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

 ‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

1960-களில் ஏற்பட்ட உணவுப்பஞ்சம், என் வயதுக்காரர்களுக்கு நினைவிருக்கும். அதை எதிர்கொள்ள அரசு சில கொள்கைகளை முன்னெடுத்தது. அப்போது, ‘சி.எஸ்’ என்று அழைக்கப்பட்ட சி.சுப்ரமணியம், மத்திய உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்தார்.

அவர் அமைத்த குழுவில்தான் எம்.எஸ். சுவாமிநாதன் இருந்தார். இந்தக் குழுதான் பசுமைப்புரட்சியை இந்தியாவில் கொண்டுவந்தது. பசுமைப்புரட்சியின் மூலமாக இந்தியாவுக்குள் பெருமளவில் ரசாயன உரங்களும் நுழைந்தன.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

இந்த ரசாயன உரங்கள், அடிப்படையில் உப்புகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நைட்ரஜனின் உப்பு நைட்ரேட்; பாஸ்பரஸின் உப்பு பாஸ்பேட்; பொட்டாசியத்தின் உப்பு பொட்டாஷ். மீன், கறி, காய்கள் போன்றவை அழுகாமல் இருக்க நாம் உப்பைத்தான் பயன்படுத்துகிறோம். உப்பைப் பயன்படுத்திக் காய வைக்கப்படும் மீன் கருவாடாக மாறுகிறது. கறி உப்புக்கண்டமாக மாறுகிறது. அதேபோல், மாங்காய், எலுமிச்சை போன்றவற்றை உப்பு இல்லாமல் ஊறுகாயாக மாற்ற முடியாது. உணவுபொருள்களில் நுண்ணுயிரிகளை வளரவிடாது என்பதால்தான் உப்பைப் பயன்படுத்துகிறோம்.

உயிர்ப்புள்ள மண்ணில் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன என்று பார்த்தோம். அவற்றில் தலை நிமிர்ந்து வாழும் மண்புழுவின்மீது இதுபோன்ற உப்புகளைக் கொட்டினால் என்னவாகும்? ரசாயன உரங்கள் கிடக்கட்டும். நாம் உணவில் பயன்படுத்தும் உப்பைப் போட்டாலே மண்புழு துடிதுடித்து இறந்துவிடும். ஆரம்பத்தில் விவசாயிகள் கொஞ்சமாகத்தான் ரசாயன உரங்களைப் பயன் படுத்தினார்கள். தொடர்ந்து, மண் வளம் குறையத் தொடங்க... ரசாயன உரங்களை அள்ளிக் கொட்டினார்கள்.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2


உப்பு மூலம், மீன் கருவாடாக மாறுவதுபோல, மண்ணும் கருவாடாக மாறி வருகிறது. இன்றைய நவீன விவசாயச் சூழலைக் கண்முன் கொண்டு வாருங்கள். நீங்கள் யூரியாவையோ, டி.ஏ.பியையோ கொட்டோ கொட்டென்று மண்ணில் கொட்டினால், மண்புழுக்கள் மற்றும் மற்ற நுண்ணுயிரிகள் அங்கே வாழ இயலுமா? போதாததற்குப் பூச்சிக்கொல்லிகளையும் இஷ்டத்துக்குத் தெளிக்கும்போது, ‘நாம் அழிக்கப்படுகிறோம்’ என்று உணர்ந்துகொண்ட மண்புழுக்களும், பிற நுண்ணுயிரிகளும் ‘விட்டால் போதும்’ என்று நம் மண்ணிலிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டன. அதனால்தான், நலம் குன்றி உயிர்ப்பற்ற நிலையில் இருக்கிறது நம் மண்.

மண்ணில் விழும் இலைகள் மற்றும் பிற கழிவுகள்தான் மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு உணவு. அவற்றை உண்டு நுண்ணுயிரிகள் வெளியேற்றும் கழிவுகள்தான், ‘மட்கு’ (ஹியூமஸ்-Humus). இந்த மட்கினால்தான் மேல் மண் சத்தானதாக இருக்கிறது. ஆனால், மட்கு மட்டுமே, மண்ணை உயிர்ப்பாக மாற்றிவிடாது. மண்ணுக்குள் காற்றும் நீரும் புகுந்தால்தான், மண் உயிர்ப்பாக மாறும். மண் உயிர்ப்புத்தன்மை பெற, குறைந்தபட்சம் 20% முதல் 25% வரை காற்று இருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் சொல்கிறது.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

நம் முன்னோர் காளைமாட்டைப் பூட்டி நிலத்தை உழுததன் மூலம், மண்ணில் காற்றோட்டத்தை உறுதி செய்தார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், அதே பணியை மண்ணில் வாழும் உயிரினங்களும் செய்தன. உதாரணத்துக்கு மண்புழுவைச் சொல்லலாம். அது ஓர் உழவனைப்போல் மண்ணை உழுது, காற்றும் நீரும் உள்ளே புக வழியமைத்துக் கொடுக்கிறது. ஆனால், ரசாயனங்களைக் கொட்டிக்கொட்டி மண்புழுக்களையும் நுண்ணுயிரிகளையும் விரட்டியடித்து விட்டோம். ‘உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப, ரசாயன உரங்கள் கொட்டப்பட்ட நிலங்கள், அதிகத் தண்ணீர் கேட்டன. அதனால், ‘பம்ப்செட்’களை அமைத்து அதிக நீரை இறைக்கத் தொடங்கினோம். தொடர்ந்து டிராக்டர் போன்ற கனமான இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், மண் கெட்டிப்படத் தொடங்கியது. அதனாலும், காற்று, நீர் உள்ளே புக முடியவில்லை. ஏற்கெனவே மண்ணில் இருந்த நுண்ணுயிரிகளையும் விரட்டிவிட்டதால், மண்ணின் உயிர்ப்புத் தன்மையும் படிப்படியாகக் குறைந்துபோனது.

இன்றைக்கும்கூட, நாற்றுவிடும்போது மாட்டு எருவைப் பயன்படுத்தினாலும், பயிர் வளர்ப்புக்கு ரசாயன உரங்களைத்தான் இடுகிறார்கள். தமிழ்நாட்டில், இன்னும்கூட மண் நிறம் இழக்கவில்லை. சமீபத்தில், பசுமைப்புரட்சியைத் தீவிரமாகக் கடைப்பிடித்த மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பத்திண்டா (Bathinda) என்ற பகுதிக்குச் சென்றிருந்தோம். அந்தப் பகுதிதான், இந்தியாவில் ரசாயன உரங்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட பகுதி. இந்தப் பகுதியில் பசுமைப் புரட்சியைத் தீவிரமாகக் கடைப்பிடித்த விவசாயிகளும் அவர்களின் குடும்பத்தினரும் தற்போது ‘கேன்சர்’ நோயாளிகளாக இருக்கிறார்கள். பத்திண்டாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் நகருக்குத் தினமும் செல்லும் ஒரு ரயிலை ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’ என்றே மக்கள் அழைக்கிறார்கள். அந்த ரயிலில் சிகிச்சைக்காக ஏராளமான கேன்சர் நோயாளிகள் பயணிப்பதால் தான் இந்தப்பெயர்.


பத்திண்டா பகுதியில் நாங்கள் வாகனத்தில் செல்லும்போது புழுதியான மண், பறந்து வந்து எங்களின் மீது படிந்தது. அந்த மண், சாம்பல் நிறத்தில் இருந்தது. உயிர்ப்புத்தன்மையை இழந்ததால்தான் அந்த மண் சாம்பல் நிறத்தில் இருந்துள்ளது. அந்த விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு நிலத்தில் உள்ள பயிர்களின் எச்சங்களை எரித்துவிடுகிறார்கள். கால்நடைகள் இல்லாதபோது, அவர்களுக்கு வைக்கோல் தேவையும் இல்லாமல் போகிறது. டெல்லியில் காற்று மாசு பிரச்னைக்குக் காரணம், இதுபோல வைக்கோலை எரித்ததுதான். உயிருள்ள ஜீவன்கள்மீது தீ வைப்பதுபோல, மண் மீதும் தீ வைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் உழவரை மையமாகக் கொண்டு இயங்கிய வேளாண்மை, அடுத்தடுத்து பயிரை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்பதுபோல, எந்தப் பயிரைப் போட்டால் லாபம் கிடைக்கும் என்பது மட்டுமே இன்று பிரதான கேள்வியாக உள்ளது. பயிர்களைப் பொறுத்தவரை, மனிதர்களுக்கு எது பலனளிக்கும் என்றே நாம் பார்க்கப் பழகிவிட்டோம். அது சூழலுக்கு உகந்ததா, நுண்ணுயிரிகளுக்கு உணவாகுமா என்றெல்லாம் நாம் யோசிப்பதில்லை. அதனால்தான், பூச்சிக்கொல்லிகளை அளவின்றித் தெளிக்கிறோம். மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிடுகிறோம். இதனால், சுற்றுச்சூழலில் எத்தனையோ உயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

இது ஒருபுறமிருக்க, கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலுமிருந்த மாடுகள், எருமைகள், ஆடுகள் அனைத்தும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. வட மாநிலங்களில் பெருமளவில் கால்நடைகள் இல்லையென்றாலும், மத்திய இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் ஏராளமான கால்நடைகள் இருந்தன. ஆனால், இப்போதைய நிலைமை? காளைகளுக்குப் பதில் நாம் டிராக்டர்களைக் கொண்டு வந்தோம். டிராக்டர்கள் உழலாம். ஆனால், சாணம் போடுமா? சாணம் இல்லையேல், மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு உணவேது? மண் எப்படி நலமாயிருக்கும்? வேளாண்மை என்பது ஒரு கலாசாரம் என்பதை மறந்து, அதிலிருந்து மனிதனை விலக்கினோம், மண்ணில் இருந்த நுண்ணுயிரிகளை விலக்கினோம். கால்நடைகளை விலக்கினோம். பணப்பயிர், பணப்பயிர் என்று ஆளாய்ப் பறந்தோம்.

இதனால், பல மாநிலங்களின் வேளாண் சூழல் சீரழிந்தது. உதாரணத்துக்கு மகாராஷ்டிராவில் முன்பெல்லாம் சிறுதானியமான நாட்டுச்சோளத்தைப் பெருமளவு பயிரிடுவார்கள். இந்தச் சோளம்தான் அவர்களுக்கு முக்கிய உணவு. வீட்டுத்தேவைக்குப் போக மீதியுள்ள தானியத்தை விற்பதன் மூலம் ஓரளவு பணமும் கிடைத்தது. சோளத்தட்டை, மாடுகளுக்கு உணவாகவும் மாட்டின் சாணம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உணவாகவும் மாறியது. இப்படி உணவுச் சங்கிலியை உறுதிசெய்து, அனைவரும் பயன் பெற்ற வேளாண் சூழலில், ‘சோயா’வைப் புகுத்தினார்கள். அதன் எண்ணெய், சோப் தயாரிக்கவும், பிற பயன்பாடுகளுக்கும் சென்றது. சோயா பிண்ணாக்கை நம் மாடுகள் விரும்பிச் சாப்பிடவில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளில் வளர்க்கப்பட்ட பன்றிகள் அவற்றை விரும்பிச் சாப்பிடுவதால், அவை ஏற்றுமதி செய்யப்பட்டன. கடைசியில் உணவு உற்பத்தியில் ஈடுபடாத விவசாயிகள், உணவு தானியத்துக்காக ரேஷன் கடை வாசலில் நின்றனர்.

தன்னிறைவான உணவு உற்பத்தி குறித்து மட்டுமல்லாமல், மண்ணின் சூழல் குறித்தும் நம் முன்னோருக்கு அனுபவ ஞானம் இருந்தது. அதனால்தான் இன்று யானைகளுக்குப் புத்தாக்க முகாம்கள் நடத்துவதுபோல, மண்ணுக்கான புத்தாக்க முறைகளையும் அவர்கள் கையாண்டார்கள். ‘அறுவை சிகிச்சை’ முடிந்து, உடல்நிலை தேற நாம் எப்படி ஓய்வெடுப்போமோ, அப்படித்தான் மண்ணுக்கும் ஓய்வு கொடுத்தார்கள். அதன்மூலம் இழந்த சத்துகளை மீட்டார்கள்.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2

முன்பெல்லாம் நெல்லுக்கு அடுத்து நிலக்கடலைப் பயிரிடுவார்கள். நிலக்கடலையின் வேர்முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் பாக்டீரியாவானது தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். அடுத்த சீசனுக்கு மீண்டும் நெல்லுக்குப் போவார்கள். மானாவாரியில் கூட ஒரே பயிரைப் பயிரிடும் போக்கு நம் முன்னோரிடம் இல்லை. ஆனால், இன்று ஒரே பயிரையே மீண்டும் மீண்டும் பயிரிட்டு மண்ணை மலடாக்குகிறோம். பசுமைப்புரட்சிக்குப் பிந்தைய இதுபோன்ற செயல்பாடுகளால் நாம் மண்ணை மெள்ள மெள்ளக் கொன்று வருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தச்சூழலை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், ‘ஐக்கிய நாடுகள் சபை’, 2015-ம் ஆண்டை ‘உலக மண் ஆண்டு’ (International Year of Soils) என அறிவித்தது. மேலை நாட்டினரைப் பொறுத்தவரை, மண்ணின் மகசூல் தரும் திறன் குறைந்துவிட்டது என்பதற்காகவே அதிகம் கவலைப் படுகிறார்கள். ஆனால், நம் கலாசாரத்தில், மண் நமக்குத் தாய். தாயைப் பிள்ளைகளான நாமே கொல்லலாமா?

மெள்ளச் சாகும் மண்ணை, பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டும் உயிர்த்தெழச் செய்ய முடியும். இலை, தழைகள், உயிர்மக் கழிவுகள், இயற்கை இடுபொருள்கள் ஆகியவற்றைக் கொடுக்கக் கொடுக்க... அவற்றை உண்பதற்காக நுண்ணுயிரிகள், மண்புழுக்கள், மற்ற மண் வாழ் உயிரினங்கள் நிலத்துக்கு வரத்தொடங்கும். அதனால், நிலத்தில் மட்கு உருவாகி, சத்தான மேல் மண் உருவாகும். இந்த எளிய அறிவியலை மனதில் நிறுத்திச் செயல்பட்டாலே, கொஞ்சம் கொஞ்சமாக மண் நலத்தை நம்மால் மீட்டு விட முடியும்.

-முயற்சி தொடரும்.

மங்கி வரும் மண் மட்கு

நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டலங்களில், மண்ணின் மட்கு எனப்படும் கரிமப் பொருள்கள் (Organic Matter) 2% முதல் 5% வரை மண்ணில் இருக்க வேண்டும். ஆனால், இன்று தேசிய அளவில் சராசரியாக 0.4% முதல் 0.5% வரைதான் மண்ணில் மட்கு உள்ளது. 1971-ம் ஆண்டில், தமிழக மண்ணில் 1.2% என்ற அளவில் இருந்த மட்கு, 2002-ம் ஆண்டில் 0.68% என்ற அளவாகக் குறைந்துவிட்டது.

2014-15-ம் ஆண்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் ஆய்வில்... பல மாவட்டங்களில் மண்ணில் 0.5% அளவில்தான் மட்கு இருப்பது தெரியவந்தது. மதுரை மாவட்டத்தில் 0.23% அளவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 0.36% அளவும்தான் மண்ணில் மட்கு இருந்தது. அதே நேரத்தில், வேலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் முறையே 4.4% மற்றும் 4.04% என்ற அளவில் மட்கு இருந்தது தெரியவந்தது.

ஆக, ‘கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மண்ணில் மட்கு எனப்படும் கரிமப் பொருள்கள் பாதியளவுக்கும் மேலாகக் குறைந்துள்ளன. அதற்கு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, ஒற்றைப் பயிர்முறை, தொழுஉரம் இடாமை ஆகியவைதான் காரணங்கள்’ என என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.