Published:Updated:

‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள் அட்டைக்கத்தி நடிகர்கள்!’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி

‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள்  அட்டைக்கத்தி நடிகர்கள்!’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி
பிரீமியம் ஸ்டோரி
‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள் அட்டைக்கத்தி நடிகர்கள்!’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி

கடிதம்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள் அட்டைக்கத்தி நடிகர்கள்!’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி

கடிதம்ஜூனியர் கோவணாண்டி - ஓவியம்: ஹரன்

Published:Updated:
‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள்  அட்டைக்கத்தி நடிகர்கள்!’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி
பிரீமியம் ஸ்டோரி
‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள் அட்டைக்கத்தி நடிகர்கள்!’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி

‘‘தமிழக ஜனங்கள் ஏழரைக்கோடி பேருக்கும் நமஸ்காரம்...

ஆண்டாளுக்குக் கொடி பிடிக்கிறீங்க; தமிழ்த்தாய்க்குக் கொடிபிடிக்கிறீங்க; மாட்டுக்குக் கொடி பிடிக்கிறீங்க; மண்ணாங்கட்டிக்குக் கொடி பிடிக்கிறீங்க; மெர்சலுக்குக் கொடி பிடிக்கிறீங்க; மென்டல்ஸுக்கும் கொடி பிடிக்கிறீங்க; ஆனா இந்த மண்ணை வாழ வைக்கிற காவிரித்தாய்க்காகக் கொடிபிடிக்கலையே. இந்த ஆதங்கத்தை உங்க அத்தனை பேர் மேலயும் அள்ளிக்கொட்டத்தான் வந்திருக்கேன்.

ம்... காவிரி பிரச்னைனு சொன்னதுமே... ‘காவிரியா... அது துபாய்க்கு அங்குட்டு எங்கணுக்குள்ளயோ இருக்கு’னு வடிவேலு கணக்கா சொல்ற ஆளுங்க நிறைஞ்ச ஊரு, நம்ம ஊரு. பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க. அவங்களுக்கு விவரம் அவ்வளவுதான்.

நிஜத்துல பார்த்தா, ஒட்டுமொத்த தமிழ்நாடே இன்னிக்கி காவிரித் தண்ணியிலதான் பொழப்பு ஓட்டிக் கிட்டிருக்கு. நேரடிப் பாசனம் தவிர, கூட்டுக்குடிநீர்த் திட்டம், கிளையாறுகள்னு பல மாவட்டங்கள் பலனடையுது.

சரி... இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. ஒவ்வொரு மாவட்டத்தோட மக்களும் குறைந்தபட்சம் சில லட்சங்கள்ல தலைநகர் சென்னையிலதான் குடியிருக்காங்க. அதாவது, நம்மள்ல பலரோட மாமன், மச்சான், அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பினு யாராவது ஒருத்தர் சென்னையிலதான் இருக்காங்க. அவங்கள்லாம் வீராணம் ஏரியில நிரம்பியிருக்கிற காவிரித் தண்ணியைக் குடிச்சுத்தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்காங்க. ஆக, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் காவிரிதான் தாய். ஆனா, அந்தத் தாய்க்கு வந்திருக்கிற ஆபத்தைக் கண்டு துளிகூட யாரும் துடிக்கலையே!

‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள்  அட்டைக்கத்தி நடிகர்கள்!’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி

ஆண்டாளுக்காகவும் தமிழ்த்தாய்க்காகவும் பொங்குனதுல ஒரு சதவிகிதத்தைக்கூடக் காவிரிக்காகப் பொங்கலையே. கேட்டா, அது கலாச்சாரம்... சமாச்சாரம்னு பீத்திக்கிட்டாங்க பலபேரு. என்னங்கய்யா உங்க கலாச்சாரம். காவிரி இல்லனா, கால்கூடக் கழுவ முடியாது. நாளைக்கு உங்க கலாச்சாரம் மொத்தமும் நாறித்தான் போகும்.

கர்நாடகாவுல பெய்யுற மழை அளவுல பெருசா எந்த மாற்றமும் இல்ல. காவிரி நீர்பிடிப்பு பகுதிக்குள்ள வர்ற கடற்கரையோர கர்நாடகவுல 3,000 மில்லிமீட்டருக்குக் குறையாம, வருஷம் தவறாம கொட்டிக்கிட்டுதான் இருக்கு. தெற்குக் கர்நாடகாவுலயும் 1,000 மில்லி மீட்டருக்குக் குறையாமக் கொட்டத்தான் செய்யுது.

ஆனா, வழக்கமா நமக்கு வரவேண்டிய தண்ணி மட்டும் வர்றதே இல்ல. வளைச்சு வளைச்சு விவசாய நிலங்களைப் பெருக்கிக்கிட்டதோட.. நகரங்களுக்கான குடிநீர்த் தேவைக்கும் காவிரியைத்தான் சுரண்டுறாங்க கர்நாடகாவுல. நிலத்தடி நீரும் மிதமிஞ்சி கிடக்கு. பெங்களூருவுலயே 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருக்கு. ஆனா, அதுக்காகத் தமிழ்நாட்டோட பங்குல இருந்து இப்ப 15 டி.எம்.சி-யைப் பிடுங்கிக் கொடுத்திருக்கு உச்சநீதிமன்றம். இதன் மூலமா நம்மளோட பங்கு 177 டி.எம்.சி-ங்கிற அளவுக்குச் சுருங்கியாச்சி. நாம துணிச்சலா எதையுமே வாய்திறந்து கேக்காததாலதான், ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டிங்கிறது உச்சநீதிமன்றம் வரைக்கும் இப்பத் தெரிஞ்சுபோச்சு.

இந்தக் கம்யூனிஸ்டுங்களும் விவசாயச் சங்கங்களும்தான் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் காவிரிக்காகப் போராடிக்கிட்டிருந்தாங்க. ஆனா, கழகங்களோடயும் கதர்களோடயும் உறவாடி உறவாடி ஒத்த சீட்டுக்காக ஒத்தக்கால்ல கோபாலபுரத்துக்கும் போயஸ்கார்டனுக்கும் காவடி தூக்கித் தூக்கியே சிவப்புச் சாயம் வெளுத்து ரொம்ப நாளாகுது.

இவ்ளோ காலமா தமிழ்நாட்டை ஆட்சி செய்துட்டிருந்த தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு கட்சிகளுமே அசுரபலத்தோடு ஆட்சியில இருந்தும்கூட மத்தியில இருக்கிற அரசாங்கங்களைக் காவிரிக்காக ஒரு நாளும் அசைச்சி பார்க்கல. சொந்தக் கட்சிக்காரங்களுக்குச் சொளையா பணக்கட்டு வர்றமாதிரியான அமைச்சர் பதவி கிடைக்கணும்; சொத்துக்குவிப்பு வழக்கு, 2 ஜி வழக்கு இப்படித் தங்கள்மேல இருக்கிற பற்பல கொள்ளை வழக்குகள்ல இருந்து தப்பிக்கணும் இதுமாதிரியான கோரிக்கைகளுக்காகத்தான் மத்திய அரசுகளைக் கலங்கடிச்சிருக்காங்க. வேணும்னா, மெரினா பீச்சுல போய் ஏர்கூலர், கட்டில்,மெத்தை சகிதம் உண்ணாவிரதம்கிற பேருல கூத்தடிப்பாங்க. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா இந்த மூணு பேருமே இந்த நாடகத்தை நல்லாவே அரங்கேற்றியிருக்காங்க. ஏன்னா மூணு பேருமே வேஷம் கட்டுற சாதியில இருந்த வந்தவங்களாச்சே.

இதேபாணியில, ‘சிஸ்டம் சரியில்ல’னு கிளம்பியிருக்காரு ஒருத்தர். இன்னொருத்தர், ‘நஞ்சை உண்டு புஞ்சை உண்டு, பஞ்சம் மட்டும் இன்னும் இங்க மாறவில்லை’னு கிளம்பியிருக்காரு. ரெண்டு பேருமே ரிட்டயர்மென்ட் காலத்துல கிழட்டுப்புலி கணக்கா சீறிக்கிட்டு நிக்கறாங்க. அம்மா மொத்தமா போய்ச் சேர்ந்தாச்சு... ஐயாவும் முழுசா முடங்கியாச்சு. பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாண்ட கதையா... வீர வேஷம் கட்டிக்கிட்டு வீதியில நடக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுமாதிரி ஆட்களையெல்லாம் நம்பித்தான் இந்த நாட்டை ஒப்படைக்கறதுக்காக ஒரு கூட்டம் துடிச்சிக்கிட்டிருக்கு.

எதுக்காகச் சினிமாக்காரங்கமேல இந்த ஜூனியர் கோவணாண்டி எகிறி விழணும்னு சிலர் கேக்கலாம். ஜி.எஸ்.டி வரி போட்டதும், சினிமா கட்டணத்தை உயர்த்தறதுக்காகக் கொடிபிடிச்சாங்க. சினிமா தியேட்டர்களை மூடிப்போட்டாங்க. அதோட பொத்திக்கிட்டு போயிருந்தாங்கனா... அவங்க பிரச்னைக்காகப் போராடுறாங்கனு பேசாம இருந்துடலாம். ஆனா, அப்பப்ப விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்போம்... குந்தாணி கொடுப்போம்னு முழங்கிக் கிட்டிருக்காங்களே, அதான் கோவத்தை வரவழைக்குது. விவசாயிகள் கஷ்டத்துல இருக்கிறத பயன்படுத்திக்கிட்டு, அவங்களையெல்லாம் தூண்டிவிட்டுக் காசு பார்க்கிறாங்க. படத்துல நாலு வசனத்தை நறுக்குனு எழுதிட்டு, விவசாயத் தோழன்... விவசாயிகளின் நண்பன்னு ஸீனைப்போடறாங்க.

உண்மையிலேயே விவசாயிகளோட நண்பனா இருந்திருந்தா... ‘இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் துரோகம்’னு டி.வி மைக்குல வெத்துச் சவடால் விடறதவிட்டு, வீதிக்குள்ள வந்து நின்னுருக்கணும். அதைவிட்டுட்டு... ஆளப்போறான்... பேளப்போறான் தமிழன்னு சொல்லிக்கிட்டு, உசுப்பேத்தி உசுப்பேத்தி பாக்கெட்டுல இருக்கிற காசைப் பறிக்கறது... ரிட்டையர்மென்ட் நேரம் வந்துட்டா, ஓட்டையும் பறிக்கறதுனு இருந்தா, கோவம் வராம என்ன செய்யும்?

இதுநாள் வரைக்கும் நம்மள ஆட்சி செஞ்சது அத்தனையுமே மொன்னக்கத்திங்க. இதுங்க, காவிரிக்காக ஒரு புல்லைக்கூடப் புடுங்கல. கேட்டா நாங்கதான் நடுவர் மன்றம் கொண்டுவந்தோம்... நாங்கதான் அரசிதழ்ல வெளியிட வெச்சோம்னு ரெண்டு கழகங்களுமே பீத்திக்குதுங்க. காவிரித்தாய்... காவிரிகண்ட சோழன்னு போஸ்டரும் ஃபிளக்ஸும் அடிக்கிறதுக்காக மட்டும்தான் பயன்பட்டிருக்கு இவங்களோட சாதனை. அடுத்தாப்புல அட்டைக்கத்திங்க பலவும் தமிழ்நாட்டு முதல்வர் கனவோட க்யூவுல நிக்குதுங்க. சினிமாவுல பேசுற வசனமே போதும், நாட்டை ஆளுறதுக்குனு கிளம்பிடுச்சுங்க.

இதைத் தவிர நாங்க தமிழங்கோ... நாங்க தங்கத்தமிழணுங்கோ.. மண்ணின் மைந்தனுக்குத்தான் ஆட்சியாள உரிமை இருக்குனு கூப்பாடு போடுற சில பேரு... கண்டகண்ட பிரச்னைகளுக்கும் தொண்டையைக் கனைச்சிக்கிட்டு கையை உயர்த்திக்கிட்டு, கறுப்புத் துண்டை அப்பப்ப சரிப்படுத்திக்கிட்டு உறுமுறத கேட்டா... கனடாவுல இருக்கிற நயாகார நதியே நின்னுடும்போலிருக்கு. ஆனா, டெல்லியில இருக்கிற மோடி, திரும்பிக்கூடப் பாக்கறதில்ல.

மொன்னைக்கத்தி, அட்டைக்கத்தி மற்றும் மண்ணு மைந்தனுங்களா... உங்க எல்லாருக்கும் ஒரு வார்த்தை. நாளைக்கு நீங்க ஆட்சியை நடத்தணும்னா, இந்த மண்ணும் மக்களும் இருக்கணும்யா. காவிரித்தாயைக் காணாம அடிச்ச பிறகு, மொகஞ்சதாரோவாகப்போகிற தமிழ்நாட்டுல எலும்புக்கூடுகளுக்கா ஆட்சி நடத்தப்போறீங்க. உங்களால ஏன் காவிரிக்காக ஒரு வலுவான போராட்டத்தைக் கட்டி அமைக்கமுடியல. சுயநலப்புலிகளா தனி ஆவர்த்தனம் பண்ற உங்களால ஒரு நாளும் எதையுமே சாதிக்க முடியாதுங்கிறதுதான் உண்மை.

தமிழன், இந்தியன், இந்து பேசும் தமிழன், இந்துத்வா தமிழன், தெலுங்கு பேசினாலும் தமிழன், கன்னடம் பேசினாலும் தமிழன், மார்வாடியா இருந்தாலும் தமிழன்... ஆரியத்தமிழன், திராவிடத் தமிழன், பெரியார் மண், வெங்காயம் வெள்ளப்பூண்டு எல்லாம் சரி... இன்னிக்குக் காவிரிய விட்டாச்சுனா, நாளைக்கு ஒரு மண்ணாங்கட்டிகூட இருக்கப்போறதில்ல இங்க. அப்புறம் உங்க கொள்கையையெல்லாம் வெச்சுக்கிட்டு நாக்கு வழிக்கவா போறீங்க. முதல்ல மனுஷனா மாறுங்க. காவிரியக் காப்பாத்தினாதான் உண்டு வாழ்வுங்கிறத புரிஞ்சுகிட்டு ஒண்ணாச் சேர்ந்து முஷ்டியை உயர்த்துங்க. தமிழ்நாட்டு எம்.பி-கள் அத்தனை பேரையும் ராஜினாமா செய்யச்சொல்லி நெருக்கடி கொடுங்க.... போராடுங்க. ஆட்சியிலயும் பதவிகள்லயும் ஒட்டிக்கிட்டிருக்கிற இந்த ஒட்டுண்ணிகளால ஒரு புல் முனையளவு பிரயோஜனமும் இல்ல இந்தத் தமிழ்நாட்டுக்கு.  இதுக்கு நடுவுல, இந்த விவசாயச் சங்கத் தலைவர்கள்னு சொல்லிக் கிட்டிருக்கிறவங்களோட நிலையைப் பார்த்தா... பரிதாபமோ பரிதாபம். பச்சைத் துண்டை சுழற்றி தோள்ல போட்டுக்கிட்டு இந்த அரசியல்வியாதிகளை நம்பி ஆத்துல இறங்குற வேலைய, இவங்க எப்பத்தான் நிறுத்தப்போறாங்களோ தெரியல. இவங்களோட பலம் இவங்களுக்கே தெரியல.

முதல்ல கதர், அப்புறம் கழகம், பிறகு காவி, அப்புற கலர்ஃபுல் பார்ட்டிங்கனு (நடிகர்கள்) ஒவ்வொருத்தரையும் நம்பி நம்பி, மாறி மாறி அவங்க கட்சி ஆபீஸுலயும், வீட்டு வாசல்லயும் தவம் கிடக்கிறாங்க இந்தச் சங்கத் தலைவர்கள்ல பலரும். கடைசிவரைக்கும் இந்தப் பச்சைத் துண்டுங்கள பகடைக்காயா பயன்படுத்துறாங்களே தவிர, ஒரு புண்ணாக்குக்கும் பிரயோஜனம் இல்ல.

இப்ப கடைசிகட்ட கொடுமை என்னன்னா... பச்சைத் துண்டு எல்லாம், நிஜக் காவிகள் முன்னாடி கைகட்டி நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. மிஸ்டுகால் பார்ட்டிகிட்ட மிக்ஸ் ஆகிக்கிடக்கிறாங்க. காட்டையும் கால்வாய்களையும் அழிச்சிக்கிட்டிருக்கிற இந்த மிஸ்டுகால் பார்ட்டிதான் நதிகளைக் காப்பாத்தி, அதன்மூலமா விவசாயத்தைக் காப்பாத்தப்போகுதாம்.

எல்லாமே பிஸினஸ்... மக்கா பிஸினஸ். எப்படி இந்தக் கதர், கழகம், காவினு அத்தனை அரசியல்வாதிகளும் நம்ம ஓட்டை வாங்கி ஜெயிச்சுட்டு, நம்ம மண்ணையே பிளாட் போட்டு வித்தானுங்களோ... விக்கிறானுங்களோ... நம்ம ஆத்து மண்ணையும் குளத்து மண்ணையும் கண்ணுமண்ணு தெரியாமா சுரண்டிக் கொழுத்துக் கிட்டிருக்கானுங்களோ... நம்ம நிலத்தடி நீரையும் காடுகளையும் காணாம அடிக்கிறானுங்களோ... அதே வேலையைச் செய்யத்தான் கண்டகண்ட வேஷத்துலயும் பலரும் கிளம்பி வந்துகிட்டிருக்கானுங்க.

கலரும் வேஷமும்தான் வேற வேறங்கிறத இப்ப நீங்க புரிஞ்சுக்கலனா... நாளைக்கு நீங்க புரிஞ்சிக்கப் போற நேரத்துல இந்தப் பூமியே இருக்காது... ஜாக்கிரதை!

- ஜூனியர் கோவாணாண்டி