Published:Updated:

விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!

விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!

விருதுஜி.பழனிச்சாமி - படங்கள்: க.விக்னேஷ்வரன்

விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!

விருதுஜி.பழனிச்சாமி - படங்கள்: க.விக்னேஷ்வரன்

Published:Updated:
விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!

‘விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை பலநேரங்களில் கிடைப்பதில்லை’ என்பது விவசாயிகள் பலரின் ஆதங்கம். இச்சூழ்நிலையில், ‘விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் கட்டுபடியான விலை கிடைக்கும்’ என்று வலியுறுத்துவதோடு பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன அரசு அமைப்புகள். இப்படிப் பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் நடைபெற்ற உழவர் தினவிழாவில் ‘சிறந்த பெண் விவசாயி’ என்று மாநில விருது பெற்றவர்களில் தமிழ்ச்செல்வியும் ஒருவர்.

விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த தமிழ்ச்செல்வியைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். நன்றி தெரிவித்த தமிழ்ச்செல்வி நம்மிடம் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எங்களுக்கு மொத்தம் மூணு ஏக்கர் நெலம் இருக்கு. நல்ல வண்டல் மண் பூமி. கிணத்துப்பாசனம், கொடிவேரி அணைப்பாசனம் ரெண்டும் கிடைக்கிறதால, பெருசா தண்ணீர் பிரச்னை இல்லை. வாழை, மஞ்சள், கரும்பு, நெல்னு நஞ்சை விவசாயம்தான் பிரதானம். பக்கத்து ஊர்ல இருக்கிற எங்க அக்கா காளான் உற்பத்தி பண்றாங்க. அவங்களும் நானும் சேர்ந்து பக்கத்து ஊர்கள்ல காளானை விற்பனை செஞ்சுட்டுருந்தோம். அதுல ஓரளவுக்கு வருமானம் கிடைக்கவும், அக்காக்கிட்டயே காளான் வளர்ப்பை ஓரளவுக்குக் கத்துக்கிட்டேன். அந்தச் சமயத்துல ‘பசுமை விகடன்’ புத்தகத்துல, ‘தண்டோரா’ பகுதியில ‘மைராடா வேளாண் அறிவியல் மைய’த்துல ‘காளான் வளர்ப்புப் பயிற்சி’ கொடுக்கப்போறதா அறிவிப்பு வந்திருந்துச்சு. மேலும் முறைப்படி காளான் வளர்ப்பைக் கத்துக்கலாம்னு அந்தப் பயிற்சியில கலந்துகிட்டேன். காளான் பத்தின விஷயங்களை முழுமையாகத் தெரிஞ்சுக்கிட்டு காளான் வளர்ப்புல இறங்குனேன்” என்ற தமிழ்ச்செல்வி தொடர்ந்தார்...

“காளானுக்குக் கிராமப்பகுதியில சரியான விற்பனை வாய்ப்பு இல்லை. அதனால, நான் உற்பத்தி பண்ணுன காளானை எடுத்துகிட்டு 60 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற மேட்டூர் அணைப் பகுதிக்குப் போய்... தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் குடியிருப்பு, மின்வாரிய பணியாளர் குடியிருப்பு, பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்புனு விற்பனை செஞ்சேன். அவங்க தரமான பொருளா இருந்தா, பணத்தைப்பத்திக் கவலைப்படாம வாங்குறாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.

அடுத்ததா காளான்கூட வேற ஏதாவது பொருளையும் சேர்த்து கொண்டுபோனா வருமானம் அதிகரிக்கும்னு தோணுச்சு. அப்போ ‘அன்னூரைச் சேர்ந்த சுந்தரம்ங்கிறவர் தன்னோட தோட்டத்துல வெளையுற நேந்திரன் வாழைக்காய்களை சிப்ஸ் தயாரிச்சு விற்பனை பண்றார்’னு பசுமை விகடன்ல படிச்ச செய்தி ஞாபகத்துக்கு வந்தது. உடனே எங்க தோட்டத்துல வெளையுற நேந்திரன் வாழைக் காய்களைச் சிப்ஸா மதிப்புக் கூட்டலாம்னு முடிவு செஞ்சோம். அப்புறம் சிப்ஸ் உற்பத்தி பண்ணி, காளான்கூட அதையும் கொண்டு போய் ஏவாரம் செஞ்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. நான் ஓர் இயற்கை விவசாயினு தெரிஞ்சுக்கிட்டதும், என் மேல வாடிக்கையாளர்களுக்கு நல்ல நம்பிக்கை வந்துடுச்சு.

விருது வாங்கிக்கொடுத்த மதிப்புக்கூட்டல்!

தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வாழைப்பூ, வாழைத்தண்டு, கம்பஞ்சாதம், தேங்காய்ப்பால், பன்னீர்னு அவங்கவங்களுக்குத் தேவைப்படுற பொருள்களைக் கேட்க ஆரம்பிச்சாங்க. அவங்க கேட்டதையெல்லாம் தயார் செஞ்சு விற்பனை பண்ண ஆரம்பிச்சேன். நான் விற்பனை பண்ற பொருள்கள் எல்லாமே எங்க தோட்டத்துல விளைஞ்ச பொருள்கள்ல இருந்து மதிப்புக்கூட்டி தயாரிச்சதுதான். இப்போ வைக்கோல் தட்டுப்பாடா இருக்குறதால, காளான் உற்பத்தியை மட்டும் நிறுத்தி வெச்சுருக்கோம்.

காலையில 5 மணிக்குப் பஸ் ஏறிடுவேன். 11 மணி வரைக்கும் வியாபரம் செஞ்சுட்டு திரும்புவேன். வீட்டுக்கு வர்றதுக்கு 2 மணி ஆகிடும். கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு 5 மணி வாக்குல அடுத்த நாள் ஏவாரத்துக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்க ஆரம்பிச்சுடுவேன்” என்ற தமிழ்ச்செல்வி நிறைவாக,

“தேங்காய்பால், கம்பஞ்சாதம், நேந்திரன் சிப்ஸ்னு விற்பனை செய்றதுல தினமும் 3,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. விவசாயம் கட்டுபடியாகாம சுணங்கியிருந்த சமயத்துல மதிப்புக்கூட்டல்தான் கைகொடுத்துச்சு. உற்சாகமா உழைச்சதால இன்னிக்கு மாநில விருது வாங்க முடிஞ்சது. அதுக்கு வழிகாட்டுன மைராடா வேளாண் அறிவியல் மையத்துக்கும் பசுமை விகடனுக்கும்தான் நன்றி சொல்லணும்” என்றார்.

தமிழ்ச்செல்வி,
செல்போன்: 75988 51437

மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்

மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் பொருள்கள் குறித்துப் பேசிய தமிழ்ச்செல்வி, “வருஷம் முழுக்க நேந்திரன் காய் கிடைக்கிற மாதிரி சுழற்சி முறையில சாகுபடி செய்றோம். ஒரு நாளைக்கு 4 கிலோ சிப்ஸ் தயார் பண்ணி விற்பனைக்குக் கொண்டு போறேன். 15 கிலோ எடை இருக்குற வாழைத்தார்ல இருந்து காய்களைப் பிரிச்சு சிப்ஸ் தயாரிச்சா 4 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ சிப்ஸ் 250 ரூபாய்னு விற்பனை செய்றேன். 4 கிலோ விற்பனை மூலமா 1,000 ரூபாய் கிடைக்குது. அறுவடை பண்ணி அப்படியே தாராக விற்பனை செஞ்சா 300 ரூபாய் கிடைக்கிறதே சந்தேகம்தான்.

தினமும் 12 கம்பு சாத உருண்டைகள் விற்பனையாகுது. இதைத் தயாரிக்க ஒன்றரை கிலோ கம்பு தேவைப்படும். ஒவ்வொரு உருண்டையும் 300 கிராம் அளவுல இருக்கும். ஓர் உருண்டை 20 ரூபாய்னு விற்பனை செய்றேன். அது மூலமா 240 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒன்றரை கிலோ கம்பு விலை 50 ரூபாய்தான்.

ஒரு தேங்காய்ல இருந்து 840 மில்லி தேங்காய்ப்பால் எடுக்கலாம். இதை 120 மில்லி கொண்ட பாக்கெட்களா போட்டு, ஒரு பாக்கெட் 10 ரூபாய்னு விற்பனை செய்றேன். இது மூலமா 70 ரூபாய் கிடைக்குது. ஒரு தேங்காய் 15 ரூபாய்தான். தேங்காய்பால் எடுத்து விற்பனை செய்றப்போ 55 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். தினமும் 20 பாக்கெட் விற்பனையாகுது.

தினமும் 150 ஒப்பிட்டு(போளி), 300 எள்ளுருண்டை, 70 கடலை உருண்டை, 70 ரவா லட்டுகள்னு தயாரிச்சு விற்பனை செய்றேன். இது மூலமாவும் கணிசமான வருமானம் கிடைக்குது. இதையெல்லாம் தயாரிக்கிறதுக்கு நெய், சர்க்கரைனு சேர்மானப்பொருள்கள், எரிபொருள், கரன்ட், போக்குவரத்துனு எல்லாச் செலவும் போகத் தினமும் 2,500 ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுடுது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism