‘‘கறுப்பு யூரியா என்று ஒரு வகை உயிர் உரம் உள்ளதைக் கேள்விப்பட்டோம். இதன் விவரத்தையும், என்னென்ன பயிர்களுக்குப் பயன்படுத்தலாம், எங்கு கிடைக்கும் என்ற தகவலைச் சொல்லுங்கள்?’’
கே.பச்சைமுத்து, அரக்கோணம்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை இணையத்தின் செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மைய முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் அரு.சோலையப்பன் பதில் சொல்கிறார்.
‘‘பிரேசில் நாட்டில் கரும்புச் சாகுபடியில் ஒரு ஹெக்டேரில் 3 பங்கு அதிகமாக மகசூல் எடுத்துள்ளார்கள். சாதாரணமாக 60 டன் கிடைத்து வந்த நிலங்களில் 180 டன் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் ‘அசிட்டோபாக்டர்’ (Acetobacter) என்ற நுண்ணுயிரியிலிருந்து கிடைக்கும் உயிர்உரம்தான் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது. அப்போதைய தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை இணையத்தின் ஆணையர், இந்தச் செய்தியை எங்களுக்கு அனுப்பி வைத்து, ‘இதுபோல் நம்மாலும் ஏன் செய்ய முடியாது’ என்ற கேள்வியையும் எழுப்பினார்.

ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில்தான் இந்த நுண்ணுயிரி வளரும் என்று கேள்விப்பட்டு அங்கெல்லாம் சென்று ஆய்வு செய்தோம். அது கிடைக்கவில்லை. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த ‘அசோஸ் ஸ்பைரில்லம்’ என்ற நுண்ணுயிர் வகைக் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில், மதுராந்தகம் சர்க்கரை ஆலையிலும், திருவெண்ணய்நல்லூர், செங்கல்வராயன் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையிலும் கோ.க-671 என்ற ரகக் கரும்பிலிருந்து சாறு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். 2000-மாவது ஆண்டில் எதேச்சையாக இந்தச் சாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, இதில் ‘அசிட்டோபாக்டர்’ இருந்தது கண்டறியப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் வைத்து அதைப் பெருக்கி, விவசாயிகளுக்குக் கொடுக்க முடிவு செய்தோம். இந்த உரத்தின் நிறம் கறுப்பு நிறமாக இருந்ததால், ‘கறுப்பு யூரியா’ என்றும் பெயரிட்டோம்.
வழக்கமாக உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள், பயிர்களின் வேர்களில்தான் வாழும். ஆனால், கறுப்பு யூரியா எனப்படும் அசிட்டோ பாக்டர் மட்டும் கரும்புக்கு உள்ளே சர்க்கரை சத்திலும், அமிலத் தன்மையிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. கரும்புக்குள்ளே இருந்துகொண்டு காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்துப் பயிருக்குக் கொடுக்கும்.
ஆய்வுக்கூடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் வயல்வெளிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்தோம். அதன்படி சாத்தனஞ்சேரி-தனபால், காவிதண்டலம் -கமலசேகரன், செங்கல்பட்டு-முகுந்தன் ஆகியோரும் உளுந்தூர்பேட்டை- சாரதா ஆசிரமமும் நாங்கள் கூறியபடி கரும்பு பயிரிட முன்வந்தார்கள். கரும்பு பயிரிட்ட வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ கறுப்பு யூரியா கொடுத்தோம். ரசாயன யூரியாவை முற்றிலும் நிறுத்தினோம். இருந்தும் மகசூல் 20% அளவுக்கு அதிகரித்தது. சோதனை வெற்றி பெற்றதால் தமிழகம் முழுக்க ‘கறுப்பு யூரியா’ பரவியது. இதன் பிறகும் வயல்வெளி சோதனைகள் தொடர்ந்தன. இதன் மூலம் இந்தியாவெங்கும் இதன் பயன்பாடு உணரப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைக் கேள்விப்பட்டுப் பிரேசில் நாட்டிலிருந்து டாக்டர் டெபனர் என்ற பெண்மணி இங்கே வந்தார். இவர்தான், இந்த நுண்ணுயிரியை முதன்முதலில் கண்டறிந்தவர். கரும்பு சாகுபடியில் நாம் எடுக்கும் மகசூல், இயற்கை உர பயன்பாடு ஆகியவற்றைப் பாராட்டிவிட்டுச் சென்றார். இந்தச் செய்தியை அறிந்த தென்கொரியா அரசு, ‘கறுப்பு யூரியா’ தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி எங்கள் உயிரியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.முத்துக்குமாரசாமி, ஓர் ஆண்டுக் காலம் அங்குத் தங்கியிருந்து தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தார்.
கறுப்பு யூரியாவைக் கரும்புக்கு மட்டுமல்லாமல், நெல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மலர்கள், சிறுதானியங்கள் என அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால், யூரியா போட வேண்டிய அவசியம் இருக்காது. ரசாயன உரச்செலவு மிச்சமாகும். கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தும்போது, அசோஸ் ஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.

ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு 6 கிலோ கறுப்பு யூரியாவை மூன்று முறை, தலா 2 கிலோ என்ற விகிதத்தில் பிரித்து பயன்படுத்தலாம். நெற்பயிரில் தொண்டை கதிர் வரத் தொடங்கிவிட்டால், கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தக் கூடாது. காரணம், தழைச்சத்து அதிகரித்தால் மகசூல் பாதிக்கப்படும்.
இந்தக் கறுப்பு யூரியா தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. செங்கல்பட்டில் உள்ள உயிரியல் ஆய்வு மையத்திலும், சில தனியார் இயற்கை உர விற்பனையகங்களிலும் கறுப்பு யூரியா விற்பனைச் செய்யப்படுகின்றன.இதன் விலை ஒரு கிலோ ரூ.60 தான்.’’
தொடர்புக்கு, முனைவர் அரு.சோலையப்பன், செல்போன்: 94433 31393,
செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மையம், தொலைபேசி: 044 27431393.
‘‘தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியத்தின் முகவரியைத் தெரிவிக்கவும்?’’
கே.சிவக்குமார், மஞ்சினி.
‘‘நம் நாட்டில் உள்ள மூலிகை வளங்களைப் பாதுகாக்க மத்திய அரசு 2000-ம் ஆண்டு தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியத்தை உருவாக்கியது. இந்த வாரியம் 57 வகையான, மூலிகைப் பயிர்களைச் சாகுபடி செய்ய மானியம் வழங்கி வருகிறது. அழிந்துவரும் அரிதான மூலிகைகளைப் பயிரிடுவதற்கு 75% மானியமும் இதர மூலிகைகளுக்கு 20% மானியமும் வழங்குகிறார்கள்.’’
தொடர்புக்கு:

National Medicinal Plants Board,
Ministry of AYUSH, Government of India,
301 & 309, 3rd Floor, AYUSH Bhawan,
B Block, G.P.O Complex,
I.N.A New Delhi-110023,
Website: www.nmpb.nic.in
Phone: 011 24651825.
E-Mail ID: info-nmpb@nic.in
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.