Published:Updated:

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 4மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 4மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

மண்ணுக்கு உயிருண்டு என்றும், உயிருள்ள மண்ணுக்குச் செயற்கை உரங்களான உப்புக்களைக் கொடுக்காமல் உயிர்க் கழிவுகளையும் எருவையும் உணவாகக் கொடுத்தால், நுண்ணுயிரிகளும் மண்புழுக்களும் பெருகி, மண்ணின் நலன் பாதுகாக்கப்படும் என்று கடந்த இதழில் பார்த்தோம்.

நம் கலாசாரத்தில் உரம், பூச்சிக்கொல்லி என்ற சொல்லாடல்கள் என்றுமே இருந்ததில்லை. அவை பசுமைப்புரட்சிக்குப் பிறகு வந்த சொற்களே. எரு, பூச்சிவிரட்டி என்றுதான் நம் மரபு வேளாண்மையில் பேசியிருக்கிறார்கள். இவை வெறும் சொற்கள்தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், அவற்றுக்குள் வாழ்வையும், வேளாண்மையையும் எந்தக் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கிறோம் என்ற செய்தி உள்ளது. மரபு வேளாண்மை என்பது, உயிர்ச்சூழலைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்காமல், முழுமையாகப் பார்த்த நம் கலாசாரத்தின் வெளிப்பாடு.

நம் கலாசாரத்தில், சேயைவிடத் தாய்க்குத்தான் கவனிப்பு அதிகமிருக்கும். பிரசவத்தின்போது ஏதாவது சிக்கல் என்றால்கூட, தாயை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் நாம் பதறுவோம். இதற்கு அர்த்தம், சேயின்மீது நமக்கு அக்கறை இல்லை என்பதல்ல. மாறாக, தாயை அன்புடன் கவனித்தால், அது சேயின் நலத்தை உறுதி செய்யும் என்பதுதான். அதேபோல்தான் நம் முன்னோர் மண்ணுக்கு அதிகம் முக்கியத்துவம் தந்தார்கள். பயிருக்கல்ல. மண்ணுக்கு உணவளித்து, அதன் நலத்தை உறுதிசெய்தால், பயிர் செழிக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

ஆனால், பசுமைப்புரட்சி இதற்குத் தலை கீழான சிந்தாந்தத்தைக் கொண்டிருந்தது. அதனால்தான், நவீன வேளாண்மையில் உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் பயிர்களின் மீது இன்னமும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. சேயின் மீது மட்டுமே அக்கறை கொண்ட நவீன வேளாண்மை, தாயான மண்ணின் மீது கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல், மண்ணின் நலனை அழித்துவருகிறது. ஆனால், தாயை இழந்துவிட்டால், சேயைக் காப்பாற்றவே முடியாது என்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரத் தொடங்கினால், மண்ணின் நலன் காக்கும் முயற்சியே நம் முதல் பணியாக மாறும். அதாவது, மண்ணின் நலனைக் காக்க, அதிலுள்ள உயிர்களுக்கு உணவளிப்பதே நம் முதல் பணியாக உருவெடுக்கும்.

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!


அந்தப் பணியில் நம்முடன் சக தோழராய் நிற்பவை மாடுகள். அதனால்தான் மாட்டுப் பொங்கலன்று நாம் மாட்டுக்குப் பூஜை செய்து வழிபடுகிறோம். இந்தப் பூஜை செய்யும்போது, மாட்டின் முன்பக்கம் பூ போட்டு பூஜையை நாம் முடித்துவிடுவதில்லை. மாறாக, முக்கியமாக அதன் பின்பக்கத்தைத்தான் தீபம் காட்டி வழிபடுகிறோம். ஏனெனில், பின்பக்கத்தில்தான் லட்சுமி அமர்ந்திருப்பதாக நம் கலாசாரம் சொல்கிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. மண்ணின் நலனைக் காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் சாணமும் சிறுநீரும் மாட்டின் பின்பக்கத்திலிருந்துதானே கிடைக்கின்றன. அவற்றின் மூலம்தான் மண் நலம் பெருகி, நம் வளமும் வருமானமும் பெருகுகின்றன. அப்படியானால், செல்வத்தின் அதிபதியான லட்சுமி மாட்டின் பின்பக்கத்தில் இருப்பதாக நம் முன்னோர் நினைத்தது சரிதானே...

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

சாணத்தைவிடச் சிறந்த இடுபொருளும், சிறுநீரைவிடச் சிறந்த பூச்சிவிரட்டியுமில்லை என்பார்கள். சாணம், சிறுநீர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத்தான் பாலுக்கு நம் கலாசாரம் இடம் அளித்திருந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழ். பசுமைப்புரட்சிக்குப் பிறகு விவசாயத்தில் மாட்டைப் பற்றிப் பெரும்பாலும் நாம் நினைப்பதேயில்லை. உழுவதற்கு டிராக்டர்கள் வந்துவிட்டதால், உழவுமாடுகள் பழங்கதையாகிவிட்டன. உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மாட்டின் சாணம் மற்றும் சிறுநீரை வேண்டாத பொருள்களாக்கிவிட்டன. வெண்மைப் புரட்சிக்குப் பிறகு, பாலைப் பற்றி மட்டும்தான் சிந்திக்கிறோம். அதனால்தான் நாட்டு மாடுகளுக்குப் பதிலாக, கலப்பினப்பசுக்களை நாம் வளர்க்கிறோம். நாட்டு மாடுகளையும், மண்ணையும் முற்றிலுமாக மறந்து விட்டோம்.

மாட்டுக்கும், மண்ணின் நலத்துக்கும் உள்ள தொடர்பை, நம் முன்னோர் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் புரிந்து வைத்திருந்தனர். ஒரு வயலில் உள்ள மண் நலமாக உள்ளதா, இல்லையா என்பதை மாட்டின் சாணத்தைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? வயலில் மாட்டைச் சாணம் போடவிட்டு,  இரண்டு மூன்று நாள்கள் கழித்துப் பாருங்கள். சாணம் பூப்போல மலர்ந்திருந்தால், அந்த மண்ணில் நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் அதிகம் இருக்கின்றன. ஈரப்பதமும் இருக்கிறது, மண்ணும் நலமாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படியில்லாமல், சாணம் வறண்டு வரட்டிபோல இருந்தால், அந்த மண்ணில் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் இல்லை, மண்ணும் நலமாக இல்லை என்று அர்த்தம்.

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

நுண்ணுயிர்களுக்கு உணவாகும் சாணம், மண்ணின் மட்கை அதிகரித்து, அதன் நலத்தைப் பாதுகாக்கிறது. எனவே, மண்ணின் நலத்தைப் பாதுகாப்பதற்காக மாடுகளை வளர்ப்பது மிக முக்கியம். ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு மாட்டையாவது வளர்க்க வேண்டும். அதுவும் நாட்டு மாடாக இருந்தால் இன்னும் சிறப்பு. ஏனெனில், நம் தட்ப வெப்பச் சூழலுக்கேற்ற தகவமைப்பு நாட்டு மாடுகளுக்கு இருக்கு என்பதால், அவற்றை வளர்க்கச் சிறப்புக் கவனம் தேவையில்லை.

மாட்டின் சாணம், இலை தழைகள் போன்றவற்றால், நுண்ணுயிர்கள் பெருகுவதோடு மண் புழுக்களும் நம் மண்ணில் பெருகும். மாடுகள் மண்ணுக்கு வெளியிலிருந்து மண்ணின் நலத்துக்குத் துணை புரிபவை. மண்புழுக்கள் மண்ணிலிருந்து கொண்டே மண்ணின் நலத்துக்கு உதவுபவை. உண்மையில் மண்ணின் நலன் காட்டும் நாடி மண்புழுக்கள் தான். மண்புழுக்களைப் புரிந்துகொள்வதன் மூலம், மண்ணையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

மாடுகளைப் போலவே, மண்புழுக்களிலும் நாட்டு மண்புழுக்கள், வெளிநாட்டு மண்புழுக்கள் உள்ளன. நான் மண்புழுக்கள் குறித்த ஆராய்ச்சியை ஆரம்பித்த 1978-ம் ஆண்டிலிருந்தே நாட்டு மண்புழுக்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசி வருகிறேன். முடிந்தவரை நாட்டுப் புழுக்களைத்தான் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து.

நான் மண்புழு ஆராய்ச்சியைத் தொடங்கிய காலகட்டத்தில் மும்பையில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அந்தக் கருத்தரங்கில் நானும், என் நண்பர்களும் நாட்டுப் புழுக்களை உயர்த்திப் பிடிக்க... பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், வெளிநாட்டுப்புழுக்களுக்கு ஆதரவாகப் பேசினார். அதற்குக் காரணம், அவை அதிகம் உண்டு, அதிகம் கழிக்கும், அதன் மூலம் மண்வளம் பெருகும் என்பதுதான். நானும் என் நண்பர்களும் விலங்கியல் துறையைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்தப் பேராசிரியர், வேளாண் துறையைச் சார்ந்தவர். எனவே அவர் குரலே எடுபட்டது. அதற்குப் பிறகு வெளிநாட்டுப்புழுக்களுக்கு மவுசும் அதிகரித்தது.

மண்புழுக்களின் கழிவே, மண்ணின் மேல் காணப்படும் மண்புழுக் கட்டிகள் (Vermi Casting). இவை மண்ணின் வளத்துக்குக் காரணமாகின்றன. எனவே வெளிநாட்டு மண்புழுக்களை வளர்த்தால் சீக்கிரம் சத்துள்ள மண் கிடைக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டு மண்புழுக்கள் வாழும் மண்ணில், நாட்டு மண்புழுக்கள் வாழ இயலாது.

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

ஏனெனில் வெளிநாட்டு மண்புழுக்களை ஊட்டம் உள்ள மண்ணில் விட்டால் அவை அதிகம் உணவு உண்டு, அதிகம் கழித்து, அதிகம் இனப்பெருக்கம் செய்யும். இதனால், நாட்டுப் புழுக்களுக்கு உணவு கிடைக்காமல் அவை மெள்ள மெள்ள அந்த மண்ணிலிருந்து வெளியேறிவிடும். மேலும் வெளிநாட்டு மண்புழுக்களின் கழிவில் நாட்டு மண்புழுக்கள் வாழ விரும்பாது. எனவேதான் நீங்கள் வெளிநாட்டு மண்புழுக்களைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தால்கூட, அவற்றை மண்புழு உரத் தொட்டிகளில் மட்டுமே வளர்க்க வேண்டும். அந்த மண்புழுக்களை நீங்கள் மண்ணுக்குக் கொண்டுசென்றால், நம் நாட்டு மண்புழுக்களை இழக்க நேரிடும் என்கிறோம்.

‘மண் வளமானால் சரி, எந்தப்புழுவைப் பயன்படுத்தினால் என்ன?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாட்டு மண்புழுக்களை வளர்ப்போம் என்று நான் சொல்வதில் காரணம் இல்லாமல் இல்லை.

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

அறிவியல் சொல்லாடலில் ‘Ecotype’ என்று சொல்வார்கள். ‘Eco’ என்றால் ‘இல்லம்’ என்று பொருள். நம் பூமியான இல்லத்தைப் பற்றிப் படித்தால், அது ‘சூழலியல்’ எனப்படும் ‘Ecology’. இல்லத்தின் மதிப்பைப் பற்றிப் படித்தால் அது ‘பொருளாதாரம்’ எனப்படும் ‘Economics’. இன்று பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், நம் இல்லமான பூமியின் நலன் மறந்து அதைச் சிதைத்து வருகிறோம். நமக்குத் தேவை சூழலியல் பொருளாதாரமே. சூழலை மறந்த பொருளாதாரமல்ல. சரி Ecotype விஷயத்துக்கு வருவோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிரின வகையை ஒரு Ecotype எனலாம். அதாவது அந்தப்பகுதிக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட தாவர, விலங்கு மற்றும் நுண்ணுயிர்களை இந்தச் சொல் குறிக்கும். இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லி நண்பர் ஒருவருடன் தொடர்வண்டியில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். தொடர்வண்டி ஆந்திராவைத் தாண்டும் போதே நாம் ஸ்வெட்டர் அணியத் தொடங்குவோம். ஆனால், நம்முடன் இருக்கும் டெல்லி நண்பர் ஸ்வெட்டர் அணியாமலேயே பயணிப்பதைப் பார்க்கலாம். நமக்கு 18-19 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையிலேயே குளிர ஆரம்பிக்கும். ஆனால், டெல்லி நண்பருக்கு 12-13 டிகிரி வெப்பநிலையில்தான் குளிரெடுக்கும். நம் டெல்லி நண்பரின் உடல், டெல்லித் தட்ப வெப்பத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கும். நம் உடல், தமிழகத் தட்ப வெப்பத்துக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கும்.

மண், மக்கள், மகசூல்! - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்!

எனவேதான் அந்தந்தப் பகுதிக்கான பல்லுயிர்கள் வளர்வதற்கான சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட Ecotype உயிரினத்தை, அதேபோன்ற இன்னொரு Ecotype உயிரினம் வாழும் புதுச் சூழலில் கொண்டுபோய் விட்டால், அது ஏற்கெனவே அந்தப் பகுதியில் வாழும் உயிரின வகையை நிச்சயம் பாதிக்கும். உண்மையில் அது இரண்டு Ecotype உயிரினங்களுக்குமே நல்லதல்ல என்பதைச் சூழலியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள். எனவேதான், மண்புழுக்களைப் பொறுத்தவரை நாட்டு மண்புழுக்களையே வளர்ப்போம், அதற்கான சூழலை உருவாக்குவோம் என்கிறேன்.

‘காரணம் புரிந்துவிட்டால், காரியம் தானாகவே நடக்கும்’ என்பார்கள். மண்ணின் நலனைக் காக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளும், நாட்டு மண்புழுக்களும் ஏன் அவசியம் என்பதை நான் இவ்வளவு விரிவாகப் பேசியதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இனி மண்ணின் நலன் காக்கும் செயலில் நாம் இறங்கலாம்தானே...

-முயற்சி தொடரும் 

நூற்ப் புழுக்கள் மண்புழுக்களல்ல!

ஒரு சிலர் என்னிடம் பேசும்போது, ‘மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்கிறீர்கள். ஆனால் அவை பயிர்களின் வேர்களைக் கடித்துவிடுகின்றனவே?’ என்று கவலையாகச் சொல்வார்கள். ஒருமுறை அப்படிச் சொன்ன ஒருவருடன் அவரின் வயலுக்குச் சென்று, ‘வேர்களைக் கடித்த புழுக்களைக் காண்பியுங்கள்’ என்றேன். அவர் காண்பித்தது மண்புழுக்களையல்ல.

உருளைப் புழுக்கள் அல்லது நூற்புழுக்கள் எனப்படும் ‘நெமட்டோட்’ புழுக்களை. நெமட்டோட் புழுக்கள் பயிர்களைத் தாக்கும் உயிரிகள். மண்புழுக்கள், பயிருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. பொதுவாக மண்புழுக்கள் உயிருள்ளவற்றை (தாவரப் பகுதிகள் உள்பட) விரும்பிச் சாப்பிடுவதில்லை. சரி இரண்டு வகைப்புழுக்களையும் அடையாளம் காணுவது எப்படி? புழுவின் உடலில் மோதிரம், மோதிரமாக (Segments) இருந்தால் அது மண்புழு. எந்தவிதமான மோதிரமும் இல்லாமல் இருந்தால், அது நெமட்டோட் புழு. இனி, நெமட்டோட் புழுக்கள் வேர்களைக் கடிப்பதைப் பார்த்துவிட்டு, பாவம் அப்பாவியான நம் மண்புழுக்கள் மீது பழியைப் போடாதீர்கள்.

வேர்ப்பூச்சிகளை விரட்ட எளிய வழி

ரசத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுவது நல்லது என்கிறோம். ஏனெனில், ரசத்தில் பெருங்காயம், பூண்டு ஆகியவை உள்ளன. இவை, கிருமிகளை அழித்து, ஜீரணத்தைத் தூண்டும். வேர்ப்பூச்சிகளை விரட்ட ரசத்தில் சேர்க்கும் பொருள்களையே நாம் பயன்படுத்தலாம். 100 கிராம் பூண்டு, 100 கிராம் இஞ்சி மற்றும் 10 கிராம் பெருங்காயம் ஆகியவற்றை எடுத்து அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் 1 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 9 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து, 12-15 நாள்கள் ஊற விடுங்கள். பிறகு, கரைசலை வடிகட்டி, தேவையான அளவு தண்ணீர் கலந்து நீர்மமாக்கி(Dilute) வேர்களில் பயன்படுத்தலாம். எவ்வளவு தண்ணீர் கலக்கலாம் என்பதைச் சோதனை முறையில் பயன்படுத்தித் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், நீர்மக் கரைசலை முதலில் கொஞ்சம் பயிருக்குப் பயன்படுத்திப் பாருங்கள். பயன் இருந்தால் பயிர் முழுமைக்கும் பயன்படுத்தலாம். இயற்கைப் பொருள்தானே என்று அளவுக்கு மீறி பயன்படுத்தாதீர்கள். ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பதை மறந்துவிடாதீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism