Published:Updated:

வாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்!
வாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்!

முயற்சிஇ.கார்த்திகேயன் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பிரீமியம் ஸ்டோரி

‘எங்க வீட்டுல மரம் வளர்க்க இடம் இருக்கு’ என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினால் போதும்... உடனே வந்து குழி எடுத்து மரக்கன்றை நட்டுக்கொடுத்து, கூண்டையும் அமைத்துத் தந்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள் ஒரு வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள். மதுரையில் இயங்கி வரும் இக்குழுவின் பெயர் ‘மழைத்துளி’. இக்குழுவின் மூலம் மதுரை மாநகரம் செழித்து வருகிறது.

தீபா, கோமதி, மதுமதி, பிரியா, ஆஷா, ஸ்ரீலேகா, சசிகலா, வாலன்டினா, மதன்குமார், சதீஷ், மணி, பாலாஜி, ஸ்ரீதரன், பிரசன்ன யுவராஜ், வெங்கடேஷ் ஆகிய 15 நபர்கள்தான் இக்குழுவின் உறுப்பினர்கள். இதில் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகள். ஏனையோர், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்களில் பத்து பேர்தான் மதுரையில் வசிக்கிறார்கள். மீதி ஐந்து பேர் வெளியூர்க்காரர்கள். இவர்கள் வெளியிலிருந்து இக்குழுவின் பணிகளுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.

வாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்!

இந்த வாட்ஸ்அப்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதன்குமார், மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, வெள்ளளூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறார்.

“ஃபேஸ்புக் மூலம் இணைந்த மதுரை நண்பர்கள் நாங்கள். சமூகத்துக்கு எதாவது நல்லது செய்யலாம்னு பேசிக்கிட்டிருக்கும்போதுதான்... மழை வளத்தைப் பெருக்குறதுக்கு அடிப்படையாக இருக்கும் மரங்களை அதிகளவில் வளர்க்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காகத்தான் ‘மழைத்துளி’னு பேர் வெச்சு வாட்ஸ்அப் குழுவை ஆரம்பிச்சோம். ஆரம்பிக்கும்போது 4 பேர்தான் உறுப்பினர்கள். குழு ஆரம்பிச்ச பிறகு, வில்லாபுரம் பகுதியில் மரங்கள் இல்லாத தெருக்கள்ல ஒவ்வொரு வீடாகப் போய், ‘உங்க வீட்டு முன்னாடி மரக்கன்று நட்டு வெச்சா வளர்ப்பீங்களா’ கேட்டு சர்வே எடுத்தோம். அவங்கள்ல கொஞ்ச பேர் சம்மதிக்கவும் முதல் கட்டமாக 8 மரக்கன்றுகளை நட்டு கம்பிக்கூண்டு அமைச்சுக் கொடுத்தோம். அப்புறம் இதே விஷயத்தை மற்ற வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாவும் பரப்பினோம். அதுக்குப்பிறகு மதுரை மாவட்டத்துல இதுவரைக்கும் 752 பேர் தங்களோட முகவரியைப் பதிவு செஞ்சுருக்காங்க.

போன ஜனவரி மாசத்துல இருந்து இதுவரை 132 வீடுகள்ல மரக்கன்றுகள் நட்டு வெச்சுருக்கோம். கொஞ்சம் கொஞ்சமா பதிவு செஞ்சுருக்குற எல்லாருடைய வீடுகள்லயும் மரக்கன்றுகளை நட்டுடுவோம். மதுரை மாவட்ட வனத்துறை மூலமா விற்பனை செய்ற வேம்பு, புங்கன் மாதிரியான மரக்கன்றுகளைத்தான் நடவு செய்றோம். ஒரு கன்றுக்கும் ஒரு கூண்டுக்கும் சேர்த்து 150 ரூபாய் செலவாகுது. இதை எங்க வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர்கள்தான் பகிர்ந்துக்கிறோம்.

வாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்!

மரக்கன்றுகள் நட்ட உடனே சம்பந்தப்பட்ட வீட்டு மொபைல் எண்ணை ‘மழைத்துளி மரக்கன்றுகள் நிலவரம்’ங்கிற வாட்ஸ்அப் குரூப்ல சேர்த்துடுவோம். அவங்க, அப்பப்போ கன்றுகளோட வளர்ச்சியை அப்டேட் செய்வாங்க. நாங்களே 15 நாள்களுக்கு ஒருமுறை கன்னுகளோட வளர்ச்சியை நேர்ல பார்த்துடுவோம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மரக்கன்றுகளை நட்டுக்கிட்டுருக்கோம்” என்றார் மதன்குமார்.

குழு உறுப்பினர் தீபாவிடம் பேசினோம். “வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைதான் மரம் நடும் வேலையைச் செய்றோம். வெள்ளிக்கிழமையே அதுக்கான முன்னேற்பாடுகளைத் திட்டமிட்டுடுவோம். சனிக்கிழமை சாயங்காலம் மரக்கன்று, கூண்டுகளை வாங்கி வெச்சுடுவோம்.

வாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்!

ஞாயிற்றுக்கிழமை காலையில் சரியா 9 மணிக்கு குழி எடுக்குற வேலையை ஆரம்பிச்சுடுவோம். குழி எடுக்கிறதுக்காகத் தோட்ட வேலை செய்ற தாத்தா ஒருத்தரை எங்ககூட வெச்சுருக்கோம். அவர்தான் குழி எடுத்துத் தொழுவுரத்தையெல்லாம் போட்டுக் கொடுப்பார். சம்பந்தப்பட்ட வீட்டுல இருக்குற குழந்தைகளை விட்டு மரக்கன்றை நடவு செய்வோம். அப்போதான், ‘நான் வெச்ச மரம்’னு பராமரிக்கிற ஆசை வரும். இந்த மாதிரி போறப்போ என் கணவரும், மகனும் என்கூட வந்துடுவாங்க. இப்படி மரக்கன்றுகளை நடவு செய்றது ரொம்பச் சந்தோஷமா இருக்கு” என்றார்.

பெரும்பாலான வாட்ஸ்அப் குழுக்கள் தேவையற்ற அரட்டைக் குழுக்களாகவே இருந்துவரும் சூழ்நிலையில், பூமியைக் குளுமைப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவரும் மழைத்துளி குழுவினருக்கு ‘பசுமைவிகடன்’ சார்பில் வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

தொடர்புக்கு,
மழைத்துளி வாட்ஸ்அப் குழு,
செல்போன்: 86089 05957.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு