Published:Updated:

உன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து!
உன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து!

80 சென்ட்... 90 நாள்கள்... ரூ 20 ஆயிரம்!மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

பிரீமியம் ஸ்டோரி

ஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள செல்லப்பன் பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் பலரும் இயற்கை முறை வேளாண்மைக்கு மாறி சிறப்பான வருமானம் பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் செல்லப்பன் பேட்டையைச் சேர்ந்த செல்லத்துரை. இவர் இயற்கை முறையில் குறைவான செலவில் உளுந்துச் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.

அறுவடை செய்யப்பட்ட உளுந்தைக் களத்தில் காய வைத்துக் கொண்டிருந்த செல்லத்துரையிடம் பேசினோம். “நான் எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம் முழு நேரமா விவசாயத்துக்கே வந்துட்டேன். எங்களுக்கு மொத்தம் பத்து ஏக்கர் நிலம் இருக்கு.

உன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து!

செம்மண் பூமி. கிணற்றுப் பாசனம்தான் செய்றோம். கிணத்துல தண்ணீர் இருப்பைப் பொறுத்து உளுந்து, சோளம், கடலை, துவரை, எள்ளு, கரும்புனு சாகுபடி செய்வேன். ரசாயன விவசாயத்துல செலவு கட்டுபடியாகாததால இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். ரெண்டு வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன்” என்ற செல்லத்துரை தன்னுடைய உளுந்துச் சாகுபடி குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“போன மார்கழிப்பட்டத்துல 83 சென்ட் நிலத்துலஆடுதுறை-5 ரக உளுந்தை விதைச்சேன். அதுதான் இப்போ அறுவடையாகியிருக்கு. மொத்தம் 370 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. ரசாயன முறையில சாகுபடி செஞ்சப்போ, ஒரு ஏக்கர் நிலத்துலேயே 300 கிலோ அளவுதான் மகசூல் கிடைச்சது. உளுந்து விவசாயத்துல பச்சைத் தத்துப் பூச்சி, அசுவினி, காய்ப்புழு, மஞ்சள் நோய் தாக்குதல்னு ஏகப்பட்ட பிரச்னைகளைச் சமாளிச்சாகணும். அதுக்காக, ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிக்கும் ஆயிரக்கணக்குல செலவு பண்ண வேண்டியிருக்கும்.

உன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து!

ஆனா, இயற்கை முறையில செலவே கிடையாது. இயற்கை விவசாயத்துல பெரியளவுல பூச்சித்தாக்குதலோ, நோய்த்தாக்குதலோ வர்றதில்லை. செடிகள் நல்லா தளதளனு செழிப்பா, ஒண்ணே முக்கால் அடி உயரத்துக்கு வளர்ந்திருந்துச்சு. 90 நாள்ல பயிர் அறுவடைக்கு வந்துச்சு. அறுவடை வரைக்குமே பசுமை குறையல. உளுந்து நல்லா திரட்சியா, அதிக மாவுத்தன்மையோடு இருக்கு. கொஞ்சம்கூடப் பொக்கு இல்லை.

தோலை உரிச்சுப் பார்த்தபோது பருப்பு நல்லா வெள்ளையா இருந்துச்சு. ரசாயன முறையில சாகுபடி செஞ்சோம்னா, இந்தளவுக்கு உளுந்து தரமா இருக்காது” என்ற செல்லத்துரை விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார். மொத்தம் கிடைச்சுருக்குற 370 கிலோ உளுந்துல 320 கிலோ உளுந்து நல்லா பெருசா உருட்டா இருக்கு. மீதி 50 கிலோ கொஞ்சம் சைஸ் கம்மியா இருக்கு. ரசாயன உரம் பயன்படுத்தி விளைவிச்சா, ஒரு கிலோ உளுந்து, 40 ரூபாய்ல இருந்து 45 ரூபாய் வரைதான் விற்பனையாகும். நான் இயற்கை முறையில விளைவிச்சதால ஒரு இயற்கை விவசாயி, கிலோவுக்கு 60 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிறதா சொல்லியிருக்கார்.

உன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து!

அந்த வகையில 320 கிலோ உளுந்தை கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 19,200 ரூபாய் கிடைக்கும். மீதி 50 கிலோ உளுந்தை கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சா 1,500 ரூபாய் விலை கிடைக்கும். மொத்தம் 20,700 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல எல்லா செலவும் போக, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபமாக மிஞ்சும்” என்று சொல்லி உளுந்தைக் காய வைப்பதில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
செல்லத்துரை,
செல்போன்: 97903 49074

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் நிலத்தில் உளுந்துச் சாகுபடி செய்யும் முறை குறித்துச் செல்லத்துரை சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் புழுதி உழவு ஓட்ட வேண்டும். பிறகு மண்ணை லேசாக ஈரப்படுத்தும் அளவுக்குத் தண்ணீர்ப் பாசனம் செய்து, இரண்டரை டன் எருவைக் கொட்டிப் பரப்ப வேண்டும். இரண்டு நாள்கள் கழித்து, இரண்டு சால் உழவு ஓட்டி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 10 கிலோ விதையைத் தூவி விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாசனம் செய்து வர வேண்டும்.

3 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்துத் துணியில் கட்டி, 3 லிட்டர் தண்ணீரில் 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, அக்கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, இதனுடன் 100 மில்லி காதிசோப் கரைசல் கலந்துகொள்ள வேண்டும். விதைத்த 20-ம் நாள் இக்கரைசலைச் செடிகள்மீது தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதனால், பச்சைத்தத்துப் பூச்சிகள் தாக்குதலைத் தவிர்த்துவிடலாம்.

30-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் இ.எம் கரைசல், 500 மில்லி மீன் அமினோ அமிலம், தலா 100 மில்லி புங்கன் எண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 3 லிட்டர் பஞ்சகவ்யா, ஒன்றரை லிட்டர் இ.எம் கரைசல், 2 கிலோ வெல்லம் தலா 100 கிராம் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, ட்ரைக்கோ டெர்மா விரிடி, 60 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் வெயில் அதிகமாக இருந்தால் அசுவினிப்பூச்சி தாக்குதல் ஏற்படும். அதனால், 5 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்து, துணியில் கட்டி, 5 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, அக்கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

55-ம் நாளுக்குமேல் காய் பிடிக்கத் தொடங்கும். காய்புழுத் தாக்குதல் இருந்தால், 130 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கரைசல் கலந்து தெளிக்கலாம். 70-ம் நாள் 5 லிட்டர் புளித்த மோரை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், காய் திரட்சியாக இருக்கும். 75-ம் நாளுக்குமேல் காய்கள் முற்ற தொடங்கும். 90-ம் நாளில் அறுவடை செய்யலாம்.

விதைநேர்த்தி

10 கிலோ விதையைத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஆறிய அரிசி கஞ்சியில் 200 மில்லி பஞ்சகவ்யா, 200 மில்லி இ.எம் ஆகியவற்றைக் கலந்து, அதில் விதைகளைக் கொட்டி நன்கு குலுக்க வேண்டும். கை அல்லது குச்சியால் கிளறக்கூடாது. பிறகு நிழலில் சணல் சாக்கு விரித்து விதைகளை உலர்த்தி மாலை நேரத்தில் விதைக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு