Published:Updated:

வேதனையைக் கொடுக்கும் வேதாந்தா... கொதிக்கும் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேதனையைக் கொடுக்கும் வேதாந்தா...  கொதிக்கும் விவசாயிகள்!
வேதனையைக் கொடுக்கும் வேதாந்தா... கொதிக்கும் விவசாயிகள்!

பிரச்னைஇ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

பிரீமியம் ஸ்டோரி

ரு பக்கம் ஹைட்ரோ கார்பனை எதிர்த்துப் போராட்டம், இன்னொரு பக்கம் காவிரி நீருக்காகப் போராட்டம், மற்றொரு பக்கம் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் என தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஐந்து வயது குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை பதாகைகளைத் தாங்கிக்கொண்டு போராட்டக் களத்தில் நிற்க வேண்டிய ஒரு மோசமான சூழ்நிலைக்கு நம்மை ஆளாக்கியிருக்கிறார்கள் இந்தியத்திருநாட்டை ஆள்பவர்கள்.

வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமான ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூத்துக்குடியில் இயங்கிவருகிறது. ஆலை துவங்கப்பட்ட சமயத்திலிருந்தே கிராம மக்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரும், இந்த ஆலையை அமைக்கக் கூடாது, இதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிவந்தனர். தற்போது ஆலை விரிவாக்கப் பணியால் விவசாய நிலங்களும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியாபுரம், சங்கரப்பேரி, மீளவிட்டான் எனச் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இறங்க, மக்கள் எழுச்சியுடன் மாபெரும் போராட்டமாக உருவெடுத்துவிட்டது.

வேதனையைக் கொடுக்கும் வேதாந்தா...  கொதிக்கும் விவசாயிகள்!

ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நம்மிடம் பேசிய அ.குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த லதா, “சிப்காட் தொழில்வளாகத்துக்குனு சொல்லி எங்ககிட்ட இருந்து கட்டாயப்படுத்தி வாங்கின நிலத்துலதான் ஸ்டெர்லைட் ஆலை இருக்கு. நாங்களே 15 ஏக்கர் நிலத்தைக் கொடுத்திருக்கோம். குதிரைவாலி, நாட்டுக் கம்பு, நாட்டுப்பருத்தி, சோளம், வெங்காயம், எள், கொண்டைக்கடலைனு விளையுற மானாவாரி நிலம். இப்போ மிச்சம் 2 ஏக்கர் நிலம்தான் எங்ககிட்ட இருக்கு. என்ன பயிர் போட்டாலும், ஆலையில இருந்து வெளியாகுற நச்சுப்புகையால் எல்லாம் கருகிப் போயிடுது. கிட்டத்தட்ட 20 வருஷமா இந்தக் கொடுமையை அனுபவிச்சுட்டு இருக்கோம். எங்க நிலத்துல எப்பவும் முளைச்சு நிக்கிற அவுரிச்செடிகூட இப்போ முளைக்கிறதில்லை. நிலமே கட்டாந்தரையா மாறிப்போச்சு” என்றார் ஆதங்கத்துடன்.

“எனக்கு 67 வயசாகுது. ஆடு மாடு மேய்க்கிறதுதான் தொழில். முன்னாடியெல்லாம் எங்க சுத்துவட்டாரப்பகுதிகள்ல, வீட்டுக்கு வீடு ஆடுகளும் மாடுகளும் மலிஞ்சு கிடக்கும். கன்னி ஆடு, கொடி ஆடு, கீழக்கரிசல், சுத்த கறுப்பு, பட்டிணம், மேலக் கரிசல், செவ்வாடுனு பலவகையான ஆடுகள் இருந்துச்சு. நாட்டு மாடுகளும் கணக்கு வழக்கில்லாம இருந்துச்சு. இந்த ஆலை வந்ததுக்கப்புறம் ஆடு மாடுகளே இல்லாத சூழ்நிலை உருவாகிடுச்சு” என்று வருத்தப்படுகிறார் முதியவரான சண்முகம்.

வேதனையைக் கொடுக்கும் வேதாந்தா...  கொதிக்கும் விவசாயிகள்!

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, கேரள மாநிலத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுற்றுப்புறவியல் துறை பேராசிரியர் முனைவர் அருணாச்சலத்திடம் பேசினோம்.

“ஸ்டெர்லைட் ஆலையில் தாதுக்களை உருக்கித் தாமிரம் தயாரிக்கப்படுகிறது. அப்போது வெளிவரும் புகையில் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, அயன் ஆக்ஸைடு ஆகியவை கூட்டாக உள்ளன. இவை அனைத்துமே நச்சுகள்தான். இந்தப்புகை காற்றில் கலப்பதால் இப்பகுதியில் பெய்யும் மழைகூட அமிலமழையாகத்தான் இருக்கும். இதனால், மண் மலடாகும்.

தாமிரம் தயாரிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் சல்பர் கழிவுகள் திடக்கழிவுகளாகக் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இக்கழிவின்மீது மழைநீர் பட்டுப் பூமியில் இறங்கும்போது நிலத்தடி நீரும் நஞ்சாக மாறும். இந்த நஞ்சு மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இனப்பெருக்க ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற திடக்கழிவுகளை மண்ணில் நேரடியாகக் கொட்டாமல்... சிமென்ட் மூலம் அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பில்தான் கொட்ட வேண்டும். ஆனால், எந்த ஆலையும் அப்படிச் செய்வதில்லை” என்றார்.

வேதனையைக் கொடுக்கும் வேதாந்தா...  கொதிக்கும் விவசாயிகள்!

மக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்பு கொண்டபோது நம்மிடம் பேசிய ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜிஜோ, “காப்பர் தயாரிப்பில் வெளியாகும் தண்ணீரை நிலத்தில் விடுவதில்லை. அதை ஆலைக்குள்ளேயே மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறோம். காப்பர் தயாரிப்பின்போது வெளியாகும் திடக்கழிவான சல்பரை, சல்பியூரிக் ஆசிட்டாகவும், பாஸ்பாரிக் ஆசிட்டாகவும் மாற்றி உரத்தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்கிறோம். இவையிரண்டுமே உரத்தொழிற்சாலைகளுக்கான முக்கிய மூலப்பொருள்கள். சல்பரை வீணாக்கினால், எங்களுக்குத்தான் பெருநஷ்டம். எந்தவித மருத்துவச்சான்றும் இல்லாமல், ஆலையால் புற்றுநோய் வருவதாக வீண் வதந்தியைக் கிளப்பிவருகிறார்கள்.

கடந்த மாதச் சட்டசபைக் கூட்டத்தில் கூடப் புற்றுநோய் அபாயம் உள்ள மாவட்டங்களாகச் சுகாதாரத்துறை மூலம் சொல்லப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் தூத்துக்குடியின் பெயர் இல்லை. ஆலையிலிருந்து புகை வெளியாகும் சிம்னி... மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களோடு ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் புகையின் அளவு கூடினாலும், விஷத்தன்மை இருந்தாலும் உடனே தெரிந்துவிடும். பொதுமக்கள், வல்லுநர்கள் என யாராவது ஆலையைச் சுற்றிப் பார்க்க விரும்பினால், காப்பர் உற்பத்தி, கழிவுநீர் மறுசுழற்சி ஆகியவை குறித்து விளக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு