Published:Updated:

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!
உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

நீர் மேலாண்மைத.ஜெயகுமார் - படங்கள்: தே.அசோக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

மிழகத்தில் ஓடும் ஆறுகள் எதிலுமே தண்ணீர் இல்லாத சூழ்நிலையிலும்... அதிக விளைச்சலுக்காக மத்திய அரசு வழங்கி வரும் ‘கிரிஷி கர்மான்’ விருதைத் தமிழகம் பெறுவதற்குக் காரணம், நம்மிடையே உள்ள தண்ணீர் சேகரிக்கும் நுட்பங்கள்தான். அந்த நுட்பங்களைச் செயல்படுத்தி, தரிசான நிலங்களை விளைநிலங்களாக மாற்றி வருவதோடு, விவசாயிகளுக்குப் பயிற்சிகள், ஆலோசனைகள் என்று வழங்கி வருகிறது, ‘தேசிய வேளாண் நிறுவனம்’ (நேஷனல் அக்ரோ ஃபவுண்டேஷன்) என்கிற தொண்டு நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு வழியாகக் கிழக்குக் கடற்கரை சாலைக்குச் செல்லும் வழியில் 24-வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இல்லீடு கிராமம். இங்குதான் அமைந்திருக்கிறது, தேசிய வேளாண் நிறுவனத்தின் பயிற்சி மையம். நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராமசுப்ரமணியனைச் சித்திரைச் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

“இந்தப் பயிற்சி மையம் 2004-ம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. விவசாயிகளிடம் விவசாயம் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டோம். ஆனால், அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை இந்தப்பகுதியில் தலைவிரித்தாடியது. அதனால், 2009-ம் ஆண்டில் ‘நபார்டு வங்கி’யோடு இணைந்து 1,500 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்கள் பயன்படும் வகையில் நீர்வடித் திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்தோம். இந்தப் பகுதி 67 சதவிகிதம் வறட்சிக்கு இலக்கான பகுதி. அதனால், இந்தப் பகுதியிலுள்ள நுகும்பல் மலையிலிருந்து வழிந்து வரும் நீரைத் தடுத்து நிறுத்தி 4 தடுப்பணைகள், 420 நீர் உறிஞ்சு குழிகள், சிறுகல் தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், கால்நடைக் குட்டைகள் என அமைத்துத் தண்ணீரைச் சேமித்தோம். இதன்மூலம் அரசூர், நுகும்பல், சிறுகளத்தூர், ஒத்திவிலாசம் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மேய்க்கால் மற்றும் தரிசாக இருந்த 500 ஏக்கர் நிலங்களில் தற்போது சாகுபடி நடைபெறுகிறது” என்றார் ராமசுப்ரமணியன். தொடர்ந்து நம்மை நுகும்பல் மலைக்கு அருகே செயல் படுத்தியிருக்கும் நீர்வடித் திட்டப் பணிகளைப் பார்வையிட அழைத்துச் சென்ற நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் முருகன் அந்தப் பணிகள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.  “நீர்வடித் திட்டங்களைச் செயல்படுத்த, பண்ணையில் குட்டைகள் அமைக்க, உழவுப் பணிகளை மேற்கொள்ளச் சித்திரை மாதம் (ஏப்ரல், மே) ஏற்றது. இம்மாதத்தில் உளிக் கலப்பை (Chisel Plough) மூலம் உழவு செய்ய வலியுறுத்தி வருகிறோம். இக்கலப்பை பற்றி விவசாயிகளுக்குப் பரவலாகத் தெரிந்திருந்தாலும், பெரியளவில் பயன் பாட்டில் இல்லை. மானாவாரி மற்றும் இறவை என எந்த வகை நிலமாக இருந்தாலும், உளிக் கலப்பையால் உழவு செய்து விதைத்தால், மகசூல் நன்றாக இருக்கும்.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

நம் முன்னோர் ‘அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்’ என்பார்கள். அந்தத் தொழில் நுட்பம்தான் வெளிநாடுகளுக்குச் சென்று ‘உளிக் கலப்பை’ என்ற பெயரில் 2000-ம் ஆண்டுவாக்கில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. உளிக்கலப்பையில் இணைக்கப் பட்டிருக்கும் கொழுவின் நீளம் 2 அடி இருக்கும். இதன் விலை 25 ஆயிரம்  ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையான விலையில் கிடைக்கிறது. முன்பு ஒரே ஒரு கொழு இணைக்கப்பட்ட கலப்பையைப் பயன்படுத்தினோம். அதில் நேரம் விரயமானதால், தற்போது 3 கொழுக்களை இணைத்து ஓட்டுகிறோம். அதனால், அதிகப் பரப்பிலான நிலத்தைக் குறைந்த நேரத்தில் உழ முடியும். மூன்று கொழுக்கள் இணைக்கப்பட்ட கலப்பையை 60 ஹெச்.பி திறனுள்ள டிராக்டரில் பொருத்தி ஓட்ட வேண்டும். ஒரே கொழு இணைக்கப்பட்ட கலப்பையை 40 ஹெச்.பி திறனுள்ள டிராக்டரிலேயே இணைத்து ஓட்டலாம்.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

உளிக் கலப்பை மூலம் உழவு செய்யும்போது, நிலத்தில் அதிகளவு தண்ணீரைச் சேமிக்க முடியும். கோடைமழையின் மூலம் கிடைக்கும் நீர், ஓர் அடி ஆழத்துக்குள் எளிதாகச் சென்று சேகரமாகும். குறிப்பாக, மானாவாரிப் பயிர்களுக்கு மழை கிடைக்காத நேரத்தில் இந்த அடி ஈரம் மிகவும் கைகொடுக்கும். அதனால், பயிர்களின் வளர்ச்சியும், மகசூல் திறனும் அதிகரிக்கும்” என்றார்.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

இப்பயிற்சி மையத்தின் திட்டங்களால் பலனடைந்த விவசாயி ரகுபதியிடம் பேசினோம். “என்னோட கிராமம் பக்கத்திலிருக்கிற சிறுநகர். பொதுவா கோடையில இந்தப் பகுதியில போதுமான தண்ணீர் கிடைக்காது. மலையிலிருந்து வழிஞ்சு வர்ற தண்ணீரைத் தடுப்பணைகள் கட்டி தேக்கியதால, நாலஞ்சு வருஷமா கோடையிலும் போதுமான தண்ணீர் கிடைச்சிட்டுருக்கு. கிணறுகள்ல கூடத் தண்ணி அதிகமா ஊறுது. அதனால, தர்பூசணி, நிலக்கடலைனு சாகுபடி பண்றோம். இந்தப்பயிற்சி மையத்துல ‘எஸ்.ஆர்.ஐ’ நெல் நடவு, விதை நேர்த்தி, இயற்கை உரங்கள், பண்ணைக் கருவிகள் பயன்பாடுனு பல பயிற்சிகளைக் கொடுக்கிறாங்க. இந்த மையத்துல உளிக் கலப்பையையும் குறைந்த விலைக்கு வாடகைக்கு விடுறாங்க. சித்திரையில எப்படியும் ஒரு மழை கிடைச்சிடும். அப்போ உளிக்கலப்பை கொண்டு நிலத்தை ஓட்டி வெச்சிடுவோம். வைகாசி, ஆனி மாசங்கள்ல கிடைக்கிற மழையைப் பொறுத்து நாத்து விடுவோம். பிறகு ஆடி மாசம் நடவு செய்வோம். முன்னெல்லாம் மண்ணைப் பத்தி பெருசா அலட்டிக்கமாட்டோம். பயிற்சிகள்ல கலந்துக்கிட்ட பிறகு, குறைந்த விலையில மண் பரிசோதனை செஞ்சு, மண்ணை வளமா மாத்தி வெச்சிருக்கோம். அதோட இயற்கை முறையில நெல் வயல்ல எலிகளைக் கட்டுப்படுத்துறது, பூச்சிகளைக் கட்டுப்படுத்துறதுக்கெல்லாம் ஆலோசனை கொடுக்குறாங்க” என்றார் ரகுபதி.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

அவரைத் தொடர்ந்து பேசிய குமுளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜோதி,  “எனக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு. நிலக்கடலை, நெல், உளுந்து, பயறுனு சாகுபடி செய்றேன். இறவை பாசனத்துலதான் இதையெல்லாம் விளைவிக்கிறேன். உளிக் கலப்பையை ரெண்டு வருஷமா பயன்படுத்திட்டு இருக்கேன். வழக்கமான கலப்பை அரையடி ஆழம்தான் இறங்கும். உளிக்கலப்பை ஒன்றரை அடி ஆழம் வரை சாதாரணமாகவே இறங்குது. கோடை மழைக்கு நிலத்த ஓட்டிவிட்டு, அடுத்து வழக்கமான கலப்பையில ஓட்டி விதைப்பு செய்யலாம். இதுமூலமா கீழ்மண் மேல் மண்ணாகவும், மேல் மண் கீழ்மண்ணாகவும் மாறுறதால, பயிர்களுக்குச் சத்துகள் கூடுதலா கிடைக்குது.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

இதோடு மண்ணும் வளமா மாறுது. விதைச்ச பிறகு முன்னெல்லாம் வாரத்துக்கு ஒரு தண்ணி கட்டுவோம். உளிக் கலப்பை ஓட்டின நிலத்துல 15 நாளுக்கு ஒரு தண்ணிதான் கட்டுறோம். அந்தளவுக்கு ஈரத்தைத் தக்க வெச்சிக்குது.  நான் ரசாயனம் பாதி, இயற்கை பாதினு விவசாயம் செய்றேன். எரு, உரத்துக்கு மட்டும் ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சிட்டு இருந்தேன். உளிக் கலப்பை பயன்பாட்டுக்கு பிறகு, இதுல பாதிதான் செலவு. மீதி 4 ஆயிரம் ரூபாய் மிச்சம். உளிக் கலப்பை உழவையும் இப்போதைக்கு நேப்(NAF)காரங்க இலவசமாவே ஓட்டி கொடுத்திடுறாங்க. இதையே தனியா வாடகைக்கு எடுத்து  ஓட்டினா ஒரு மணி நேரத்துக்கு 1,500 ரூபாய் ஆகும்.  இந்த ஒரு மணிநேரத்துல ஒரு ஏக்கர்ல இருந்து ஒன்றரை ஏக்கர் வரை ஓட்ட முடியும். பாறை நிலங்கள தவிர்த்து மத்த எல்லா நிலத்திலயும் இதை ஓட்டலாம்” என்றார் நம்பிக்கையோடு.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

நிறைவாகப் பேசிய ராமசுப்ரமணியன், “விவசாயிகளின் கூட்டமைப்பே நவீன விவசாயம்னு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பெரிய பெரிய கம்பெனிகள் விவசாயத்துக்குள்ள வந்து இங்கிருக்குற விவசாயிகளை விரட்டியடிக்குறதுக்குள்ள நாம் உஷராகிடணும். இல்லைனா, நம்ம நிலத்துல எவனோ ஒருத்தன் உழுதுட்டுருக்குறதை நாம வேடிக்கை பார்த்துட்டு இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துடும். அந்த மாதிரி சூழ்நிலை வந்துடக்கூடாதுனுதான், விவசாயிகளை ஒருங்கிணைச்சு 52 உழவர் மன்றங்களை உருவாக்கியிருக்கோம். அதை இப்போ உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளாக மாற்றியிருக்கோம். தமிழ்நாடு முழுக்க காய்கறிகள், சிறுதானியங்கள், நெல் என்று 20 உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறோம்.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

விவசாயிகளுக்கு வழிகாட்டுறதுக்காக 10 ஏக்கர் பரப்பளவுல பண்ணை அமைச்சு... அசோலா வளர்ப்பு, தீவனப்புல் வளர்ப்பு, நர்சரி பராமரிப்பு, காய்கறிகள் தோட்ட வளர்ப்பு, பண்ணைக் கருவிகள் கையாளுதல், செம்மைநெல் சாகுபடினு விவசாயம் சார்ந்த பயிற்சிகளைக் கொடுத்திட்டுருக்கோம். பெரும்பாலும் இயற்கை உரங்களைத்தான் பரிந்துரைக்கிறோம். அரசு மானியம், விற்பனை தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கிட்டுருக்கோம். விவசாயம் சார்ந்த தொழில்முனைவோருக்கு ஒரு வாரப் பயிற்சியும், வேளாண் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு அக்ரி கிளினிக் துவக்குவதற்காக 2 மாத சான்றிதழ் பயிற்சியும் வழங்குகிறோம். இதோடு கடனுதவிக்கும் ஏற்பாடு செய்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு: தேசிய வேளாண் நிறுவனம், ஊரக மேம்பாட்டு மையம், இல்லீடு.

தொலைபேசி: 044 27545501/ 27545800
ராமசுப்ரமணியன், செல்போன்: 94448 64884
முருகன், செல்போன் 94455 04853
ரகுபதி, செல்போன்: 95433 80998
ஜோதி, செல்போன் 99620 08572  

மண் பரிசோதனை

ண் பரிசோதனை குறித்து தரமணியில் உள்ள பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குநர் கல்பனா, “இந்த மையத்தில் ஆய்வு செய்யப்படும் மண் பரிசோதனையில் பேரூட்டம், இரண்டாம் நிலை பேரூட்டச் சத்துகள், நுண்ணூட்டச் சத்துகள்  ஆகியவை சோதனை செய்யப்படுகின்றன.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

இதற்கான மண்ணை எடுப்பதற்கு மொத்த நிலத்தையும் ‘M’ வடிவில் மார்க் செய்ய வேண்டும். மார்க் செய்த இடத்தில் சதுர வடிவில் 10 முதல் 20 இடங்களில் 1 அடி ஆழத்துக்குக் குழிகள் வெட்டி குழிகளின் பக்கவாட்டில் உள்ள மண்ணை மேலிருந்து கீழாக எடுத்து, ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் சேகரித்துக்கொள்ள வேண்டும். சேகரித்த மண்ணில் கல், இலை, வேர், குச்சிகள் ஆகியவற்றை நீக்கி, மண்கட்டிகளை உடைத்துக்கொள்ள வேண்டும். மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். ஒரு செய்தித்தாளைப் பெரிய அளவில் விரித்து மண்ணைக் கொட்டி, கைகளால் நன்றாகக் கலக்க வேண்டும்.

மொத்த மண்ணையும் கூம்பு போலாக்கி, பிறகு வட்டமாக ஆக்கி, 4 பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதை 1:3, 2:4 எனப் பிரித்துக்கொள்ள வேண்டும். இரண்டில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து ஒன்று சேர்த்துத் திரும்பவும் 4 பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். இதுபோன்று மூன்று முறை செய்து கடைசியாக அரைக்கிலோ மண்ணை எடுத்து, சுத்தமான பாலீத்தீன் கவரில் பேக் செய்துவிட வேண்டும். அந்த மண் மாதிரியுடன் நிலம் பற்றிய விவரம், பயிர் குறித்த விவரம் ஆகியவற்றையும் எழுதி அனுப்பினால் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்படும். எரு கொட்டிய பகுதிகள், வரப்பு ஓரங்கள், மர நிழல் உள்ள இடங்கள், நீர்க் கசிவு உள்ள இடங்களில் மண் மாதிரி எடுக்கக்கூடாது” என்றார்.

சித்திரையில் செய்ய வேண்டிய பணிகள்

வரப்பு அமைத்தல்

வ்வொரு நிலத்துக்கும் வரப்பு இருக்க வேண்டியது அவசியம். நிலத்தைச் சுற்றிலும் வரப்பு அமைத்தால், அந்நிலத்தில் விழும் நீர் வெளியே போகாமல் அங்கேயே சேகரமாகும். இதனால், நிலத்தின் சத்துகளும் காக்கப்படும். அதனால், வரப்புகளை இந்நேரத்தில் அமைத்துக் கொள்ளலாம். வரப்புகளை 1 அடியிலிருந்து 2 அடி உயரம் வரை அமைத்து கொள்ளலாம்.

பண்ணைக்குட்டை

10
சென்ட் நிலத்திலாவது பண்ணைக்குட்டை அமைப்பது, தற்போதைய சூழ்நிலைக்கு மிக அவசியம். நிலத்தடி நீர்மட்டம் உயர்வது ஒரு காரணம் என்றால், மீன் வளர்ப்பு போன்ற உபதொழில்களைச் செய்யவும் உதவியாக இருக்கும். அதுவும் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளுக்கு அருகில் அமைக்கும்போது, அந்தக் கிணறுகளில் தண்ணீர் பெருகும். 10 மீட்டர் நீள, அகலம், 1 மீட்டர் ஆழத்தில் ஒரு பண்ணைக்குட்டை அமைக்க 40 ஆயிரம் ரூபாய் போதுமானது.

உளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்!

தேசிய வேளாண் நிறுவனத்தின் நிறுவனர்

தே
சிய வேளாண் நிறுவனத்தைத் தொடங்கியவர் சி.சுப்பிரமணியம். இவர் ஜனவரி மாதம் 30-ம் தேதி 1910-ம் ஆண்டுக் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தாலூகா, செங்குட்டைபாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். வழக்குரைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு அந்தத் தொழிலை விட்டு விட்டு, சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தமிழகத்தில் காமராஜர், ராஜாஜி ஆகியோர் முதலமைச்சர் பதவி வகித்த காலங்களில் நிதி, கல்வி மற்றும் சட்டத்துறையில் 10 ஆண்டுக் காலம் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தியளவில் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் நிதி, உணவு, விவசாயம், பாதுகாப்புத்துறை, கனரகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் 18 ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்திருக்கிறார். இந்திய உணவு உற்பத்திக்கு வித்திட்டவர். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். தன்னுடைய 90-வது வயதில் (2000-ம் ஆண்டு) இந்தத் தேசிய வேளாண் தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.

குறைந்த கட்டணத்தில் பரிசோதனை

செ
ன்னை, தரமணியில் தேசிய வேளாண் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில், மண் வளம் முதல் விளைபொருள் விற்பனை வரை விவசாயிகளுக்கு வழிகாட்டப்பட்டுகிறது. மண், மண்புழு உரம், இயற்கை உரங்கள், மரச்செக்கு எண்ணெய், சிறுதானிய தின்பண்டங்கள் போன்றவற்றைக் குறைந்த கட்டணத்தில் தர ஆய்வு செய்யும் வசதிகளும் உள்ளன.

தொடர்புக்கு, தேசிய வேளாண் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், தரமணி, சென்னை - 600113
தொலைபேசி: 044 22542598/ 22542803,

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு