Published:Updated:

நாட்டு விதைகள் இலவசம்... அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாட்டு விதைகள் இலவசம்...  அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்!
நாட்டு விதைகள் இலவசம்... அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வெ.நரேஷ் குமார்

பிரீமியம் ஸ்டோரி
நாட்டு விதைகள் இலவசம்...  அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்!

“இப்போ மாடித்தோட்டம் அமைக்கிறதுல நிறைய பேர் ஆர்வம் காட்டுறாங்க. ஆனா, விதை விஷயத்துல பெரிசா கவனம் செலுத்த மாட்டேங்குறாங்க. வீரிய விதைகளைத்தான் பயன் படுத்துறாங்க. மாடித் தோட்டத்துல நாட்டு விதைகளைப் பயன்படுத்தறதுதான் நல்லது. நட்டுக் காய்கறிகள்லதான் அதிகச் சத்துகள் இருக்கு.

அதில்லாம ஒவ்வொரு முறை விதைக்கிறதுக்கும் விதைக்காக அலைய வேண்டியதில்லை. நாட்டு விதைகளை விதைக்கிறப்போ தற்சார்போடு இருக்குறதோட, அந்த விதைகளை அழியாம பாதுகாக்கவும் முடியும்” பளிச்செனப் பேசும் சென்னை, மாத்தூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல், நாட்டு விதைகளைப் பலருக்கும் இலவசமாக வழங்கிவருகிறார்.

சித்திரைச் சிறப்பிதழுக்காகக் குழந்தைவேலை அவருடைய வீட்டில் சந்தித்தோம். மூலிகைத் தேநீர் கொடுத்து வரவேற்ற குழந்தைவேல், தன் வீட்டு அலமாரியில் இதுவரை வெளிவந்த அத்தனை பசுமை விகடன் இதழ்களையும் அடுக்கி வைத்திருக்கிறார். வீட்டுத்தோட்ட ஆர்வலர்கள் மத்தியில் ‘வானவன்’ என்ற புனைபெயரில் அறிமுகமாகியிருக்கிறார் இவர்.

நாட்டு விதைகள் இலவசம்...  அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்!

நம்மை மாடித்தோட்டத்துக்கு அழைத்துச்சென்ற குழந்தைவேல், “நான் மாடித்தோட்டம் போட்டுப் பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துல காய்கறிச் சாகுபடிக்கு வீரிய ரக விதைகளைத்தான் பயன்படுத்திட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, நாட்டுக் காய்கறி விதைகளைப் பத்தி அதிகமாகத் தெரிஞ்சுக்கிட்டேன். பசுமை விகடன் மூலமாத்தான் எனக்கு நாட்டு ரக விதைச் சேகரிப்பாளர் ‘முசிறி’ யோகநாதன் அறிமுகமானார். அவர்கிட்ட இருந்து நாட்டு விதைகளை வாங்கிட்டு வந்து விதைச்சேன். அப்படியே விதைகளைப் பெருக்கி, மாடித்தோட்டம் அமைக்கிற நண்பர்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போ நிறையபேர் நாட்டு விதைகளைக் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, நானும் விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன். இப்படிச் சேகரிக்கிற விதைகளைச் சின்னப் பாக்கெட்கள்ல போட்டு மாடித்தோட்டம் அமைக்கிறவங்களுக்கு இலவசமாகக் கொடுத்திட்டிருக்கேன். இதுமூலமா எனக்கு பல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க” என்ற குழந்தைவேல், தான் சேகரித்து வைத்துள்ள விதைகளை எடுத்துக் காட்டியபடியே பேசினார்.

“மாடித்தோட்டத்துல ஆடாதொடை, பிரண்டை, துத்தி, முடக்கத்தான்னு மூலிகைச் செடிகளை அதிகமா வெச்சிருக்கேன். அடிக்கடி மூலிகைகளை உணவுல சேர்த்துக்குவோம். பல வகைக் கீரைகள், கத்திரி, வெண்டை, கொத்தவரை, பாகல், அவரை, நித்யகல்யாணி, குப்பைமேனி, கேசவர்த்தினி, பூனைமீசைக்கீரை, வெட்டிவேர்... என பலவகையான செடிகள் இங்க இருக்கு.

நாட்டு விதைகள் இலவசம்...  அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்!

மாடித்தோட்டத்துக்காக வெளியிலிருந்து எதையும் வாங்கறதில்லை. வீட்டுல மிச்சமாகுற காய்கறிக் கழிவுகள், பேப்பர்கள், வீட்டைச் சுற்றி விழுகிற மர இலைகள்னு எல்லாத்தையும் தொட்டியில போட்டு மட்க வெச்சிருவேன். இத உரமாக்கி பயன்படுத்திறேன். பொதுவா நாட்டு ரகச் செடிகளை வெக்கிறதால பூச்சித்தாக்குதல் இருக்குறதில்லை. அதையும் மீறிப் பூச்சிகள் வந்தா வேப்பெண்ணெய் கரைசல், இஞ்சி+பூண்டு கரைசல் தெளிப்பேன். தொட்டியில இருக்கிற செடிகளுக்குத் தண்ணீரை அளவாத்தான் கொடுக்கணும். இல்லாட்டி, செடிகள்ல வேரழுகல் நோய் தாக்கும். தொட்டிகளுக்காக நிறைய செலவு செய்யமாட்டேன். பிளாஸ்டிக் வாளி, டப்பானு கிடைக்கிற பொருள்கள்ல மண்ணை நிரப்பிச் செடிகளை வளர்த்திடுவேன்” என்ற குழந்தைவேல் நிறைவாக,

“ஆரம்பத்துல 5 தொட்டிகளை வெச்சுதான் ஆரம்பிச்சேன். இப்போ 80 தொட்டிகள்ல செடிகள் இருக்கு. உடம்புக்கு என்ன பிரச்னைனாலும் மூலிகைகளைத்தான் மருந்தா எடுத்துக்கிறேன். எளிமையான முறையில, குறைவான செலவுல மாடித்தோட்டம் அமைச்சு, உடம்பையும் மனசையும் எப்பவும் இளமையா வெச்சுக்கிட்டிருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
குழந்தைவேல்
செல்போன்: 98841 92924

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு