Published:Updated:

வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...
வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...

மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: சி.சுரேஷ்குமார்

பிரீமியம் ஸ்டோரி

‘இயற்கை முறை விவசாயத்தில் அதிக விளைச்சல் கிடைக்காது. ரசாயன உரம் இட்டால்தான் அதிக விளைச்சல் கிடைக்கும்’ என்று பலரும் முன்வைக்கும் வாதம். ஆனால், ‘ரசாயன உரத்துக்கு ஈடாக என்ன... அதைவிட அதிகமாகவே மகசூல் எடுக்க முடியும்’ என்று சொல்லும் பல இயற்கை விவசாயிகள், அதை நிரூபித்தும் வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘பேராசிரியர்’ பெருமாள். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரான பெருமாள், மாட்டுச்சாணத்தை மட்டுமே பயன்படுத்தி கோ-51 ரக நெல்லில் 1.8 ஏக்கரில் 40 மூட்டை அறுவடை செய்திருக்கிறார்.

வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சித்திரைவாடி எனும் கிராமத்தில் இருக்கிறது பெருமாளின் பண்ணை. ஒரு முற்பகல் வேளையில் வயல் வேலைகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பெருமாளைச் சந்தித்தோம்.  “அப்பா, அம்மா ரெண்டுபேருமே பள்ளிக்கூட வாசலையே மிதிச்சதில்லை. விவசாயம்தான் குடும்பத்தொழில். நான் பிறக்கிறப்போ எங்க ஊர்ல பள்ளிக்கூடமே இல்லை. வீட்டுல இருக்கிற மாடுகளை மேய்க்கிறதுதான் என்னோட வேலை. ஊர்ல இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்துல கொஞ்சகாலம் படிச்சேன்.

ஒன்பது வயசுக்கு அப்புறம்தான் மதுராந்தகத்துல இருந்த பள்ளிக்கூடத்துல, ஒண்ணாம் வகுப்புல என்னைச் சேர்த்தாங்க. ரொம்பக் கஷ்டமான சூழ்நிலையில, பள்ளிப்படிப்பை முடிச்சு கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில (1959-ம் ஆண்டு) பி.எஸ்ஸி அக்ரி முடிச்சேன். தொடர்ந்து பி.ஹெச்டியும் முடிச்சேன். 1990-ம் வருஷம் ‘ஃபோர்டு பவுண்டேஷன்’ உதவியோடு அமெரிக்க நாட்டுல இருக்குற ஃபுளோரிடா பல்கலைக்கழகத்துல போஸ்ட் டாக்டர் படிப்பு படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அதை முடிச்சுட்டு வேளாண் பல்கலைக் கழகத்துல வேலைக்குச் சேர்ந்துட்டேன்.

ஓய்வுக்குப் பிறகு, நான் பிறந்த கிராமத்துல பள்ளிக்கூடத்தைக் கொண்டு வரணும்னு நினைச்சு, 1995-ம் வருஷத்துல ஒரு தொடக்கப்பள்ளியை ஆரம்பிச்சேன்.  இப்போ எனக்கு 85 வயசாச்சு. இதுவரைக்கும் குடும்பத்தொழிலான விவசாயத்தையும் விடாம செஞ்சுட்டுருக்கேன்” என்று தன்னைப்பற்றி அறிமுகம் கொடுத்த பெருமாள், தான் செய்துவரும் விவசாயம் குறித்துச் சொன்னார்.

வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...

“பள்ளிக்கூடத்தைச் சுத்தி இருக்கிற நிலத்துல இயற்கை முறையில காய்கறிகளையும் பழ மரங்களையும் வளர்த்திட்டிருக்கேன்.

10 சென்ட் நிலத்துல கத்திரி, 5 சென்ட் நிலத்துல வாழை, 5 சென்ட் நிலத்துல கீரை, 1.8 ஏக்கர் நிலத்துல நெல்னு சாகுபடி பண்ணிட்டுருக்கேன். ஏழு ஏக்கர் நிலத்துல எட்டு வயசான மா மரங்கள் இருக்கு. மாமரங்களுக்கு இடையில ஊடுபயிரா கொய்யா, தேக்கு, செம்மரம், சப்போட்டா, தென்னைனு இருக்கு. நாலு மாடுகளை வளர்த்திட்டிருக்கேன். மாடுகள்கிட்ட கிடைக்கிற பாலைப் பண்ணையில வேலை செய்றவங்களுக்குக் கொடுத்திடுவேன். இங்க அறுவடையாகிற விளை பொருள்களை விற்பனை செய்றதில்லை. பண்டமாற்று முறையில எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிகிட்டு, இங்க இருக்கிற பொருள்களை அவங்களுக்குக் கொடுப்போம். போன டிசம்பர் மாசம், 1.8 ஏக்கர் நிலத்துல கோ-51 ரக நெல்லை நடவு செஞ்சேன். இப்போ அறுவடைக்குத் தயாரா இருக்கு. மாட்டு எரு மட்டும்தான் கொடுத்திட்டிருக்கேன். வேற இயற்கை இடுபொருள்களைக்கூடப் பயன்படுத்தலை. பயிர் நாலடி உயரத்துக்கு நல்லா செழிப்பா வளர்ந்திருக்கு. எப்படியும் ரெண்டு ஏக்கர்லயும் சேர்த்து 35 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்கும்னு நினைக்கிறேன். அறுவடை முடிஞ்சதும் உங்ககிட்ட பேசறேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...

கடந்த மார்ச் 31-ம் தேதி நம்மைத் தொடர்புகொண்ட பெருமாள், “மொத்தம் 40 மூட்டை (ஒரு மூட்டை, 80 கிலோ) நெல் கிடைச்சுருக்கு. ரசாயனம் மூலம் சாகுபடி செய்து இருந்தால் கூடுதலாக 5 மூட்டை கிடைத்திருக்கும். எல்லா செலவும் சேர்த்தால் 30 ஆயிரம் வருகிறது. ஆனா, இந்த இயற்கை நெல்லின் மதிப்பு பல மடங்கு அதிகம்.அதனால, இந்த நெல்லை யாருக்கும் பணம் வாங்கிட்டு விற்பனை செய்யப்போறதில்லை. உண்மைநிலை விதை என்பதால், விதையா  கேக்குறவங்களுக்குப் பண்டமாற்று முறையில கொடுக்கலாம்னு இருக்கேன்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருந்தப்போ, ரசாயன உரம்தான் நல்ல மகசூல் கொடுக்கும்னு நம்பினவன் நான். இப்போ, இயற்கை விவசாயம்தான் சரியான பாதைனு புரிஞ்சுருக்கு. மண்ணுக்கும், மனுஷனுக்கும் பாதிப்புக் கொடுக்காத இயற்கை விவசாயம்தான் காலத்துக்கும் நிக்கும்” என்றார்.

தொடர்புக்கு, பெருமாள்,
செல்போன்: 94432 40074

ஏக்கருக்கு 3 கிலோ விதை!

ஒரு ஏக்கர் நிலத்தில் கோ-51 ரக நெல் சாகுபடி செய்வது குறித்துப் பெருமாள் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

வயலின் ஒரு மூலையில் மாட்டு எரு இட்டு உழுது தண்ணீர் கட்டி நாற்றங்கால் அமைக்க வேண்டும். மூன்று கிலோ விதைநெல்லை நாற்றங்காலில் தூவி காலையிலும் மாலையிலும் தண்ணீர் விட்டு வர வேண்டும். விதைத்த 21-ம் நாளுக்கு மேல் நாற்று நடவுக்குத் தயாராகிவிடும். 25-ம் நாளுக்குள் நாற்றுகளைப் பிடுங்கி வயலில் நடவு செய்து விட வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்று டன் மாட்டு எருவைப் போட்டு, இரண்டு சால் உழவு ஓட்டி மண்ணை மட்டப்படுத்த வேண்டும்.

பிறகு நிலம் முழுவதும் எருக்கன், வேம்பு போன்ற இலை தழைகளைக் கொட்டித் தண்ணீர் கட்டி, 7 நாள்கள் மட்க விட வேண்டும். பிறகு ஒருமுறை உழவு ஓட்டி, வயலில் தண்ணீர் கட்டி நடவுக்குத் தயார் செய்ய வேண்டும். அடுத்து வரிசைக்கு வரிசை 1 அடி, செடிக்குச்செடி முக்கால் இடைவெளி இருக்குமாறு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். களைகள் மண்டினால் அவற்றை அகற்ற வேண்டும். செழுமையாக மாட்டு எரு இட்டிருப்பதால், வேறு இடுபொருள்கள் எதுவும் தேவைப்படாது. 105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றியதும் அறுவடை செய்யலாம். முற்றிலும் இயற்கை என்பதால், பூச்சி-நோய் தாக்குதல் எட்டிக்கூட பார்க்காது.

வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி! - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...

நான்கு பட்டங்களில், நல்ல விளைச்சல் கிடைக்கும்!

பேராசிரியர் பெருமாளின் நெல் வயலைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மரபியல் மற்றும் பயிர் இனப்பெருக்க மையத்தின் இயக்குநர் கு.கணேசமூர்த்தித் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பார்வையிட்டது. அப்போது பேசிய, முனைவர் கு.கணேசமூர்த்தி,

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் பெருமாள், இயற்கை விவசாயம் மூலம் கோ-51 ரக நெல்லைச் சாகுபடி செய்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் மையத்திலிருந்துதான், விதை வாங்கிவந்து நடவு செய்தார். குறைவான நீரில், அதிக மகசூல் எடுத்துள்ளார் பெருமாள். இந்த ரகம் நல்ல விளைச்சலைக் கொடுத்துவருகிறது. ஆனால், சம்பா, தளடிப் பட்டங்களில் இதைச் சாகுபடி செய்யக்கூடாது. குறுவை, சொர்ணவாரி, கார், நவரை என நான்கு பட்டங்களில் சாகுபடி செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு