Published:Updated:

அன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்!
அன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்!

மதிப்புக்கூட்டல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: க.விக்னேஷ்வரன்

பிரீமியம் ஸ்டோரி

 ‘பசுமை விகடன்’ இதழைப் படித்து அதன் மூலம் வெற்றிகரமாக விவசாயம் செய்து பலனடைந்த விவசாயிகள் ஏராளமானோர் உண்டு. விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயத்தை விட்டு விலகி நின்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள்  எனப் பலரை மீண்டும் விவசாயத்துக்குள் அழைத்து வந்த பெருமையும் பசுமை விகடனுக்கு உண்டு. அந்த வகையில் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறைவாசியாக இருந்த அன்புராஜ், சிறையில் இருந்தவாறே பசுமை விகடன் இதழைப் படிக்க ஆரம்பித்து, அதன் உந்துதலில், தண்டணைக் காலம் முடிந்த பிறகு, மரச்செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள புதுக்காடு மலையடிவாரக் கிராமத்தில் இருக்கிறது அன்புராஜின் வீடு. ஒரு முற்பகல் நேரம், மனைவி ரேகாவுடன் இணைந்து மரச்செக்கில் வேலை செய்து கொண்டிருந்த அன்புராஜைச் சந்தித்தோம்.

அன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்!

“எனக்குப் பூர்வீகம் இந்தக்கிராமம் தான். குடும்பச்சூழல் காரணமா ஆறாவது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சது. பக்கத்துல இருக்கிற மலையில சோட்டாளிகளோட ஆடு மாடு மேய்க்கிறதுதான் எனக்கு முழுநேரத்தொழிலா இருந்துச்சு. அப்போ எனக்கு 18 வயசு இருக்கும். எங்க ஊர்ப் பசங்களோடு அந்தியூர் மலையில ஆடு மேய்ச்சிட்டிருந்தோம். அப்ப ஒரு நாள் திடீர்னு ஒரு பாறை மறைவுல இருந்து பெரிய மீசையோடு வீரப்பன் தன்னோட ஆள்களோடு நடந்து வந்தாரு. எல்லோரும் ஒரே மாதிரி யூனிஃபார்ம் போட்டுருந்தாங்க. என்கூட இருந்த பசங்க எல்லாம், அவங்களைப் பார்த்ததும், பயந்து ஆடுமாடுகளை அப்படியே விட்டுட்டு காட்டுக்குள் ஓடிப் போய்ட்டாங்க. நான் ஓடாம நின்னுட்டிருந்தேன். என் பக்கத்துல வந்த வீரப்பன் என்னைப் பத்தி விசாரிச்சுட்டு, ‘நான் போலீஸ் உளவாளி இல்லை’ங்கிறதை உறுதிப்படுத்திக்கிட்டு ரொம்ப அன்பா பேசினார். அப்பவே அவருமேல எனக்கு ஒரு தனி மரியாதை வந்துடுச்சு. ‘உங்கள அடிக்கடி நான் சந்திக்கமுடியுமா’னு கேட்டேன். ‘அடிக்கடியெல்லாம் சந்திக்க முடியாது. ஆனா, நானே ஒரு நாள் வர்றேன். பொறுமையா இரு’னு சொல்லிட்டு காட்டுக்குள்ள போய்ட்டார்.

அவர் போன கொஞ்ச நேரம் கழிச்சுதான் ஒளிஞ்சிருந்த பசங்கள்லாம் வந்தாங்க. ஊருக்குள்ள போய் வீரப்பனைப் பார்த்த விஷயத்தைச் சொன்னோம். எல்லோருமே அவரைப்பத்தி நல்ல விதமாகத்தான் சொன்னாங்க. என் மனசுல வீரப்பன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்துடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு ஒருமுறை காட்டுல ஆடு மேய்ச்சுட்டிருக்குறப்போ வீரப்பன் கூட்டாளிகளோடு வந்தார். அவர்கிட்ட ‘உங்க கூட்டத்துல நானும் சேர்ந்துக்குறேன்’னு சொன்னேன். அவர் பதிலே சொல்லாம காட்டுக்குள்ள போனார். நான் ஆடுகளை அப்படியே காட்ல விட்டுட்டு, அவர் பின்னாடியே போய் அவரோட கூட்டத்துல ஐக்கியமாயிட்டேன். எனக்கும் யூனிஃபார்மும் துப்பாக்கியும் கொடுத்தாங்க.

ரெண்டு வருஷம் அவர்கூடத்தான் காட்டுக்குள்ள இருந்தேன். அவர் மேல பல வழக்குகள் இருந்துச்சு. அதுல சில வழக்குகள்ல என்னையும் சேர்த்திருந்தாங்க. நானும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல்ல இருந்தேன். ஒரு கட்டத்துல (1998-ம் வருஷம்) காட்டுல இருந்து வெளிய வந்து சென்னை போய்ப் போலீஸ்ல சரண் அடைஞ்சேன். கோர்ட்ல ஆஜர்படுத்திச் சிறைக்கு அனுப்புனாங்க. கொஞ்ச நாள் வழக்கு நடந்துச்சு. அதுக்கப்புறம் சிறைத்தண்டனை விதிச்சாங்க. வேவ்வேறு வழக்குகள்ல சென்னை, கோயம்புத்தூர், சேலம், மைசூருனு நாலு ஊர் சிறைகள்லயும் மொத்தமா 20 வருஷம் இருந்திருக்கேன்” என்ற அன்புராஜ் கடந்த கால நினைவுகளில் மூழ்கியவராகச் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

தொடர்ந்து பேசிய அன்புராஜ், “சிறையில இருந்தே படிச்சு, தொலைதூரக் கல்வித்திட்டம் மூலம் எம்.ஏ பட்டம் வாங்கினேன். அங்க இருந்த சில பொதுவுடைமை சிந்தனையாளர்கள் கொடுத்த நல்ல புத்தகங்களை வாசிக்க ஆரம்பிச்சேன். நாடகங்கள் எழுதிச் சிறைவாசிகளை நடிக்க வெச்சேன். சிறப்பு அனுமதி வாங்கிப் பெண் சிறைவாசிகள் சிலரையும் இணைச்சு நாடகங்கள் நடத்தினேன். அப்போ நாடகத்தில் நடிக்க வந்த பெண் சிறைவாசி ரேகாவுடன் ஏற்பட்ட நட்பு காதலா மாறிடுச்சு. ரெண்டு பேரும் பிணையில் வெளியே வந்து கல்யாணம் பண்ணிட்டு மறுபடியும் சிறைக்குப் போய்ட்டோம்.

அன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்!

சிறை நூலகத்துல விதிகளுக்கு உள்பட்டு நாளிதழ்கள், பருவ இதழ்களை வெச்சிருப்பாங்க. அந்த இதழ்களை நான் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துச் சிறைக்காவலர்கள் சிலர் அவங்களோட புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தாங்க. அப்படிக் கிடைச்சதுதான் பசுமை விகடன். அதுல வெளிவந்த சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் சம்பந்தமான செய்திகள் ரொம்பவே என்னைக் கவர்ந்துச்சு. என்னைப் பார்க்கச் சிறைக்கு வரும் சொந்தக்காரங்க, நண்பர்கள் மூலமாகச் சொல்லிவிட்டு 2011-ம் வருஷத்துல இருந்து தொடர்ந்து பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர்கள் மூலமா நம்மாழ்வார் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களும் கிடைச்சது. அப்படி வாசிக்க ஆரம்பிச்சது, என்னை வேறு ஒரு தளத்துக்குக் கூட்டிட்டுப் போயிடுச்சு. என்னோட சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுச்சு. இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் சம்பந்தமான புரிதல் கிடைச்சது. அப்போவே விடுதலையானதும் இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்துட்டேன்.

இடையில ரெண்டு தடவை பிணையில வந்தேன். அப்போ ஒருமுறை ‘வானகம் பண்ணை’க்குப் போய் நம்மாழ்வார் ஐயாவை சந்திச்சேன். 2016-ம் வருஷம், எனக்கு விடுதலை கிடைச்சது. சில மாசங்கள்ல மனைவி ரேகாவுக்கும் விடுதலை கிடைச்சது. அதுக்கப்புறம் ஊர் ஊராப் பயணம் செஞ்சு பல இயற்கை விவசாயப் பண்ணைகளைப் பார்த்தோம். அப்படியே மதிப்புக்கூட்டல் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்து, நண்பர்கள் பலரிடம் விசாரிச்சுட்டு மரச்செக்கு போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம்னு முடிவெடுத்தோம். அதுக்குச் சில நண்பர்களும் உதவி செய்றதா சொன்னாங்க” என்ற அன்புராஜ், எண்ணெய் உற்பத்தி குறித்துச் சொன்னார்.

“2017-ம் வருஷம் ஜூன் மாசம் வீட்லயே மரச்செக்கு அமைச்சு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மூணையும் ஆட்டி உற்பத்தி செய்ய ஆரம்பிச்சோம். இதுக்கான உரிமமும் வாங்கியிருக்கோம். எண்ணெயை அரை லிட்டர், ஒரு லிட்டர் பாட்டில்கள்ல அடைச்சு... ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகள்ல  விற்பனை செய்றோம். எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருள்களை இயற்கை விவசாயிகள், மானாவாரி விவசாயிகள்கிட்ட இருந்து கொள்முதல் செய்றோம்.

இப்போதைக்கு ஒரு மாசத்துக்கு 50 லிட்டர் தேங்காய் எண்ணெய், 60 லிட்டர் கடலை எண்ணெய், 150 லிட்டர் நல்லெண்ணெய்ங்கிற அளவுதான் ஏவாரம் ஆகுது. சென்னை, மைசூரு, பெங்களூரு மாதிரியான நகரங்கள்ல இருக்கும் நண்பர்கள் சிலர் எண்ணெய் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு அனுப்ப ஆரம்பிச்சா விற்பனை அதிகரிக்கும்” என்ற அன்புராஜ் நிறைவாக, 

“20 வருஷம் சிறைக்குள்ள முடங்கிக் கிடந்தப்போ வெளிய சுத்துறதுக்குக் கால்கள் ஏங்கும். இப்போ அந்த ஆசைக்குத் தீனி போட்டிருக்கு மரச்செக்குத் தொழில். பை நிறைய எண்ணெய் பாட்டில்களை எடுத்துக்கிட்டு நாங்க ரெண்டு பேரும் மோட்டார் சைக்கிள்ல பயணம் செஞ்சுதான் விற்பனை செய்றோம். நிறையப் புதுப்புது மனுஷங்களைச் சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சுருக்கு. இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை எங்களுக்குக் கிடைச்சதுல பசுமை விகடனுக்கும் ஒரு பங்கு இருக்கு” என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, அன்புராஜ்,
செல்போன்: 94429 33777

அடுத்தது மொழிபெயர்ப்பு!

மைசூரு சிறையில் இருந்தபோது, கன்னட மொழியைப் பேசவும் எழுதவும் கற்றிருக்கும் அன்புராஜ், தத்துவம், இயற்கை, வாழ்வியல் சம்பந்தமான நிறைய கன்னடப்புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் திட்டம் வைத்துள்ளார். அதேபோலத் தமிழ் நூல்களைக் கன்னடத்தில் மொழிபெயர்க்கவும் ஆவலாக இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு