Published:Updated:

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்!
சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்!

பாரம்பர்யம்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

பிரீமியம் ஸ்டோரி

மானாவாரி விவசாயிகளுக்குச் சித்திரை முக்கியமான மாதம். ஆடி மாத விதைப்புக்குக் கோடை உழவு மிக அவசியமான ஒன்று. அதனால்தான் சித்திரை மாதம் விவசாய வேலைகளுக்கான தலைமாதமாகத் திகழ்கிறது. விவசாயிகளுக்கு உகந்த மாதமாகத் திகழும் சித்திரையின் சிறப்புகள் குறித்து நாட்டார் வழக்காற்றியலாளர் ஆ.சிவசுப்பிர மணியனிடம் பேசினோம்.

“திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் வட்டம்; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டங்கள் மற்றும் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் தென்பகுதிகள் ஆகியவை கரிசல்மண் நிலப்பகுதிகள். கரிசல் நிலத்துக்குத் தை, பங்குனி இறுதி, சித்திரை துவக்கம் மற்றும் ஆடி ஆகிய மாதங்கள் முக்கியமானவை. இதில், பங்குனி மாதம் என்பது தினை, கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகிய புன்செய் தானியங்களின் அறுவடைக்காலம். பங்குனி மாதத்தில் தலைச் செவ்வாய் முதல் கடைசிச் செவ்வாய் வரையிலான கிழமைகளிலும், சித்திரை மாதத்தில் செவ்வாய், வெள்ளி என்று ஏதாவதொரு கிழமைகளிலும், நாட்டார் தெய்வக் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அறுவடையைப் பொறுத்தே இவ்விழாக்கள் அமையும். வறட்சி, நோய்த்தாக்குதல் என்று ஏதாவது மகசூல் பாதிப்பு ஏற்பட்டால், திருவிழாக்கள் நடைபெறாமலும் போகக்கூடும்.

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்!

இத்தகைய திருவிழாக்களில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் சடங்கு முக்கியமானது. பலதானியப் பயறு விதைகளை மட்கிய உரமும், தண்ணீரும் கொடுத்து மண்சட்டி, பானைகளில் வளர்ப்பார்கள். இன்று நவீனத்தின் தாக்கத்தால் பிளாஸ்டிக், எவர்சில்வர் சட்டிகளிலும் வளர்க்கிறார்கள். இந்த முளைப்பாரி வளர்ப்பு, ஊர் வழக்கபடி அவரவர் வீடுகளிலோ அல்லது ஊருக்கு ஒருவரின் வீட்டிலோ நடைபெறும். சில ஊர்களில், கோயில்களில் வைத்தே வளர்ப்பார்கள். முளைப்பாரி வளர்ப்புக்காலம் 7, 14 மற்றும் 21 நாள்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 7 நாள்கள்தான் நடைமுறையிலுள்ளது. தங்களிடம் இருக்கும் விதைகளின் முளைப்புத்திறனைப் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு நுட்பமான நடைமுறைதான் முளைப்பாரி வளர்ப்பு. இப்பயிர்களின் வளர்ச்சி, உளவியல் நிலையில் உழவர்களுக்கு ஊக்கமூட்டும் செயலாகவும் அமைகிறது. வளர்ந்த முளைப்பாரிகளைப் பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் போடுவார்கள். இது பயிரின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான நீருடன் இணைக்கும் ஒரு ‘மந்திரச்சடங்கு’. சித்திரையில் அடையாள அடிப்படையில் உழுவது ஒரு மரபு. உழவுத் தொழிலின் ஒரு பணியைப்போல் இல்லாமல், ஒரு விழாவாகவே இது நடக்கும். இதனைச் ‘சித்திரை ஏர் பூட்டுதல்’ எனவும், ‘பொன்னேர் பூட்டுதல்’ எனவும் சொல்வார்கள்.

“வானம் கிடுகிடுங்க
ஆகாயம் மடமடங்க
தண்டபாணிதானே கைகொடுக்க
கவுண்டவர் ஏர்பூட்ட
காப்பது கணபதிதானே..”
- என்பது மாதிரியான காப்புத்தொடர்களை உரக்கக் கூறி உழவைத் தொடங்குவர். உழவு மாடுகளைக் குளிப்பாட்டி, நல்லநேரம் பார்த்து நிலத்தில் இறக்கி உழுவார்கள். ஆண்டின் தலை மாதமான சித்திரையில் உழவு செய்தால், நல்ல மகசூல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே, ‘சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்’ என்ற சொலவடையும் வந்தது.

சித்திரை உழவால், அறுவடைக்குப் பிறகு நிலத்தில் எஞ்சியிருக்கும் பயிரின் தூர்ப்பகுதிகள், உழவு சால்களில் புதைந்து மட்கி உரமாகும். கோடைமழை பெய்தால், மழைநீரைத் தேக்கி ஈரப்பதத்தை உழவுசால்கள் தக்கவைத்துக் கொள்ளும். கேழ்வரகு பயிரிட்ட நிலமாகவும், கமலை கிணற்றுப் பாசன நிலமாகவும் இருந்தால், கேழ்வரகின் தூர்ப்பகுதிகளில் கத்திரி நாற்றுகளை நட்டு, காடைக்கண்ணி என்ற தானியத்தை விதைப்பார்கள் (காடை என்ற பறவையின் கண் போன்று இருப்பதால் இத்தானியத்துக்குக் காடைக்கண்ணி என்ற பெயர் வந்தது). சிறிதளவு ஈரப்பதத்தை வைத்தே இப்பயிர் தாக்குப்பிடித்து வளர்ந்துவிடும். கேழ்வரகின் தூர்ப்பகுதி ஒரு கட்டத்தில் மட்கி, உரமாகவும் மாறிவிடும். காடைக்கண்ணியின் வயது 55 நாள்கள். இதனால், குறுகிய காலத்தில் கணிசமான மகசூல் எடுத்துவிட முடியும்” என்ற சிவசுப்பிரமணியன் தொடர்ந்தார்...

“சித்திரை முதல்நாளில் ஊர்க் கோயில்களிலும், ஊர்ச்சாவடிகளிலும் புது ஆண்டின் பஞ்சாங்கம் வாசிப்பார்கள். அதில் மழையைப்பற்றிக் கூறுவதைத்தான் விவசாயிகள் கூர்ந்து கேட்பார்கள். பஞ்சாங்கம் வாசிக்கும் கோயில் பூசாரி அல்லது வாத்தியார்களுக்கு விவசாயிகள் தானியங்களைக் கொடுப்பார்கள். எமனின் கணக்குப்பிள்ளையான சித்ரகுப்தனை நினைவுகூர்ந்து, சித்திரபுத்திர நயினார் நோன்பு நிகழும். அன்று ஊர்க்கோயிலில் சித்திரபுத்திர நயினார் புராணத்தை ஊர்க்கோயிலின் பூசாரி உரக்கப்படிப்பார்.  அதைக் கேட்டவர்கள் பிறகு படித்தவருக்குக் காணிக்கையாகக் காசு வழங்குவார்கள். சித்திரை மாதம் வரும் முதல் சித்திரை நட்சத்திரத்தன்றுதான் சித்திரகுப்தன், பூவுலக வாசிகளின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பதிவு செய்வார் என்பது நம்பிக்கை. கிராமங்களில் சித்திரை முதல் நாளுக்கு முந்தைய நாள் இரவிலேயே வேப்பமரத்தடியில் நார்கட்டில் போட்டு, அதன்மேல் வெள்ளைத்துணியோ அல்லது துவைத்த வேட்டியோ விரித்து வைப்பார்கள். இரவு முழுவதும் அதன்மீது விழும் வேப்பம்பூக்களைச் சித்திரை முதல்நாளில் பச்சடி வைத்துச் சாப்பிடுவார்கள். அன்றைய உணவில் வேப்பம்பூ பச்சடி கண்டிப்பாக இருக்கும்” என்றார்.

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்!

பொன்னேர் உழவு குறித்துத் தூத்துக்குடி மாவட்டம் சின்னமலைக்குன்று கிராமத்தைச் சேர்ந்த ‘முன்னோடி விவசாயி’ சென்னகேசவனிடம் பேசினோம். “சித்திரை மாதத்தின் முதல் நாளில் ஊரிலுள்ள விவசாயிகள் சேர்ந்து, ஊருக்குப் பொதுவான இடத்தில் உழவு செய்வோம். சித்திரைப் பிறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பே கலப்பைகளில் ஏதேனும் பழுது வேலை இருந்தால் அதைப் பார்த்துச் சரிசெய்து கொள்வோம். சித்திரைப் பிறப்பன்று காலையில் கலப்பையை மஞ்சள் தண்ணீர் விட்டுக் கழுவி... சந்தனம், குங்குமம் வைத்து மஞ்சள் துணி கட்டி மாலைப் போட்டு வைத்திருப்போம். இதேபோல, உழவு மாடுகளையும் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலைப் போட்டு அவரவர் வீடுகளில் சாம்பிராணி காட்டிச் சாமி கும்பிடுவோம்.பிறகு, ஊருக்குப் பொதுவான இடத்துக்கு அழைத்துச் செல்வோம்.

சாட்டைக்குச்சி, களைக் கொத்துவான், கலப்பை ஆகியவற்றை நிலத்தில் இரு இடங்களில் வைத்துவிட்டு, சூரியபகவானை தரிசிக்கும் விதமாகச் சூரியனை நோக்கி வணங்குவோம். பிறகு ஊர்ப் பெரியவர் அல்லது வயதான விவசாயி ஒருவர், களைக் கொத்துவானை எடுத்து விவசாயிகளிடம் கொடுப்பார். விவசாயிகள் ஆளுக்கு 3 களைச்செடிகளைக் கொத்தி எடுப்பார்கள். பிறகு, அவரவர் கலப்பையை எடுத்து ஏர்பூட்டி, அன்றைய நாளில் வடக்குச் சூலமாக இருந்தால் தெற்கு நோக்கியும், தெற்கு சூலமாக இருந்தால் வடக்கு நோக்கியும் உழவு செய்வோம். இப்படி நல்ல நேரம், திசை பார்த்து உழவு செய்வதால் ‘நல்லேர் பூட்டுதல்’ எனவும் சொல்வோம்.

உழவு செய்ததும் ஊர்ப்பெரியவர், ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் பெற்ற விதைகளை அப்படியே பரவலாகத் தூவி விதைப்பார். வெயிலில் உழவு செய்த விவசாயிகள் தாகம் தீர்க்க ‘பானகம்’ குடிப்பார்கள். பிறகு மாடுகளை விரட்டிவிடுவோம். அதில் வெள்ளை நிற மாடு வேகமாக ஊருக்குள் ஓடி வந்தால்... அந்த ஆண்டுப் பருத்தி, வெள்ளைச்சோளம் ஆகிய வெள்ளை நிறப்பயிர்கள் நன்கு விளையும் என்று அர்த்தம். சிவளை நிற மாடுகள் ஓடிவந்தால்... வத்தல், துவரை, சிவப்புச் சோளம் ஆகிய சிவப்பு நிறப் பயிர்கள், நன்கு விளையும் எனத் தெரிந்து கொள்வோம்.

வீட்டுக்கு வந்த மாடுகளுக்குப் பருத்தி விதை, பிண்ணாக்கு, வைக்கோல், புற்கள் ஆகியவற்றைக் கொடுப்போம். ஊருக்குப் பொதுவான நிலத்தில் உழுதுவிட்டு விவசாயிகள், அவரவர் நிலங்களிலும் உழவு செய்து, அவரவர் கையில் உள்ள விதைகளை விதைப்பார்கள். அடுத்து பெய்யும் மழையால் அதன் முளைப்புத்திறன் பார்த்து, விதையின் வீரியத்தையும் தெரிந்துகொள்ளலாம். வீட்டிலிருந்து நிலத்துக்கும், நிலத்தில் உழவு செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போதும் கலப்பையைத் தோளிலேயே சுமந்து செல்வோம். நிலத்தில் விதைத்த விதைகள் முளைத்து நிற்பதைக் கிராமத்தில் சுற்றித்திரியும் ஆடு மாடுகள் உண்ணும். சித்திரையில் உழவு செய்தால் விவசாயம் செழிக்கும், நல்ல மகசூல் கிடைக்கும் என்பது நம்பிக்கை” என்றார்.

களைகளை அழிக்கும் கோடை உழவு!

கோடை உழவின் பயன்கள் குறித்துக் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மையத்தின் உழவியல் துறை உதவிப் பேராசிரியர் இளமதி சொன்ன தகவல்கள் இங்கே...

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்!“ஏப்ரல் முதல் ஜூன் வரையுள்ள மாதங்கள் கோடைக்காலம். இந்தக் காலத்தில் பெய்யும் மழைதான் கோடைமழை. மழைநீரை அடிப்படையாக வைத்து மட்டுமே மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. கோடைமழைக்கு முன்பாக உழவு செய்வது அவசியம். ஏர் கலப்பையைப் பயன்படுத்தியோ அல்லது இயந்திரக் கலப்பையைப் பயன்படுத்தியோ உழவு செய்யலாம். இந்த உழவினால் நிலத்தில் இறுகலான மண் கட்டிகள் உடைந்து பொல பொலப்பாகிவிடும்.

உழவின்போது அடிமண் மேல் பகுதிக்கும், மேல்மண் அடிப்பகுதிக்கும் செல்லும். இதனால், நீரின் கொள்திறன் அதிகரிக்கும். மண்ணுக்கு அடியில் உள்ள கூட்டுப்புழுப்பருவ பூச்சிகள், முட்டைகள் ஆகியவை மேல்பரப்பில் வந்து வெயிலில் காய்ந்து அழிந்துவிடும். களைகளின் வேர் காய்ந்து பட்டுப்போகும்.

வழக்கமான உழவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உளிக்கலப்பையால் ஓர் உழவும் செய்து வர வேண்டியது அவசியம். இதனால், 50 சென்டி மீட்டர் முதல் 1 மீட்டர் வரை ஆழம் வரை உழ முடியும். ஆழமாக உழுவதுதான் முக்கியமானது. இதனால், கோடைக்காலத்தில் பெய்யும் மழைநீரை வழிந்தோடாமல், ஆவியாகாமலும் மண்ணுக்குள் சேமித்து வைக்க முடியும். கோடை உழவு செய்யாவிட்டால், மழையின்போது மேல்மண் அரித்துச் செல்லப்படும். அதனால், மண்ணின் சத்துகளும் வீணாகிவிடும். ஒவ்வொரு அறுவடை முடிந்தபிறகும் ஓர் உழவு செய்து வைத்தால், மண்ணின் வளம் அதிகரிக்கும்” என்றார் இளமதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு