Published:Updated:

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

தண்ணீர்‘பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: நா.ராஜமுருகன்

பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது இத்தொடர். நீர் வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

இந்திய நாட்டின் மொத்த நதி நீர்வளம் 65,986 டி.எம்.சி. இதில் விவசாயம், குடிநீர், தொழிற்சாலைப் பயன்பாடு, மின் உற்பத்தி என்று மொத்தமாக 21,356 டி.எம்.சி தண்ணீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். அதாவது, மொத்த நீர்வளத்தில் 30.1 சதவிகிதத் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். மீதி 69.9 சதவிகிதத் தண்ணீரைக் கடலுக்குள் வீணாகக் கலக்க விட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடைப்பட்ட குறுகிய நிலப்பகுதியில் (கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில்) 39 நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளின் ஒரு பகுதியைக் கிழக்குப் புறமாகச் சுரங்கங்களின் வழியாகத் திருப்பிவிட்டால், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இவ்வளவுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு, கிழக்குப்பகுதியில்தான் பெரும்பான்மையான பாசன நிலங்கள் இருக்கின்றன. இதற்குத் தண்ணீர் கிடைத்தால் பெரிய அளவில் விவசாயம் நடக்கும்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் புதிய நிலங்கள் பாசனம் பெறும். இதனால், உணவு தானிய உற்பத்தியும் பெருகும். மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், மாநில அரசியல்வாதிகளின் எல்லை சார்ந்த சுயநலப்போக்குகளால், தமிழகத்தின் பல பகுதிகளிலுள்ள நிலங்கள், வறண்ட நிலங்களாக மாறி வருகின்றன. வழக்கமாகத் தண்ணீர் வழங்கிவரும் ஆறுகளும் பிரச்னையில் சிக்கியுள்ளன. அப்படியொரு ஆறுதான் அமராவதி.

காவிரி ஆற்றில் கலக்கும் தமிழக நதிகளில் முக்கியமானது அமராவதி. திருப்பூர் மாவட்டம், உடுமலைக்கு அருகே அமைந்திருக்கும் அமராவதி அணையிலிருந்து இந்த ஆறு தொடங்குகிறது. ஆன்பொருநை, அம்பா நதி, ஆம்பிராவதி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மனிதர்கள் வறட்சியால் தவித்தபோது, பார்வதி தேவியே நதி வடிவம் எடுத்து வந்ததாக, அமராவதி ஆறு பற்றி ஒரு புராணக்கதை சொல்கிறது. அப்படிப்பட்ட நதிதான் இன்று கேரள மாநிலத்தின் சூழ்ச்சியில் சிக்குண்டு கிடக்கிறது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

அமராவதி நதியானது, 1,524 அடி உயரத்தில் ஆனைமலை பகுதிகளில் சிற்றாறுகளாக உருவாகி நெடுந்தொலைவு பாசன வளம் புரிந்து, கொங்கு நாட்டுத் திருவேணி சங்கமம் என்றழைக்கப்படும் கரூர் மாவட்டம், திருமுக்கூடலில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இந்நதியின் நீளம் 142 கிலோமீட்டர். சண்முக நதி, குடகனாறு போன்றவை அமராவதியின் துணை நதிகள்.

திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கும் இந்த ஆறு, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் முடிகிறது. எனவே, இது காவிரியாற்றின் துணை ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றின் மூலம் ராமகுளம், கல்லாபுரம், அலங்கியம், தளவாய்ப்பட்டினம், சின்னத் தாராபுரம், மாயனூர் என்று 24 பாசன கால்வாய்கள் மூலமாக 29,529 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதோடு கரூர் நகராட்சி குடிநீர் திட்டம், தாராபுரம் நகராட்சிக் கூட்டுக் குடிநீர் திட்டம், அரவக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டம், காங்கேயம் பேரூராட்சிக் குடிநீர் திட்டம் என 49 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் இந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடுமலைப்பேட்டை, தாராபுரம், கரூர் மேற்கு வட்டாரப் பகுதியில் இரண்டு போகச் சாகுபடிக்குத் தண்ணீர் வழங்கி வருகிறது இந்த ஆறு.

அமராவதி ஆற்றுக்குத் தண்ணீர் வழங்கி வரும் பாம்பாற்றின் குறுக்கே (கேரளாவின் எல்லைக்குள்) அணைகட்ட, கேரள அரசு ஜனவரி 2010-ம் ஆண்டில் திட்டமிட்டது. இத்திட்டத்தை மறையூர் என்கிற ஊரில் செயல்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது, கேரள அரசு. அதாவது மறையூருக்குப் பக்கத்தில் நாச்சிமுத்து ஓடை என்ற பகுதியில் தூவானம் அருவியை ஒட்டி 100 ஏக்கர் பரப்பளவில் 230 கோடி ரூபாய் செலவில் அணைகட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும், மத்திய அரசின் பிற அமைச்சகங்களிடமும் அனுமதி கேட்டுக் கடிதம் எழுதியுள்ளது, கேரள அரசு. இந்த அணை மூலம் பாலக்காட்டுப் பகுதிக்குத் தண்ணீர் வழங்க முடியும் என்று நம்புகிறது, கேரள அரசு. இதற்கு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கரூர் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காகப் பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

இதேபோல, இடுக்கி மாவட்டத்தில் ‘இடுக்கி பேக்கேஜ்’ என்ற பெயரில் புதிதாக ஏழு அணைகளைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையை ஒட்டி இடுக்கி மாவட்டத்தில் செங்கலாறு, தலையாறு மற்றும் வட்ட விடா என மூன்று ஆறுகளில் புதிய அணைகள் கட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் செங்கலாறு திட்டத்தில் பட்டிசேரி மற்றும் காந்தலூர் ஆகிய இரு இடங்களில் இரு அணைகள் கட்டப்படும். தலையாறு திட்டத்தில் அப்பர் சட்டு மூணாறு, லோயர்சட்டு மூணாறு மற்றும் தலையாறு பகுதியில் 3 அணைகள் கட்டப்படும். வட்டவிடா திட்டத்தில் ஒற்றைமரம் மற்றும் கொட்டு கொம்பூர் ஆகிய இடங்களில் அணைகள் அமைத்திட திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கேரள மாநில நீர்வளத்துறை, இந்த அணைத் திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறது.

தொடர்ந்து தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்கும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்ட தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது, கேரளா. இத்தகைய அணைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அமராவதி உள்ளிட்ட ஆறுகளின் மூலம் கிடைக்கும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்துவிடும். இதனால், தமிழகத்தின் சாகுபடிப் பரப்பளவு பெருவாரியாகக் குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆற்றுப்பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் வேறு தொழிலுக்குச் செல்ல நேரிடும். இந்த விஷயத்தில் தமிழக அரசும், மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. கேரளாவின் வலையில் தமிழகத்தின் இன்னொரு ஆறும் சிக்கியுள்ளது. அதைப்பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

-பாயும் 

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி!

அமராவதி ஆறு தோன்றும் இடம்

கொழுமத்துக்கு மேற்கே, மறையூருக்கு மேல் தென்திசையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தொடுகற்பாறையிலிருந்து ஊற்றெடுத்துப் பெருகி, அஞ்சிநாடு எனும் மலையின் வழியாக ஓடி, மேற்கிலிருந்து வரும் பாம்பாற்றுடன் கூடுகிறது.

பிறகு, நேர்கிழக்காகத் தளிஞ்சி எனும் இடத்துக்குப் பரவித் தேனாற்றுடன் சேர்ந்து நேர்வடக்கில் ஓடி கல்லாபுரத்து அணைக்கு மேல் 1.6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள துவானா அருவியில் விழுந்து... பிறகு நேர் வடக்காகச் சென்று கீழ்நோக்கித் திரும்பி கல்லாபுரத்தின் வடபுறமாக வளைந்து கொழுமத்தின் கீழ்வரும் குதிரையாற்றுடன் இணைகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு