Published:Updated:

பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!
பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்பம்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன், முருங்கைச் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்துச் சொன்ன தகவல்கள் கடந்த இதழில் இடம்பிடித்திருந்தன. தொடர்ந்து பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிச் செந்தூர்குமரன் சொன்ன தகவல்கள் இங்கே...

பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!


“பூ மொட்டுப்புழு, பூ மொட்டுத் துளைப்பான், இலைவெட்டுப்புழு, கம்பளிப் புழு, பட்டை மற்றும் தண்டுத் துளைப்பான், சாம்பல் வண்டு ஆகியவை முருங்கையைத் தாக்கும் பூச்சிகள். பூ மொட்டுப் புழுவைச் சரியாகக் கவனிக்கத் தவறினால் 78 சதவிகித அளவு சேதாரம் ஏற்படும். இது அந்துப்பூச்சியின் தாக்குதலாகும். அந்துப்பூச்சி பூ மொட்டில் முட்டையிடக்கூடியது. ஒரு பெண் அந்துப்பூச்சி, தன் வாழ்நாளில் 250 முட்டைகள் வரை இடும். அதிலிருந்து வெளிவரும் புழு லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். முட்டை வைத்ததிலிருந்து நான்கு நாள்களில் புழுக்கள் வெளிவந்து, பூவுக்குள் போய்விடும். ஒரு பூவில் ஒரு முட்டை முதல் ஐந்து முட்டைகள் வரைகூட இருக்கலாம். எத்தனை முட்டை இருந்தாலும், ஒரு புழு பூவுக்குள் போய்விட்டால், அந்தப் பூ அவ்வளவுதான். மொட்டு உருவானவுடன் 5 சதவிகித மூலிகைப் பூச்சிவிரட்டிக் கரைசலைத் தெளித்து, இந்தப் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்கலாம். காலை நேரத்தில் பனி விலகியவுடன் மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். நிலத்தில் ஆங்காங்கே விளக்குப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

இலைவெட்டுப் புழு, கம்பளிப்புழு போன்ற புழுக்களால் இலைகள் அதிகளவில் பாதிக்கப்படும். இந்தப்புழுக்கள் கூட்டம் கூட்டமாக வரக்கூடியவை. புழுக்களைக் கட்டுப்படுத்த வயலில் ஆங்காங்கே பறவை தாங்கிகள் அமைக்க வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் ஒட்டுண்ணி அட்டை ஆகியவற்றை நிலத்தில் ஆங்காங்கே வைப்பதன் மூலமாகவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

முருங்கையில் ஒரு முக்கியப் பிரச்னை காய் நிறம் மாறுதல். பச்சையாக இருக்கும் காய், பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். இதற்குக் காரணம் காய் ஈ. இது முருங்கைக்காயின் வரிகளுக்கு இடையேயுள்ள பள்ளத்தில் முட்டையிடும். ஒரு காய் ஈ, தன் வாழ்நாளில் 200 முதல் 250 முட்டைகள் வரை இடும். அதில் 20 முதல் 30 முட்டைகள் வரை பொரியும். முட்டை வைத்ததிலிருந்து நான்காவது நாளில் பொரிந்துவிடும். எனவே காய் ஈ தாக்குதலிலிருந்து தப்பிக்க, காய்ச் சிறியதாக இருக்கும்போதே, (பள்ளங்கள் உருவாவதற்கு முன்பே) 5 சதவிகித வேப்பெண்ணெய் கரைசலைத் தெளிக்க வேண்டும். காயில் பள்ளம் உருவாகும் சமயத்தில்தான் காய் ஈ, முருங்கைக்கு வரும். அப்போது வேப்பெண்ணெய் வாடை, அதற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதால், முருங்கைக்காயில் அமராமல் வேறு இடம் தேடிச் சென்றுவிடும். இந்தக் கரைசலை 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். காய்களில் ஓரளவு சதைப்பிடிப்பு வந்த பிறகு, இந்த ஈக்கள் தாக்குவதில்லை.

பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

காய்ப்புழுவின் தாய் அந்துப்பூச்சி, மண்ணில் வாழக்கூடியது. காய் சதை பிடிக்கும் நேரத்தில் மண்ணிலிருந்து வெளியே வந்து காயின் பள்ளத்தில் முட்டையிடும். இந்த அந்துப்பூச்சிகள் தரைக்குக் கீழே 15 சென்டிமீட்டர் ஆழத்தில் இருக்கும். எனவே முருங்கைத் தோட்டத்தை அவ்வப்போது உழவு செய்தால், மேல் பகுதிக்கு வரும் அந்துப்பூச்சிகளைப் பறவைகள் உண்டு அழித்துவிடும்.

இலைப்புள்ளி, வேரழுகல் ஆகியவைதான் முருங்கையைத் தாக்கும் முக்கிய நோய்கள். சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைத் தலா 20 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து, மண் மற்றும் இலையில் படும்படி தெளித்தால் இலைப்புள்ளி நோய் கட்டுப்படும். முருங்கையில் இலை மஞ்சளாக இருப்பது சத்துக்குறைபாட்டின் வெளிப்பாடு. ஆறு மாதத்துக்கு ஒருமுறை முருங்கைக்குத் தேவையான சத்துகளைக் கொடுப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம். முருங்கைச் சாகுபடி மற்றும் மதிப்புகூட்டல் தொடர்பான ஆலோசனைகளுக்குக் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு:
செந்தூர்குமரன்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம், சிவகங்கை மாவட்டம்.
தொலைபேசி: 04577 264288
செல்போன்: 94438 69408 

தேனீ வளர்ப்புக்கு ஏற்ற முருங்கை!

தேனீ வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் முருங்கைத் தோட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இயற்கையிலேயே முருங்கைப்பூவில்தான் அதிகளவு மகரந்தத்தூள் இருக்கின்றன. ஒரு முருங்கைப்பூவில் ஏழாயிரத்து நாநூறு மகரந்தத் தூள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. முருங்கையில் கத்திரிக்காய் மற்றும் மக்காச்சோளத்தை ஊடுபயிராகப் பயிரிடக்கூடாது. கத்திரி நட்டால் வேர்ப்புழு தாக்குதல் ஏற்பட்டு, முருங்கையும் பாதிப்புக்குள்ளாகும்.

முருங்கையில் அனைத்தும் பணம்

முருங்கைச் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், அதன் காய் மகசூலை மட்டுமே கவனத்தில் கொள்கிறார்கள். ஆனால், தற்போது முருங்கை இலை, காய், விதை, பிசின், பட்டை என முருங்கையின் அனைத்துப் பாகங்களுக்கும் சந்தையில் தேவையிருப்பதோடு, நல்ல விலையும் கிடைக்கிறது. தற்போது முருங்கை இலைக்காகச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகரித்து வருகிறார்கள். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் விருதுநகர் பகுதிகளில் முருங்கையின் பாகங்களைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இருக்கிறார்கள். ஒரு கிலோ பச்சை முருங்கை இலைக்கு 6 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. ஒரு கிலோ காய்ந்த இலை 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. காயவைத்துப் பொடியாக்கிக் கொடுத்தால் கிலோவுக்கு 300 ரூபாய் வரை விலை கிடைக்கும். பொருளின் தரத்தைப் பொறுத்து விலை மாறுபடும்.

காய்க்கு விலை கிடைக்காத காலத்தில், மரத்திலேயே முற்ற விட்டுவிட்டு, விதைகளைப் பிரித்தெடுத்து விற்பனை செய்யலாம். ஒரு கிலோ விதை 600 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஆண்டுக்கு 200 கிலோ வரை காய் கிடைக்கும். காய் விற்பனையைப் பற்றிக் கவலைப்படாமல் விதையாக விற்பனை செய்தால்கூட, ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள், தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில், முருங்கையில் மதிப்புக்கூட்டல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் கிடைக்கின்றன. மதிப்புகூட்டல் செய்வதற்கு முன்பாக, விற்பனை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு