Published:Updated:

நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!
நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!

புறாபாண்டி

பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!

‘‘வீரிய ஒட்டு ரக ஆமணக்கு விதைகள் எங்கு கிடைக்கும். எப்போது விதைக்கலாம்?’’

கே.சி.தேவி, நாமக்கல்.

நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர்  முனைவர் எஸ்.ஆர்.வெங்கடாசலம் பதில் சொல்கிறார்.


‘‘ஆமணக்குச் சாகுபடி செய்ய முன்வந்துள்ளமைக்கு வாழ்த்துகள். ஆமணக்கு பயிர் நம் நாட்டுக்கு அந்நியச்செலாவணியைக் கொடுக்கும் பயிர். ஆமணக்கு எண்ணெய், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டுக்கு அந்நியச்செலாவணி கிடைப்பதோடு விவசாயிகளுக்கு லாபமும் கிடைத்துவருகிறது. ஆமணக்கின் தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருவதால், சர்வதேச மற்றும் இந்திய சந்தையில் இதன் விலை சீராகவும், நிலையாகவும் உயர்ந்துகொண்டு வருகின்றது.

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், இதுவரை டி.எம்.வி.சி.எச்-1 மற்றும் ஒய்.ஆர்.சி.எச்- 1 என்ற இரண்டு வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்களை 1998 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன. ஆமணக்கில் உயர் விளைச்சல் வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தியதை அங்கீகரிக்கும்பொருட்டு, கடந்த 2012-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய எண்ணெய்வித்து ஆராய்ச்சிக் கழகம், ஏத்தாப்பூர் ஆராய்ச்சி நிலையத்தினைச் சிறந்த ஆராய்ச்சி நிலையமாகத் தேர்வு செய்து விருது வழங்கியது. தமிழ்நாட்டில் குறிப்பாகச் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சித்திரை (இறவை), ஆடி (மானாவாரி) மற்றும் ஐப்பசி (இறவை) பட்டங்களில் ஆமணக்கு  பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள், இன்று தனிப்பயிராக இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்து வருவதற்கு வீரிய ஒட்டு ரக ஆமணக்கின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பான்மையான சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆமணக்கினை விருப்பப் பயிராகச் சாகுபடி செய்கிறார்கள். இதற்குக் காரணம், குறைந்த செலவீனம், குறைந்த நீர் தேவை, கூலியாள்கள், வறட்சியைத் தாங்கி வளரும் பண்பு மற்றும் நிலையான சந்தை மதிப்புப் போன்றவையாகும்.

நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!

வீரிய ஒட்டு ரக ஆமணக்கு, வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மேலும், இந்தப் பயிர் அனைத்துவிதமான மண் வகைகளிலும் குறிப்பாக வளம் குன்றிய மண்ணிலும், நன்றாக வளர்ந்து விளைச்சலைக் கொடுக்கும் வல்லமை கொண்டது.

நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!

வீரிய ஒட்டு ரக ஆமணக்குப் பயிரினை இறவை மற்றும் மானாவாரியில் நிலக்கடலை, உளுந்து, வெள்ளரி, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுடன் ஊடுபயிராகவும் பயிரிட்டுக் கூடுதல் வருமானம் பெறலாம். இதுமட்டுமின்றிப் பிரதானப் பயிர்களில் பூச்சித் தாக்குதலை வெகுவாகக் குறைக்கவும் வழிவகை செய்கிறது. வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்களைப் பொருத்தமட்டில், செடியிலுள்ள கிளையின் தன்மை, தண்டின் நிறம், சாம்பல் பூச்சு, காய்களின் தன்மை மற்றும் வயது ஆகியவை ரகங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிக விளைச்சல் தரக்கூடிய ஒய்.ஆர்.சி.எச்-1 (YRCH-1), டி.சி.எச்-519 (DCH-519) மற்றும் ஜிசிஎச்-4 (GCH-4) ஆகிய ஆமணக்கு ரகங்களைக் கொண்டு தனிப்பயிராகச் சாகுபடி செய்யும் பொழுது, ஏக்கருக்குச் சராசரியாக 1,500 கிலோ வரை இறவையிலும், 1,000 கிலோ வரை  மானாவாரியிலும் விளைச்சல் பெறலாம். வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்கள் 150-170 நாள்களுக்குள் அறுவடை முடிந்துவிடும். முதல் அறுவடை, விதைத்த 90-ம் நாளும், இரண்டாவது அறுவடை 120-வது நாளும், கடைசி அறுவடை 150-வது நாளும் செய்யலாம். தற்போது, ஆமணக்கு கிலோ ரூ.42 வரை விற்பனைச் செய்யப்படுகிறது. வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்களின் விதைகளை மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். வீரிய ஒட்டு ரக ஆமணக்கு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம்-631119. தொலைபேசி: 04282 293526.

‘‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்ற முதுமொழியின் பொருள் என்ன?’’

கே.பரமசிவம், முசிறி.

வேளாண் சமூகக் கல்வியாளர் நா.ஜனார்த்தனன் பதில் சொல்கிறார்.

“எள்ளும் கொள்ளும் இந்த மண்ணின் பாரம்பர்ய பயிர்கள். நம் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் நடந்துவருகிறது. இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களைத்தான் பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள். இருபொருள் தரும்படி சொற்களைப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் சிறப்பு. அந்த வகையில்தான் ‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்பதைப் பார்க்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!

எள்ளும், கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம் பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப்பொருள். இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது. கிராமப்புறங்களில் இன்றும்கூட நரம்புத் தளர்ச்சி வந்தவர்களுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக் காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது. எள்ளிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்’ என்று சொல்கிறோம். ஆக, இளைத்தவனைத் தேற்றும் என்பதால், ‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னார்கள்.

நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!


அதேபோல, கொழுத்தவனுக்குக் கொள்ளு கொடுக்கச் சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும் சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு, குதிரைகளுக்கு விருப்பமான உணவு. அதைச் சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள் ஓடும். அதிக அளவுக்குத் தீனி எடுத்துக்கொண்டாலும், குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்குக் காரணம் அந்தக் கொள்ளுதான். விவசாய ரீதியில் பொருத்திப் பார்த்தாலும், இந்த முதுமொழி அப்படியே பொருந்தும். பொருளாதார ரீதியாக வளம் குறைந்து இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பலன் பெற முடியும். மானாவாரியில்கூடச் சிறப்பாக விளைச்சல் கொடுக்கக் கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்துவிடும். அதனால்தான், ‘பொருளாதாரத்தில் இளைத்தவர் எள் பயிர் செய்ய வேண்டும்’ என்றார்கள்.

அளவுக்கு மீறிய பணம் இருந்தாலும், நிலத்தில் பயிர் செய்யாமல் விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும். சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே... ‘கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்றும் சொல்லி வைத்தார்கள். கொள்ளு அற்புதமான பசுமை மூடாக்கு பயிர். களைகள் அதிகமாக முளைக்கும் நிலங்களில் கொள்ளு விதைத்துவிட்டால், களைகளை முளைக்கவிடாது. இதனால், மூன்று விதமான நன்மைகள் கிடைக்கும். முதலில் களை எடுக்கும் செலவு மிச்சமாகும். இரண்டாவதாக நிலத்தில் பசுமை மூடாக்கு இருப்பதால், நீர் பாசனம் செய்வதும் குறையும். மூன்றாவதாகக் கொள்ளு மூலம் வருமானமும் கிடைக்கும். எனவே, கொள்ளுச் சாகுபடியைக் கொழுத்தவர்கள் மட்டுமல்ல, விவசாயம் செய்பவர்கள் சூழ்நிலைக்குத் தக்கபடி பயிரிடலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 98942 48272.

நீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,

99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு