மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்

மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்

மாத்தியோசிஓவியம்: வேல்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாஸ்கர் சாவே, வாயில வடைசுட்டு வித்த ஆள் கிடையாது. இயற்கை விவசாயம் மூலம் ஒரு விவசாயி வளமா வாழ முடியும்னு தன்னோட கல்பவிருட்சம் பண்ணையை (Kalpavruksh) உருவாக்கி காட்டினாரு. இன்னைக்கும் இயற்கை விவசாயம்பத்தி படிக்க, இந்தப் பண்ணைக்குப் பல நாடுகள்ல இருந்து, இயற்கை ஆர்வலருங்க வந்துட்டுப்போறாங்க. ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி மசானபு ஃபுகோகா இந்தப் பண்ணையைப் பார்த்துட்டு, பாராட்டுத் தெரிவிச்சதெல்லாம் வரலாறு. காந்தியவாதியான பாஸ்கர் சாவே, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதத்தை, கடந்த இதழ்ல வெளியிட்டுருந்தோம். அதோட தொடர்ச்சியை, இந்த இதழ்லயும் படிங்க....  

மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்

‘‘அன்புள்ள சுவாமிநாதன்ஜி,

அறிவைப் பயன்படுத்தாத இடத்தில் அறியாமை, ‘அறிவியல்’ என்ற போர்வையில் உலா வரும். இதுபோன்ற வேளாண் அறிவியலைத்தான் நீங்கள் வளர்த்து, நம் விவசாயிகளை அழிவின் பாதையில் அழைத்துச் செல்கிறீர்கள். அறியாமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. அது அறிவை அடைய ஏற வேண்டிய முதல் படியாகும்.

நம் நாட்டில் சுமார் 150 வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை ஆயிரக்கணக்கான ஏக்கர் வளமான நிலங்கள் கொண்டவை. அவற்றுக்குக் கட்டமைப்பு, இயந்திரங்கள், பணியாளர்கள், பணம் என்று எதுவுமே தட்டுப்பாடின்றி உள்ளன. ஆனாலும், ஒரு வேளாண் பல்கலைக்கழகம்கூடத் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்யமுடியாத கேவலமான நிலையில் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும், இங்கிருந்து நூற்றுக்கணக்கானவர்களைப் பட்டம் கொடுத்து, விவசாயிகளின் கழனிக்கு அனுப்புகின்றன பல்கலைக்கழகங்கள். இந்தப் பட்டதாரிகள், கழனி வாழ் உழவர்களுக்கு உபயோகமாக இருப்பதைவிட, உபத்தரம் கொடுக்கக்கூடிய வேலைகளைத்தான் செய்கிறார்கள். அதாவது, இயற்கையைக் கெடுக்கக்கூடிய ரசாயன நுட்பங்களைத்தான், இவர்கள் விவசாயிகளுக்குக் கொடுத்து, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சி வருகிறார்கள். கடைசியில் கழனியில் உள்ள விவசாயிகள் மேலும் மேலும் ரசாயன இடுபொருள்களை வாங்கி, கடனாளியாக மாறும் நிலை உருவாகிறது. இயற்கையின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த முயலும் அடிப்படை தவறு உங்களைப் போன்ற ‘விவசாய அறிவியலாளர்களின்’ அறிவின்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மனிதனால் மாசுபடுத்தப்படாத இயற்கை ஏற்கெனவே அதிகபட்ச உற்பத்தியைத் தாராளமாகத் தந்து வருகிறது. ஒரு நெல்மணி ஓராயிரம் நெல்மணிகளைச் சில மாதங்களிலேயே உற்பத்திச் செய்யும் திறன் இயற்கையிடம் உள்ளது. 

மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்

இயற்கை தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது. காற்று, தண்ணீர், நிலம் இவை மூன்றுடன் கைகோத்துக் கொண்டு வனஸ்பதி சிருஷ்டி (தாவர உலகம்), ஜீவ சிருஷ்டி (பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகள் உலகம்) மற்றும் பிராணி சிருஷ்டி (விலங்குகள் உலகம்) ஆகிய மூன்றும் ஒத்திசைந்து வேலை செய்கின்றன. இந்த ஆறு முக்கியக் காரணிகளும் இந்த உலகில் மாற்றங்களுடன் கூடிய சமநிலையைக் கட்டிக்காத்து வருகின்றன.

இந்த ஆறும் சேர்ந்து செய்யும் அற்புத வித்தைத்தான் புதியவைகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கும் இயற்கையாகும். மனிதனுக்கு இயற்கையின் இந்த ஆறு முக்கியக் காரணிகளில் எதையும் மாற்றும் உரிமை கிடையாது. நிலம், நீர், காற்று ஆகிய மூன்றையும் நாம் மிகவும் மாசுபடுத்திவிட்டோம். நம்முடைய வனங்களையும் அவற்றில் வாழ்ந்த உயிரினங்களையும் ஏறத்தாழ அழித்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களைப் பின்பற்றும் நவீன விவசாயிகள் இடைவிடாது கொடிய நஞ்சு கொண்ட ரசாயனத்தை விளைநிலங்களில் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.  

மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்

இதனால், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் நம் நிலங்களில் இல்லாத நிலை உருவாகி வருகிறது. மண், நீர் நஞ்சாகி, அதைச் சார்ந்து வாழும் மனிதன் உடம்பிலும் நஞ்சு புகுந்து நம்மையும் நஞ்சுண்டசுவாமிகளாக மாற்றி வருகிறது. சுவாமிநாதன் ஜி, நீங்கள் பசுமைப் புரட்சியை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கும்போது, நம் நாட்டின் மண்வளம் மறையத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக, உங்களின் பசுமைப் புரட்சி செய்த மாய வேலையால், நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாகச் சேர்த்து வைத்திருந்த வளம் குன்றாத மண்வளம், நீர்வளம், வனவளம்... எனப் பல வளங்கள் பலியாகிவிட்டன. இன்னும் பலியாகி வருகின்றன. அதிக ரசாயனம், அதிக நீர், அதிகச் செலவு பிடிக்கும் ஒற்றைப் பணப்பயிர் சாகுபடியால், ஒரு தலைமுறைக்குள் கற்பக விருட்சம்போல விளைச்சல் கொடுத்த மண்ணைக் கெடுத்துவிட்டீர்களே!

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள், உங்கள் தலைமையில் பசுமைப் புரட்சி வந்த பிறகுதான், விவசாயத்தைக் கற்றுக்கொண்டு சுபிட்சமாக வாழ்வதுபோல சொல்லிக்கொண்டீர்கள். ஆனால், இந்த விஷயத்தில் நடந்த சம்பவங்களை நாட்டில் உள்ள விவசாயிகள் அறிவார்கள். கற்றறிந்த விஞ்ஞானியான நீங்களே, இப்படி உண்மைக்குப் புறம்பாகப் பேசலாமா?” (இதைத்தான் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்களுக்கு’ என்று நம்ம ஊரில் சொல்கிறார்களோ!)

அடுத்த இதழ்ல, இந்தக் கடிதத்தோட கடைசிப் பகுதியைப் பார்க்கலாம்.