Published:Updated:

நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?

நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?

புறாபாண்டிஓவியம்: வேல்

‘‘சமவெளியில் ஆப்பிள் மரத்தை வளர்க்க முடியுமா? சிதம்பரத்தில் உள்ள என் நண்பரின் பண்ணையில் ‘வாட்டர் ஆப்பிள்’ என்ற ஒரு மரத்தில் பழங்கள் பழுத்துள்ளதைப் பார்த்தேன். இது சம்பந்தமாக விளக்கவும்?’’

கே.ரவீந்தரன், ஈக்காட்டுதாங்கல். 

நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின்  பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சரஸ்வதி பதில் சொல்கிறார்.

‘‘பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரம் உள்ள இடத்தில்தான் ஆப்பிள் மரம் வளரும். இந்த ஆப்பிள் மரத்துக்கு ஆண்டொன்றுக்கு 75 மணி நேரம் உறைபனி இருக்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் ‘சில்லிங் ஹவர்ஸ்’ என்று சொல்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரேதசங்களில், விளையும் வகையில், கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் மூலமாக ‘கே.கே.எல்-1’ என்ற ஆப்பிள் ரகத்தை வெளியிட்டுள்ளோம். மே-ஜூன் மாதங்களில் இந்த ரகம் விளைச்சலுக்கு வரும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?

காஷ்மீர் ஆப்பிள் ரகம் மற்றும் தமிழ்நாட்டில் விளையும் ரகம் இரண்டிலும், நிறம், மணம், சுவை... போன்றவை வேறுபடுகின்றன. அடிப்படையில் ஆப்பிள் மரம், பனிப்பொழியும் பகுதிகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. கொடைக்கானல் மலையின் மேல் பகுதியிலும், ஊட்டியிலும் ஆப்பிள் விளையும் அளவுக்குப் பனிப்பொழிவு உண்டு. ஏலகிரி, ஏற்காடு... போன்ற உயரம் குறைந்த பகுதிகளில், ஆப்பிள் மரங்கள் வளர்ந்தாலும், காய்ப்புத்திறன், சுவை ஆகியவை வித்தியாசப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அடுத்து, ‘வாட்டர் ஆப்பிள்’ என்பது தண்ணீர்ச் சத்துகள் நிறைந்த ஒரு பழம். தமிழ்நாட்டில் 1,500 அடி உயரத்துக்கு மேலுள்ள ஏலகிரி, ஏற்காடு... போன்ற மலைப்பகுதிகளில் நன்றாகக் காய்ப்புக்கு வருகின்றன. பெயர் வாட்டர் ஆப்பிள் என்றாலும், தாவரவியல்ரீதியாக ஆப்பிளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?இந்தப் பழத்தில், 93 சதவிகித நீர்ச்சத்துகள், புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துகள் உள்ளன. மித வெப்பநிலையில் வளரும் வாட்டர் ஆப்பிள் மரங்கள், சமவெளிப் பகுதியில் சிறப்பாக வளருவதில்லை. அப்படியே வளர்ந்தாலும், ஒப்பீட்டளவில், மலைப்பகுதியைக் காட்டிலும் வளர்ச்சியும் காய்ப்புத் திறனும் குறைவாகவே இருக்கும். தோட்டக்கலைச் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், தங்களது பண்ணைகளில் ஆசைக்கு, இரண்டு, மூன்று மரங்களை வளர்த்து வருகிறார்கள். ஏக்கர் கணக்கில் இதை யாரும் சாகுபடி செய்வதில்லை.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 04542 240931.

‘‘மாட்டுப் பண்ணை வைத்துள்ளோம். சில சமயங்களில் பால் தண்ணீர்போல உள்ளது. நாங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கலப்பதில்லை. ஆனாலும், பால் நீர்த்துப் போய் உள்ளது. என்ன காரணம், இதை எப்படி சரி செய்வது?

கே.ரேணுகா, மோகனூர்.


நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் முதல்வர் முனைவர் ஆ.துரைசாமி பதில் சொல்கிறார். 

நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?

“தீவன மேலாண்மையில் குறைபாடு இருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும். பால் கறக்கும்போது, நுரை வருகிறதா என்று கவனியுங்கள். நுரை வந்தால்தான் புரதச்சத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். நுரையில்லாமல், தண்ணீர்போல இருந்தால் புரதச்சத்துப் பற்றாக்குறையே காரணம் என்று புரிந்துகொள்ளலாம். புண்ணாக்கு, பருத்திக்கொட்டை... போன்றவற்றைத் தீவனமாகக் கொடுத்து இதைச் சரி செய்ய முடியும். தவிர டானின் (சுருங்கிய வடிவில் உள்ள புரதம்) அதிகமாக உள்ள சவுண்டல் (சூபாபுல்), கிளரிசீடியா, வாதநாராயணன்... போன்ற மரங்களின் இலைகளையும் தீவனமாகக் கொடுக்க வேண்டும். இவற்றை புற வழிப் புரதங்கள் என்பார்கள் (Bypass protein). இவை மாட்டின் இரைப்பையிலுள்ள நான்காம் அறையில் தங்கிச் செரிமானம் ஆகும். இதனால்தான் பாலில் புரதம் கூடுகிறது. 

நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?

பாலில் எஸ்.என்.எஃப். என்று சொல்லப்படும் கொழுப்பு தவிர, பிற சத்துகளின் அளவு குறைவாக இருந்தால், தாதுஉப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும். சிலர் இதைத் தீவனத்தொட்டியில் மேலாகக் கொட்டி விடுகிறார்கள். அது தவறு. அப்படிச் செய்யும்போது, தொட்டியின் அடியில் சென்று தங்கிவிடுவதால், மாடுகளுக்குக் கிடைக்கவேண்டிய சத்துகள் கிடைக்காது.

இதைத் தவிர்க்க தீவனத்துடன் தாதுஉப்புக்களை நன்றாகப் பிசைந்து, அதனுடன் 50 கிராம் சமையல் சோடா உப்பையும் கலந்து கொடுக்க வேண்டும். இந்தத் தீவனத்தைத் தொடர்ந்து கொடுக்கும்போது ஏழு நாள்களிலேயே பாலில் மாற்றம் தெரியும். எனவே, இந்த நுட்பங்களைக் கவனமாகக் கடைப்பிடிக்கவும். லாபகரமாகப் பால் பண்ணை நடத்துவதற்கு, இதுபோன்ற நுட்பங்களைக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.”

‘‘காளான் வளர்த்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். எத்தனை நாள்கள் காளானைச் சேமித்து வைக்க முடியும்?’’

எம்.கண்ணன், வத்தலகுண்டு.


மதுரை மனையியல் கல்லூரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் முனைவர் வெ.மீனாட்சி  பதில் சொல்கிறார்.

‘‘காளான்கள் தாவர வகையைச் சேர்ந்த பூஞ்சணமாகும். காளான்களில் அதிக அளவு புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்புச்சத்து உள்ளன. காளானில் தாது உப்புக்கள் மற்றும் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உள்ளன.
 
பழங்கள் மற்றும் காய்கறிகள் போலவே காளான்களும் விரைவில் கெட்டுவிடும் குணம் கொண்டது. காளான்களில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதாலும், மிருதுவாக உள்ளதாலும் நம்மால் சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரத்திற்குமேல் பாதுகாக்க முடியாது. காளான்கள் முதிர்ச்சி அடைந்த உடனே கெட ஆரம்பிக்கும். இவை பழுப்பு நிறமாக மாறத் தொடங்குவதே கெடுவதின் முதல் அறிகுறியாகும். பிறகு அவை உண்ணுவதற்கு ஏற்றவையாக இருக்காது. பாலிபீனால் ஆக்சிடேஸ் என்ற நொதியானது நிறமற்ற பீனால் போன்றவற்றை ஆக்சிஜன் உதவியோடு குயினோனாக மாற்றி விடுகின்றன. இதனால், காளான்கள் உண்ணுவதற்குத் தகுதியற்றதாகப் போய்விடும்.

காளான் மிக விரைவில் கெடக்கூடிய தன்மை உடையதால் நுகர்வோர்க்குச் சுத்தமான, தரமான காளான்களை விற்பனை செய்ய காளான்களைப் பதப்படுத்துதல் அவசியமாகின்றது. குறைந்த காலச் சேமிப்பிற்குக் காளான்களைத் துளையிட்ட பைகளில் அடைத்துக் குறைந்த வெப்பநிலையில் சேமிப்பதன் மூலமும் சேமிக்கலாம். நீண்டகாலச் சேமிப்பிற்குக் காளான்களை டின்களில் அடைப்பது, காய வைப்பது, ஊறுகாய் செய்வது போன்றவற்றின் மூலம் சேமிக்கலாம். ஆனால், மேற்கூறிய இரண்டு முறைகளும் மிக அதிக அளவு செலவு பிடிக்கும் நவீன முறைகளாகும். காளான்களை அறுவடை செய்து, சுத்தம் செய்து பின்பு அவற்றைத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் அடைத்து, அதனை நாம் குளிர் சாதனப் பெட்டியில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 24 மணி நேரம் சேமிக்கலாம். விற்பனைக்குக் காளான்களை நாம் நீண்ட தூரம் அனுப்பும்போது காளான் பைகளுடன் பனிக்கட்டிகள் அடைத்து பைகளை வைத்து அனுப்பலாம்.’’

நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.  உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,  99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.