Published:Updated:

பலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி!

பலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி!
பிரீமியம் ஸ்டோரி
News
பலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

ற்போதைய சூழ்நிலையில், அரசாங்கப்பணியில் இருந்தாலும், தனியார் நிறுவனப் பணியில் இருந்தாலும் ஓய்வுக்காலச் சேமிப்பு என்பது அவசியமான ஒன்று. ஓய்வுக்குப் பிறகு, மொத்தமாக ஒரே சமயத்திலோ அல்லது மாதாமாதமோ கணிசமான தொகை கிடைக்குமாறு முதலீடு செய்யக்கூடிய திட்டங்கள் பல உண்டு. பணி புரிபவர்களுக்கு மாதாமாதம் முதலீடு செய்வது சரியாக இருக்கும். ஆனால், விவசாயிகளுக்கு... அவர்களுக்கும் எதிர்காலப் பணத்தேவைக்கு ஒரு வழி இருக்கிறது. ஆம், அதுதான் மரம் வளர்ப்பு. 

பலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி!

சரியான திட்டமிடலோடு குறிப்பிட்ட பரப்பளவில் நல்ல வருமானம் தரக்கூடிய மரங்களை வளர்த்துவந்தால்... எதிர்காலத்தில் பொருளாதாரப் பிரச்னையை எளிதாகச் சமாளிக்க முடியும். இடுபொருள் செலவு, வேலையாள் பிரச்னை, தண்ணீர் பிரச்னை என அனைத்தையும் சமாளித்துச் சாகுபடி செய்வது, மரச்சாகுபடியில் மட்டுமே சாத்தியம். அதனால்தான், பெரும்பாலான விவசாயிகள் மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜன். இவர் ஆறு ஏக்கர் பரப்பில் மலைவேம்பு, ரோஸ்வுட், தேக்கு, மகோகனி, வேங்கை உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார். அம்மாபேட்டை அருகிலிருக்கும் அருந்தவபுரம் எனும் கிராமத்தில்தான் கனகராஜனின் பண்ணை இருக்கிறது. ஒரு நண்பகலில் அவரது பண்ணைக்குச் சென்றோம். அடர்ந்த வனமாகக் காட்சியளித்தது அவரது பண்ணை. வெளியில் வெயில் சுட்டெரித்தபோதும் செழித்து வளர்ந்திருந்த மரங்களால், அவரது தோப்பு நிழல் போர்த்திக் குளுமையாக இருந்தது. தோட்டம் முழுவதும் பரவலாக விழுந்திருந்த இலைதழைகள் மண்ணில் மூடாக்காகப் பரவியிருந்தன. தோப்பை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த நம்மைத் தோளைத்தொட்டு உலுப்பிய கனகராஜன், “மூணு வருஷத்துக்கு முன்னாடி காட்டுக்கருவை மண்டி முள்ளுக்காடாகக் கிடந்த நிலம். இப்போ எப்படி இருக்கு பாருங்க. மரங்கள்லாம் மூணே வருஷத்துல அபரிமிதமா வளர்ந்துருக்கு. இந்தளவுக்கு வளரும்னு நானே எதிர்பார்க்கலை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி!

தோப்புக்குள்ள வந்து கயித்துக்கட்டில்ல படுத்து தூங்கினா, மனசு உடம்பு எல்லாம் உற்சாகமாயிடும். அதிகாலை நேரம், சாயங்கால நேரங்கள்ல பறவைகளோட சத்தம் ரம்மியமா இருக்கும். பல விவசாயிகள் என் பண்ணையை வந்து பார்த்துட்டுப் போறாங்க. சாட்டிலைட் மூலமாப் பார்த்துட்டு நார்வே, எத்தியோப்பியா நாடுகள்ல இருந்துகூட வந்தாங்க” என்று சொன்ன கனகராஜன், தோப்பைச் சுற்றிக்காட்டியபடியே பேசினார். “நான் விவசாயக் குடும்பத்துல பிறந்தவன்தான். பத்தாம் வகுப்பு வரை படிச்சிட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். சிமென்ட் கடையும் வெச்சுருக்கேன். எங்க குடும்பத்துக்கு 12 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. அதுல நெல் சாகுபடி செஞ்சுட்டுருக்கோம். இந்த நிலம் மொத்தம் 10 ஏக்கர். இது, நானும் என்னோட மைத்துனர் கண்ணனும் சேர்ந்து வாங்கினது. இதுல, எதிர்காலத்துல வருமானம் கிடைக்கிற மாதிரி ஆறு ஏக்கர்ல மரப்பயிர் சாகுபடி செய்யலாம்; தற்போதைய வருமானத்துக்கு நாலு ஏக்கர்ல உளுந்து, நிலக்கடலைனு சாகுபடி செய்யலாம் முடிவெடுத்தோம்.

அடுத்ததா, நிலத்துல இருந்த முள் செடிகளை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தினோம். நெய்வேலி காட்டாமணக்கு, எருக்கன், கொழிஞ்சி, தும்பைப் பூனு நிறையச் செடிகள் இருந்துச்சு. அதையெல்லாம் அப்படியே விட்டுட்டு... ஆட்டு எரு, மாட்டு எரு ரெண்டும் கலந்த தொழுவுரத்த ஏக்கருக்கு ஒரு டன் கணக்குல கொட்டி உழவு ஓட்டினோம். அடுத்து தண்ணி கட்டி நிலத்துல கிடந்த செடிகளை அப்படியே அழுகவிட்டோம். அடுத்து நிலத்தைக் காயவிட்டு ஆட்டுக்கிடை அடைச்சோம். அதுல நிலம் நல்லா செழிப்பாகிடுச்சு. அதுக்கப்புறம் நல்லா உழுது, ஒன்றரை அடி சதுரத்துக்குக் குழி எடுத்து, எரு போட்டு கன்றுகளை நடவு செஞ்சிருக்கோம்.

பலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி!

10 அடி இடைவெளியில் மலைவேம்பு இருக்கு. மலைவேம்புக் கன்னுகளுக்கு இடையில் ரோஸ்வுட், மகோகனி, தேக்கு, வேங்கை, சந்தனம், ஈட்டி மரக்கன்னுகளை நடவு செஞ்சுருக்கோம். 6 ஏக்கர் நிலத்துலயும் சேர்த்து 2,400 மலைவேம்பு, 500 ரோஸ்வுட், 500 தேக்கு, 500 மகோகனி, 500 வேங்கை மரங்கள் இருக்கு. ஈட்டி, பூவரசு, சந்தனம் எல்லாம் கலந்து 100 மரங்கள் இருக்கு. மொத்தம் 4,500 மரங்கள் இருக்கு. செழிப்பா தொழுவுரம் கொடுத்துத் தண்ணியும் பாய்ச்சுனதுல மரங்கள் நல்லா வளர்ந்துருக்கு. தொடர்ந்து கொள்ளு, உளுந்துனு ஊடுபயிராகச் சாகுபடி செஞ்சு... அறுவடைக்கப்புறம் அந்தச்செடிகளையும் மட்க விட்டதுல, மண்ணுக்கு நல்ல ஊட்டம் கிடைச்சுருக்கு. அதேமாதிரி, கவாத்து பண்றப்போ கிடைக்கிற கழிவுகளையும் மண்ணுலேயே மட்க விடுறோம்.

முதல் வருஷம் 15 நாளுக்கொரு முறை தண்ணீர் விட்டோம். ரெண்டாம் வருஷம் மாசத்துக்கு ஒருமுறை தண்ணீர் விட்டோம். இப்போ ரெண்டு மாசத்துக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுக்குறோம். பலவகையான மரங்கள் இருக்குறதால மயில்கள், கல்லுக்குருவி, கவுதாரி, காட்டுப்புறா, கிளினு ஏராளமான பறவைகள் வருது. அதோட எச்சங்களும் மண்ணுல உரமாகிடுது. 6 மாசத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு மரத்துக்கும், ஒரு கிலோ எரு போடுறோம்” என்ற கனகராஜன், மரங்கள் மூலம் எதிர்பார்க்கும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“மலைவேம்பு மரங்கள் இப்போவே 40 அடி உயரத்துக்கு வளர்ந்துருக்கு. தண்டுப்பகுதி 45 சென்டி மீட்டர் சுற்றளவு வரை பெருத்திருக்கு. வியாபாரிகள் கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, இன்னும் இரண்டு வருஷம் கழிச்சிதான் பிளைவுட் கம்பெனிக்கு வெட்டி கொடுக்கலாம்னு இருக்கோம். அந்தச் சமயத்துல ஒரு மரத்துக்கு 3,000 ரூபாய் விலை கிடைச்சாலே 2,400 மலைவேம்பு மரங்கள் மூலமாக 72 லட்சம் ரூபாய் கிடைச்சுடும். வெட்டுனதுக்கப்புறம் மறுதாம்பும் விட முடியும்” என்ற கனகராஜன் நிறைவாக,

“தேக்கு மரங்கள் 25 அடி உயரத்துக்கு மேல வளர்ந்துருக்கு. ரோஸ்வுட், வேங்கை, மகோகனி உள்ளிட்ட மத்த மரங்கள் 15 அடி உயரத்துக்கு மேல வளர்ந்துருக்கு. மலைவேம்பை அறுவடை செஞ்சுட்டா போதிய இடைவெளி கிடைச்சு மத்த மரங்கள் வேகமாகப் பெருக்க ஆரம்பிச்சுடும். இன்னும் 15 வருஷம் கழிச்சு அந்த மரங்கள் மூலமா கோடிகள்ல வருமானம் கிடைக்கும். எதிர்கால வருமானத்துக்கு இதைவிட எளிய வழி வேற என்ன இருக்கு” என்று கேட்டபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, கனகராஜன், செல்போன்: 94435 67839.