Published:Updated:

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

பலன் கொடுத்த அனுபவ பகிர்வுபயிற்சிபா.ஜெயவேல், த.ஜெயகுமார், துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி, சி.ரவிக்குமார்

டந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், ‘இயற்கை விவசாயத்தில் புதிய புரட்சி, வேஸ்ட் டீகம்போஸர்... 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!’ என்ற தலைப்பில்... கழிவுகளை மட்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு பற்றி எழுதியிருந்தோம். அதைத்தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் பசுமை விகடனைத் தொடர்புகொண்டு ‘வேஸ்ட் டீகம்போஸர்’ (Waste Decomposer) குறித்துக் கேட்டனர். பலர், அதை வாங்கித்தரச்சொல்லியும் கேட்டனர். உடனே, உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் இயங்கிவரும் தேசிய இயற்கை விவசாய மையத்தைத் (National Centre of Organic Farming) தொடர்புகொண்டு, இந்த விஷயத்தைச் சொன்னோம்.  

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

உடனடியாக, வேஸ்ட் டீகம்போஸர் பாட்டில்களை அனுப்ப ஒத்துக்கொண்ட அம்மையம், முதல்கட்டமாகத் தமிழக விவசாயிகளுக்காக 1,000 வேஸ்ட் டீகம்போஸர் பாட்டில்களை அனுப்பியது. அவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தேசிய இயற்கை விவசாய மையம், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி ஆகியவற்றுடன் கைகோத்து... ‘வேஸ்ட் டீகம்போஸர் தொழில்நுட்ப பகிர்வும், வெற்றி அனுபவமும்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது, பசுமை விகடன். கடந்த ஜூன் 2-ம் தேதி மதுராந்தகம் அடுத்த கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 950 விவசாயிகள் கலந்துகொண்டனர். காலை 7 மணி முதல் விவசாயிகள் வருகை தந்து,  நிகழ்ச்சியை வெற்றி விழாவாக மாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் துவக்கவுரையாற்றிய கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் காசிநாத பாண்டியன், “இங்கு அதிகமான விவசாயிகள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயம் சார்ந்த நிகழ்வுகளைப் பசுமை விகடனுடன் இணைந்து செயல்படுத்துவதில் இக்கல்லூரி பெருமை கொள்கிறது. இயற்கை விவசாயத்துக்கு உதவும்வகையில், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வேஸ்ட் டீகம்போஸர் உருவாக்கப் பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டுசெல்லும் நிகழ்வாக இந்நிகழ்ச்சி இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இதுபோன்ற அதிகமான நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடக்க வேண்டும்” என்றார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

வரவேற்புரையாற்றிய கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் முதன்மையர் (டீன்) முனைவர் எல்.சுப்புராஜ், ‘‘இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது. அதற்கு உதவும் வேஸ்ட் டீகம்போஸர் என்னும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சி எங்கள் கல்லூரியில் நடைபெறுவதை வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், ஆர்வத்துடன் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளதைப் பார்க்கும்போது, ஆச்சர்யமாக உள்ளது. அதுவும் இளைஞர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதைக் காணும்போது விவசாயத்துக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது எனத் தோன்றுகிறது’’ என்றார்.

அடுத்து, கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் உயிர் தொழில்நுட்பதுறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வி.கார்த்திகேயன் பேசும்போது, ‘‘பசுமை விகடன் தரப்பிலிருந்து, இப்படியொரு நிகழ்ச்சி நடத்தலாம் என்று அழைப்பு வந்தவுடன், அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யும்படி எங்கள் கல்லூரியின் இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை உத்திரவிட்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கான எங்களின் சேவை தொடரும்’’ என்றார். 

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பெங்களூருவில் உள்ள மண்டல இயற்கை விவசாய மையத்தின் துணை இயக்குநர் முனைவர் ரவீந்திரநாத், “விவசாயத்தில் பயன்படுத்தக்கூடிய ரசாயன உரங்கள் மக்களுடைய உடல்நலத்துக்குக் கேடுகளை உண்டாக்குகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, நமது இந்திய அரசாங்கம் இயற்கை விவசாயத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியிருக்கிறது. அதனைத்தொடர்ந்து இந்தியா இயற்கை விவசாயத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. தேசிய விவசாய மையத்தின் மூலம் இயற்கை விவசாயத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து ரசாயன பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முயற்சித்து வருகிறது, மத்திய அரசு. எங்களால் முழுமையாக விவசாயிகளுக்குக் கொடுக்க முடியாவிட்டாலும், பசுமை விகடனுடன் இணைந்து விவசாயிகளுக்குக் கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது குறைந்தளவு வேஸ்ட் டீகம்போஸர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. பணம் அனுப்பி, முன்பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் அனுப்ப கட்டாயம் ஏற்பாடு செய்கிறோம். சில நிர்வாக காரணங்களால் டி.டி அனுப்பியவர்களுக்கு, பாட்டில்கள் அனுப்புவது தாமதமாகிவிட்டது. இனி அனைவருக்கும் உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்” என்றார்.  

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் உள்ள தேசிய இயற்கை விவசாய மையத்தைச் சேர்ந்த அறிவியல் அலுவலர், முனைவர் ஸ்ரீநிவாஸ் மூர்த்தி, “இந்த உலகத்திலேயே சிறந்த விவசாய முறை இந்தியாவினுடையதுதான். நம் முன்னோர் இயற்கையை மதித்துக் காற்றையும், நிலத்தையும் சுத்தமாக வைத்திருந்தனர். இடைப்பட்ட காலத்தில் வந்த ரசாயன முறைகளால் பாரம்பர்யத்தை இழந்து விட்டோம். அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இப்போது களமிறங்கியிருக்கிறோம். இயற்கை விவசாயம் செய்வதற்கு யாரையும் நம்பியிருக்கக் கூடாது. நமக்குத் தேவையான இடுபொருள்களை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக விதைகளை அடுத்தவரிடம் வாங்கக்கூடாது. தேவையான விதைகளை நாமே சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பயிர்களைச் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். வயலில் எப்போதுமே ஒரு பயிரை மட்டுமே விதைக்கக் கூடாது. பல பயிர் விதைப்புதான் நல்ல பலனைக் கொடுக்கும். 

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

வேஸ்ட் டீகம்போஸரைக் கண்டு பிடித்தவுடன் அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப் பல தனியார் நிறுவனங்களை அணுகினோம். ஆனால், அந்த நிறுவனங்கள் தயாரித்த டீகம்போஸர் முழுமையான பலனைக் கொடுக்கவில்லை. அதோடு, அதை அதிக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. அதனால்தான், நாங்களே நேரடியாக விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தோம். ஒருமுறை தயாரித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு விவசாயிகளிடமிருந்து மற்றொரு விவசாயி பெற்றுக் கொள்ளலாம். இக்கரைசலை விதைநேர்த்தி செய்ய, மண் வளத்தைக் கூட்ட, பயிருக்கு ஊட்டமளிக்க, பூச்சிகளைக் கட்டுப்படுத்த... எனப் பலவகைகளில் பயன்படுத்தலாம்” என்றார்.

செவிக்கு உணவு முடிந்தவுடன், சுவையான மதிய உணவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியின் முடிவில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் வேஸ்ட் டீகம்போஸர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதைப் பெற்றுக்கொண்டு, மன நிறைவுடன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர் விவசாயிகள்.

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

அனுபவ பகிர்வு 

நி
கழ்ச்சியின் ஒரு பகுதியாக, வேஸ்ட் டீகம்போஸர் மற்றும் இயற்கை விவசாய அனுபவ பகிர்வும் நடைபெற்றது. இதில் முன்னோடி விவசாயி ‘மதுராந்தகம்’ டி.டி.சுப்பு பேசும்போது, “இந்தியாவில் எந்தப் பத்திரிகை நிறுவனமும் ஒரு தொழில்நுட்பத்தைப் பத்தி எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளும். ஆனால், பசுமைவிகடன்தான் அந்தத் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியைச் செய்கிறது. இதுவொரு அர்ப்பணிப்புக்குரிய பணி” என்றார். 

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

செங்கல்பட்டு அஜீத், “என்னுடைய பண்ணையே வேஸ்ட் டீகம்போரைக் கொண்டுதான் இயங்குகிறது. கடந்த நவம்பர் மாசம் புனேவில் நடந்த ஒரு விவசாய கண்காட்சியிலிருந்து வாங்கிட்டு வந்து பயன்படுத்தினேன். இப்போது செலவில்லாத முறையில் தோட்டத்தைப் பராமரிக்கிறேன்” என்றார்.

அரியனூர் ஜெயச்சந்திரன், “முக்கியமான இந்தத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

உத்திரமேரூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் கேசவன், கம்போஸ்ட் உரத் தயாரிப்பு நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டார். ஓய்வுபெற்ற வேளாண் துறை அதிகாரி எஸ்.பிரபாகரன், அங்ககச் சான்றிதழ் பெறும் வழிமுறைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

“வேஸ்ட் டீகம்போஸர் வெற்றிக் கோப்பைபோல உள்ளது!”

பி.டிசேதுராமன், இயற்கை விவசாயி, பேட்டைவாய்த்தலை, திருச்சி: “நான் பசுமை விகடன் வாசகர். நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னரே சென்னையில அறை எடுத்துத் தங்கிட்டேன். டீகம்போஸரை வாங்கிடணும்ங்குறதுல ஆர்வமா இருந்தேன். தனித்தனியா விவசாயிகள் வாங்க சிரமப்படுறாங்க. அதைப் பசுமை விகடன் எளிதா விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கு. இதைப் பசுமை விகடன் கொடுத்த பரிசாகத்தான் பார்க்கிறேன். இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டதுல, டீகம்போஸரைப் பயன்படுத்துறது பத்தி சில முக்கியமான யுக்திகளைத் தெரிஞ்சுகிட்டேன்.” 

ஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்!

முருகானந்தம், இயற்கை விவசாயி, அரியலூர்: “பசுமை விகடன் புத்தகத்துல படிச்ச பின்னாலதான் டீகம்போஸரைப் பத்தி தெரிஞ்சது. அதை வாங்க முன்னாடியே ரிஜிஸ்டர் பண்ணிட்டேன். இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டது மனதுக்குச் சந்தோஷமா இருக்கு. வேஸ்ட் டீகம்போஸரைப் பயன்படுத்தி நிச்சயமா நல்ல மகசூல் எடுப்பேங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. வேஸ்ட் டீகம்போஸர் கிடைச்சது, வெற்றிக் கோப்பை கிடைச்சதுபோல இருக்கு. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, அத்தனை விவசாயிகளும் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.”

சில யோசனைகள்

*இந்த பாட்டிலைத் தயாரித்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

*ஒருமுறை பாட்டிலைத் திறந்துவிட்டால் முழுவதுமாகப் பயன்படுத்திவிட வேண்டும்.

*ஒரு பாட்டில் மூலம் தயாரிக்கும் கரைசலிலிருந்து 1 லட்சம் மெட்ரிக் டன் தொழுஉரத்தைத் தயார் செய்ய முடியும். அதனால், 5 பாட்டில்கள், 10 பாட்டில்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கவேண்டியதில்லை. ஒரு பாட்டிலே போதுமானது. அதிலிருந்தே தேவையான அளவுக்குக் கரைசலைத் தயாரித்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.

*இலைவழி, பாசனவழி என இரண்டு முறைகளில் நிலத்துக்குப் பயன்படுத்தலாம். இலைவழியில் பயிர் பாதுகாப்பும், பாசனவழியில் மண்வளமும் மேம்படும்.

*தெளிப்பின்போது ஒரு லிட்டர் டீகம்போஸர் கரைசலை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்தும் தெளிக்கலாம்.

*ஏற்கெனவே பயன்படுத்திவரும் இயற்கை இடுபொருள்களுடன் கலந்து பயன்படுத்தலாம்.

விதைநேர்த்தி

ஒரு லிட்டர் வேஸ்ட் டீகம்போஸரை 300 கிராம் வெல்லத்தோடு நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இதை 20 கிலோ விதையில் கலந்து, நன்றாகப் பிசைய வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

ரூ.20
விலையில் கிடைக்கும் இந்த வேஸ்ட் டீகாம்போஸர் பாட்டில் தேவைப்படுவோர், இது தொடர்பான மேலதிக தகவல்களுக்குக் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

Regional Centre of Organic Farming,

Kannamangala Cross,

Whitefield-Hosekote Road,

Kadugodi Post, Bangalore-560067

Mobile: 95455 20037, 91130 86747, 80040 38138

Telephone: 080 28450503.

Email: biofkk06@nic.in