பசுமைப் புரட்சி தீவிரமாக இருந்த சமயத்தில், விவசாயத்தில் பலவித ரசாயனங்கள் புகுத்தப்பட்டன. இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு மிகக் குறைவாகவே இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரேச்சேல் கார்சன்’ என்ற பெண்மணி எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring) என்ற புத்தகம் வெளிவந்த பிறகுதான்... சுற்றுச்சூழல், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், பல்லுயிர்கள் மீது ரசாயனங்கள் ஏற்படுத்தும் கொடுமையான விளைவுகள் குறித்துப் பல நாடுகளும் பேச ஆரம்பித்தன.

அந்தச் சூழலில், 1970-80 காலகட்டத்தில், தமிழ்நாட்டில் பெர்னாட்-டி-கிளர்க் என்பவர் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து இயற்கையை நோக்கிப் பயணிக்கும் வகையில், புதுச்சேரி ஆரோவில் பகுதியில் ஒரு சிறு குழுவை அமைத்தார். அதே காலகட்டத்தில் வட மாநிலங்களில் பசுமைப் புரட்சியின் தீமைகள் குறித்தும், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும் மிக தீர்க்கமாகவும், தெளிவாகவும் பேச ஆரம்பித்தவர்களில், வந்தனா சிவா மற்றும் கிளாடு ஆல்வாரிஸ் குறிப்பிடத்தக்கவர்கள்.
பெர்னாட் தலைமையில்... வந்தனா சிவா, கிளாடு ஆல்வாரிஸ், கோரா மேத்தன், விஜயலஷ்மி மற்றும் நான் என மொத்தம் ஆறு பேர் இணைந்து, ‘ARISE’ (Agricultural Renewal In India for Sustainable Environment) என்ற அமைப்பைத் தொடங்கினோம். அந்த அமைப்பின் மூலம்... பயிற்சிப் பட்டறைகள், செயல்முறை விளக்கப் பயிற்சிகள் என நடத்தி, ஆர்வமும் துடிப்பும் கொண்ட முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை வேளாண் வழிமுறைகளைக் கொண்டு சேர்க்க ஆரம்பித்தோம்.
அந்தச் சமயத்தில்தான் நம்மாழ்வார் அண்ணாச்சி இயற்கை வேளாண்மையை ஒரு இயக்கமாக முன்னெடுக்கத் தொடங்கினார். அவரை, ‘தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் சமூகத்துக்குக் கிடைத்த பொக்கிஷம்’ என்றே சொல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்தக் காலகட்டத்தில்தான்... சோமசுந்தரம், ரங்கநாதன், ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பல முன்னோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் பல புதுமைகளைப் புகுத்தினர். ‘கொடுமுடி டாக்டர்’ நடராஜன், ‘பஞ்சகவ்யா’வை அறிமுகப்படுத்தினார். அவர் மருத்துவர் என்பதால், பஞ்சகவ்யா தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

1979-ம் ஆண்டில் நான் மண்புழு ஆராய்ச்சியைத் தொடங்கினேன். மண்புழு உரம் (Vermicompost), மண்புழு நீர் (Vermiwash), திரவ உரங்கள் (Liquid Fertilisers) ஆகியவற்றை நாங்கள் ஒருபுறம் கொண்டு வர... மண்புழு வளர்ப்பை (Vermiculture) திருச்சிக்கு அருகிலிருக்கும் விவசாயி, ‘பனிக்கம்பட்டி’ கோபாலகிருஷ்ணன் மிகச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் இந்திய அரசின் ‘கப்பார்ட்’ (Council for
Advancement of People’s Action and Rural Technology-CAPART)) நிறுவனம்... மண்புழு வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு விவசாயிகளுக்கு மண்புழு உரத் தொட்டிகள் கட்டித்தர முன் வந்தது.

‘நாட்டு மண்புழுக்கள்தான் சிறந்தவை, நாட்டு மண்புழு உரம்தான் சிறந்த பயனளிக்கும்’ என நிரூபித்து, நாட்டு மண்புழு வளர்ப்பை நாங்கள் முன்னெடுத்த சூழலில்தான், ‘பெங்களூர் பல்கலைக்கழகம்’ வெளிநாட்டுப் மண்புழுக்களை அறிமுகப்படுத்தியது. இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மண்புழுக்கள், மேல்மட்டப் புழு வகையைச் சார்ந்தவை. நம்நாட்டில் மேல்மட்டம், நடுமட்டம், அடிமட்டம் என மூன்று வகைகளிலும் மண்புழுக்கள் உள்ளன. நாட்டு மண்புழுக்கள் எந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தாலும்... ஓரளவாவது தாவர, விலங்குக் கழிவுகளான கரிமப் பொருள்களுடன் மண்ணையும் சேர்த்துச் சாப்பிடும். ஆனால், வெளிநாட்டு மண்புழுக்கள் வெறும் கரிமப் பொருள்களை மட்டுமே உட்கொள்ளும்.
வெளிநாட்டு மண்புழுக்கள், விரைவாகச் சாப்பிட்டு, விரைவாகக் கழிவுகளை வெளித்தள்ளும். அதனால், வெளிநாட்டு மண்புழுக்கள் வாழும் இடங்களில் நாட்டு மண்புழுக்களுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலை உருவாகி... அவை வெளிநாட்டு மண்புழுக்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேறும். வெளிநாட்டு மண்புழுக்கள் அதிக உணவை உட்கொள்வதுபோல, அதிகளவில் இனப்பெருக்கமும் செய்யக்கூடியவை என்பதால், மிக விரைவில் அவை பல்கிப் பெருக ஆரம்பித்தன. நாட்டு மண்புழுக்கள் இருக்கும் பண்ணைக்கு எங்கிருந்தாவது வெளிநாட்டு மண்புழுக்கள் வந்தால், அவை பல்கிப் பெருகி, நாட்டு மண்புழுக்களுக்கு உணவு கிடைக்காமல் செய்து அவற்றை விரட்டிவிடும்.

தமிழகத்தில் ‘யூட்ரெல்லஸ் யூஜினி’ (Eudrilus Eugeniae) என்ற வெளிநாட்டு வகை மண்புழுக்களும், புனே போன்ற வட இந்தியப் பகுதியில் ‘ஐசீனியா ஃபெட்டிடா’ (Eisenia Fetida) என்ற வெளிநாட்டு மண்புழுக்களும் பரவத் தொடங்கின. ஐசீனியா ஃபெட்டிடா, அதன் சகோதர புழுவான ‘ஐசீனியா ஆண்டிரை’யுடன் (Eisenia Andrei) சேர்ந்தே காணப்படும். வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்தியாவில் பரவிய மூன்றாவது முக்கிய மண்புழு, ‘லம்பிரிகஸ் ருபெல்லஸ்’ (Lumbricus Rubellus). இந்த மூன்று வகைப்புழுக்களும் இந்தியாவில் பல இடங்களில் வளர்க்கப் பட்டன. வெளிநாட்டு மண்புழுக்களை இந்தியாவில் பரப்புவதை நாங்கள் எதிர்த்தபோதும், அவற்றைச் சில பல்கலைக்கழகங்கள் ஆதரித்ததால், நாட்டு மண்புழு வளர்ப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
1982-1984 காலகட்டத்தில் நாட்டு மண்புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டிருந்தபோது... அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் இருக்கும் ‘சிராக்யூஸ் பல்கலைக்கழக’த்தைச் (Syracuse University) சார்ந்த ‘ஹார்ட்டன்ஸ்டைன்’ (Hartenstein), ‘நியூஹாசர்’ (Neuhauser) ஆகிய இரண்டு சிறந்த பேராசிரியர்கள்... கழிவு மேலாண்மையில் மண்புழுக்களைப் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இடிபி (ETP- Effluent Treatment Plant) என்று அழைக்கப்படும் தொழிற்சாலைக் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் சொட்டு வடிகட்டியில் (Trickling Filter System) மண்புழுக்களை அவர்கள் பயன்படுத்திப் பார்த்தனர். அதன் மூலம், மண்புழுக்கள் உண்ணும் கழிவுப் பொருள்களில் கன உலோகங்கள் கலந்திருக்குமாயின், அவற்றின் கழிவிலும் கன உலோகங்கள் இருக்கத்தான் செய்யும் எனத் தெரிய வந்தது.

‘வெளிநாட்டுப் மண் புழுக்கள், கன உலோகங்களைக் (Heavy Metals) கழிவாக வெளியேற்றுமா’ எனச் சிலர் கேட்பதுண்டு. எந்த மண்புழுவாக இருந்தாலும்... அது எதை உண்கிறதோ, அதையேதான் கழிவாக வெளியேற்றும். நம்மூரில், மண்புழு உரப்பண்ணைகளில் சாணம், மட்கிய தாவர, விலங்குக் கழிவுகள் ஆகியவற்றைத்தான் மண்புழுக்களுக்கு உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இவற்றைச் சாப்பிடும் மண்புழுக்கள் வெளிநாட்டு இனமாக இருந்தாலும், அவை கன உலோகங்களைக் கழிவாக வெளியேற்ற வாய்ப்பில்லை. மண்புழுக்கள் ஒன்றும் உலோகத் தொழிற்சாலைகள் அல்ல, தேவைப்படும் உலோகங்களைத் தயாரித்துக் கொடுக்க. நம் அனைவரின் உடலிலும்கூடச் சிறிதளவு வெள்ளியும், தங்கமும் இருக்கின்றன. நம் கழிவிலும் அவை மிகச் சிறிய அளவில் இருக்கலாம்.
அதேபோல், மண்புழுக்களின் உடலில் தாமிரம் உண்டு. எனவே, சித்த மருத்துவத்தில் மண்புழுக்களைத் ‘தாமிர பஸ்பம்’ தயாரிக்கப் பயன்படுத்துவார்கள். யூனானி மருத்துவத்திலும் மண்புழுக்களைப் பயன்படுத்துவதுண்டு. மருத்துவத்தில் மண்புழுக்களைப் பயன்படுத்தும் பழக்கம் வெளிநாடுகளிலும் உண்டு. சென்னை, புதுக்கல்லூரியில் நாங்கள் செய்த ஆராய்ச்சியில்கூட, ‘மண்புழுக்களுக்கு வீக்கத்தைத் குணப்படுத்தும் (Anti-inflammatory) தன்மைகள் உண்டு’ என நிரூபித்தோம். பிறகு, மருத்துவக் கல்லூரிகள் நடத்திய ஆராய்ச்சிகள் மூலமாகவும் இந்த உண்மை வலுப்பட்டது.
‘புழுவைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள்’ என்று ஒருவர் சொன்னால், அவரை ‘அசிங்கப்படுத்தினார்கள், கேவலமாகப் பார்த்தார்கள்’ என்று அர்த்தம். ஆனால், மண்ணின் நலத்தில் மட்டுமின்றி மனித நலத்திலும் உதவி செய்யும் மண்புழுக்களைக் கேவலமாகப் பார்க்க முடியுமா... சொல்லுங்கள். மண்புழு உண்மையில் ஒரு ‘பிஸ்தா’தான். அது மண்ணுக்கு மட்டுமல்லாமல், மண்ணில் வாழும் பல உயிர்களுக்கும் தன் உடலிலிருந்து பல பொருள்களைத் தருகிறது.

கோழி, ஓடிப்போய் லபக்கென்று மண்புழுவைக் கொத்தி சாப்பிடுகிறது. மீனைப் பிடிக்க, தூண்டிலில் மண்புழுவைத்தான் பயன்படுத்துகிறார்கள் மக்கள். மீனுக்கும் விருப்ப உணவாக மண்புழு உள்ளது. இதற்கெல்லாம் காரணம், மண்புழுவின் உடலில் நிறைய அமினோ அமிலங்கள் (Amino Acids) இருப்பதுதான். ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்களே, அப்படித்தான், மண்புழு இருந்தாலும், மறைந்தாலும், மண்ணுக்குப் பயனுள்ள உயிரினம் என்பதில் சந்தேகமேயில்லை.
பார்ப்பதற்கு மென்மையாக இருக்கும் மண்புழு, உயிருடன் இருக்கும்போது, எந்த நுண்ணுயிரும் அதன்மீது தாக்குதல் நடத்துவதில்லை. அதன் உடலிலிருந்து சுரக்கும், மண்ணுக்கும், நுண்ணுயிர்களுக்கும் பயனளிக்கும் சுரப்புகள்தான் அதற்குக் காரணம். அதே நேரத்தில், மண்புழு இறந்த கொஞ்ச நேரத்திலேயே அது நுண்ணுயிர்களுக்கு உணவாக மாறிவிடும். என்னைப் போன்றவர்கள் மண்புழு குறித்த ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்த சமயத்தில்... ‘ருடால்ஃப் ஸ்டெயினர்’ (Rudolf Steiner) என்பவர் கண்டறிந்த ‘பயோடைனமிக் வேளாண் முறை’களும் (Biodynamic Agriculture) இந்தியாவில் பரவத் தொடங்கின. இந்த முறையில் மாட்டுக் கொம்பு எரு; நியூஸிலாந்தைச் சேர்ந்த ‘பீட்டர் ப்ராக்டர்’ (Peter Proctor) கண்டறிந்த ‘Cow Pat Pit (CPP)’ எனப்படும் எரு, ‘BD 501-507’ போன்ற எருக்கள் இந்தியாவில் களம் கண்டன.
தமிழ்நாட்டில் CPP முறையைக் கொடைக்கானல் ஜெரோம் அவர்களும், பொதுவான பயோடைனமிக் முறைகளை, ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘மேட்டுப்பாளையம்’ நவநீதகிருஷ்ணன், ‘வத்தலகுண்டு’ ஜெயகரன்... போன்றவர்கள் பயன்படுத்திப் பலன் கண்டுள்ளனர்.
‘மசனோபு ஃபுகோகா’ (Masanobu Fukuoka)வின் இயற்கை வேளாண்மை முறையும் இந்தியாவில், மரபு வேளாண்மை செய்பவர்களை ஈர்த்தது. நம்மாழ்வாருக்கும், ஃபுகோகா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஃபுகோகாவின் முறைகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர்களில் ‘பாஸ்கர் சாவே’ முக்கியமானவர்.
‘பயிர் ஒழுங்கா வளரல, என்ன பண்ணனும்’ என்று நம்மாழ்வாரிடம் கேட்டால், ‘நீ எதுவும் பண்ணாம இருந்தாலே போதும்’ என்பார். அதுதான் இயற்கை விவசாயம். அதேபோல், ஆஸ்திரேலியாவின் ‘பில் மோலிசன்’
(Bill Mollison) என்பவரால் வளர்த்தெடுக்கப்பட்ட ‘நிரந்தர வேளாண்மை’ எனப்படும் ‘பெர்மாகல்ச்சர்’ (Permaculture) வேளாண் முறைக்கும் இந்தியாவில் ஆதரவு உண்டு. ஆந்திராவின் நரசண்ண கோப்புலா இதற்குப் புகழ் பெற்றவர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படி மண்ணை நலமாகப் பராமரிக்க ஏராளமான இயற்கை வேளாண் முறைகள் உள்ளன. ஹோட்டலுக்குப் போய் உட்கார்ந்தவுடன், ‘என்ன இருக்கு?’ என்று கேட்டால்... ‘இட்லி, பொங்கல், தோசை, பூரி, மசால் தோசை, ரவா தோசை...’ என்று சர்வர் கடகடவெனச் சொல்லி, நம்மை மலைக்க வைப்பார். அதுபோல வரிசை கட்டி நிற்கும் இயற்கை வேளாண் முறைகளைப் பார்த்து... புதிதாக இயற்கை வேளாண்மைக்குள் அடியெடுத்து வைப்பவர்கள் குழம்பாமல், தன் மண்ணுக்கும், வாழ்க்கைச் சூழலுக்கும் ஏற்ற முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதே நேரத்தில் ‘எல்லா நதிகளும் கடலில்தான் கலக்கின்றன’ என்பதும் நினைவிருக்கட்டும்.
ஆர்வத்துடன் இயற்கை வேளாண் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மண் நலன் காக்கும் முறைகளை நாம் கடைப்பிடிப்பதுடன், மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, மண்ணையும், நீரையும், காற்றையும், பல்லுயிர்களையும் பாதுகாப்போம் வாருங்கள்.
-முயற்சி தொடரும்.