தற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

இயற்கை விவசாயம் (Organic Farming Tips Tamil)
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை விவசாயம் தொடர்பான தகவல்களை இச்செயலி தருகிறது. தானியங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், பூக்கள் எனப் பலதரப்பட்ட விளைபொருள்களுக்கான பகுதிகள் இதில் உள்ளன. வரலாறு என்ற பகுதியில் நெல், சோளம், முள்ளங்கி மற்றும் சில பழ வகைகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பயிருக்குமான ரகங்கள், பருவம், நீர் நிர்வாகம், பயிர் பாதுகாப்பு என அறுவடை வரையிலான தகவல்கள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
கால்நடை வளர்ப்பு என்ற பகுதியில் கோழி, பசுமாடு, ஆடு உள்பட சில கால்நடை இனங்கள், கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை போன்ற தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாடித் தோட்டம் குறித்த தகவல்களும் இச்செயலியில் உண்டு. இச்செயலியை https://bit.ly/2HJJj5V என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.


நிலத்தை அளவிடும் செயலி (GPS Fields Area Measure)
நிலத்தை அளவிடப் பல வழிமுறைகள் இருந்தாலும் மிக எளிதாக அளக்க இச்செயலி உதவுகிறது. இச்செயலி இலவசமாகவே கிடைக்கிறது. ‘இன்ஸ்டால்’ செய்தவுடன் மொபைலைப் பயன்படுத்துபவரின் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கான அனுமதியைக் கேட்கும். செயலியின் வலது மூலையில் இருக்கும் சிறிய வட்டமான பகுதியைத் தொடுவதன் மூலமாக வரைபடத்தில் இருப்பிடம் காட்டப்படும்.

வரைபடத்தில் இரண்டு புள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக, அதற்கிடையே இருக்கும் தொலைவை அளவிட முடியும். இரண்டுக்கும் மேற்பட்ட புள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக, அவற்றின் பரப்பளவை அளவிடலாம். இது நாம் நிற்கும் இடத்திலிருந்து அளப்பதற்கான வழிமுறை. ‘ஜிபிஎஸ் மெஸூரிங்’ (GPS Measuring) என்ற மற்றொரு வசதியும் இதில் இருக்கிறது. இதைத் தேர்வு செய்து, நடந்து செல்லும் பகுதியின் தொலைவு மற்றும் பரப்பளவை அளக்க முடியும். அளவீடுகளைச் சேமித்து வைக்கும் வசதியும் உண்டு.

இச்செயலியை https://bit.ly/2cFbgQ8 என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.