Published:Updated:

`கரும்பு சாகுபடிக்கு இனி முன் அனுமதி அவசியம்..!' மகாராஷ்டிரா முடிவுக்குக் காரணம் என்ன?

அதிகம் தண்ணீர் செலவாகும் பயிர்களுக்குப் பதிலாக, மாற்றுப் பயிர்களை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக எழும் கோரிக்கை. அதற்காக மகாராஷ்டிரா அரசு வித்தியாசமான ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது.

`கரும்பு சாகுபடிக்கு இனி முன் அனுமதி அவசியம்..!' மகாராஷ்டிரா முடிவுக்குக் காரணம் என்ன?
`கரும்பு சாகுபடிக்கு இனி முன் அனுமதி அவசியம்..!' மகாராஷ்டிரா முடிவுக்குக் காரணம் என்ன?

காராஷ்டிரா மாநிலத்தில் கரும்பு சாகுபடிக்குப் புதிதாக ஒரு விதி அமல்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, மாநிலத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ள பகுதிகளில் கரும்பைப் பயிரிடும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், சாகுபடிக்கு அதிக நீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிட, நீர்பிடிப்புப் பகுதி நீர் வளக் குழுவிடம் ஒரு மாதத்துக்கு முன்பே, விவசாயிகள் விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நீர்வளத்தைக் காக்கவே இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இதுதொடர்பான கருத்துகளையும் வரவேற்றுள்ளார். 

இது கரும்பு விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர் வளத்தைக் காக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு இம்முறையை மட்டும் பின்பற்றக் கூடாது என்று விவசாயிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. மேலும், தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் அதிக தண்ணீர் வளம் இல்லாத பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு விலையை உயர்த்தித் தருமாறும் விவசாய அமைப்புகளின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ``விவசாயிகள் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நிர்வாகம் சொல்லும் பயிர்களைத்தான் விவசாயிகள் பயிரிட வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்பதுதான் அம்மாநில விவசாயிகளின் கருத்தாக உள்ளது. 

அரசின் அனுமதி கொடுக்கும் அக்குழுவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அதிகாரி, நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு, விவசாயம் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் விவசாயிக்கு அனுமதி கொடுக்கும் முன் மாவட்ட நில அமைப்பியல் வல்லுநரிடம் கருத்துக் கேட்பார்கள். விவசாயி விண்ணப்பித்த மூன்று நாள்களில் எழுத்துபூர்வமாக இந்தக் குழு அதற்கான உத்தரவைக் கொடுத்து விடும். 

``ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிரிட விலை, மழை பாதுகாப்பு மற்றும் மண் தன்மை என மூன்று முறைகளைப் பின்பற்றுகிறார். அதனால் எந்த ஓர் ஆணையமும், இதை விதைக்க வேண்டும், இதை விதைக்கக் கூடாது என்று உத்தரவிடுவதை ஏற்க முடியாது. பயிருக்கு உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு விலை வைத்துக் கொள்ளலாம். மேலும் சிறு குறு விவசாயிகளுக்குச் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகளைச் செய்து கொடுக்கலாம். மேலும், மின்சாரம் சீராகக் கிடைக்க வேண்டும். தண்ணீரைக் கிணற்றிலிருந்தும், குழாய்களில் இருந்தும் நேரடியாக எடுக்கக் கூடாது எனப் புதிய விதிகளைக் கொண்டு வரலாம். புதிய விதிகளை உருவாக்கும்போது மேற்கண்ட நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும். கரும்பு மற்றும் வாழை போன்ற நீர்ப்பாசனப் பயிர்களைத் தவிர்த்து மாற்றுப் பயிர்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப் பல வழிகள் இருக்கின்றன. ஆனால், கரும்பைப் பயிரிடக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பது சரியான வழிமுறை அல்ல" என்கின்றன அம்மாநிலத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்.

சமீபத்தில் நபார்டு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ``பாசனத்துக்காகப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து விலையை நிர்ணயிக்கலாம். தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கலாம். தண்ணீர் அதிகமாக உபயோகிக்கும் விவசாயிகளுக்கு மானியத்தைக் குறைக்கலாம். இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மேற்குப் பக்கம் மகாராஷ்டிராவில் இருக்கும் கரும்பும், பஞ்சாபில் விளையும் நெல்லும் கிழக்குப் பக்கம் அதிகமாகச் சென்றுவிடும். ஏனெனில் கிழக்குப் பக்கம் நதிகள் ஓடுகின்றன. அதனால் நெல்லுக்கும் கரும்புக்கும் அதிகமாகத் தண்ணீர் கிடைக்கும். கிழக்குப் பக்கம் இருக்கும் நீர் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளும் பயிர்களை மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப்புக்குக் கொண்டு வரலாம். அரிசி, கோதுமை மற்றும் கரும்பு ஆகியவை மொத்தச் சாகுபடிப் பரப்பில் 43 சதவிகிதம் இடம் வகிக்கிறது. இந்தப் பயிர்கள் மொத்தப் பாசன நீரில் 80 சதவிகிதத்தை எடுத்துக் கொள்கின்றன. மீதமுள்ள 20 சதவிகிதத் தண்ணீர் மட்டும்தான் பிற பயிர்களுக்குக் கிடைக்கின்றன" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலோட்டமாகப் பார்க்க இது சிறந்த திட்டம் போல தெரிந்தாலும், இதை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. 

எனவே, இந்த முடிவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் பல விவசாயச் சங்கங்களும், நிபுணர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், இதுபோன்ற அறிவியல்பூர்வமான மாற்று நிச்சயம் நமக்கு தேவை. எனவே இதிலிலுள்ள சிக்கல்களைக் களைந்து விவசாயிகள் பாதிக்காத வகையில் மகாராஷ்டிரா அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.