Published:Updated:

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி? - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி? - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி? - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!

பிரச்னை

டந்த அக்டோபர் 1-ம் தேதி... இந்தியாவில் தமிழ்நாடு உட்படப் பல்வேறு மாநிலங்களில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டில்லியில் கையெழுத்தாகியுள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போவது உறுதியாகியுள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் சில விஷயங்களைச் சொன்னார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

“தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, ஒ.என்.ஜி.சி, வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்கள் என்றால், வெறும் மூன்று கிணறுகள் அல்ல. ஒ.என்.ஜி.சி-க்கு மரக்காணம் தொடங்கி, வேளாங்கண்ணி அருகே உள்ள புஷ்பவனம் வரை உள்ள நிலப்பகுதியில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பல்லாயிரம் அடி ஆழத்தில் அதிக எண்ணிக்கையில் ராட்சதக் கிணறுகள் அமைத்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போகிறார்கள் நிறுவனத்தார். வேதாந்தா நிறுவனத்துக்குத் தமிழ்நாட்டில் உள்ள கடல் பகுதியில் 2,574 சதுர கிலோமீட்டர் மற்றும் நிலப்பகுதியில் 1,794 சதுர கிலோ மீட்டர் என இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி? - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!

ஹைட்ரோ கார்பன் என்பது... மீத்தேன், ஷேல் கேஸ் அனைத்தையும் உள்ளடக்கியது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால்... விவசாயிகள், மீனவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுமட்டுமல்லாமல், ஒ.என்.ஜி.சி நிறுவனம், சீர்காழி அருகே உள்ள மாதானம் தொடங்கி ராமநாதபுரம் வரை 110 ராட்சதக் கிணறுகள் அமைத்துக்கொள்ள அனுமதி கேட்டு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்துள்ளது.

ஏற்கெனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஒ.என்.ஜி.சி-யின் செயல்பாடுகளால், பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. அடியக்காமங்கலம், நரிமனம், கதிராமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்புகளைக் கண்கூடாகப் பார்க்கலாம். தண்ணீரில் ரசாயனம் கலந்ததால் வெள்ளக்குடியில் உள்ள மக்கள், தோல் நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள். ‘மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற, ஒ.என்.ஜி.சி-யைக் காவிரி படுகையிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில்தான் உச்சக்கட்ட ஆபத்தாக, ‘ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங்’ முறையில் இங்கு மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் முயற்சியில் ஒ.என்.ஜி.சி இறங்கியுள்ளது. தற்போது, வேதாந்தா நிறுவனமும் இங்கு அடியெடுத்து வைக்கிறது” என்றார்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர் சேதுராமன், “மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களை மக்கள் எதிர்ப்பதால்... இதனைச் சமாளிக்கும் வகையில், ‘திரவ மற்றும் வாயு வடிவிலான அனைத்து வகையான எரிபொருள்களையும் ‘பெட்ரோலியம்’ என்றே அழைக்கலாம்’ என மத்திய பெட்ரோலிய அமைச்சகம், கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி? - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!

திறந்தவெளி அனுமதி கொள்கையின் அடிப்படையில், பெட்ரோலியம் எடுக்க முதல்கட்டமாகத் தமிழ்நாட்டில் 3 வட்டாரங்கள் உள்பட இந்திய அளவில் மொத்தம் 55 வட்டாரங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு 110 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அவற்றைப் பரிசீலிக்கப்பட்டுக் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. தமிழ்நாட்டில் 2 வட்டாரங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு வட்டாரம் ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் ஒதுக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களுக்கான முன்னோட்டமாகவே இதனைக் கருதுகிறோம்.

இதையெல்லாம் விட மிகப்பெரிய அபாயம் ஒன்றும் உருவாகியுள்ளது. ஏற்கெனவே, கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் ஒற்றை அனுமதி கொள்கை பொருந்தும் என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. காவிரிப் படுகையில் ஏராளமான இடங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அங்கெல்லாம் இனி, மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் கலந்த நீரியல் கரைசல் மிகவும் அதிக அழுத்தத்தில் பூமிக்குள் செலுத்தப்படும். இதனால், மண் வளம், நீர் வளம் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2013-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, 2015-ம் ஆண்டு நிரந்தரத்தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசின் தற்போதைய முடிவு குறித்துத் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தமிழக முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்றார் உறுதியுடன்.

‘காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டப்பூர்வமான பாதுகாப்பை ஏற்படுத்தினால் மட்டுமே, அனைத்து ஆபத்துகளையும் தடுத்து நிறுத்த முடியும்’ என்று ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுக்கிறார்கள், இப்பகுதி மக்கள்.

- கு.ராமகிருஷ்ணன்